Feb 26, 2011

வாத்தியார் மூன்றாமாண்டு அஞ்சலி - சொர்க்கத்தில் சொன்ன சேதிகள்

நேற்று


1. ஜனவரி 1976

புதிய பகுதி

ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.இன் சிபாரிசு, இந்த மாதப் புத்தகம்: சுந்தர ராமசாமியின் ‘நடுநிசி நாய்கள்’

2. பிப்ரவரி 1977

தமிழ் சினிமாவில் எல்.ஆர் ஈஸ்வரி போன்றவர்களுக்காக எழுதப்படும் கிளப் டான்ஸ் பாடல்களை யாராவது தொகுப்பாக வெளியிடலாம் என்று தோன்றுகிறது. சமீபத்திய ஒரு ‘ஜெம்’

“இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன்
இதயம் முழுதும் திறந்து வைக்கின்றேன்
இதற்கு முன்னாலே நீ பார்த்த பெண் போலே
இந்த உடம்பு பழையதல்லவே”

3. ஜனவரி 1979

‘டைம்’ பத்திரிக்கையில் Andy Warholஇன் இந்த ‘அருள் வாக்கு’ என்னைச் சிந்திக்க வைத்தது;

In the future, everybody will be famous for atleast fifteen minutes.

4. ஜூன் 1979

தொல்காப்பியக் காலத்தின் தமிழ் எழுத்து முறைகள் சில இன்று இல்லை. உயிர், மெய் எழுத்துக்களுடன் சார்பெழுத்துக்கள் மூன்று சேர்ந்து முப்பத்து மூன்று எழுத்துக்கள் இருந்தன. இந்த சார்பெழுத்துக்களாவன: குற்றியலிகரம், குற்றியலுகரம் , ஆய்தவெழுத்து. மூன்றில் ஆய்தவெழுத்து மட்டும்தான் பிழைத்திருக்கிறது..........................

ஜப்பானியர்கள் மேலிருந்து கீழ் எழுதும் முறையை நவீன காலத்துக்கு சரிப்படாது என்று இடமிருந்து வலமாக மாற்றிக் கொண்டார்கள். Ideograms ஆக இருந்த தம் மிகப் பழைய மொழியை புதிய Katanaka முறைப்படி எளிதாக்கினார்கள். நவீன எலக்ட்ரானிக்ஸ், கம்யூட்டர் இயல் முழுவதையும், ஒரு வார்த்தை இங்கிலீஷ் தெரியாமல், ஜப்பானிய மொழியிலேயே கற்றுக்கொள்ள புஸ்தகங்கள் அவர்களிடம் இருக்கின்றன. நாம்? நாம் மாற மாட்டோம்.மொழியைக் கன்னி, தாய் என்று கொஞ்சுகிற பிஸினஸை விட்டொழித்தால்தான் நமக்கு விடிவுகாலம்.

5. டிசம்பர் 1981

இங்கிருந்து சென்னைக்கு வர போயிங் விமானத்தில் அரை மணியாகிறது. மாலை 5.30க்கு ப்ளைட்........ இன்றைக்கு மட்டும் ப்ளைட் எட்டு மணிக்குப் புறப்படுகிறது.......ஹைட்ராலிக் லீக். சின்ன ரிப்பேர் தான். ஹைதராபாத் ப்ளைட்டில் இன் ஜினியர்கள் வருகிறார்கள்.............. நான் ஒரத்தில் போய் உட்கார்ந்திருந்தேன். காத்திருந்தேன். மெட்றாஸ் ஃப்ளைட் சரியாக இரவு 11.55க்குப் புறப்பட்டது.

‘முன்னேற்றம் என்பது ஒரு கையால் எதையோ கொடுத்துவிட்டு இன்னொரு கையாய் மற்றொன்றைப் பறிப்பது’ என்று கம்யுனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் இண்டர்நேஷனல் என்கிற பத்திரிக்கையில் சமீபத்திய தலையங்கத்தில் எழுதியிருக்கிறார்கள்.

6. மே 1991

சிடுமூஞ்சி அகராதி

அலுவலகம் - சில சமயம் வேலை செய்ய எற்பட்ட இடம்
மகாத்மா காந்தி - ஊருக்கு ஒரு தெருவுக்குப் பெயர் வைக்க பிறந்தவர்
அறிவியல் - பரிசோதனைரீதியான மூட நம்பிக்கை
பிஸ்கட் - பாப்பாவுக்குக் கொடுக்க என்று வாங்கி நாம் சாப்பிடுவது
காமம் - நிசமான காதல்
நல்ல அதிகாரி - லஞ்சத்தை சரிசமமாகப் பங்கு கொடுப்பவர்

7. ஏப்ரல் 1992

வ.ஜ.ச ஜெயபாலனின் கவிதைகளும் பாடல்களும் கொண்டு ஒல்லியான புத்தகம் நார்வேயிலிருண்டு எதிர்பாராத சந்தோஷமாக வந்தது. பெயர் ‘ஒரு அகதியின் பாடல்’ .......... ‘கடற்கரைத் தாழங்காய் போல இக்கரையும் அக்கரையுமாக அலைகின்ற வாழ்க்கை அலுத்து விட்டது’ என்று துவங்கும் ஜெயபாலன் தரும் விவரங்கள் சிலிர்க்க வைக்கின்றன.

‘கருவின் இருந்தென்
காதல் மனையாளின்
வயிற்றில் உதைத்த பயல்
நினைவில் இருந்தென் நெஞ்சிலன்றோ உதைக்கின்றான்
நமக்கிடையே
ஏழு கடலும் இணைந்தன்றோ கிடக்கின்றது
விசா என்ற பெயரில்

வெண்பனிமீது
இன்னம் அந்தக் காதலரும் நாயும் களிப்போடு’

அடுத்தமுறை கவியெழுத காகிதத்தில் பேனா வைக்கும் போது அதன் ஆதார உணர்ச்சி இத்தனை உண்மையானதா என்று யோசித்துப் பார்த்து திருப்தியான விடை கிடைத்தால் எழுதுங்கள்

8. மே 1993

தினந்தந்தி புதுசாகப் படிப்பறிவு பெற்ற ஒரு எளிய சமுதாயத்துக்கு செய்தித்தாளைப் புரிய வைத்தது “ஹானியாகாது” என்று கோயங்காவின் தினமணியும், ”பசு மோதி பசு மரணம்” என்று தியாகராச செட்டியாரின் “தமிழ்நாடும்” எழுதிக் கொண்டிருந்த காலத்தில் “நட்ட நடுத்தெருவில் ‘இச்’சென்று முத்தம்” என்று ஆளுயர எழுத்துக்களில் அலறியது தந்தி. முதல் ஆச்சரியக் குறிகள் தமிழ்ப் பத்திரிக்கைகளில் பிரயோகமாயின. முதல் ஸ்ட்ரிப் கார்ட்டூன், முதன் முதல் கெடிகாரத்துக்குக் கூட புரியும் கருத்துப் படங்கள். தினந்தந்தியின் மகத்தான சாதனை இதுதான். அதன் மகத்தான சோகம் இத்தனை பெரிய ஆயுதத்தை வைத்துக் கொண்டு மக்களுக்கு வழிகாட்டும்படியான தலையங்கள் எழுதாமல் அந்தப் பொறுப்பிலிருந்து நழுவுவது...

9. ஏப்ரல் 1995

ஞானக்கூத்தனின் மிகப் பெரிய பலம், நம் பழைய தமிழ் இலக்கியங்களுடன் நல்ல பரிச்சயம். நம் இன்றைய கவிஞர்களுக்கு நான் சொல்வது, சங்கம் பயின்றால் தான் கவிதை எழுத முடியும் என்றில்லை. சங்கம் பயின்றால் சில கவிதைகளை எழுதாமல் இருக்க முடியும்.

10. ஏப்ரல் 1998

அனுப்படி - யாரையாவது வீட்டுக்கு லெட்டர் கொடுத்து அனுப்படி என்று அர்த்தமல்ல. அனுப்படி என்பது கோயில் கணக்கில் முன்பக்கத்து தொகையை மறு பக்கத்தில் கூட்டி மொத்தம் காட்டுவது (வங்கிகளில் பயன்படுத்தும் carry overக்கு பயன்படும்) ‘கோயில் ஒழுகு’ என்னும் ராமானுசர் காலத்திலிருந்து பழகி வரும் நூலில் இருக்கும் சொல் தான் மேற்சொன்னது.


இன்று 1. கெளதம் வாசுதேவ் மேனன் இந்தப் பெயரில் படமெடுத்தார். எல்லாரும் மீனாட்சி அம்மாவை (மன்னிக்க - Ms. சுவப்னா ஆறுமுகம்) தமிழ்சினிமாவின் அடுத்த ஆண்டி என்று இளிக்கிறார்கள். சிறுப் பத்திரிக்கைகள் இதை விகாரத்தின் மனநீட்சி என்று ஒரு பக்கமும், வெகுஜனங்கள் ச்சீ கேவலம் என்று சொல்லிக் கொண்டே ஒரு தடவை பார்த்து விடுதலும் நடக்கிறது. பரங்கிமலை ஜோதியில் நல்ல கலெக்‌ஷன். நீங்கள் உயிரோடு இருந்திருந்தால் உங்களையும் சிம்புவிற்கு வசனம் எழுத அழைத்திருப்பார்கள்.

  'சைஸ் என்ன'

  'தெரிஞ்சு? வாங்கித் தரப் போறியா?'

  'No way. தெரிஞ்சா, அடுத்த கேர்ள் ப்ரெண்ட் சூஸ் பண்றது சுலபம்'

 2. ”கன்னித் தீவுப் பெண்ணா, கட்டெறும்பு கண்ணா” என்கிற அளவில் இலக்கியவாதிகள் நடிகைகளோடு ஆட்டம் போடுகிறார்கள். நீங்கள் இருந்தால், உங்களுக்கும் NRI அப்பா கேரக்டர் ஒதுக்கப்பட்டிருக்கும். கெளதமியின் மார்புகளை சாடிலைட் டிவி எல்லா வீட்டு வரவேற்பரைக்கும் கொண்டுப் போனது போல (குமுதம் ‘விளிம்பு’ தொடர் - சிக்கு புக்கு ரயிலே), நீங்களும் இங்கிலீஷ் பேசும் தமிழ்ப்படங்களின் அங்கமாக மாறி, எல்லாவற்றுக்கும் கருத்துச் சொல்லி, “நீயா நானா” வில் வந்திருக்கலாம்.You Missed it Mr.Rangarajan.

 3. எல்லோரும் பதினைந்து நிமிடப் புகழையும் 30 செகண்ட் பேரானந்ததையும் பேஸ்புக், ட்வீட்டர் மற்றும் பதிவுகள் வழியாக அனுபவிக்கிறோம். பதிவர்களுக்கு வாசகர்களும், ப்ரி ப்ரிவியு ஷோக்களும், கவிதைப் புத்தகங்களும், இலக்கியவாதிகளின் ஆசீர்வாதமுமாய், முன்னை விட செளக்கியமாகவே இருக்கிறோம். ட்விட்டரில் வெண்பா(ம்)களின் புரட்சியில் எகிப்தின் ஹோஸ்னி முபாரக் நாட்டை விட்டே ஒடிப் போனார் என்றால், எங்களின் புகழ் தெரியும். அது நடுநிசி நாய்களோ (#nnn), தமிழக மீனவனோ (#tnfisherman), உலகக்கோப்பையோ (#wcc11) எல்லாவற்றுக்கும் 15 நிமிடப் புகழ் இருந்தே தீரும். நீரும், ஆண்டி வார்ஹோலும் ஜீனியஸ், அதனாலேயே நாங்கள் யாரும் உங்களை சட்டைச் செய்ய மாட்டோம்.

 4. முட்டாள் ரங்கராஜன். என்ன எழுதி என்ன பயன். நாங்கள் மாற மாட்டோம். தமிழ் எங்கள் மூச்சு. வீச்சு. பேச்சு. வாட்சு. மொழியைக் கன்னி, தாய் என்று சொல்வது தான் பிஸினஸ். ”யாப்புக்கு வைப்போம் ஆப்பு. ஆப்பே இப்போது டாப்பு.” அது சரி நீர் போன தலைமுறைக்கும் முந்திய தலைமுறை உங்களுக்கு எங்கே பிஸினஸ் விஷயங்கள் புரியப் போகிறது. ஜப்பானியர்களோடு சேர்ந்து நீரும் முன்னேறித் தொலைந்தது எங்கள் கண்களை உறுத்துகிறது. அதனால் இப்போது முதல் நீர் தா-ஜா-சு சென். தமிழரில்லை.

 5. உமக்கு ப்ளைட். எமக்கு ஏர்டெல். Professional hazards, Necessary evil மாதிரி பறித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரே சந்தோஷம், கஸ்டமர் கேர் செண்டரில் மட்டுமே காக்க வைப்பார்கள். மற்றப்படி, இலவசமாய் சிம் கார்டெல்லாம் கொடுத்து அடிமையாக்குவார்கள். நல்லவேளை உங்கள் காலத்தில் இத்தனை வங்கிகள் இல்லை. இருந்திருந்தால், ஈ எம் ஐ பற்றி நம்மாழ்வார் கூட உம்முருவில் வந்து சொல்லியிருப்பார்.

 6. ராஜா - ஸ்பெக்ட்ரம் என்கிற கடினமான விஷயத்தைத் தமிழ் படுத்தியவர்
  பளாக்பெர்ரி - வீட்டிலிருந்தே 24 மணி நேரமும் அலுவலகத்துக்கு பதில் சொல்வது
  டெலிபோன் - டெல்லியில் இன்காம் டேக்ஸ்காரர்கள் ஒட்டுக் கேட்கும் கருவி
  செல்போன் - பஸ்ஸில் போகும்போது பாட்டுக் கேட்க உதவுவது. சத்தமாய் அடுத்தவருக்கும் வைத்து கேட்க வழிசெய்வது
  லேப்டாப் - ஆண்களின் கர்ப்பிணி முதுகுகள்
  அப்துல் கலாம் - மாறுவேடப் போட்டிக்கு உதவுபவர்
  கிரெடிட் கார்டு - முன் கொடுத்து, பின் துரத்தும் ஐந்து
  சம்பளம் - ஈ சி எஸ்ஸில் கரையும் டிஜிட்டல் எண்கள்
  மதுரை - கோடம்பாக்கத்தின் எக்ஸ்டென்ஷ்ன் கவுண்டர்
  அரிவாள் - தமிழக கெளபாய்களின் ஆயுதம்

 7. வ.ஜ.ச ஜெயபாலன் கவிஞர் என்று தப்பாக எழுதியிருக்கிறீர்கள். காலத்துக்கு முன்பாக எழுதினாலும், குற்றம் குற்றமே. ஜெயபாலன், தமிழ் சினிமாவின் பேட்டைக்காரன். அடுத்த முரட்டு வில்லன். ஏழை கதாநாயகிகளின் கையாலாகாத அப்பா. நீங்கள் சொல்லும் ஜெயபாலன் ஒரு காலத்தில் கவிதையெல்லாம் எழுதிக் கொண்டிருந்ததாகப் பேச்சு. இப்போது அவர் சொல்வது வேத வாக்கு ‘உசுருக்கு சமமானது தான் பந்தயம்’ நீங்கள் இந்த பந்தயந்தில் துரதிஷ்டவசமாக தோற்று விட்டீர்கள் ஐயா.

 8. ஹானியாகாத தினமணி இப்போது போணியாகவில்லை. ஒரு வழியாய் தினந்தந்தி தலையங்கம் எழுதுகிறார்கள். ஆனால் என்ன ஆச்சர்யம். அதுவும் செய்தி மாதிரியே எவ்வித நிலைப்பாடுகளும் இல்லாமல் இருக்கிறது. நாளிதழோடு செல்போனோ, தங்கமோ, மிக்சியோ, கிரைண்டரோ, ஸ்கூட்டியோ குறைந்தப்பட்சம் மார்க்கெட்டிங் செய்யப்படும் படங்களின் டிக்கெட்டாவது தரப் படவேண்டும். தமிழ், கல்யாணப்பந்தி தயிர்சாதத்தில் திராட்சை மாதிரி ஆங்காங்கே இருக்கவும் செய்யும். இப்போதைக்கு, உம்முடைய ஆத்மா சாந்தியடைய தலையங்கம் எழுதுவதேப் பெரிய விஷயம்.

 9. இந்தக் கால கவிஞர்கள் கண்டிப்பாக சங்கம் வைக்கிறார்கள். சங்கம் வைத்தாலேயொழிய கலைஞரின் அடுத்தப் படத்திற்கு நாயகனாக முடியாது. சங்கம் முக்கியம். அது தொழிற்சங்கமோ, பூந்தமல்லியில் இருக்கும் திரையரங்கோ. ஒ சாரி, சாரி, நீங்கள் சொன்னது சங்கத் தமிழா? நாசமாப் போச்சு. அதற்கு ஆசமனம் செய்து “பாரத வருஷே, பரதக் கண்டே, ஜம்பூத் வீபே” என்று எள்ளும் தண்ணியும் இறைத்து, பிராம்ணார்த்தம் முடிந்து, ஹிந்துவில் ஆபிட்சுவரி காலத்தில் மட்டும்தான் இன்னும் போடவில்லை. அதிலிருக்கும் வார்த்தைகள் மட்டுமே எங்களுக்குத் தேவை. சினிமாப் படத்துக்கு சங்கத் தமிழில் பெயர் வைத்து, மானியம் பெற்று, நாயக/நாயகிகள் படமுழுவதும் ஆங்கிலத்தில் பேசி, துபாயில் டான்ஸாடி, மலேசியாவில் சண்டைப் போட்டு, ஹாலந்தில் கசிந்துருகி, கல்யாணம் பண்ணிக் கொண்டு அமெரிக்காவில் செட்டிலாவார்கள்.

 10. நீர் யார் எங்களுக்கு ஏற்கனவே இருப்பதை எடுத்துப் பயன்படுத்தச் சொல்லிக் கொடுப்பது. உம்மை மாதிரி சிந்தனாசக்தி இல்லாதவர்கள் அல்ல நாங்கள். திறனறிஅமைப்பிவியல்முடக்குவாதம் என்று எங்களுக்கும் தமிழ்படுத்தத் தெரியும். தமிழ் படுத்துதல் தான் முக்கியம். யாரும் பயன்படுத்தினாலென்ன, பயன்படுத்தவில்லையென்றாலென்ன. எனக்கென்னப் போச்சு. இந்த ஒரு சொல் போதும். அடுத்த கலைமாமணி வாங்க. நீரும் உம் ராமானுசரும். போய் புழக்கடையில் நில்லுங்கள். உங்களுக்கு தமிழேத் தெரியவில்லை.

PS: சுஜாதா காலமானார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கும், சுஜாதா column ஆனார் என்பதுதான் உண்மை.
நன்றி: கணையாழியின் கடைசிப் பக்கங்கள், உயிர்மை வெளியீடு

Labels: ,


Comments:
இன்றோடு மூன்று வருடங்கள், பத்து நிமிட பயணதூரத்தில் இருந்தும் போய் பார்க்க முடியாத ஆஃபீஸ் வேலை, வருத்தம் இன்று வரை, ஹ்ம்ம்ம்ம்ம்
 
நினைவுப் பதிவிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
 
Excellent..
 
sujatha himself would have appreciated your style and your content. Great job.
 
Sir,
Happy to learn about another ardent fan of Vaathiyaar Saar!

Request you to please provide details of any lesser nown non-fiction collections of Vaathiyaar Saar. ex.Villimbu
 
Excellent..
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]