Feb 6, 2010

செல்வா: ஆயிரத்தில் ஒருவன்இது ஆயிரத்தில் ஒருவனின் விமர்சனம் இல்லை.

செல்வராகவன். எனக்கு செல்வா.

தமிழ்சினிமாவின் மார்க்கமான கலர் உள்ள ஆள். வுட்லெண்ட்ஸ் ஸிம்பொனியில் தான் “துள்ளுவதோ இளமை” பார்த்தேன். பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது, இந்தாள் வேறு ஜாதியென்று. வெறும் கதவு மட்டும் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருக்கும் “காதல் கொண்டேன்” ட்ரைய்லர் பார்த்தவுடன் புரிந்துவிட்டது, செல்வா ஒரு சாதாரண நாலு பாட்டு, நாலு பைட்டு இயக்குநர் அல்ல என்று. சாருவும் நானும் ’காதல் கொண்டேன்’ படத்தினை அலசோ அலசென்று அலசி, ரஜினிக்கு பிறகு தனுஷ் தான் ஒரு சாதாரணன் கதையின் நாயகனாக இருக்க தகுதியானவன் என்பதை நிரூபித்திருக்கிறார் என்று கொண்டாடினோம்.

இந்த படத்தினை பற்றிய நேர்/எதிர் மறை விமர்சனங்களில் பல விஷயங்கள் மொக்கையாக தெரிகின்றது. தேவி இதழில், கோவி. மணிசேகரன் சோழ வரலாற்றினில் மிகப் பெரிய களங்கமாக இந்த படம் இருக்கிறது என்றிருக்கிறார். முதல் 10 நிமிடங்கள் கழித்து திரையரங்குக்கு போயிருப்பார் போல. அடுத்த கேள்வி, குடவோலை முறை கொண்டு வந்த சோழன் சோத்துக்கு அடித்துக் கொள்வானா என்றெல்லாம் மொன்னைத்தனமான விவாதங்கள். இதற்கு ரொம்ப தூரம் வரலாற்றில் பயணிக்க வேண்டாம் 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் முதல்வராக பக்தவசலம் இருந்த போது, தமிழகத்தில் வரலாறு காணாத பஞ்சம். எலிக் கறி சாப்பிடுங்கள் என்று திருவாய் மலர்ந்தருளினார் முதல்வர். எப்போது இது நடக்கிறது 20ஆம் நூற்றாண்டில். கிட்டத்திட்ட 800 வருடங்கள் குகையிலேயே இருக்கக்கூடிய மனிதர்கள் சோற்றுக்கு அடித்துக் கொள்ளாமல் போனால்தான் ஆச்சர்யம்.

இரண்டாம் பகுதி தான் என்னை பொறுத்தவரை அட்டகாசம். அந்தமான் தீவுகளில் வசிக்கும் ஜராவாக்களை முன்மாதிரியாய் கொண்ட உடல்மொழி, நம் ஆதி தமிழர்களுக்கு அச்சு அசலாக பொறுந்துகிறதுபொருந்துகிறது. ஊரே பஞ்சத்தில் இருக்கும்போது அரசனுக்கு மட்டும் பெண் வேண்டுமா என்றும் ஒரு கேள்வி இருக்கிறது. பாலுறவு தான் அங்கே எல்லாமே, இதை எல்லா ஆதிவாசி சமூகங்களிலும் நீங்கள் பார்க்க இயலும். வழக்கமாய் செல்வா படங்களில் முன்வைக்கும் செக்ஸ்/ஆபாசம். ரீமா சென் நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதை ஆபாசம் என்று சொல்லி கொண்டு ஒரு கூட்டம் திரிந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு வரலாறும் தெரியாது, நாட்டு வைத்தியமும் தெரியாது. கிழவிகளும், திருநங்கைகளும் தான் அந்தப்புரத்தில் இருப்பார்கள், அவர்கள் பெண்களின் சிறுநீரைக் கொண்டே மாதவிலக்கு இருக்கிறதா, கர்ப்பமாக இருக்கிறாளா என்றெல்லாம் சொல்ல முடியும். அப்படி தான் காலாகாலமாய் நடந்திருக்கிறது. இது எப்படி ஆபாசம் என சொல்ல முடியும்.

இரண்டாம் பகுதி; செல்வா இதற்கும் ஈழ போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை என்று politically correct-ஆக இருக்க முயன்றாலும், அது நினைவுக்கு வராமல் படம் பார்க்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் கருப்பு பக்கங்களையும், ரத்த சிதறல்களையும் இதை விட தெள்ளத் தெளிவாக படம் வரைந்து பாகம் குறிக்க முடியாது. இது ஒரு பேண்டஸி கதை. லார்டு ஆப் தி ரிங்ஸ், ஹாரி போர்ட்டர், நார்னியா மாதிரியான ஜிகினா கதை, நார்னியாவில் சிங்கம் பேசும். பெரும் மிருகங்கள் ரிங்ஸில் அலையும். ஹாரி போர்ட்டரில் எல்லாரும் பறப்பார்கள். அந்த மாதிரி தான் இதுவும். ஜோசியர்களை நம்புகிறானே அரசன் என்றொரு கேள்வி இருக்கிறது. நம் மன்னர்களின் பழக்கவழக்கங்களை ஆராய்ந்தால் பாதி பேர்கள் அந்தப்புரமே கதியென்று இருந்தவர்கள் தான். அரசமைப்பு அத்தனையும் ராஜகுரு கையில் தான் [எவ்வளவு எம்.ஜி.ஆர் படங்களில், நம்பியாரை ராஜகுருவாக பார்த்திருக்கிறோம்]

இந்த படத்தின் கதை, காட்சியமைப்புகள் இதை பற்றியெல்லாம் ஏற்கனவே பலர் அலசி விட்டார்கள். ஜி.வி.பிரகாஷின் இசை, அசாதாரணம். உதாரணத்திற்கு Celebration of Life என்கிற கார்த்தீயும், பார்த்தீபனும் ஆடும் பாடல், அதன் நம்பகத்தன்மை, ஆதி தாளங்கள், அதனூடே ஒலிக்கும் ஒரு கலவையான சோகம் என மனிதர் பின்னியெடுத்து இருக்கிறார். அரங்கில் நெல்லாடிய நிலம் பாட்டினை வெட்டிவிட்டார்கள். யூட்யுபில் பார்த்தப் போது தான் தெரிந்தது, என்ன ஒரு அருமையான காட்சியமைப்பு. மன்னன் தன் குலப் பெருமையினை பற்றி சோகமாய் இருக்கிறான், உள்ளூர வந்த வில்லியோ அவனை மயக்கும் வழியில் இருக்கிறாள். வைரமுத்துவின் வரிகள், விஜய் ஜேசுதாஸின் குரல் என இந்தப் பாடலை வேறு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.இறுதி போர்க்காட்சியில் குன்றின் மேல் சோழ அரசன் நின்று கொண்டிருப்பார். அவரை மையமாக டைட் குளோஸ்ப்பில் வைத்து பின்னிருக்கும் கூட்டத்தினை காட்டும் ஒரு காட்சி போதும், ராம்ஜியும், செல்வாவும் எந்த அளவிற்கு ஹோம் வொர்க் செய்திருக்கிறார்கள் என்று. மற்றபடி, இறுதியில் மன்னரையும், தூதுவனையும் சுற்றி படைவீரர்கள் இருப்பார்கள். அப்போது மன்னர், தூதுவரை பார்த்து சொல்லும் வசனம் “இப்படிப்பட்ட களம் என்று சொல்லவேயில்லையே. அச்சப்படுவோமென்றா” என சொல்லி, சிரிக்க ஆரம்பிப்பார், இருக்கும் அத்தனை வீரர்கள் சிரிப்பார்கள், சிரித்துக் கொண்டே ஒவ்வொருவராய் உயிர் துறப்பார்கள். மரணத்தினை கூட நெஞ்சுரத்தோடும், தைரியத்தோடும் சந்திப்பவன் தமிழன் என்பதை இதைவிட தெளிவாக விளக்க முடியாது. சோழனின் பயணம் தொடரும் என்று முடித்திருக்கிறார்கள், 2012க்கு பின்னால் இது சாத்தியமென்றால், இந்த ஒரு படத்திற்காக செல்வாவிடம் வேலைக்கு போக தயார்.

கதை புரியவில்லை, இரண்டாம் பகுதி குழப்பமாக இருக்கிறது என்பவர்களுக்கான கோனார் கையடக்க உரையினை பிரகாஷ் எழுதியிருக்கிறார். மற்றபடி, ரீமா சென்னின் அசத்தலான நடிப்பை பற்றியோ, பார்த்தீபன் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய அச்சுஅசலான மன்னனையும், கார்த்தீயின் கேஷுவலான நடிப்பை பற்றியும் என்னை விட நன்றாக லக்கிலுக் எழுதியிருக்கிறார். [நன்றி லக்கி, பதிவு படித்த பிறகு தான் பு.பித்தனின் “கபாடபுரம்” தேடி பிடித்தேன். அதோடு “கயிற்றரவு”ம் இலவச இணைப்பாக]

இந்தப்படத்தில் நெருடல்களே இல்லையா என்றால், பல இருக்கிறது. ஆனால், எந்த பாண்டஸி படத்தில் தான் இல்லை. இது ஒரு அசாதாரணமான உழைப்பு. ஒலிநாடா வெளியீட்டு விழாவில் ராம்ஜி சொன்னது போல, இந்த படத்தின் நிஜ ஹீரோக்கள், செல்வா, கார்த்தீ, பார்த்திபன், ரீமாசென், ராம்ஜி, ஜி.வி.பிரகாஷ், கோலா பாஸ்கர் போன்றோர்கள் இல்லை. நிஜ ஹீரோக்கள் - துணை/இணை இயக்குநர்களும், ஆயிரக்கணக்கான துணை நடிகர்களும்தான்.

தேவையில்லாத பின்குறிப்பு: இதை எழுதி திருத்தி முடித்த பின்பு தான், சாருவின் ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் படித்தேன். கோவா விமர்சனமும் படித்தேன். எல்லாம் தெள்ளத் தெளிவாக புரிந்துவிட்டது :)

Labels: , , ,


Comments:
டிபிகல் "உருப்படாதது" விமர்சனப் பார்வை :) நன்றாக இருந்தது, நரைன்..

எனக்கும் இந்த "சோழர் காட்டுமிராண்டிகளா" என்ற குழப்பம் உள்ளது?

ஆஹா ஓஹோ கிரியேட்டிவிடி இருப்பதாக கொள்ள முடியவில்லை, நல்ல வித்தியாசமான முயற்சி, ரீமா கண்ணுக்குள்ளே ரொம்ப நாள் இருப்பார் :)
"தமிழர்களுக்கு அச்சு அசலாக பொறுந்துகிறது
"பொறுந்துகிறது"" is a typo, I think!
 
ஆஒ வைப் பற்றிய விமர்சனங்களில் ரசிக்கக் கூடிய வகையில் வந்துள்ள இடுகை !!!

:)
 
தேவையில்லாத பின்குறிப்பு இப்பதிவுக்கு மிகத்தேவையானதாகவே இருக்கிறது :-)

ஏனோ தெரியவில்லை. கல்யாண பரபரப்பு முடிந்து களைப்போடு, சாவகாசமாக வெத்தலை போடும்போது எழும் உணர்வு இப்பதிவை வாசித்ததும் எனக்கு வருகிறது! மிக்க நன்றி!
 
பாலா, பதி - நன்றிகள். யுவகிருஷ்ணா > பைத்தியம் பிடித்தாற் போல Celebration of Life மற்றும் King Arrives இரண்டு இன்ஸ்ட்ருமெண்டலும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.இது ஒரு மாதிரியான மயக்கும் இசை.
 
இந்த படம் பிடிக்கவில்லை/புரியவில்லை என்பவர்கள் தலையில் "அதுக்கெல்லாம் அறிவு வேணும்டா டோமரு" என கொட்டு வைக்கும் ஒரு மனோபாவத்தை AO பிடித்தவர்களின் விமரிசனங்களில் பொதுவாக பார்க்கிறேன்.
படம் புரியாமல் எல்லாம் இல்லை. ஆனால் இன்று வரை என்ன 'மயித்துக்கு' ரீமா சென் பார்த்திபனை மயக்க ட்ரை பண்ணுகிறார் என்று புரியவில்லை. அவரை கொல்லவா? இது மாதிரி எதாவது லாஜிக்கா / serious question கேட்டால் "இது பாண்டஸி படம்பா" என்று வாயை மூடுவிடுகிறீர்கள். In my opinion, for the homework Selva had done (bring Chola-Pandiya feud, archaeology செட்டிங் etc), Stamping it as "fantasy movie" is the biggest insult one can give to him. அவர் பாண்டஸி படம் செய்ய நினைத்திருந்தால் ஜெகன் மோகினி மாதிரி "ஒரு ஊருல ஒரு ராஜா" , இல்லை டைம் ட்ரேவல் டைப்பில் கதை சொல்லிருக்கலாம். (தெலுங்கு பாலகிருஷ்ணா கூட டைம் ட்ரேவல் படம் பண்ணியிருக்கிறார்)...
and, பிரகாஷ் போன்றவர்கள் அழகம் பெருமாள் தான் பொன்சேகா, அவன் தான் கோத்தபய என படம் வரைந்து பாகம் குறிப்பது, ஏதோ யாருக்குமே புரியாத ஒரு விஷயத்தை இவர்கள் கண்டுபிடித்து போல் பெரிய காமெடி.
மற்றும், நீங்கள் உங்கள் "characteristic " and usual டைப்பில் நார்த் மெட்ராஸ் பசங்கள் இப்படி தான் கார்த்தி மாதிரி இருப்பார்கள், 'நான் ஒன்பதாப்பு படிக்கறச்சே ஹார்பர்ல' என்று எதாவது சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்..:D
 
நட்ராஜ்,

ரீமா எதறகாக பார்த்தீபனை மயக்கவேண்டும் என்பது தான் அடிப்படை கேள்வி. முதலில் இவர்கள் மூவரையும் பிடித்தவுடன், அந்த மதியுகி, கார்த்தீயை தொங்கவிட்டு முதுகில் இருக்கும் புலி படத்தினை காண்பித்து இவன் தான் தூதுவன் என சொல்ல, பார்த்தீபன் அதை நக்கலாக பார்த்து வாளால் கோடு கிழிப்பார்.

அதே சமயம், ரீமா தன் முதுகில் அமானுஷ்ய சக்தியுடன் புலிப்படத்தினை காண்பித்து, மன்னரை கைக்குள் போட்டு கொள்வார். மன்னரின் மனைவியின் பார்வை, ரீமோவோடு பார்த்தீபன் சம்போகிக்கும்போது தெரியும், அவள் எந்தளவிற்கு ரீமாவினை வெறுக்கிறாள் என்று.

இரண்டாவது மன்னனின் அந்தப்புரத்தில் யார் வேண்டுமானலும் மன்னரின் ஆசைக்கு அடிபணிந்து களிப்பூட்டலாம். அதனால் தான் ஆண்ட்ரியா வரும் போது, பார்த்தீ சொல்லும் வசனம்.”வந்து கூடிவிட்டு போகட்டும், பாவம் வேற்று நாட்டு பெண்வேறு” என்று. ஆக சம்போகம் என்பது மன்னரோடு இணையாக இருப்பது.

பாண்டஸி படத்தில் லாஜிக்கோடு இருக்கக் கூடாது என்று யார் சொன்னது?Raiders of the Last Ark சீரிஸ் பார்த்தீர்களேயானால், குள்ளர்கள், விசித்திர ஜந்துக்கள் என பலவாக இருக்கும். ஆனால், அவர்களும் ஏதோ மயன், எகிப்திய நாகரீகம்மாதிரி ஒன்றினை காட்டி ஜல்லியடிப்பார்கள்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]