Dec 11, 2009

துபாய்: அகல கால்+பேராசை = அதல பாதாளம்

(இது ஒரு வார பத்திரிக்கைக்காக எழுதி, வழக்கம்போல பூமராங்கானது :) )

நன்றிகள்: துபாய் பற்றி என்னுடைய எந்த பதிவும் இந்த மூவரணி (ஆசாத், சுரேஷ், ஆசீப் மீரான்) இல்லாமல் சாத்தியமே இல்லை. இதன் பல விவரங்கள் இந்த மூவரணியோடு நான் தொடர்ச்சியாய் பேசியதே.

அந்த விமானநிலையத்தின் வாசலில் BMWக்களும், மெர்சிடஸ் பென்ஸுகளும் கேட்பாரற்று கிடக்கின்றன. அது பார்க்கிங் இடமல்ல. புர்ஜ் துபாயின் வாசலில் பங்களாதேச தொழிலாளிகள், தங்கள் ஊருக்கு போக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். திரும்ப வேலை கிடைக்குமா? வரமுடியுமா? என்கிற கேள்விகளுக்கு பதில் இல்லை. வெளிநாடுகளிலிருந்து வந்து வேலை இல்லாமல், வியாபாரம் செய்து நஷ்டப்பட்டு, சொந்த நாட்டுக்கும் போக முடியாமல் கயிறா,விஷமா,கத்தியா என தற்கொலை முடிவோடு பலபேர்கள். துபாயின் வீட்டு வாடகை சரெலென குறைந்து விட்டிருக்கிறது. பாதி கட்டிடங்கள் அரைகுறையாய் நிற்கின்றன. ஆனாலும், மின்சார கட்டணங்கள் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. என்ன நடக்கிறது துபாயில்?

”ஷார்ஜாவா, அபுதாபியா, இல்லை”
“துபாய்”
“கேக்கறமில்லை, துபாயில நீ எங்கே இருந்தே?” என வடிவேலுவின் வாய் மணத்த துபாய்.
சிலுக்கு ஜிப்பாவும், மணக்கும் செண்டுமாய், ’ஏய் மாப்ளே பளபளாங்கு” என ஊராரால் மெச்சப்பட்ட துபாய். ”இஸ்லாமிக் நேஷனஸ் ஆர் வெரி ஸ்ட்ரிக்ட், பட் துபாய் இஸ் ஹெவன்” என அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் சொந்தகாரர்களோடு சிலுப்பிக் கொண்ட துபாய். உலகின் மிக உயரமான கட்டிட்டத்தினை ஜனவரி 2010ல் திறக்க போகிற துபாய். பாம் ஜுமேரா என்றழைக்கப்படும் செயற்கை தீவினையே உருவாக்கி, டேவிட் பெக்காம், பிராட் பிட், அமீர் கர்சாய், டென்சில் வாஷிங்டன், ஆண்ட்ரூ பிளிண்டாப் என பிரபலங்களின் வீடுகள் இருக்கும் துபாய். அக்ரோபோலிஸ் என்கிற ஏழு நட்சத்திர ஹோட்டலினை திறந்து, அதன் வானவேடிக்கைகள் 10 கீமி தூரம் வரை கேட்க வைத்த துபாய். உலகின் மிக விலையுயர்ந்த கார்களின் ஷோரூம்களால் நிறைந்திருக்கும் துபாய். ஒரு பாலைவனத்தில் ஐஸ் மலையினை உருவாக்கி, பனிச்சறுக்கு விளையாட முடியும் என நிரூபித்த துபாய். இன்றைக்கு? என்ன நடந்தது?

ஆயில் என்றால் வளைகுடா நாடுகள் என்றான நிலையில், ஆயிலை ஊறுகாய் அளவில் வைத்திருக்கும் நாடு துபாய். ஐக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்பில் இரண்டாவது பெரிய நாடு. அபுதாபி முதல், அது தான் தலைமை. அங்கே ஆயில் கொழிக்கிறது. துபாயின் மன்னருக்கு ஒரே கவலை. நம்மிடத்தில் ஆயில் இல்லை.ஆனாலும் நாம் வளர்ந்தாக வேண்டும் என்ன செய்வது. சரி நாட்டினை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடுவோம். ரெயில்வே கேட் தனமாய் ஒரேயடியாய் திறந்தார்கள்.

துபாய் வளைகுடாவின் வாசலானது. கடைக்கு போய் பொருள் வாங்குவதையே ஒரு திருவிழாவாக மாற்றினார்கள் - துபாய் ஷாப்பிங்.யார் வேண்டுமானாலும் வரலாம் என்றார்கள்.கோடம்பாக்கத்தில் நேற்று உதவி இயக்குநராக சேர்ந்தவரிலிருந்து ஷாருக்கான் வரை துபாயினை தங்கள் மாமியார் வீடாக நினைத்து கொண்டு போக ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் இந்த மாற்றமெல்லாம் நன்றாகதான் இருந்தது. அதற்கு பிறகு ஏழரை ஆரம்பித்தது.

மால்கள்.சாலைகள்.கட்டிடங்கள்.செயற்கையாய் உலக வரைப்படம் போல ஒரு தீவு. அதில் வில்லாக்கள். ஹோட்டல்கள். சகலவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள்.நீங்கள் விளையாட்டு வீரரா, டான்னா, ஹாலிவுட்/பாலிவுட்/கோலிவுட் பிரபலமா, ஊழல் பெருக்கெடுத்து ஒடும் நாட்டில் சேர்த்த கள்ளப்பணமா, ரஷ்ய மாபியாக்களா, வாங்கோ வாங்கோ, வந்து ஒரு வில்லா வாங்கிட்டு போங்கோ என்கிற ரீதியில் ஆரம்பித்தது இந்த விளையாட்டு.

அமெரிக்க ஆர்கிடெக்ட். பிரிட்டிஷ் கட்டுமான நிறுவனங்கள், அதில் வேலைசெய்ய இருக்கவே இருக்கிறது இந்திய,பாகிஸ்தானிய,பங்களாதேசிய தொழிலாளிகள். குறைந்த சம்பளம், கடுமையான வேலை, பயமுறுத்தல்கள், அதிகாரம். வீட்டு வேலை பார்க்க பிலிப்பினோ, இந்தொனேசிய பெண்கள். பாலியல் அத்துமீறல், குடும்ப வன்முறை, அளவுக்கதிகமான வேலை. நியதிகள், நியாயங்கள், தொழில்தர்மங்கள் என எந்த வரைமுறையும் கிடையாது. ஒரே குறிக்கோள், பணக்காரர்களின் வசந்தபுரியாவது. இதெல்லாம் எப்படி சாத்தியமாகும் ?

இருக்கவே இருக்கிறது உலக சந்தை.டாலரா, யூரோவா எப்படிவேணுமானாலும் குடுங்க. வாங்கிக்கறோம். உலகத்துலயே பெரிய கட்டிடம்.பெரிய தீவு.பெரிய க்ரெவுண்டு எல்லாம் பெருசு பெருசா, ஷங்கர், ஸ்பீல்பர்க் படங்களின் பிரமாண்டங்களுக்கு இணையாக நாங்க காட்டறோம் என்று திறந்து வைத்தார்கள். சரி தான்ப்பா, முஸ்லிம் நாட்டுலயே கொஞ்சம் முற்போக்கா யோசிக்கிறானே என்று அமெரிக்க/ஐரோப்பிய வங்கிகள், பணக்காரர்கள், ஹெட்ஜ் பண்டுகள் என துபாயில் குவிய ஆரம்பித்தது. இது வெறுமனே போன வருடம் ஆரம்பித்த பிரச்சனையல்ல.

துபாய்க்கு என்று சொந்தமாய் சொல்லிக் கொள்ள இருந்த பாலைவனத்தை தவிர வேறெதுவும் கிடையாது. ஆயிலும் இல்லாமல் போனதால் வேறு வழியில்லாமல், துபாயினை ரியல் எஸ்டேட் மற்றும் கேளிக்கை பிரதேசமாய் மாற்றலாம் என்று மன்னர் முடிவெடுத்தார். திருநள்ளாறு சனிஸ்வரன் தெளிவாய் இந்த எண்ணம் வரும்போது மன்னரின் மண்டையில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருந்தான் என்பது மட்டும் நிச்சயம்.

ரியல் எஸ்டேட் என்கிற விஷயம் உலகமுழுக்க இருக்க்க்கூடிய விஷயம்தான். ஒன்றுமில்லாத உதவாத நிலங்களையே இங்கே இருக்கக்கூடிய நிலச்சுறாக்கள் (Land Sharks) ஒவராய் பில்ட்-அப் பண்ணும்போது, துபாய் மன்னரிடம் காசிருந்தது. சொல்லவே தேவையில்லை. கட்ட ஆரம்பித்தார்கள். அடுக்குமாடி அலுவலகங்கள், வீடுகள், வில்லாக்கள். உலகம் 2002-2007இல் வேகமாக முன்னேறியது. ஒரளவுக்கு மில்லியனராக இருந்தவர்கள் அத்தனை பேரும், துபாயிலும் ஒரு வீடு வைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தினை வலுவாக ஊன்றி விதைத்தார்கள்.

உலகமுழுவதும் ரோட்ஷோ நடந்த்து. துபாய் ஒரு சொர்க்க லோகம், எல்லாம் அங்கே இருக்கிறது என பரப்ப ஆரம்பித்தார்கள். இதற்கு கிடைத்த ஆரம்ப வரவேற்பு, நிறுவன்ங்களையும், வியாபாரிகளையும் வேறுவிதமாக யோசிக்க வைத்த்து. ஜாக்கி சான் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால் என்ன தோன்றும்? தாவ்வும், அடிக்கவும், குதிக்கவும் தோன்றும். துபாய் குதிக்க ஆரம்பித்த்து. அதற்காக கடன் பத்திரங்கள், வங்கியிலிருந்து கடன், பராஜ்கெட் நிதி, அன்னிய செல்வாணியில் குறைந்த வட்டி கடன் என்று நிதி சேவையில் எவ்வளவு வசதிகள் இருந்த்தோ, அத்தனையும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். நிறுவனங்கள், வங்கிகள் துபாயின் ஆரம்பகட்ட வளர்ச்சியின் கவர்ச்சியால் உள்ளிழுக்கப்பட்டார்கள்.

காசு கொட்ட ஆரம்பித்தது. நாலாபக்கமும் போய் பேசி, பேசியே பணத்தினை உள்ளே கொண்டுவந்தார்கள். அப்போது யாருக்கும் தெரியவில்லை, இது அனைத்தும் ஒரு நாள் திருப்பி அடைக்கவேண்டிய பணம் என்பது. எல்லாரின் நம்பிக்கையும், 100ரூ வாங்கி முதலீடு செய்தால் 300,400,500 பார்க்கலாம் என்பதுதான். போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் கொடுத்தன. கற்பனைக்கும், வாழ்தலுக்கும் சாத்தியமில்லாத டிஸ்னி லேண்ட் போல துபாயில் ரியல் எஸ்டேட் வளர ஆரம்பித்த்து. எல்லார்க்கும் ஒரு கனவு திட்டம். நடுவில் அந்தரங்கத்தில் தொங்கும் ஒரு ஹோட்டலை கூட நிறுவ முயற்சிகள் நடந்தது.

பணம், பணம், மிதமிஞ்சிய பணம். அடுத்தவன் வீட்டு மனைவி எல்லார்க்கும் எல்லா சமயங்களிலும் அழகாக தான் தெரிவாள், அந்த மாதிரி, இது அடுத்த வீட்டு பணம். கிடைக்கும்போது அனுபவித்து விட வேண்டும். அங்குலம் அங்குலமாக அனுபவித்தார்கள்.

துபாய் வேர்ல்டு ஒரு மாதிரியான குவாசி அரசு நிறுவனம். தன் துணை நிறுவனமான நக்கீல் குழுமத்திடத்தில் தான் பாம் ஜுமைரா என்கிற செயற்கை தீவினை உருவாக்கும் வேலையினை கொடுத்தது. வெளிநாட்டு பணத்தினை கடனாகவும், ஸுகுக் என்றழைக்கப்படும் இஸ்லாமிய கடனாகவும் வாங்கினார்கள். கொஞ்ச நஞ்ச காசல்ல $60 -$80பில்லியன் டாலர்கள். சராசரியாய் 3,68,000 கோடிகள். வாங்கின பணத்திற்கு மணலாய் கொட்டினார்கள்.கடல் கீழே போனது, தீவு மேலே வந்தது. கட்டின தீவில் வில்லா, ஹோட்டல் என்று அளந்தார்கள். அகலமாய் கால் தான் வைப்பார்கள்; இங்கே ஒரு நாட்டையே வைத்தார்கள்.

ஒட்டை பக்கெட்டில் ஊற்றின தண்ணீர் போல, துபாயின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு பணம் போய்க் கொண்டே இருந்தது. போகிற இடம் தெரியவில்லை. மண்ணில் ஒரு சொர்க்கம் என மாய்ந்து மாய்ந்து சொன்னார்கள். 3 வருடங்களுக்கு முன் எழுதிய திராம் தேசத்திலேயே இது ஒரு மாதிரியான bubble என்று சொல்லியிருந்தேன். வெடிக்க இவ்வளவு காலம் ஆகி இருக்கிறது.

லேமென் பிரதர்ஸில் ஆரம்பித்தது அமெரிக்காவின் வீழ்ச்சி. சீட்டுக்கட்டு மாளிகை மாதிரி சரெலென சரிய ஆரம்பித்தது உலக நிதி. வங்கிகள் ஒன்றினை ஒன்று நம்ப மறுத்தன. அமெரிக்க அரசாங்கம், மைக்கேல் மதனகாமராஜ மைக்கேலாய் மாறி அடித்துக் கொண்டே இருந்தார்கள் அமெரிக்க டாலரை. ஒரு பக்கம் அச்சடித்து, இன்னொரு பக்கம், வீழப்போன எல்லா வங்கிகளையும், காப்பீடு நிறுவனங்களையும் காப்பாற்ற தமிழ் சினிமா ஹீரோ போல போராடினார்கள். ஒரு வழியாய் $2.2 டிரில்லியன் டாலர்களை செலவழித்து, அவ்வளோதாம்பா, இனிமேல் எதுவும் நடக்காது வூட்டுக்கு போய் வேலையை பாருங்கப்பா என சொல்லிவிட்டு, ஒபாமா மன்மோகன் சிங்கோடு இந்தியில் பேச ஆரம்பித்தார். இதற்குள் உலகம் ஒரு மாதிரி ரிசெஷனுக்கு பக்கத்தில் போய்விட்டு அப்புறம் வரேன் என்று சொல்லி ஒரமாய் நகர்ந்து விட்டது.

இந்த நிலை ஆரம்பிக்கும் முன்பே துபாயினை சுற்றி லேசாக எல்லாரும் நெளிந்தார்கள். வீடு, அலுவலகம் என அட்வான்ஸ் கொடுத்த அனைவரும் வாஸ்து சரியில்லை, பேங்க்ல பேலன்ஸில்லை என்று கழல ஆரம்பித்தார்கள். ஒரு பக்கம் ஜபர்தஸ்தாய் விட்ட அல்டாப்பு, இன்னொரு பக்கம் டப்பா டான்ஸ் ஆடும் நிலை. ஆனாலும், கைப்புள்ள தனமாய் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியெல்லாம் எங்களை ஒன்னும் பண்ணாது, நாங்க செம ஸ்ட்ராங்கு என உதார் விட்டார்கள். பாடி பத்திரிக்கைகளில் ஸ்ட்ராங்காய் தெரிந்தாலும், பேஸ்மெண்ட் செமவீக்கு. அந்த வீக்கம் வீங்கினால் என்ன செய்வார்கள். எவ்வளவுநாள் தான் அடிவாங்கி கொண்டே இருப்பது?

வாங்கிய காசில் $4.3 பில்லியன், 16000 கோடிகள் டிசம்பர் 14ம் தேதி கொடுக்க வேண்டும். டப்பு லேது. பெருந்தலைகள் தலையை நன்றாக சொரிந்தார்கள். டமாலென்று மூன்று, நான்கு நிறுவனங்களின் தலைகளை தூக்கிவிட்டு, சொந்தக்காரர்களை உட்கார வைத்தார். மன்னர் எழுந்தார். ஈத் பெருநாள் விடுமுறைக்கு முன்னாடி சொன்னார்- “எங்களால கொடுக்க முடியாது. ஆறு மாசம் டைம் வேணும்” சொல்லிவிட்டு குர்பானி சாப்பிட போய்விட்டார்.

அமெரிக்காவில், நவம்பரின் இறுதி வியாழக்கிழமை Thanksgiving day என்று கொண்டாடப்படும். அதற்கு அடுத்த நாளை Black Friday என்று அழைப்பார்கள். ஆடித் தள்ளுபடியினை மிஞ்சுமளவிற்கு அந்த ஊர் சரவணா ஸ்டோர்ஸில் தள்ளுபடி பிய்த்து கொட்டும். அந்த வியாழக்கிழமையும் பின்வந்த நாட்களும் இனி Black weekend என்றழைக்கப்படலாம். அந்தளவிற்கு மோசமான அடி.

நம்பிக்கை துரோகம். இஸ்லாத்தின் மிக கடுமையான ஆட்சேபிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று. ஆடு/ஒட்டகத்தினை அல்லாவுக்கு அங்கே தியாகம் பண்ணிய போது, இங்கே இப்போது தான் கொஞ்சமாய் மூச்சுவிட ஆரம்பித்த உலக பங்கு சந்தைகள் தங்கள் உயர்வினை தியாகம் செய்தன. பங்குச்சந்தைகள் டமாலென்று சரிந்து சிவப்பாயிற்று. இப்போது ஒரளவிற்கு பரவாயில்லை. அமெரிக்காவிலிருந்து, ஆஸ்திரேலியா வரை துபாயின் இந்த பின்வாங்கல், சந்தைகளில் எதிரொலித்தது.

பிரணாப் முகர்ஜியும், ரிசர்வ் வங்கியும், நாங்க பார்த்துட்டு இருக்கறோம், அவசரப்பட்டு எல்லாம் எதையும் சொல்லமுடியாது என்று ஒளிந்தார்கள். ஒரு வேளை அரசாங்க ரீதியாய் அமெரிக்க வீழ்ச்சியினை வெற்றிகரமாக எதிர்கொண்ட நமக்கு, இது ஜுஜுப்பி. ஆனால், இந்தியாவுக்கும் வரும் அந்நிய செல்வாணியில் 10% துபாயினை தலைமையாக கொண்ட வளைகுடா நாடுகளிலிருந்து வருகிறது. கேரளாவில் மாநில அரசு மத்திய கிழக்கிலிருந்து வேலையில்லாமல் வருபவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் லோன் கொடுக்கலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறது. கேரள அமைச்சர் இப்போதே குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த மழுப்பல்களுக்கு பின்னால், ஏஜெண்டிடம் லட்சரூபாய் கொடுத்து அதை அடைக்க 5 வருடங்கள் வேலை செய்யவேண்டிய கட்டாயத்திலிருக்கும் ஒரு பெருங்கூட்டத்துக்கு வேலையே இல்லை என்கிற நிதர்சனம், பல இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணம், இந்தியர்களின் வேலை வாய்ப்பு, கனவுகள், எதிர்காலங்கள்,துபாயின் எதிர்காலம், அங்கே இருந்து இனி வரும் பணம் என எண்ணற்ற கேள்விகள்.

துபாய் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவங்கள் எல்லாம் சேர்ந்து வாங்கியிருப்பது 200-300% லெவரேஜ். இந்த லெவரேஜ் விஷயம் தான் அமெரிக்கா சரிந்த சப்-ப்ரைம் பிரச்சனைக்கான முக்கியமான காரணம். லெவரேஜ் என்பது நிதி வட்டாரங்களில் சர்வசாதாரணமாய் புழங்கும் விஷயம். உதாரணத்திற்கு உங்களிடம் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு இருக்கிறது என்றால், அதை வைத்துக் கொண்டு இந்தியாவில் 60%அதாவது 60இலட்சம் வரை வங்கிகளில் கடன் வாங்கலாம். ஆனால் ஒரு கோடி ருபாய்க்கு 2 கோடி ரூபாய்? பைத்தியக்காரத்தனம். அதை தான் துபாய் செய்திருக்கிறது. வரவு எட்டணா செலவு பத்தணா என்கிற பாலையாவின் பாட்டினை அரபியில் யாரும் மொழிபெயர்க்கவில்லை போலும். லெவரேஜ் ஒவராக போனதால் அடுத்ததாக யாரும் முதலீடு செய்ய தயாராக இல்லை. வாங்கிய கடன்கள் தங்கள் நாட்டின் கரன்சியில் வாங்கி இருந்தாலாவது அமெரிக்கா மாதிரி வெளியே சால்ஜாப்பு சொல்லி, உள்ளே அடிட்டா டாலரை என்று டாலரை அடித்து சந்தையில் இறக்கியிருக்கலாம். வாங்கினது அத்தனையும் அமெரிக்க டாலரிலும், யூரோவிலும். அடித்தால் கள்ள நோட்டு அடித்ததாக உலகம் காறி துப்பும். அங்கேயும் போக முடியாமல், இங்கேயும் போக முடியாமல், எலிபோனுக்குள் வடை கவ்விய எலி போல மாட்டிக் கொண்டது துபாய்.

ஜீரணிக்க கஷ்டமாயிருந்தாலும், பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போலானது இன்றைக்கு துபாயின் நிலைமை. பகட்டு பல்லித்துப் போனது.கொடுக்க காசில்லை.உலக வங்கிகளின் பிரஷர் வேறு.மரியாதை போனது.எவனும் இனி ஏறெடுத்து பார்க்க மாட்டான். இப்போதைக்கு அவர்களின் ஒரே நம்பிக்கை அபுதாபி.

பார்வை 1: அபுதாபி முன்னாடி. அமெரிக்கா பின்னாடி.

அமெரிக்காவுக்கு ஈரான் என்றாலே அலர்ஜி. ஆனால், ஈரானுக்கும் துபாயுக்குமான உறவுவோ வைப்பாட்டிரீதியலான உறவு. துபாய்-டெஹ்ரானுக்கு இடையில் 300 விமானங்கள் வாரம் தோறும் பறந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும், அபுதாபிக்குமான உறவு முழுக்க முழுக்க வாணிப உறவு. அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி உச்சத்தில் இருந்த 2008இல், சிட்டி வங்கியினை தடுத்தாட்கொண்டது அபுதாபி தான். அவ்வளவு ஸ்ட்ராங்கான பெவிகால் உறவு.

மத்திய கிழக்கு பகுதியில் ரொம்பநாட்களாய் பெருந்தலையாய் இருப்பது சவூதி அரேபியா. ஈராக் மீதான போர்களின் போது கூட அமெரிக்காவின் கூட இருந்தது சவூதிதான். ஆனால், எப்போது 9/11 ஆனதோ, அப்போதிலிருந்தே அமெரிக்கா சவூதி மீது ஒரு ஒரக்கண் பார்வையினை வைத்தது. அல்-குவைதா , ஹெஸ்புல்லா உட்பட பல இயக்கங்களுக்கு சவூதி மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது என்பது ஊரறிந்த ரகசியம்.

இந்த நிலையில் தான் அந்த பெவிகால் பந்தம் முக்கியமானதாகிறது. ஐக்கிய அரபு குடியமைப்பு என்பது ஒரு லூசான பெடரல் அமைப்பு. தலைமை அபுதாபி. துபாயுக்கும் அபுதாபிக்குமான உறவு கொஞ்சம் காம்பெள்க்ஸானது. இரு நாடுகளையும் ஆளும் மன்னர்களின் குடும்பங்களுக்கு இடையில் ஒரு பனிமண்டலமாக ஒரு சண்டை இருந்து கொண்டே இருந்தது. இப்போதைக்கு துபாய்க்கு அபுதாபிதான் கதி.

இதைதான் அமெரிக்காவும் விரும்புகிறது. இந்த பிரச்சனையினை வைத்துக் கொண்டு, துபாய்-ஈரான் இணைப்பினை துண்டாக்கி, ஈரானை தனிமைப் படுத்த விரும்புகிறது.அதற்கு அபுதாபி தான் அம்பு. இப்போதே அபுதாபி, ஒட்டுமொத்தமாக துபாய் பிரச்சனையினை நாங்கள் தீர்க்க முடியாது, கேஸ்-டூ-கேஸ், அதாவது கொஞ்ச கொஞ்சமாய் ஸ்வாகா பண்ணுவோம் என்கிற வகையில் செக் வைத்தாகி விட்டது.

ஆக, துபாய் அபுதாபியிடமிருந்து கைமாற்றி கடன் அடைத்தால், அபுதாபி சொல்வதை கேக்க வேண்டும். அபுதாபியின் கண் புர்ஜ் அல் அராபும், எமிரேட்ஸ் ஏர்லையன்ஸும், துபாய் அலுமினியமும், இன்ன பிற சவுகரியங்களும். அமெரிக்காவின் கண் ஈரான். அபுதாபி என்ன சொல்ல வேண்டும் என்பதின் ஸ்க்ரிப்டினை அமெரிக்கா இந்நேரம் எழுதி முடித்திருக்கும்.

ஆசாத் இதை சுருக்கமாய் துபாய் மன்னருக்கு “சார் கோடா. ஏக் பங்களா (4 குதிரைகள்.ஒரு மாளிகை) என்று ஒரு வருடத்திற்கு முன்னாடியே சொன்னார்.

பார்வை 2: சீனா. கிறுக்கல்களாய் ஒரு நேர்கோடு.

அமெரிக்காவுக்குகே ஆப்படிக்கும் சீனா. எல்லை விஸ்தரிப்பு என்பதை ஏதோ நூடூல்ஸ் சாப்பிடுவதுபோல சர்வசாதாரணமாய் செய்யும் நாடு. தைவானோ, கிழக்கு மங்கோலியாவோ, இந்தியாவின் அருணாச்சல பிரதேசமோ.எல்லை, பெரிய எல்லை. அளவற்ற எல்லை. இந்த விஸ்தரிப்புக்கு அடிப்படை கட்டமைப்புகள் அதிகம் தேவை. சாலைகள், ஆயில், கேஸ், இரும்பு, பித்தளை இன்ன பிற இயற்கை வளங்கள். இதற்காகவே சீனா தொடர்ச்சியாக ஆப்ரிக்காவில் தன்னுடைய நிலையினை வலுவாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. காரணம், ஆப்ரிக்காவின் இயற்கை வளங்கள். இந்த காரணம் ரொம்ப முக்கியம்.

துபாய் ஒரு இணைக்கும் துறைமுகம். உலகில் மிக பிசியான துறைமுகங்களில் அதுவும் ஒன்று. அங்கிருந்து ஆப்ரிக்கா பக்கம். அமெரிக்காவின் அரசாங்க பாண்டுகளை ஒரு பக்கம் வாங்கி, ப்ளாக்மெயில் செய்தாலும், சீனாவுக்கு உள்ளூர அமெரிக்க அமைப்புகளின் மீது நம்பிக்கையில்லை. அதனாலேயே அது ரஷ்யாவோடும், ஈரானோடும் பேசிக் கொண்டிருக்கிறது. காரணம் ஆயில். ஆயில் வியாபாரம் என்பது அமெரிக்க டாலர்களில் புழங்குகிற வியாபாரம். அமெரிக்கா அடிமேல் அடிவாங்கி, வடிவேலுதனமாய் உதார் விட்டாலும், அதன் கரன்சி ஒமக்குச்சி நரசிம்மனுக்கு இணையாக வீக்காகிக் கொண்டே வருகிறது.

இந்நிலையில்தான் ஈரான் இனிமேல் ஆயிலை அமெரிக்க டாலர்களில் விற்கமாட்டோம், பதிலாக யூரோ, யென், ஸ்டெர்லிங் போன்ற கரன்சிகளில் விற்போம் என்றது. தோதாய், அமெரிக்க டாலருக்கு இணையான ஒரு மாற்று கரன்சி தேவை என்று சீனா பகிரங்கமாக பிரச்சனையை கிளப்பியது. மேட்டர் என்னவென்றால், சீனா-ஈரான் உறவு சீனாவின் ஆயில் தேவைக்கு ரொம்ப முக்கியம். நேரடியாக அமெரிக்காவினை பகைத்து கொள்ளவும் முடியாது. ஆனால், ஈரானும் ஆப்ரிக்காவும் முக்கியம்.

துபாய் துறைமுகத்திலிருந்து ஆப்ரிக்கா கல்லெறியும் தூரம். ஆப்ரிக்காவிலிருந்து சீனாவுக்கு நிறைய ஏற்றுமதி/இறக்குமதிகள் நடந்து வருகிறது.ஆப்ரிக்காவின் நிச்சயமற்ற அரசமைப்பினை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, ஒரு மீட்பர் போல உள்ளே இறங்கி அச்சச்சோ இந்த அமெரிக்க, பிரிட்டிஷ்காரனுங்க உங்க ஊரையே நாசமாக்கிட்டானுங்க, பாவிப் பசங்க, நான் போடறேன் ரோடு. நான் கட்டறேன் துறைமுகம்.ஆஸ்பத்திரி. பதிலுக்கு உங்க இயற்கை வளத்தை நாங்க எடுத்துக்கறோம் என்று டீல் பேசி ஜகத்ஜோதியாய் நடந்து வருகிறது. இந்த நிலையில் சீனாவுக்கு துபாய் முக்கியம். ஏதேனும் ஐல்லியடித்தாவது ஜெகஜாலக் கில்லாடியாய் உள்ளே புக நேரம் பார்த்து கொண்டிருக்கிறது. ஷேக் ம் என்றால்,கடல்வழியே ரோடு கூட போட தயங்காது.

ஆக இப்போதைக்கு துபாயின் நிலை யாரேனும் காபாற்றினாலேயொழிய தாங்காது. ஆனால், காப்பாற்ற நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள், அவரவர்களின் திட்டங்களோடு. வரும் நாட்களில் நிறைய தெரிய வரும். அல்லா மேலிருந்து புன்முறுவலோடு எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கிறார்.

என்ன நடந்திருக்கிறது?

ஐக்கிய அரபு குடியமைப்பின் மத்திய வங்கி துபாய் வேர்ல்டின் $59பில்லியன் கடனுக்கு ஈடாக, அங்கிருக்கும் வங்கிகளும் கூடுதல் பணம் பெறும் வசதியினை தருவதாக சொல்லியிருக்கிறது. இது ஒரு தாற்காலிக நிம்மதி.

  1. துபாய் வேர்ல்ட்டுக்கும், துபாய் அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை என்று அரசு ஒதுங்கி கொண்டது. துபாய் வேர்ல்டு, வங்கிகளோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறது.
  2. நக்கீல் குழுமம், துபாய் பங்குச்சந்தையிலிருந்து தன்னுடைய 3 ஸுக்குகினை தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது
  3. துபாய் அரச குடும்பத்துக்கு சொந்தமான துபாய் ஹோல்டிங்கிலும் கடன் பிரச்சனைகள் தலையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன
  4. ஐக்கிய அரபு குடியரசின் மத்திய வங்கியின் வாக்குறுதி இருந்தாலும், ஒட்டு மொத்த மத்திய கிழக்கு நாடுகளின் கடன் வர்த்தகங்களின் மீது ஒரு பெரும் கறும்புள்ளி விழுந்திருக்கிறது. இன்னும் கொஞ்ச காலம் ஆகும் நிலைமை சீராக
  5. ஐஎம்ப் மெதுவாக இப்போது தான் தலையை உயர்த்தி, “இன்னாப்பா பிரச்சனை, நான் உள்ள வரணுமா, ஆளை அனுப்பனுமா” என கேட்க ஆரம்பித்திருக்கிறது
லண்டனிலிருந்து வரும் இண்டிபெண்டெண்ட் நாளிதழின் புகழ்பெற்ற நிருபர் ஜோஹான் ஹரி சொன்னது தான் நிறைவானது அடிமை உழைப்பில் வளர்ந்த சர்வாதிகாரத்தில், தர்மநியாயங்கள் என்றோ காலி; இன்று பணமும்
Dubai: A morally bankrupt dictatorship built on slave labor is finally financially bankrupt.

சர்வ நிச்சயமான உண்மை.

Labels: , , , ,


Comments:
துபாய் பொருளாதார பிரச்சனைகளை பற்றிய முழுவடிவத்தினை உள்வாங்கிக்கொண்டேன் விவரங்கள் இப்பொழுதுதான் விஷயத்தினை புரிபடச்செய்கின்றன!

நன்றி!
 
நல்ல கட்டுரைதான். ஆனால் 'கிழக்கு பதிப்பக' புத்தகமொன்றை படித்த உணர்வு. :-)
 
உருகி உருகி ப்ளாக் பாணி எழுத்து பத்திரிக்கைக்கு சரிபடாது!
 
ஆயில்யன், நன்றி,

ராஜு, பதிவுக்காக கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்.

சுரேஷ், (கிழக்கு பதிப்பகம்) :) non-fiction என்றால் கிழக்கு மட்டுமே நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல
 
பல விஷயங்கள் தெளிவாக புரிந்தது... நன்றி
 
பல விஷயங்கள் தெளிவாக புரிந்தது... நன்றி
 
மிக் விளக்கமான ,தெளிவான பதிவு...

துபாயின் இன்றைய நிலைமையும்..சர்வதேச நிலமையையும் ஒருங்கே கூறியுள்ளீர்..

பகிர்வுக்கு நன்றி...

புதிய தலைமுறைக்கு அனுப்பி பார்க்கவும்...நண்பரே
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]