Dec 2, 2009

சலாமத் ததங் புரூனே - 1

"ஹலோ, நாராயண்" என்கிற குரல் கேட்டதும், எவன் இவன் பன்னாட்டு விமான நிலையத்திற்குள், பாதுகாப்பு சோதனையெல்லாம் முடிச்சுட்டு உட்கார்ந்து இருக்கற நேரத்தில் என்று திரும்பினால் ராஜேஷ். ராஜேஷ் என் நண்பனின் நண்பனாக அறிமுகமாகி நண்பனாவன். 4 வருடங்களுக்கு முன்பு Web 2.0 என்றால் என்ன என்று சொல்லி, ஒழுங்காய் ஹிந்துவில் வேலை பார்த்து கொண்டிருந்த அவன் மண்டையை குழப்பி, வேப்பிலையடிக்காத குறையாய் வேலையை விட செய்து, கொஞ்ச நாள் என்னுடைய அலுவலகத்திலிருந்து கற்று கொண்டு, மேஸ்கான், ஹெக்ஸாவெர், டிசிஎஸ் என ரவுண்ட் அடித்துவிட்டு, இடையில் கல்யாணமாகி, குட்டி போட்டு, இப்போது மெல்போர்னில் SAP வேலை. பொட்டி தட்டுதல் புருஷ லட்சணம்.

நான் போன அதே சிங்கப்பூர் விமானத்தில், சென்னை-சிங்கப்பூர்-மெல்போர்ன். வழக்கமான உபயகுசலோபரி எல்லாம் முடித்தால், கும்பகோணத்தில் டெக்ஸ்டெல் கடை வைத்திருக்கிறான், தீபாவளி கலெக்‌ஷன் 20 லட்சம். டாலரில் சம்பாதித்து, திருப்பூர்/அகமதாபாத்தில் துணி வாங்கி கும்பகோண மாமாக்கள் பர்சில் உருவி சம்பாதித்தது. எனக்கென்னமோ லேப்டாப்பினை நம்பினால், லேகியம் விற்பவன் கூட இன்னமும் கொஞ்சநாளில் மதிக்கமாட்டான் போல. இப்படி ஊரான் ஊருணியில் தண்ணியிறைத்து, உள்நாட்டு சிண்டெக்ஸினை நிரப்பினால், ஏன் ஆஸ்திரேலியாவில் நம்மை பார்த்தால் அடிக்க மாட்டார்கள்?

சென்னை பன்னாட்டு விமானநிலையத்தில் தாமஸ் குக்கில் 3000ரூபாய்க்கு மேல் எடுத்து கொண்டு போக கூடாது என்று போட்டிருந்தது. ரிசர்வ் வங்கி $200,000 வரை வெளிநாட்டில் முதலீடு செய்யலாம் என்று சொல்லும் நாட்டில் தான் இந்த மாதிரி சில்லரைத்தனங்கள். இந்தியா வந்ததும் இது கரெக்ட்டா, இல்லை காசு கறக்கும் உத்தியா என்று ஒரு RTI பெடிஷன் போடவேண்டும். வயிறெரிந்து காசினை மாற்றிக் கொண்டு [எக்ஸெல் ஷீட்டில் கணக்கு போட்டால், தாமஸ் குக் என்னிடமிருந்து சம்பாத்தித்து 20% கரன்சி எக்ஸ்சேஞ்ச் ரேட்டில்.அநியாயம்]

திராம் தேசம் எழுதும் போது துபாய்க்கு போன உற்சாகத்தில் 1% கூட புரூனே அழைப்பு வந்த போது இல்லை.திட்டு வாங்க யாராவது விசா எடுப்பார்களா என்ன, சொந்த செலவில் சூனியம் வைப்பது போல. ஆனால், நிலைமை அவ்வாறு. ஒரு மென்பொருள் ப்ராஜகெட்டினை அவுட்சோர்ஸ் செய்திருந்தோம். வழக்கம்போல, சொதப்பி விட்டார்கள். விஷயம் வழக்கு போடுமளவிற்கு போய்விட்டது. Micheal Clayton-ல் வரும் ஜார்ஜ் குளுனி போல இங்கே நான் fixer. வேலை இரண்டு பக்கமும் பேசி, வழக்கு வகையறா பஞ்சாயத்து புடலங்காய்கள் இல்லாமல் முடிக்க வேண்டும். உள்ளே சபித்துக் கொண்டே வருணன் உச்சா போன ஒரு சுபயோக சுபதினத்தில் நடந்தது தான் மேலே சொன்னது.

சிங்கப்பூர் நள்ளிரவு விமானங்கள் ஜன்னல் வழியாக பார்த்தால், அன்று பெய்த மழையில் சொட்ட சொட்ட நனைந்து பல்லாவரம் ஜோதி தியேட்டர் ஸ்டில்கள் போல நின்று கொண்டிருந்தன. சிங்கப்பூர் நள்ளிரவு விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் சமூக,பொருளாதார விஷயங்களை டேட்டவாக எடுத்து ஒரு நல்ல பிஸினஸ் அனெல்க்டிக்ஸில் உள்ளிட்டால், வரும் செய்திகளில், NRI எழுத்தாளனாய் ஒரு மூன்று-நான்கு வருடங்களுக்கு கதையடிக்கலாம். உள்ளே போனால், என் சீட்டினை தவிர எல்லாரும் ஜோடி ஜோடியாய் இருக்கின்றார்கள். தனியாளாய் பயணிப்பதின் சிரமம் அன்று தான் தெரிந்தது.

மனைவிக்காக ஒரு முறை.வயதான அம்மாவிற்காக ஒரு முறை.கூட்டாளியாய் வந்திருப்பவர்களோடு உட்காரவேண்டுமென்று சொன்னதால் ஒரு முறை என A320யின் நீள அகலத்தை அளந்து கொண்டிருக்கும்போதே பணிபெண் கழுத்தில் life-saver-ரை போட்டுக் கொண்டு தண்ணியில் விழுந்தால் டைட்டானிக் ஜாக் மாதிரி என்னவெல்லாம் செய்யலாம் என்று சொல்ல ஆரம்பித்தாள். ஒரு வழியாக இரு ஒற்றையாசாமிகளின் நடுவில் எனக்கென்று ஒரு இடம். கல்லூரியில் கடலை போட்டவர்களையெல்லாம் வகைதொகையில்லாது கலாய்த்த போது, மொத்தமாய் கேண்டீனில் எல்லாரும் விட்ட சாபம் ராமன் வனவாசம் போன கதையாய் 14 வருடங்கள் கழித்து ஏர்லைன்ஸ் சீட்டில் உட்கார்ந்து “வா நைனா” என்றது.இந்த வெளிநாடு பயணமும், ஆண்களுக்கு நடுவில்.

இருவரும் தீவிர சைவர்கள். நான் இடமாறி, இந்தியாவிலிருந்து, பலுசிஸ்தானில் உட்கார்ந்து கொண்டிருந்ததால், எனக்கு புவா போடவேயில்லை. கொஞ்சம் அலைக்கழிச்சலோடும், கொஞ்சும் பணிப்பெண்ணின் மன்னிப்போடும் வந்தது உணவு. 2 தீவிர சைவர்களுக்கு மத்தியில் லேம்பும் சிக்கனும் திருப்திகரமாக சாப்பிட்டேன், இன்னமும் கொஞ்ச சாபங்களுடன். குட்டி டிவியில் பொழுது போக இம்தியாஸ் அலியின் ‘லவ் ஆஜ் கல்” படம். இம்தியாஸ் அலி பற்றி விரிவாக பின்னாளில் வாய்ப்பு அமையும் போது எழுதவேண்டும். மனுஷன் ஒற்றை வரி கதையினை வைத்து கொண்டு அநாயசமாய் திரைக்கதை எழுதுகிறார். கிளைமேக்ஸ் கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும், சைசல்ண்டாக அசத்துகிறார்கள் ரிஷி கபூரும் அந்த ஸ்பானிஷ் பெண்ணும்(ஹர்லீன் கெளர்).

ஆசாத் பாயிடம், லவ் ஆஜ் கல் இறுதியில் பெயர் பட்டியிலிடும்போது வரும் பாட்டின் பின்புலங்கள் என்னவென்று அடுத்த முறை துபாய் போகும்போது கேட்கவேண்டும். மற்றபடி, சுற்றிலும் 3 குழந்தைகள், அந்த மழலைப்பட்டாளங்களின் பின்னிரவு சங்கடங்களில் தூக்கம் சந்தோஷமாய் தொலைந்து போனது.

12 மணி நள்ளிரவில் கிளம்பி, முட்டாள்தனமாக அதிகாலை 5.55க்கு ஒசியில் சிங்கை சாங்கி ஏர்போர்ட்டில் இணையம் கிடைக்கிறதே என்று மெயில் செக் பண்ணது மடத்தனம் என்று நீங்கள் நினைத்து திட்ட ஆரம்பிக்கும் முன், என்னோடு அப்போது அங்கிருந்த 8 கணினிகளில் எல்லாரும் பேஸ்புக்கில் தங்களது இருப்பினை அப்டேட் செய்து கொண்டு இருந்தார்கள், போங்கடாங்..... . மார்க் ஸுகென்பெர்க் கவலைப்படத் தேவையில்லை. ஆசியர்கள் பேஸ்புக்கினை காப்பாற்றிவிடுவார்கள்.

மலெ பெண்கள் பேசும் ஆங்கிலமும் மலெ மாதிரியே புரியாமல் இருக்கிறது. சிங்கையிலிருந்து புரூனே சென்ற சில்க் ஏர் விமானத்தில் ஒரு பணிப்பெண் அபாயகரமான வளைவுகளோடும், முட்டிக்கு மேல் முடிந்த ஸ்கர்ட்டோடும் ஜெ.யின் ஒவியம் போல அவ்வப்போது தரிசனம் கொடுத்தார். தெலுங்கு சினிமாவில் கண்டிப்பாக கோடி ரூபாய் வாங்கும் ஹீரோயின்கள் லிஸ்டில் சர்வசாதாரணமாக சேரும் மொத்த தகுதியும் அவருக்கு இருந்தது. இயக்குநர் யாராவது ப்ரொடுசர் காசில் போங்கப்பா. அந்த விமானத்தில் அதை தவிர குறிப்பிட்டு சொல்ல வேறெதுவுமில்லை;அல்லது பார்க்கக் கூட தோன்றவில்லை :) இதற்காக எல்லாம், என்னால் இறங்கிவந்து சில்க் ஏர் கொடுத்த சாப்பாட்டினை நன்றாக இருக்கிறது என்று பொய் சொல்ல முடியுமா என்ன?

புரூனே விமானநிலையம் என்றழைக்கப்படுவது விமானம் நிற்கும் தளம், ரன்வே இவற்றையெல்லாம் நீக்கிவிட்டு பார்த்தால் வடபழனி பஸ் நிலையத்தினை மாதிரி இரண்டு மடங்கு அவ்வளவுதான். இமிக்ரேஷனிலிருந்து நீங்கள் வெளியே கை காட்டுபவர்களை பார்க்கலாம். நானிருந்த ஹோட்டலிருந்து கொஞ்சம் மால்கம் மார்ஷல்தனமாய் கல்லெறிந்தால், பறக்க போகும் ஏதேனும் ஒரு விமான கண்ணாடி உடைவது சர்வநிச்சயம். மழை இந்த ஊரில் இன்னொரு விஷேஷம். ப்ரெக்பாஸ்ட்,லஞ்ச்க்கு பின்னாடி மற்றும் டின்னருக்கு முன்னாடி ஒரு கொட்டு கொட்டி தீர்க்கும். பின்னர் சரியாய் மூடாத கார்ப்பரேஷன் குழாய் போல இரவெல்லாம் கொட்டி தீர்க்கும். காலையில் எழுந்து நேரடியாக வாசலில் கோலம் போட வைக்கும் அளவிற்கு சுத்தமாய் இருக்கும்.

அடுத்த பதிவினை கோலம் போட்டு ஆரம்பிப்போம்
* சலாமத் ததங் - நல்வரவு (மலே)

Labels: , , ,


Comments:
நாராயண், welcome back.

(இந்த மாதிரி அப்பப்ப எழுதறதுக்கு என்ன கேடு) :-) கொல்றியேய்யா பாவி.
 
அழகான ஆரம்பம், அருமையான நடை, தொடர்க!

மத்தபடி, சுரேஷ் சொல்வதை வழிமொழிகிறேன் (அவர் திட்டுவதை தவிர்த்து) ;-)

எ.அ.பாலா
 
யப்பா என்ன ஒரு நடை !!!!!

கலக்குறீங்க சார்
 
அழகான ஆரம்பம், அருமையான நடை, தொடர்க!

மத்தபடி, சுரேஷ் சொல்வதை வழிமொழிகிறேன் (அவர் திட்டுவதை தவிர்த்து) ;-)

எ.அ.பாலா

(PS: Republishing comment to receive other post comments by email)
 
சுரேஷ், பாலா, நேசமித்ரன் > நன்றி!
 
சுவாரசியமான எழுத்து நடை. அருமையான பயணக் கட்டுரை.
 
மற்றவர்கள் கூறியது போல் அபாரமான இயல்பான நடை..

தொடர்ந்து எழுதுங்கள்..வாசிக்க நாங்க இருக்கோம் :)

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

பி.கு. இந்த வேர்ட் வெரிபிக்கேஷன் தேவையா?!
 
அட்றா அட்றா அட்றா.....
 
சுவாசிகா,

வேர்ட் வெரிபிகேஷன் > இது வைத்தாலே எனக்கு ஜப்பானிய மொழியிலும், சீன மொழியிலும் அனகோண்டா அளவுக்கு ஆண்குறியாக்கலாம் என்று பின்னூட்டம் வருகிறது :) இந்த நிலையில், இதுவும் எல்லையென்றால் துக்கிஸ்டாகும் நிலை வருமென்பதால், உலகில் அமைதி நிலவும் வரை, அமெரிக்கா அடுத்த நாட்டில் அண்ட்ராயர் அவிழ்க்காதவரை, நானும் வேர்டு வெரிவிகேஷனை வைத்தே ஆக வேண்டும்.
 
நாராயண்ஜி,

சுரேஷ்ஜி சொல்வதையே நானும் சொல்கிறேன். அப்படித் திட்டும் உரிமை மட்டும் இன்னும் வரவில்லை :-) அதாவது பாலா சொல்வதை நானும் திருப்பிச் சொல்கிறேன்.
 
ஆசாத் பாய்,

உங்களுக்கு இல்லாத உரிமையா? லவ் ஆஜ் கால் கிளைமேக்ஸ் டைட்டில் சாங் பற்றி கொஞ்சம் விவரங்கள் தாருங்கள். மற்றபடி, கிரன் கெர்ரின் பஷ்த்தூன் உருது பற்றி (குர்ப்பான்)நீங்கள் எழுதியிருந்தது செம மேட்டர்.
 
சுவாரஸ்யமான பயண விவரிப்பு :)
 
/அமெரிக்கா அடுத்த நாட்டில் அண்ட்ராயர் அவிழ்க்காதவரை, நானும் வேர்டு வெரிவிகேஷனை வைத்தே ஆக வேண்டும்.//

ஆஹா அப்ப இப்ப இல்ல இல்ல எப்பவுமே சான்ஸ் இல்ல :)
 
///அமெரிக்கா அடுத்த நாட்டில் அண்ட்ராயர் அவிழ்க்காதவரை, நானும் வேர்டு வெரிவிகேஷனை வைத்தே ஆக வேண்டும்.//

ரைட்டு!!

//ஆஹா அப்ப இப்ப இல்ல இல்ல எப்பவுமே சான்ஸ் இல்ல :)//

ரீப்பீட்டு :))

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]