Feb 23, 2011

பத்துப் பார்வை - 1

பேஸ்புக் பின் ட்வீட்டரில் சோபா சக்தி x தமிழச்சி விவகாரம், ப்ரியா தம்பியின் பேஸ்புக் நோட்ஸின் வழியாக. இரு சாராரும் அவரவர் தரப்பு நியாயங்களைப் போட்டு டிஜிட்டல் டேட்டாவினைப் பெருக்கிறார்கள். Morality is simply the attitude we adopt towards people whom we personally dislike என்று ஆஸ்கர் வொயில்டு சொன்னதாக நினைவு.

இரு கையாளர்கள் (ambidextrous) எளிதில் உணர்ச்சிப் படக்கூடியவர்கள். அவர்களின் ’மூடு’ம் தொடர்ச்சியாக மாறிக் கொண்டேயிருக்கும். அவர்களால் நிலையாய் ஒரு விஷயத்தில் செயல்படும் கவனம் குறைவாக இருக்கும். மூளையில் இரு புறங்களிலும் நியுரான்கள் விஷயத்தினைத் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருப்பதால், அவர்களின் தடுமாற்றங்கள் அதிகமாய் இருக்கும். அதனால்தான், காந்தியார் சுதந்திரம் கிடைக்கும் போது தலைநகரத்தில் இல்லாமல் வேறெங்கோ சுற்றிக் கொண்டிருந்தார்? நியு சயிண்டிஸ்ட் இதை சுவாரசியமாக அலசுகிறது.

டேட்டா மார்க்கெட் என்கிற ஒரு டேட்டாக் குவியலை கண்டறிந்தேன். உலக வங்கி, பிபி பெட்ரோலியம், ஐக்கிய நாடுகள் சபை என்று ஒரு மார்க்கமாய் டேட்டாத் துகள்கள் பரவலாயிருக்கின்றன. நான் போட்ட அனாலஸிஸஸில், ருவாண்டாவில் 1993ல் போர் உச்சக்கட்டத்தில் இருந்தப் போது இருந்த சராசரி வாழ்நாள்: 26 வருடங்கள். அதே நேரத்தில் ஜப்பானில் 74. சுவாரசியம்.

சென்னையில் ஒரு சிபிஎஸ்ஈ பள்ளியில் ப்ரீகேஜி ரூ.28,500. ஆறாவது வகுப்புக்கு ரூ.24,000. ஒரு தனியார் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ படிப்பில் 930 பேர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வெளியே வேலைக்கு போகும்போது என்னென்ன பாதிப்புகள் வருமென்று கவலையாய் இருக்கிறது. இதற்கு தொண்ணூறுகளின் ஆந்திர பல்கலைக் கழகங்களேப் பெட்டர். எம்.பி.ஏ வினை FMCG சரக்காய் மாற்றி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பிலிப் கோட்லர் தன்னுடைய கல்லறையிலேயே மீண்டும் மீண்டும் செத்துக் கொண்டிருக்கிறார்.

பார்வதி அம்மாளின் இறப்புக்கு அஞ்சலி. இந்த கிழவியோ, இல்லை ஒரு டாக்டரோ (பினாயக் சென்) ஒரு எழுத்தாளரோ (அருந்ததி ராய்) தான் இந்திய இறையாண்மைக்கு பெரிய அச்சுறுத்தல் என்று அரசும், ஊடகங்களும் கிளிப்பிள்ளையாய் சொல்வதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. ‘வீரம்ன்னா என்னத் தெரியுமா. பயமில்லாதமாதிரி நடிக்கிறது’ என்று ’குருதிப் புனலின்’வசனம் ஏனோ நேரங்காலம் தெரியாமல் நினைவுக்கு வந்துத் தொலைக்கிறது. இதுதாண்டி, திருமாவளவனை இலங்கை அரசு திருப்பியனுப்பியிருப்பது இந்தியாவுக்கான அவமானத்தின் உச்சம். ஆனால், டெல்லியில் இதற்கான சிறு சலனங்கள் கூட இல்லை என்பது நாம் கொஞ்சகொஞ்சமாய் disintegration-யை நோக்கிப் போகப் போகிறோம் என்பதற்கான குறியீடு.

மனிதர்கள் முட்டாள்கள். தவறுகளை இயல்பாகவே செய்யக் கூடியவர்கள். நிகழ்தகவு கொள்கைகளை (Probability) முன் வைத்து, வெப்ப இயங்கியல் (Thermo-dyanmics), பரிணாம உயிரியல் (Evolutionary Biology), புள்ளியியல் (Statistics),குணாதிசய அறிவியல் (Behavioral Science) என பல்வேறு துறைகளிலிருந்து செய்யப்பட்ட ஆய்வுகளிலிருந்து மனிதர்கள் ஏன் எப்போதும் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள் என்று விரிவாய் சொல்கிறது 'Bozo Sepians' என்கிறப் புத்தகம். அம்மா/மகன் கூட்டணியில் (எலன் கெப்ளான்/மைக்கேல் கெப்ளான்) வந்திருக்கும் புத்தகத்தின் விமர்சனங்கள் சுவாரசியமாக இருக்கின்றன. Irrationality என்பது இப்போது ஹாட் டாபிக். இது தெளிவாக நிரூபிக்கப்பட்டால், அப்புறம் யாரையும் ஏமாளி என்று திட்டமுடியாது. யாராவது அமெரிக்காவிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து பரிசளித்தால் அவர்களை நான் வணங்காத எம்பெருமான் ரட்சிப்பார்.

யோசித்துப் பார்த்தால் ரஜினிகாந்தின் உச்ச நட்சத்திர அந்தஸ்தை நோக்கிய பயணத்துக்கு உதவியாக அமைந்த முக்கியமான பாடல்களைப் பாட இளையராஜா, வாசுதேவனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் ...... சே, சண்டாளப்பாவி. மனசாரல்லா பாடியிருப்பான்’.
சுகாவின் அற்புதமான மலேசியா வாசுதேவனுக்கான அஞ்சலி. சண்டாளப் பாவி, இப்படியெல்லாம் கூடவா எழுத முடியும்?

மழைப் பெய்ததால், ஒதுங்கி இருந்துவிட்டு நடிகர் விஜய் அரை மணி நேரம் தாமதமாய் தன் பேச்சைத் தொடர்ந்தார் என்கிறது தினந்தந்தி. மழைக்கே மைக் முன் நிற்க முடியாவதர்கள் தான் முதல்வர் கனவோடு ‘நான் அடிச்சா தாங்க மாட்டே, நாலு நாள் தூங்க மாட்டே’ என்று வீரமுழக்கத்தோடு பிரதமருக்கு தந்தி அடிக்கச் சொல்கிறார்கள். பேசாமல், ஜோஸ் ஆலுக்காஸை விட்டு, விஜய் இந்திய தபால் துறைக்கு பிராண்ட் அம்பாஸிடராகலாம்.

தினமலரில் அசின் ஒரு இந்திப் படத்துக்காக டூ பீஸில் நடிக்கப் போகிறாராம். எனக்கென்னமோ, என்.டி.ஆர் ஸ்ரீதேவியுடன் ஆடிய டூயட் பாடல்கள் தேவையில்லாமல் நினைவுக்கு வருகிறது. அசின் ‘காவலனிலேயே’ கேவலமாய் தெரிந்தார். டூ பிஸ் என்பதன் அற்புதம் தெரியவேண்டுமானால், தோஸ்தானாவில் பிரியங்கா சோப்ராவினைப் பாருங்கள்.

கிண்டி மேம்பாலத்திலிருந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு திரும்புமுன், உங்கள் வலதுப் பக்கத்தில் மவுண்ட் பேலஸ் என்று ஒரு ஹோட்டலில் பிரியாணிக்குத் தரும் சால்னா அற்புதமாக இருக்கிறது. இதற்கு ஈடான இன்னொரு கடை, திருவான்மியூர் சந்திப்பில் மூலையில் இருக்கும் சிட்டி கேட் விடுதியில் கிடைக்கும் சால்னா.

Comments:
//Probability, thermo dynamics, evolutionary biology (பரிணாம உயிரியல்??) இணையானச் சொற்கள் என்ன?//

thermo dynamics = தெறுமத் துனவியல்

Check here.
 
தங்களின் எழுத்துக்கள் சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்” கட்டுரைகளை நினைவு கொள்ள செய்கின்றன.மேலும் தமிழ் பேப்பரில் தங்களது ‘டெக்கனாமிகிஸ்” கட்டுரைகளை த்வறாமல் வாசித்து வருகிறேன் .அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்
நன்றி
ஸ்ரீனிவாசன்
 
This comment has been removed by the author.
 
இந்தியன் நன்றி.

ஸ்ரீனிவாசன் - நன்றி. ஆனாலும் வாத்தியார் (சுஜாதா) என்றைக்கும் வாத்தியார் தான். நானெல்லாம் பிசகில் வளர்ந்த க்ளோன்கள்

ராஜ்சந்திரா - கிடைத்தது. நன்றி. கபீஷ் நீளவால் போல கூடிய சீக்கிரத்தில் மடலெழுதுகிறேன்.
 
சுஜாதவின் மோசமான பாதிப்பு உங்களிடம் இருக்கிறது. ஒரு புத்தகம்/கட்டுரையை படித்துவிட்டு ஜல்லியடிப்பது, எக்னாமிக் டைம்ஸ் போன்றவற்றின் மிகைப்படுத்தல் நடையை பின்பற்றுவது போன்ற்வற்றை தவிர்க்க முயல்வீர்களா.தமிழில் உள்ள அவப்பேறு என்னவென்றால் சுஜாதாவின் க்ளோன்கள் ’வாத்யார்’ மாதிரியே எழுதுவதுதான்.அரைகுறையாக புரிந்து கொண்டு எழுதுவதை ஒரு ‘கலை’யாக வளர்த்தவர் சுஜாதா.சரக்கில்லை என்பதை நடை, நகைச்சுவை, ஆங்கில வார்த்தைகள் மூலம் மறைக்க முயல்வது ஒரு நோயாக வளர்ந்துள்ளது.ராமன் ராஜா, இரா.முருகன், நாராயண் எழுதுவதைப் படித்தால் இது பிடிபடும்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]