Oct 22, 2009

[சமூகம்] வன்முறையின் வாசற்படி

ஆனந்த விகடனில் சிம்புவின் பேட்டி. பி.எம்.டபுள்யு x6 காரில் ஈ.சி.ஆரில் 220 கி.மீ வேகத்தில் போய் இருக்கிறேன் என்பதை பெருமையாக பறைசாற்றும் பேட்டி. இந்த பேட்டியில் இருக்கும், ஆணவமும், அகங்காரமும் எத்தகையது என்று சொல்ல தேவையில்லை. ஈ.சி.ஆரில் அதிக பட்சம் 80 - 100 கி.மீ போகலாம் என்று நினைக்கிறேன். இந்த வேக லிமிட் கூட வழி நெடுக இருக்கக்கூடிய கிராமங்கள் அதில் வாழும் மனிதர்கள்தான். ஈ.சி.ஆர் விபத்து அதிகமாக நடக்கும் பகுதி. 220 கி.மீ வேகத்தில் போகும் ஒரு காரால், நடுவில் ஒரு மனிதரையோ, விலங்கையோ பார்த்து சடாலென ப்ரேக் போட முடியுமா? அந்த வேகத்தில், எவர் மேலாவது இடித்து உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், இவர் 220 கி.மீ வேகத்தில் ஓட்டினேன் என்று சொல்லியிருப்பாரா ? இல்லை, டெல்லி/மும்பாயில் நடப்பது போல சாலையோரங்களில் படுத்து கொண்டிருப்பர்களின் மீது வண்டியேற்றி கொல்லுவது ஒரு பணக்கார விளையாட்டா? இவரை பார்த்து முட்டாள் ரசிகர்கள், "தலீவர் போறா மாதிரி நாமளும் போவோம்"னு வேக விளையாட்டில் ஈடுபட்டு உயிரை விட்டால், யார் பொறுப்பு? குறைந்த பட்ச சமூக அக்கறை இருக்கும் எவராவது இவ்வளவு வேகமாக போவார்களா? எந்த தைரியத்தில் ஆ.விகடன் இதை சிம்புவின் பேட்டியாக வெளியிடுகிறது? This is a written, documented statement.

"கற்றது தமிழில்" ஒரு வசனம் வரும். "இந்த ஊர்ல இரண்டே பேர் தான் இருக்கறான். ஒருத்தன் ஸ்பென்சர் பளாசாக்கு உள்ளே இருக்கறான். இன்னொருத்தன் வெளியே இருக்கறான். சத்யம் தியேட்டருக்கு உள்ளே இருக்கறவன், வெளியே இருக்கறவன்" மேற்சொன்ன மாதிரி சம்பவங்கள் இந்த விரிவினை பள்ளத்தாக்காக மாற்றும் முயற்சிகள். இந்த divide/imbalanced growth ஏன் இன்னமும் ஆள்பவர்களுக்கும், ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புரியாமல் இருக்கிறது. அதிக பட்ச பணம் வைத்திருந்தாலும், அதை ஊதாரித்தனமாக வெளிப்படுத்துவதும் கூட சமூகத்தின் மீதான வன்முறையே. சமூகம் என்பது தனிமரமல்ல, அது மிகப்பெரிய தோப்பு. தோப்பில் ஒரே மரம் செழிப்பாய் இருப்பதும், மற்ற மரங்கள் உயிர்வாழ தண்ணீருக்காக கூட தவமிருப்பதும் நடப்பதில்லை.முகேஷ் அம்பானி 6000 கோடி ரூபாய்க்கு வீடு கட்டுகிறார். மனைவிக்கு பிறந்த நாள் பரிசாக ஜெட் வாங்கி கொடுக்கிறார். அம்பானி நிலைமை அப்படி. கோவம், எரிச்சல், கையலாகததனம் என எல்லாம் சேர்ந்து வருகிறது.

விளைவு, இதை 10000 பேர் படிக்கிறார்கள்.1000 பேர்கள் யோசிக்கிறார்கள். 100 பேருக்கு இவனுங்களுக்கு மட்டும் எங்கிருந்து இவ்வளவு காசு, அதிகாரம், ஆணவம், தெனாவெட்டுன்னு நினைக்கிறான். 10 பேருக்கு அவங்க மேல பொறாமை வருது. கோவம் வருது. எரிச்சல் வருது. ஒருத்தனோ ரெண்டு பேரோ அதனாலேயே மாறான், கொலை பண்றான், கொள்ளையடிக்கிறான், திருடறான். வன்முறைக்கு அடிப்படை காரணம் வெறும் கோவம் மட்டுமல்ல, அது வேறுவிதமான வன்முறை. பண்பட்டவர்கள், சீர்தூக்கி பார்க்கிறவர்கள், மத்தியதர வர்க்கமென இதை கண்டும் காணாமலும் போயிடறாங்க. இது வெறியா, கோவமா, அவமானமா, நம்மால முடியலையே, அவன் மட்டும் அனுபவிக்கிறானேன்னு மாறும்போது உள்ளேயிருக்கற வன்முறை வெடிக்குது. பங்காளி சண்டை முதல், பார்டரில் நடக்கும் சண்டை வரைக்கும் எல்லாவற்றுக்குமான அடிப்படை இதுவாக தான் இருக்கமுடியும்.சிவாஜியில் ஹனிபா ஒரு வசனம் சொல்லுவார் "எதிரிங்க அவங்களா உருவாறதில்லை, நாம தான் உருவாக்கறோம்" அது தான் இங்கே நடக்கிறது.

30 கோடி பேர் ஒரு வேளை சோத்துக்கு லாட்டரி அடிக்கும் இதே நாட்டில் தான், ஒரு கோடி ரூபாய்க்கு கார்கள் எளிதில் விற்பனையாகின்றன. எவ்வளவு பெரிய அவமானம் இது. இந்த நாடு கம்யுனிஸ்டு நாடாக மாற வேண்டும் என்று கேட்கவில்லை;அது ஆகவும் ஆகாது என்பது வேறு விஷயம். ஆனால், குறைந்த பட்ச தேவைகள் கூட நிறைவேறாத ஒரு பெரும் ஜனத்தொகை இங்கே இருக்கிறது.அவர்களை பற்றிய எந்தவிதமான பிரக்ஞை கூட இல்லாத, ஒரு பிளாஸ்டிக் சமூகமாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. 1000ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் ஒரு பக்கெட் இலவசம் என்று போட்டால் வாங்கும் இதே மத்திய வர்க்கம் தான், இலவசமாய் ஒரு மானியத்தினை ஏழை விவசாயிக்கு கொடுக்கும்போது, meritocracy பேசுகிறது.ரேஷன் கடையில் துவரம்பருப்பு 32ரூபாய்க்கு தருகிறார்கள் என்று தெரிந்ததும், வாசலில் ஹோண்டாக்களும், டொயோட்டாக்களும் நிற்கின்றன, இது தான் meritocracy-இன் இன்றைய லட்சணம்.

ஒரு பக்கம் படத்துக்கு கோடி கோடியா வாங்குகிற நடிகர்கள், திட்டங்களில் ஆயிரக்கணக்கான கோடிகளில் ஊழல் பண்ணுகிற அதிகாரிகள்/அரசியல்வாதிகள், இன்னொரு பக்கம் நம்மிடம் இருக்கும் காசு எப்படியாவது 36% வட்டி கிடைக்கும்னு நினைத்து ஏமாறும் அப்பாவிகள். எவ்வளவு ஒரு கேடு கெட்ட சமூகமாக நாம மாறி வருகிறோம். 36% வட்டி கொடுக்கிறேன் என்று எல்லா நாளேடுகளிலும் விளம்பரம் செய்யும் ஒரு நிறுவனத்தினை ஏன் அரசாங்கமோ, நீதிமன்றமோ உடனடியாக கேள்வி கேட்பதில்லை. இறுதியில் எல்லாரும் பனகல் பார்க்கில் வட்டமாக உட்கார்ந்து கொண்டு, அசோசியேஷன் வைத்து கொண்டு உயர்நீதிமன்றம் நோக்கி பிரார்த்தனை பண்ண வேண்டியதுதான்.

சத்யம் ராஜுவுக்கு A கிளாஸ் சிறை. பாவம், கட்டமுடியாமல் போன 25000 கடனுக்காக காசோலை வாங்கி, அதையும் பவுன்ஸ் செய்து, Section 138-இல் உள்ளே போகும் ஒரு அபாக்கியசாலிக்கு அலுமினிய தட்டும், நீர்த்த் சோறும். எது வன்முறை? ஒரு ஜென் மொழி ஒன்று உண்டு. "ஆயுதங்களால் என்றைக்குமே பயங்களில்லை,அது யார் கையில் இருக்கிறது என்பதுதான் பயமே" என்று. அரசின் பூடகமான இரட்டைநிலை வன்முறைக்கும், சிம்பு மாதிரியான அதிகாரம், தோரணையோடு இருக்கும் நபர்களின் உள்ளார்ந்த வன்முறைக்கும் வித்தியாசம் scale of operation மட்டுமே.

பணக்காரனோட சமூக அக்கறை 10000 ரூபா ஒரு அனாதை ஆசிரமத்துக்கு எழுதறதோட முடிஞ்சி போச்சு. மத்தியதர வர்க்கத்தோட சமூக அக்கறை பழைய துணி குடுக்கறதோடவோ, பள்ளிக்கூடங்கள்ல குழந்தைகள் கொண்டு வர்ற ஹெல்ப் ஏஜ் இந்தியாவுக்கு 100 ரூபா குடுக்கறதோட முடிஞ்சாச்சி. அரசியல்வாதிகள், அதிகாரிகள் பத்தி சொல்லவே வேண்டாம். நாம ஒரு மோசமான civil unrest நோக்கி போயிட்டு இருக்கோம். டிவி சீரியல்கள், மசாலா படங்களும், நம் அரசியல்வாதிகளின் அறிக்கை போர்களும் இப்போதைக்கு அதை தள்ளிப் போட்டு கொண்டிருக்கிறது. வடகிழக்கிலும், கிழக்கிலும் அதில்லை, அதனால் அந்த unrest அப்பட்டமாக தெரிகிறது. வித்தியாசம் அவ்வளவுதான். சென்னையில் சமீபத்தில் நடந்த கொலைகள் பற்றி விஸ்தாரமாக படித்துப் பாருங்கள், நான் சொல்வதின் தீவிரம் புரியும். வெறும் டீக்குடிப்பதில் ஆரம்பித்து பனையூர் கொலைகள் வரை எல்லாவற்றுக்குமான அடிப்படை காரணம் எது? சமூக ஏற்றத்தாழ்வுகள் தான். பரவலாய் நாம் அனைவரும் கடுமையான சமூக மன அழுத்தத்தில் வாழ்ந்து வருகிறோம். அடக்க முடியாமல் பீரிட்டு வெளியேறும்போது அசாம்பாவிதங்கள் நடக்கின்றன. இதிலிருந்து நீங்களும் நானும் கூட தப்பமுடியாது என்று தோன்றுகிறது.

7,300 கோடி ரூபா இந்திய அரசாங்கம் வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ பயங்கரவாதத்தை அடக்க செய்யும் செலவு என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இதில் 10% முன்பே கட்டமைப்பிற்கும் கல்விக்கும் அங்கே நாம் செய்திருந்தால், இவ்வளவு வன்முறையும், உயிர்பலியும் நடந்திருக்குமா ? வன்முறை, உயிர்பலி எல்லாம் பூகம்பம் மாதிரி. ஒரே நாளில் உட்கார்ந்து யோசித்து வெடிக்கிற விஷயமில்லை. காலங்காலமாக, கொஞ்சகொஞ்சமாய் மக்கள் மனதில் ஏற்படும் மாற்றங்கள், வன்மமாய் மாறி, ஒரு நாள் கொலையாய், தற்கொலை படை முயற்சியாய், தாக்குதலாகவோ முடிகிறது. இதன் தீர்வு கண்டிப்பாக ப.சிதம்பரம் சொல்வது போல ஆயதங்களோ, ஆர்மியோ அல்ல, அதனால் இன்னமும் வன்முறை பல்கி பெருகதான் செய்யும்.

பெளத்தத்தை போற்றும் ஊரிலேயே எத்தனை வன்முறைகள். அது ஜப்பானாய் இருந்தாலும் சரி, இலங்கையாய் இருந்தாலும் சரி. நெருப்பு வன்முறை எனக் கொண்டால், நீரூம் வன்முறையே. சுரணையில்லாத சமூகமும், திருப்பிக் கொடுக்காத கடனும் எந்நாளும் பிரச்சனையே. கொலை எதற்கும் தீர்வல்ல என்று இன்றளவும் தீர்க்கமாக நம்புகிறேன். ஆனால், ஒரு பக்கத்தில் அரசின் வன்முறை, இன்னொரு பக்கம் மாவோயிஸ்டுகள் என வாழும் மக்கள், காந்திய வழியை பின்பற்றினால், உயிரோடு இருப்பதற்கான எவ்விதமான சாத்தியங்களும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.வடகிழக்கு மாநிலங்களில் "சல்வா ஜுதும்" பண்ணும் அட்டகாசங்கள், உயிர்பலிகள், பயங்கரவாதிகள் என்று அரசு அடையாளம் சொல்லும் ஆட்கள் செய்யும் அக்கிரமங்களை விட அதிகமாக இருக்கிறது. இதை எப்படி தடுப்பது?. வன்முறைக்கு பதில் வன்முறையில்லை என்பது நல்ல தியரி, ஆனால் நிகழ்காலத்தில்?? இந்த அடிப்படை புரியாத வரைக்கும் வன்முறையினை எந்த காலத்திலும் ஒழிக்க முடியாது.

எங்கோ ஆரம்பித்து, எங்கோ போய்விட்டது பதிவு. சிம்புவின் இந்த ஆ.வி பேட்டியினை வைத்துக் கொண்டு சிம்புவின் மீது வழக்கு தொடர முடியுமா? வலையுலகில் யாராவது சமூக அக்கறையுள்ள வழக்குரைஞர்கள் இருந்தால் ஒரு PIL போடுங்கள். இனிமேலாவது பொறுப்பில்லாமல் பேசும் இம்மாதிரியான நடிகர்கள், கொஞ்சம் வாயையும் .................யும் மூடிக் கொண்டு இருக்கட்டும்.

Labels: , , , ,


Comments:
மனதிலிருந்த வந்த உங்கள் வார்த்தைகளினால் எழும் வலி,பயம்,கோபம் மாலை சீரியல் பார்க்கும்வரையே ;
மீறினால் போகாத வழிதனிலே போகவேண்டாம் என்று கட்டிப்போடும் கட்டுப்பெட்டித்தனம்;
பேத்துபவர்கள் பேத்தட்டும் என்ற ஒரு அலட்சியம்;
நானென்ன செய்ய :(
 
/இது வெறியா, கோவமா, அவமானமா, நம்மால முடியலையே, அவன் மட்டும் அனுபவிக்கிறானேன்னு மாறும்போது உள்ளேயிருக்கற வன்முறை வெடிக்குது///

கரீக்டா சொல்லியிருக்கீங்க! ஊருல சும்மா ஆரம்பிச்சு பெரிய வன்முறையா போற வாய்க்கால் சண்டை வரப்பு சண்டையெல்லாம் கூட இதே ரகம்தான்!
 
BMW வண்டி ஏன் 220 கி.மீ வேகம் வரை செல்ல அனுமதிக்கிறது ?

ECR வழியில் அடிக்கடி ரோந்து செல்லும் போக்குவரத்து காவலர்கள் என்ன செய்து கொண்டுருந்தனர் ?

பொது நல வழக்குப்போட்டால் ஆட்டோ முதல் வாய்தா வரை சந்திக்கும் மனநிலை , பொருளாதார அடிப்படை தேவை.

இந்த செயலை கண்டித்து ஊடகங்களில் எழுதலாம். அதற்கு ஆதரவு தெரிந்தால் காவல் துறை அல்ல நீதிமன்றமோ தானே முன் வந்து வழக்கு நடத்தலாம்.

மானக் கொன்றதுக்கே இது வரை எதுவும் நடக்கலை , பார்ப்போம்.
 
அப்போ சிம்புவின் $# அறுத்து விடலாமா?

- யாரோ ஒருவன்

ps: $# = கால்
 
:(
 
சிந்திக்க வைக்கும் ஒரு இடுகைக்கு நன்றி.
 
உருப்படாதது என்று blogக்கு பெயர் வைத்து, இப்படி ஒரு உருப்படியான பதிவை எழுதிய உங்களுக்கு hats off!
 
உருப்படியான ஒரு பதிவு. ஆனாலும் 'நல்லது' ஏதோ ஒன்று எப்போதோ நடந்துவிடும் என்ற எண்ணம் இருக்கிறது போல் தெரிகிறது. எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை.
 
http://erodenagaraj.blogspot.com/2010/08/blog-post.html
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]