Oct 12, 2010

வார்த்தைகளின் வன்புணர்ச்சி

சமீபத்தில் யுவகிருஷ்ணாவின் பேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ் அப்டேட் பார்த்தேன், அதை பார்த்தவுடன் நான் போட்ட கமெண்ட் இது:
"லக்கி, கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டிய பாதிபேர்கள் தான் வலைப்பதிவிலும், டிவிட்டரிலும் இருக்கிறார்கள் என்பது தான் என்னுடைய திடமான கருத்து. இவர்கள் போய் கீழ்ப்பாககம் கேவலப்படக் கூடாதே என்கிற நல்லெண்ணத்தில் பெயர்களை உங்கள் யூகத்துக்கு விட்டு விடுகிறேன்."

தமிழ் பதிவர்கள்/ட்வீட்டர்கள் என்று எல்லாவிதமான நவீன தொலை தொடர்பு வசதிகளையும் தமிழர்களாகிய நாம், நமக்கானதாக மாற்றிக் கொண்டு, அதிலும் நம் திண்ணை பேச்சினையும், வெட்டி அரட்டையையும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். தமிழனின் பாரம்பரிய ஜீன் அது. இது இன்று நேற்றல்ல, யாஹூ குழுக்கள், தமிழ்.நெட் மன்றங்களிலிருந்து தொடர்ச்சியாக இப்போதைக்கு டவீட்டர்/பேஸ்புக் வரை வந்திருக்கிறது. சாரு நிவேதிதா வழக்கமாக அவர் பதிவில் சொல்லிக் கொள்வது போல 25000 வாசகர்கள் எப்போதும் (அ) எதற்கும் தமிழில் தயாராக இருக்கிறார்கள் :) அந்த வகையில், தமிழ் இணையத் தொடர்ப்பில் நான் கொஞ்சம் பெருசு. முட்டாள்தனமாய் 2000த்திலிருந்து இருக்கிறேன்.

என்னுடைய இந்த வலைப்பதிவும், என்னுடைய ட்வீட்டரும் எனக்கு ஏராளமான நண்பர்களை கொடுத்திருக்கிறது. இப்போதெல்லாம், நானும் எல்லா பெருசுகளை போலவே அதிகமாக எழுதுவதில்லை. அயோத்தி குறித்து என்னுடைய கருத்தினையும் வரலாற்று காரணங்களுக்காக முன்வைக்க வேண்டுமே என்பதற்காக எழுதியதுதான் என்னுடைய முந்திய பதிவு. அதற்கு முன்னாடி எழுதிய பதிவு பிப்ரவரி 2010ல். இதுதான் நான் பதிவு எழுதும் வேகம். நான் இலக்கிய வாசகன் / உபாசகன் அல்ல. இலக்கிய பரப்பில் பரவலாக படித்த ஞானமும் கிடையாது. சுஜாதா மிகப்பெரிய ஆள் என்பது தான் நானறிந்த, இப்போதைக்கான இலக்கியம்.

என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள், அம்மாவின் மரணம், பின்னாலேயே என்னுடைய குழந்தையற்ற மாமியின் மரணம், என்னுடைய புது வணிகம், ஏமாற்றப்பட்ட சில/பல இலட்சங்கள் என்று என்னுடைய நேரம் அத்தனையும் கடந்த 9 மாதங்களாக வாழ்வின் கருணைகளற்ற குரூரங்களில் செலவாகிக் கொண்டிருக்கிறது. அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். எழுதாமலும், டவீட்டாமலும் போனதிற்கான பின் வரலாறாக மட்டும் இதை எடுத்துக் கொள்ளலாம்.2 நாட்களுக்கு முன்பு ட்வீட்டரில் நண்பர் சுரேஷ்கண்ணன் எழுதிய ஒரு குறும்பதிவும், அதற்கு எதிர்மறையாக நண்பர் ரோசாவசந்த் எழுதிய ஒரு குறும்பதிவும் படிக்க கிடைத்தது. வழக்கமாக நான் இந்த மாதிரி பதிவு சர்ச்சைகளுக்குள் வருவதேயில்லை. இதற்கு முன் இப்படியான ஒரு சர்ச்சை ரோசாவசந்த் Vs சுந்தர் என்றானபோது கூட, விஷயம் எதுவும் முழுமையாய் தெரியாததால், அதைப் பற்றிய எவ்விதமான கருத்துக்களையும் சொல்லவில்லை.

எனக்கு சாதாரணமாகவே, இந்த கருத்து கந்தசாமிகளோடு ஒட்ட முடியாது. அதனால் ஒதுங்கியே இருப்பேன். அதுமில்லாமல், யதார்த்தம் என்கிற ஒரு விஷயம், என்னுடைய அனுபவங்களினால் முகத்தில் அறைந்து கொண்டிருக்கக்கூடிய தருணங்களில் என்னால், தரையிலிருந்து பத்தடி உயர வானத்தில் இருந்துக் கொண்டு பேசும் விஷயங்களில் நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது.

இரண்டு பதிவுகளையும் படிக்க நேர்ந்ததில், ரோசாவின் பதிவில் தான் விஷயங்கள் தெளிவாகவும், நேர்மையாகவும் இருந்தன. சுரேஷ்கண்ணணின் பதிவினை எழுதிய விதமும், அவர் தன்னுடைய கோவத்தினை வெளிப்படுத்திய விதமும் ஏற்புடையதல்ல. இலக்கியம், நவீன சினிமா/நல்ல சினிமா என்று தொடர்ச்சியாக எழுதும் சுரேஷ் கண்ணன், எப்படி இவ்வளவு வன்மமும், அநாகரீகமும், அப்பாண்டமும் கூடிய ஒரு பதிவினை எழுதினார் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.

அஃறிணையில் ஒரு மனிதனை விளிக்க எந்த இலக்கியம் சொல்லிக் கொடுத்தது ? இலக்கியமும், இலக்கியம் சார்ந்த விஷயங்களும், மனிதர்களை அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் சக மனிதர்களாக பார்க்கதான் கற்றுக் கொடுக்கும். ஒரு சக பதிவாளரை, அது/இது என்று மனிதர்களுக்கும் கீழான ஒரு ஐந்தறிவு நிலையில் சொல்பவர் என்ன இலக்கியம் படித்து என்ன பயன்?

ரோசாவசந்தினை தமிழ்நாட்டில் சுனாமி வந்த காலத்திலிருந்து நானறிவேன். பதிவர் கூட்டங்கள்/பார்ட்டிகள் தாண்டி குறுகிய வட்டமாய் நான், ரோசாவசந்த், இகாரஸ் பிரகாஷ், சுகுணா திவாகர் (இரண்டொரு முறை வளர்மதியும்) என பல முறை கூடி பேசியிருக்கிறோம். அப்போதெல்லாம், சுகுணா/வளர்மதியின் பார்வைக்கும், ரோசாவசந்தின் பார்வைக்குமான இலக்கிய/சமூக/சிந்தாந்த ரீதியிலான வித்தியாசங்கள் உண்மையிலேயே கடலளவு. இதுதாண்டி, தொடர்ச்சியாக இளையராஜாவினை மட்டம் தட்டும் சாருவோடு (சாரு, நான், ரோசாவசந்த், பிரகாஷ்) பேசும்போதும், ரோசாவசந்த் தன்னுடைய பார்வையினை, கருத்துக்களை வற்புறுத்தி சொல்லியிருக்கிறாரேயொழிய, ஒரு போதும் "சில்லுண்டித்தனமாகவோ" "வன்மமும் காழ்ப்புணர்ச்சியுமான மொழியிலோ" இல்லை.

பல்வேறு விஷயங்களில் இன்றைக்கும் எனக்கும் ரோசாவசந்திற்கும் கருத்து ரீதியிலான வேறுபாடுகள் இருக்கின்றன. ரோசாவசந்த் இன்றைக்கு என் மேல் கோபமாக/வருத்தமாக இருக்கிறார் என்பது கூட எங்கள் இருவரை பொறுத்தவரை தனிப்பட்ட விஷயம். அந்த வருத்தம்/கோவத்திற்கான முழு பொறுப்பும் என்னுடையதே. இதையெல்லாம் தாண்டி, வசந்த் பழகுவதற்கு ஒரு இனிமையான மனிதர். ஒரு போதும் அடுத்தவரை பற்றி எல்லா திசைகளிலும் போய் சலம்புவது கிடையாது. இன்றளவும், நாங்கள் கூடி பேசிய பல தருணங்களிலும் (வெறும் 2 பேர் மட்டும் & பல்வேறு நபர்கள் கூடி பேசிய போதும்) ரோசாவசந்த் ஒரு போதும் தவறாகவோ, தற்பெருமையுடனோ, மிதமிஞ்சிய அறிவுஜீவித்தனத்தோடோ என்றைக்குமே பேசியதில்லை. முக்கியமாக அடுத்தவர்களை மட்டம் தட்டியதேயில்லை என்பதை என்னால் எவ்வித மனக்கலக்கங்களும் இல்லாமல் சொல்ல முடியும்.

இத்தனைக்கும், நான் பழகிய மனிதர்களிலேயே இதுவரை ரோசா அளவிற்கு விரிவான இலக்கிய சிந்தனையும், பரப்பும், வீச்சும் கொண்ட மனிதர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ரோசாவின் அளவுக்கு என்னை ஈர்த்த இன்னொரு நண்பர், அருள் செல்வன். சு.ரா காலத்தினூடே நடந்த சிறுபத்திரிக்கை வரலாற்றுக்கு மிக நெருங்கிய சாட்சியாக, நேர்மையான விமர்சகனாக நான் இன்றளவும் பார்ப்பது ரோசாவசந்தினை மட்டுமே. இலக்கிய ரீதியிலான பல்வேறு கூட்டங்களில் பங்கெடுத்து, தனிப்பட்ட ரீதியில் எனக்கு நெருக்கமாக தெரிந்தவர் ரோசா தான்.

இதை ரோசாவுடன் பழகிய இலக்கிய ரீதியிலான நண்பர்களும் சரி, பதிவர்களும் சரி, மற்றவர்களும் சரி ஒத்துக் கொள்வார்கள். ஆனால், ரோசாவசந்தினை 'சைக்கோ' என்று சொல்லுதல் நாகரீக வரம்பின் உச்சநிலை. இது பெரும் தவறு. இதை நாளை ரோசாவே இன்னொருவருக்கு சொன்னாலும், அது பெரும் தவறு தான். ரோசாவின் 2006-08 வரையிலான பதிவுகளை படிப்பவர்களுக்கும், படித்தவர்களுக்கும் தெரியும். பல்வேறுவிதமான மாற்று கருத்துக்களை தன்னுடைய பின்னூட்டத்தில் அழிக்காமல் வைத்திருந்தவர் ரோசா. அந்த காலக்கட்டத்தில், தங்கமணி, சுடலை மாடன், அருள்செல்வன், அனாதை இவர்களின் ஒட்டி/வெட்டிய கருத்துக்களை எனக்கு தெரிந்து ரோசா நிராகரித்ததே இல்லை. தங்கமணியின் புலிகள் சார்ந்த பார்வையிலும், ரோசாவின் (ஷோபாஷக்தி முதலான) புலி சார்ப்பு/எதிர்ப்பு சார்ந்த பார்வையிலும் பரந்த வித்தியாசங்கள் இருந்த போதிலும், இன்றளவுக்கும் அவர்கள் இருவரும் தனி மனித ரீதியில் பேசியதில்லை. கருத்தின் வீச்சினை வைத்துக் கொண்டு தான் இன்று வரை ரோசா பல பேருக்கு சிம்ம சொப்பனமாகவும், நெருங்கி பழகியவர்களுக்கு நிறைவான நண்பராகவும் இருக்கிறார்.

பொது வெளியில் இதுவரை நான் சாரு நிவேதிதாவை மட்டும்தான் மிக மோசமான வசையாளாராக பார்த்திருந்தேன் (மம்மி ரிடர்ன்ஸ் - "தொடர்ச்சியாக இந்த உ.த.எழுத்தாளன் என்னை ஒரு கிசுகிசு எழுத்தாளன் என்று annihilate செய்கிறான்.இதை பார்த்துக் கொண்டு நான் எப்படி சும்மா இருப்பது) அதைவிட மோசமான வசைமொழியில் ரோசாவசந்தினை சுரேஷ்கண்ணன் பேசியிருப்பது, துரதிஷ்டவசமானாலும், வருந்தத் தக்கது. அநாகரீகமானது.

இதை ரோசா என் நண்பராக இல்லாமல், நான் படிக்கக் கூடிய வெறும் வலைப்பதிவராக மட்டுமே அறிமுகமாகி இருந்தாலும், இதையேதான் நான் சொல்லுவேன். பொதுவெளியில் எந்தவொரு தனி மனிதனையும், இன்னொரு மனிதன் அநாகரீத்தோடும், அவமானப்படுத்த வேண்டும் என்கிற முனைப்போடும், அபாண்டமாக பழி சுமத்துதல் என்பது நாகரீக எல்லைகளின் உச்சம். இதே நிலை, நாளை வேறு ஒரு நபருக்கு ரோசாவசந்தின் மூலம் வந்திருந்தால், அங்கே ரோசா தான் குற்றம் புரிந்தவர் என்று சொல்வதில் எனக்கெந்த அச்சமுமில்லை.

யுவகிருஷ்ணாவோடும், அதிஷாவோடும் டவீட்டர் டி.எம்களில் பகிர்ந்து கொண்டது தான் மேற்சொன்னது.

புரூனோவோடு இது விஷயமாக நான் பேசிய போது சொன்னது இது தான்.

"பாதி பேருக்கு மேல் இங்கே identity crisis இருக்கு. சுய பிம்பங்களை தானாக உருவாக்கிக் கொண்டு, அதில் முழ்கி, வெளிவர முடியாத ஒரு மன அழுத்தத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை."
"லக்கி சொல்றா மாதிரி, இனிமேல்தான் வலைப்பதிவும், டவீட்டரும் கீழ்ப்பாக்கத்துக்கு ஆளை அனுப்ப வேண்டாம். கீழ்ப்பாக்கம் பேரை கெடுக்காம இருந்தா சரி. ஏன்னா பதிவோ, ட்வீட்டோ 4 பேரு படிக்கிறான், 40 பேரு ஆஹா ஒஹோன்னா பல பேருக்கு தலைக்கு பின்னாடி வட்டம் வந்திருச்சுன்னு நினைச்சுட்டுடறாங்க. உண்மை என்னன்னா, இங்க வட்டம் யாருக்குமே இருக்க முடியாதுங்கறது தான் உண்மை."

இவையிரண்டும் 11 அக்.2010ல் இரவு டாக்டர். புரூனோவோடு ஜிடாக்கில் பேசிய போது சொன்னது (புரூனோ இதை வழிமொழிவார் என்று நம்புகிறேன்)

நண்பர் சுரேஷ் கண்ணன், என்னுடைய ஆரம்ப காலத்திலிருந்து என்னை பார்த்து/படித்து வருபவர். போன டிசம்பரில் நான் எழுதிய சலாமத் ததங் - புரூனே 1 பதிவுக்கு கூட உரிமையாய் வந்து ஏன் தொடர்ச்சியாக எழுதறதில்லை என்று அன்பாய் திட்டியவர்.

இணைய பெருவெளியில், எல்லார்க்கும் எல்லாரையும், எல்லா கருத்துக்களையும் பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. முன் சொன்ன கருத்துக்களும், அப்படியே சாஸ்வதமாக இருக்க வேண்டும் என்பதும் தேவையில்லை. வெறுமனே நாம் வார்த்தைகளை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறோம். எவருக்கும் ஒரு கருத்து / கருத்து சொல்பவர் பிடிக்கவில்லையென்றால், விட்டு விலகி செல்லலாம். இன்றைக்கு சாருவையோ, ஜெமோவையோ அல்லது பிற பதிவர்களையோ விட்டு விலகி எல்லாரும் அவரவர் வேலைகளை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கருத்து பிடிக்கவில்லையென்றால், அதை விமர்சிக்க பொதுவெளியில் யாருக்கும் உரிமையிருக்கிறது. அதை எடுத்துக் கொள்ளுவதும், புறந்தள்ளுவதும் முதலில் கருத்து சொன்னவரின் தனிப்பட்ட உரிமை. உங்களுக்கு ஒருவர் சொன்ன கருத்து பிடிக்கவில்லையென்றால், கருத்து ரீதியாக அதை எதிர் கொள்ளுங்கள். இல்லையா, சட்டை செய்யாமல் போங்கள். அது உங்கள் உரிமை. ஆனால், சொன்னப்பட்ட கருத்துக்கு மாறாக கருத்து சொன்னவரை தரம்தாழ்த்தி பேசுதலும், சைக்கோ என்று அழைத்தலும், எந்த மனிதனுக்கும் அழகில்லை. இது வெறும் ரோசாவசந்த் - சுரேஷ்கண்ணணுக்கானது மட்டுமில்லை. தமிழ் சூழலில், இது எல்லார்க்கும், எல்லா கால கட்டங்களிலும் பொருந்தும்.

சுரேஷ் கண்ணண் இதை புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

சுரேஷ் கண்ணனின் எதிர்வினை

Labels: , , , ,


Oct 2, 2010

[சமூகம்] அயோத்தி - 10 கேள்விகள்

ராமர் பிறந்த இடம் தெரிந்து போனது. மூன்றாய் பிரிக்க சொல்லும் நீதிமன்ற கட்டளை. சுன்னி வஃப் போர்டின், நில ஆர்ஜித மனு நிராகரிப்பு, ஆனால் அவர்களுக்கும் 1/3ல் பங்கு. இது இந்து, முஸ்லீம், பெரும்பான்மையினர், சிறுபான்மையினர், முற்போக்கு, பிற்போக்கு, புறம்போக்கு என்கிற வாதஙகளை எல்லாம் ஒரம்தள்ளி பார்த்தால், எனக்கு தோன்றிய கேள்விகள்

இதற்கான எதிர்வாதங்கள், முக்கியமாக இந்து சார்ப்பிலான வாதங்களை அரவிந்தன் நீலகண்டன் இங்கே எழுதியிருக்கிறார். மருதனின் வெளிப்பாடு இங்கே. மற்றபடி,

  1. ஏன் எந்த ஊடகஙகளும் 1992 பாபர் மசூதி இடிப்பு பற்றி பேசவே இல்லை? ஏன் தீர்ப்பில் குறைந்தபட்ச கண்டனங்கள் கூட முன் வைக்கப்படவில்லை? ஒரு வீட்டில் செங்கல் உடைத்தாலோ, வாசலில் வண்டி நிறுத்தினாலோ பெரும் கூச்சலிடும் சமூகத்தில் ஒரு சாராரின் வழிப்பாட்டு தலம், இடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான எந்தவிதமான சட்டரீதியான தண்டனைகளும் ஏன் பரிசீலிக்கப்படவில்லை ?
  2. பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கை சார்ந்து ஒரு தீர்வு காணப்படுமென்றால், காட்சியாய் நின்ற மசூதி மற்றும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை என்னவென்பது? அல்லது பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கை/ஜதீகம் அல்லது அவர்களின் குறிப்பு தான் ஏற்கப்படுமென்றால் Constitution needs circumstantial evidence and reason for the crime என்பதற்கான அர்த்தம் என்ன?
  3. ஒரு வாதத்துக்கு. அங்கே ஒரு கோயில் இருந்து, அதன் மேல் மசூதி கட்டப்பட்டது என்றே வைத்துக் கொள்வோம். இன்றைக்கு இந்தியாவில் ஒடுகிற பெரும்பான்மை தண்டவாளங்கள் பிரிட்டிஷ்காரர்கள் போட்டது. இன்றைக்கு இந்திய ரயில்வே லாபகரமான நிறுவனம், அதனால் அதில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று லண்டனிலிருந்து தந்தி வந்தால், இந்திய அரசு அதை எப்படி கையாளும் ?
  4. சத்யம் ஊழலில் 5000 கோடி ரூபாய் வரைக்குமான பணம் தவறாக கையாளப்பட்டிருந்தது. உடனே இந்திய அரசு, ராமலிங்க ராஜூவினை அரெஸ்ட் செய்து, குழு அமைத்து, கமிட்டி போட்டு, 16 மாதங்களில், பெரும்பான்மையான விஷயங்கள் வழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. 60 ஆண்டுகளாக 67 ஏக்கர் நிலத்துக்காக, உலகின் 2 பெரிய மதத்தினை சார்ந்தவர்கள் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசுக்கு பில்லியன் மக்களின் உயிர்,பாதுகாப்பு,உரிமையினை விட 5000கோடி ரூபாய் சத்யம் ஊழல் பெரிதாய் போனது ஏன்? இந்தியாவில் உயிர், உரிமை, அடிப்படை வழிப்பாடு இவைகளை விட பணம் தான் முக்கியமா?
  5. நீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டது. லிபரான் கமிஷன் அறிக்கை வரவில்லை. இனி அறிக்கை வந்தால் என்ன நடக்கும்/லாம்? லிபரான் அறிக்கைக்கு, நீதிமன்ற தீர்ப்பினை ஒவர்டேக் செய்யும் சாத்தியங்கள் கிடையாது. அப்படியிருக்கையில், இனி அதன் பயன் என்ன ? அதற்கான செலவீனத்தை அரசு எப்படி பார்க்க போகிறது?
  6. சுன்னி வ்க்ஃப் போர்ட்டுக்கு 1/3. நிர்மோகி அமைப்புக்கு 1/3. ஹிந்து ட்ரஸ்ட்க்கு 1/3. அயோத்தியின் மக்களுக்கு இதனால் என்ன கிடைக்கும் ? 18 வருடங்களாக இந்த ஒரு சர்ச்சைக்குரிய இடத்தினால், இடம் மாறியவர்கள், தடம் மாறியவர்கள், இனியும் அங்கே இருக்க போகிறவர்களுக்கான தீர்ப்பின் நிலைப்பாடு என்ன?
  7. எனக்கு தெரிந்த அளவில், எந்த நில சொத்து விவகார பிரச்சனையிலும், நிலத்துக்கு சொந்தக்காரரின் வழித்தோன்றல்கள் மட்டுமே நிலத்துக்கு சொந்தம் கொண்டாட முடியும். ராமர் பிறந்த இடம் அதுதான் என்றால், ராமரின் ஜெனடிகல் வழித்தோன்ற்ல்கள் தானே நிலத்துக்கு சொந்தம் கொண்டாட முடியும். இந்து நில சட்டப்படி, வாரிசுகள் தானே சொத்தினை கோர முடியும். அப்படியிருக்கையில், இந்து ட்ரஸ்டில் யார் ராமரின் வாரிசுகளா இருப்பார்கள் ? அவர்கள் தான் வாரிசுகள் என்பதை நீதிமன்றம் எப்படி முடிவு செய்யும் ? (வக்கீல்கள் பதில் சொல்லலாம்)
  8. 26/11 மும்பையில் நடந்த தீவிரவாத வெறிச்செயலுக்கு, சிறப்பு நீதிமன்றம் அமைத்து தீர்ப்பும் 11/2 வருடத்தில் தரப்பட்டது. அந்த கொடுஞ்செயலில் போனது உயிர்கள். கசாப்பிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டதை வரவேற்கும் எல்லா தரப்பினரும், ஏன் மசூதி இடிப்பு, அதற்கான காரணகர்த்தாக்களை பற்றி ஏன் பேசவில்லை ? அயோத்தியின் சர்ச்சைக்குரிய பகுதியில், நடைபெற்ற மசூதி இடிப்பு, அதன் விளைவாக அதன் பின் நடந்த கொடுஞ்செயல்களில் போன உயிர்கள் . ஏன் இவ்வளவு அபாயகரமான ஒரு விஷயத்தில், அரசு வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறது ? ஏன் சிறப்பு நீதிமன்றங்களோ, விரைவு நீதிமன்றங்களோ அமைக்கப்படவில்லை ?
  9. பாஜகவின் முன்னாளைய கோஷம் common civil code என்பது. காமன் சிவில் கோடில், சட்டத்திற்கு முன் எல்லாரும் சமம்.மசூதி இடித்தவர்கள், அதன் பின்னான வெறியாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கும் இது பொருந்துமா ? அப்படி பொருந்துமெனில், அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படுவார்களா ?
  10. ஒரு வாதத்திற்கு, பெரும்பான்மையினர், சிறுபான்மையினருக்கு அவர்களுடைய வழிப்பாட்டு தலத்தினை வேறொரு இடத்தில் கட்டி தர சம்மதிக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இது மத சார்ப்பான பிரச்சனையா ? இல்லை, ஒரு சமூகத்தின் அங்கீகாரம் சார்ந்த பிரச்சனையா ?

Labels: , , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]