Oct 2, 2010

[சமூகம்] அயோத்தி - 10 கேள்விகள்

ராமர் பிறந்த இடம் தெரிந்து போனது. மூன்றாய் பிரிக்க சொல்லும் நீதிமன்ற கட்டளை. சுன்னி வஃப் போர்டின், நில ஆர்ஜித மனு நிராகரிப்பு, ஆனால் அவர்களுக்கும் 1/3ல் பங்கு. இது இந்து, முஸ்லீம், பெரும்பான்மையினர், சிறுபான்மையினர், முற்போக்கு, பிற்போக்கு, புறம்போக்கு என்கிற வாதஙகளை எல்லாம் ஒரம்தள்ளி பார்த்தால், எனக்கு தோன்றிய கேள்விகள்

இதற்கான எதிர்வாதங்கள், முக்கியமாக இந்து சார்ப்பிலான வாதங்களை அரவிந்தன் நீலகண்டன் இங்கே எழுதியிருக்கிறார். மருதனின் வெளிப்பாடு இங்கே. மற்றபடி,

  1. ஏன் எந்த ஊடகஙகளும் 1992 பாபர் மசூதி இடிப்பு பற்றி பேசவே இல்லை? ஏன் தீர்ப்பில் குறைந்தபட்ச கண்டனங்கள் கூட முன் வைக்கப்படவில்லை? ஒரு வீட்டில் செங்கல் உடைத்தாலோ, வாசலில் வண்டி நிறுத்தினாலோ பெரும் கூச்சலிடும் சமூகத்தில் ஒரு சாராரின் வழிப்பாட்டு தலம், இடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான எந்தவிதமான சட்டரீதியான தண்டனைகளும் ஏன் பரிசீலிக்கப்படவில்லை ?
  2. பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கை சார்ந்து ஒரு தீர்வு காணப்படுமென்றால், காட்சியாய் நின்ற மசூதி மற்றும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை என்னவென்பது? அல்லது பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கை/ஜதீகம் அல்லது அவர்களின் குறிப்பு தான் ஏற்கப்படுமென்றால் Constitution needs circumstantial evidence and reason for the crime என்பதற்கான அர்த்தம் என்ன?
  3. ஒரு வாதத்துக்கு. அங்கே ஒரு கோயில் இருந்து, அதன் மேல் மசூதி கட்டப்பட்டது என்றே வைத்துக் கொள்வோம். இன்றைக்கு இந்தியாவில் ஒடுகிற பெரும்பான்மை தண்டவாளங்கள் பிரிட்டிஷ்காரர்கள் போட்டது. இன்றைக்கு இந்திய ரயில்வே லாபகரமான நிறுவனம், அதனால் அதில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று லண்டனிலிருந்து தந்தி வந்தால், இந்திய அரசு அதை எப்படி கையாளும் ?
  4. சத்யம் ஊழலில் 5000 கோடி ரூபாய் வரைக்குமான பணம் தவறாக கையாளப்பட்டிருந்தது. உடனே இந்திய அரசு, ராமலிங்க ராஜூவினை அரெஸ்ட் செய்து, குழு அமைத்து, கமிட்டி போட்டு, 16 மாதங்களில், பெரும்பான்மையான விஷயங்கள் வழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. 60 ஆண்டுகளாக 67 ஏக்கர் நிலத்துக்காக, உலகின் 2 பெரிய மதத்தினை சார்ந்தவர்கள் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசுக்கு பில்லியன் மக்களின் உயிர்,பாதுகாப்பு,உரிமையினை விட 5000கோடி ரூபாய் சத்யம் ஊழல் பெரிதாய் போனது ஏன்? இந்தியாவில் உயிர், உரிமை, அடிப்படை வழிப்பாடு இவைகளை விட பணம் தான் முக்கியமா?
  5. நீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டது. லிபரான் கமிஷன் அறிக்கை வரவில்லை. இனி அறிக்கை வந்தால் என்ன நடக்கும்/லாம்? லிபரான் அறிக்கைக்கு, நீதிமன்ற தீர்ப்பினை ஒவர்டேக் செய்யும் சாத்தியங்கள் கிடையாது. அப்படியிருக்கையில், இனி அதன் பயன் என்ன ? அதற்கான செலவீனத்தை அரசு எப்படி பார்க்க போகிறது?
  6. சுன்னி வ்க்ஃப் போர்ட்டுக்கு 1/3. நிர்மோகி அமைப்புக்கு 1/3. ஹிந்து ட்ரஸ்ட்க்கு 1/3. அயோத்தியின் மக்களுக்கு இதனால் என்ன கிடைக்கும் ? 18 வருடங்களாக இந்த ஒரு சர்ச்சைக்குரிய இடத்தினால், இடம் மாறியவர்கள், தடம் மாறியவர்கள், இனியும் அங்கே இருக்க போகிறவர்களுக்கான தீர்ப்பின் நிலைப்பாடு என்ன?
  7. எனக்கு தெரிந்த அளவில், எந்த நில சொத்து விவகார பிரச்சனையிலும், நிலத்துக்கு சொந்தக்காரரின் வழித்தோன்றல்கள் மட்டுமே நிலத்துக்கு சொந்தம் கொண்டாட முடியும். ராமர் பிறந்த இடம் அதுதான் என்றால், ராமரின் ஜெனடிகல் வழித்தோன்ற்ல்கள் தானே நிலத்துக்கு சொந்தம் கொண்டாட முடியும். இந்து நில சட்டப்படி, வாரிசுகள் தானே சொத்தினை கோர முடியும். அப்படியிருக்கையில், இந்து ட்ரஸ்டில் யார் ராமரின் வாரிசுகளா இருப்பார்கள் ? அவர்கள் தான் வாரிசுகள் என்பதை நீதிமன்றம் எப்படி முடிவு செய்யும் ? (வக்கீல்கள் பதில் சொல்லலாம்)
  8. 26/11 மும்பையில் நடந்த தீவிரவாத வெறிச்செயலுக்கு, சிறப்பு நீதிமன்றம் அமைத்து தீர்ப்பும் 11/2 வருடத்தில் தரப்பட்டது. அந்த கொடுஞ்செயலில் போனது உயிர்கள். கசாப்பிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டதை வரவேற்கும் எல்லா தரப்பினரும், ஏன் மசூதி இடிப்பு, அதற்கான காரணகர்த்தாக்களை பற்றி ஏன் பேசவில்லை ? அயோத்தியின் சர்ச்சைக்குரிய பகுதியில், நடைபெற்ற மசூதி இடிப்பு, அதன் விளைவாக அதன் பின் நடந்த கொடுஞ்செயல்களில் போன உயிர்கள் . ஏன் இவ்வளவு அபாயகரமான ஒரு விஷயத்தில், அரசு வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறது ? ஏன் சிறப்பு நீதிமன்றங்களோ, விரைவு நீதிமன்றங்களோ அமைக்கப்படவில்லை ?
  9. பாஜகவின் முன்னாளைய கோஷம் common civil code என்பது. காமன் சிவில் கோடில், சட்டத்திற்கு முன் எல்லாரும் சமம்.மசூதி இடித்தவர்கள், அதன் பின்னான வெறியாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கும் இது பொருந்துமா ? அப்படி பொருந்துமெனில், அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படுவார்களா ?
  10. ஒரு வாதத்திற்கு, பெரும்பான்மையினர், சிறுபான்மையினருக்கு அவர்களுடைய வழிப்பாட்டு தலத்தினை வேறொரு இடத்தில் கட்டி தர சம்மதிக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இது மத சார்ப்பான பிரச்சனையா ? இல்லை, ஒரு சமூகத்தின் அங்கீகாரம் சார்ந்த பிரச்சனையா ?

Labels: , , , ,


Comments:
GOOD QUESTION
 
நல்ல இருக்கு
thanks
mrknaughty
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]