Jun 16, 2009

உருப்படாத 32

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

”உருப்படாதது” என்பது நான் சுயமாக வைத்த பெயர். வாழ்க்கையில், தமிழில் இருக்கும் ஏதேனும் ஒரு வார்த்தையையாவது அதன் அர்த்தத்தினை தாண்டி, வேறொரு அர்த்தம் தொனிக்க செய்ய வேண்டும் என்பது தான் கனவு. உருப்படாதது என்று சொன்னாலும், ஒரளவுக்கு உருப்படியாய் எழுதியிருப்பதாக தோன்றி இருக்கிறது. கண்டிப்பாக இந்த பெயரினை பிடித்து தான் வைத்தேன். மற்றபடி நரெய்ன் என்கிற பெயரின் மீது ஒரு காதல். தண்ணீர்குளம் சாரங்கராஜன் ராஜகோபாலன் லஷ்மிநாராயணன் என்று சொல்லி முடிப்பதற்குள் ஆயுள் குறையும் வாய்ப்புகள் அதிகம் என்பதாலும் :)

2) கடைசியா அழுதது எப்போது?

சமீபத்தில் அழவில்லை. ஆனால் காதலுக்காகவும், நல்ல திரைப்படங்களின் முடிவுகளுக்காகவும் பல சமயங்களில் அழுதிருக்கிறேன். கடைசியாக அழுதது என்றால், காதல் திரைப்படம் பார்த்து கிளைமேக்ஸில் கண்களில் நீர் தென்பட்டதாக நினைவு. ஆனால் நெஞ்சு விக்கித்தது நிறைய.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

பிடித்திருந்தது ஒரு காலத்தில். எப்போது கணினி தொட்டேனோ அப்போதிலிருந்து, வங்கி காசோலையில் கையெழுத்து போடுவதினை தவிர வேறெதுவும் எழுதுவதில்லை. தொடு திரை செல் பேசி இருப்பதால் மற்ற விவரங்கள் எவ்வளவு கேவலமாக எழுதினாலும், நோக்கியா மன்னித்தருளி தெளிவாக தருகிறது.

4) பிடித்த மதிய உணவு?

நான் ஒரு சாப்பாட்டு ரசிகன். பல இடங்களில் பல விஷயங்கள் பிடிக்கும். சஞ்சீவனத்தில் ராஜகீயம் முழுச் சாப்பாடு. செனடாப் ரோட்டின் தாபாவின் பஃபே.பாரிஸ் கார்னரில் குஜராத்தி மண்டலில் கிடைக்கும் சப்பாத்திகள்.தி.நகர் மன்சூக்கின் ராஜஸ்தானி உணவு. தாஜ் மவுண்ட்ரோடின் பியாண்ட் இண்டஸின் அளவற்ற அசைவ உணவு.

5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?

ஆணா, பெண்ணா என்பதை பொறுத்து :) ஆனால் கூடுமான வரையில் கொஞ்சம் வெளி ஆசாமி. அதனால் நட்போடு இருப்பது என்பது ஒரு பெரிய விஷயமில்லை. எனக்கு நட்பு ரீதியில் பல கேங்குகள் உண்டு. காசிமேட்டில் சில்லறை அடாவடியில் ஈடுபடும் ஆட்களிலிருந்து, நுனி நாக்கு அமெரிக்க ஆங்கிலம் பேசும் மேதாவிகள் வரை எல்லா வகைகளிலும் நட்புகள் உண்டு.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

சென்னைவாசி. அருவியில் ஒரே ஒரு தடவை குளித்திருக்கிறேன். கடலில் தலை நனையாமல் குளிக்க பிடிக்கும்.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

பேசும் விதம். மானரிசஸங்கள். ஒரளவுக்கு என்னால் 15 நிமிடத்தில் ஒருவர் பேசும் விதத்தித்தினை வைத்தே அவர் என்ன மாதிரியான ஆள் என்பதை கணிக்க முடியும். பெண்களோடு பேசுவது மிகக் குறைவு, அதனால் கணிக்கிறேன் என்று சொன்னால் அது பொய்யாக தான் இருக்க முடியும்.

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்ச விஷயம்: நீங்கள் அதை மற்றவர்களிடம் கேட்கவேண்டும்.
பிடிக்காத விஷயம்: நான் சொல்லி மாட்டிக்கிறத்துக்கா? ;)

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

ஒரு பேச்சிலரை பார்த்து இக்கேள்வியினை முன்வைத்திருப்பதன் மூலம், இதன் பின்னிருக்கும் அரசியலையும், அதன் மூலம் எழுப்பப்படும் கேள்விகளையும், அதன் உள்ளீடுகளையும் நான் கடுமையாக கண்டிக்கிறேன் ( ஒரு கேள்வியாவது, ஜீவி கெட்டப்புல சொல்லணும்ல :) )

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

அவள்.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கருப்பு பேண்ட். ஸ்ட்ரெப்டு சட்டை.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

எழுதிக் கொண்டிருப்பதால் நோட்பேட். இல்லையென்றால் எதிரே இருக்கும் ஒடாத அஜந்தா கடிகாரம்.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

கருப்பு. மாண்ட் ப்ளாங்க்

14) பிடித்த மணம்?

நிறைய. மண்வாசனை. ஹியுகோ பாஸ் பர்ப்யூம். நல்ல தக்காளி ரசம். மாம்பழம். பேரெக்ஸ். தொலைவில் அடிக்கும் ஜண்டு பாம். இன்னமும் நிறைய.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

பா.ரா, சொக்கன், பாலா இன்னபிறவர்கள் என தெரிந்தவர்கள் அனைவரும் எழுதிவிட்டார்கள். மற்றபடி இந்த மாதிரியான சங்கிலி விளையாட்டுகளில் எனக்கு சுவாரசியங்களில்லை. நேரடியாக தெரியவில்லையாயினும், எஸ்.ரா, கலாப்பிரியா, ராஜநாயஹம் போன்றவர்களை அழைக்க ஆசை. அவர்களை எனக்கு நேரடியாக தெரியாது என்பதால், இந்த சங்கிலி என்னளவில் என்னோடு முடிந்துவிடும்.

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

அனுப்பியவர் என்றென்றும் அன்புடன் பாலா. பல கருத்து வேறுபாடுகள் எங்கள் இருவருக்குமுண்டு. டிவிட்டரில் கிரிக்கெட்டிலிருந்து உலகப்பிரச்சனைகள் வரை நாங்களிருவரும் இருவேறு பாதைகள். ஆனாலும், தொடர்ச்சியாக டிசம்பரில் அவர் எழுதிய திருப்பாவை விளக்கங்கள் பிடித்தமானவை.

17) பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட். டென்னிஸ். மற்றும் ___________________ (வாத்தியார் நினைவாக கொஞ்சம் Aத்தனமான மூன்றாவது ;) )

18) கண்ணாடி அணிபவரா?

ஆமாம். 1996லிருந்து.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

உலக சினிமாவையும், உள்ளூர் குத்துப்பாட்டையும் வெகு சீரியஸா ரசிப்பவன். என்னுடைய ரசனைகள் படத்திற்கு ஏற்றாற்போல் மாறும். குவெண்டின் டொரண்டினோவின் ரசிகன் நான். வன்மமும், காமமும் அதிகமாய் இருப்பதால் :)

20) கடைசியாகப் பார்த்த படம்?

தசாவதாரம் - தியேட்டரில். Spring,Fall,Winter,Summer and Spring - தனி திரையிடலில். பார்ட்னர் (ஹிந்தி) - டிவியில். லீ (தமிழில்) - டிவியில்.சுப்ரமணியபுரம் - டிவிடியில்.

21) பிடித்த பருவ காலம் எது?

மழையும், மழை சார்ந்த பருவமும். காபி, டீ குடித்துக் கொண்டிருந்த காலங்களில், என் வீட்டின் பால்கனி வழியே சூடான டீயும், லேஸ் சிப்ஸுமாய் மழை பார்த்து ரசித்த காலங்கள்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

இப்போது புத்தகமாய் ரிச்சர்ட் தேலரின் Nudge. வலைத்தளத்தில் David J.Leinweber's Nerds on Wall Street. இதற்கு முன்னால் Booz & Allen & Co வின் The successful M&A Deals by CFOs. தமிழில் கோபி கிருஷ்ணனின் தூயோன். இதற்கு முன்பு பா.ராகவனின் “பிரபாகரன்: வாழ்வும் மரணமும்”

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

மூடுக்கு ஏற்றாற் போல் மாறும். இப்போதிருப்பது சென்னை சூப்பர் கிங்க்ஸின் கர்ஜிக்கும் சிங்க லோகோ.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

அதையும் வாசகர்களும், சகப்பதிவர்களும் தான் சொல்ல வேண்டும். மற்றபடி, உருப்படியான தனித்திறமையென்றால், து.கோ.வைணவக் கல்லூரியின் முதல் கானா பாடகன் :)

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நிறைய. சமூகத்தின் இரட்டை வேஷங்கள். குடும்பங்களில் நடக்கும் வன்முறைகள். குழந்தைகளின் மீதான திணிப்பு. ஊடகங்களின் பக்க சார்புகள் என நீளும்.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

வன்முறை. அதுதான் எனக்கான கடவுள்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

சுவிசர்லாந்து. வெனிஸ் ஏரிகள். கொடைக்கானல் மலைச்சரிவுகள். இலங்கையின் இயற்கை சூழல். ஆலப்புழாவின் போட் வீடுகள்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

கொஞ்சமாவது மனுஷனாக

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

பார்க்க கேள்வி எண் 9

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

சொர்க்கம் காசிருக்கும்போது. நரகம் சுற்றிலும் இருப்பவர்கள் புரிந்து கொள்ளாதவரை.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]