Apr 11, 2011

? + ! + % + :( = அன்னா ஹசாரே

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் முடிந்தது. நான்கு நாள். தேர்தல், ஐபிஎல், உலகக் கோப்பை கிரிக்கெட் ஹாங் ஒவர் என எல்லாம் தாண்டி, ஆங்கில செய்தி சானல்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ‘ஜந்தர் மந்தரில்’ தங்கள் ஒ.பி வேனை நிறுத்தி லைவ்வாக ஒளிபரப்பினார்கள். இளைஞர்கள், இந்தியாவுக்கான இரண்டாவது சுதந்திரம் இது என்று கிடைத்த மைக்குகளில் எல்லாம் கதறினார்கள். லோக்தால் பில்’லுக்கு பிரணாப் முகர்ஜி தலைமையேற்றார்.

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி ஒவரில் ஷாருக்கானின் டீமினை வென்றார்கள். கருணாநிதி வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்தார். எஸ்.எஸ்.ஆர் பங்கஜத்தில் கவுண்டருக்கு பக்கத்திலேயே ரூ.80 டிக்கெட், ரூ.100க்கு போனது. ’மாப்பிள்ளை’ முதல் நாள் முதல் நைட் ஷோ பார்த்ததில், தனுஷின் மீதிருந்த நம்பிக்கை நொறுங்கி சுக்கு நூறானது. ஆழ்வார்பேட்டையின் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் வேண்டுமென்றே என்னை எக்ஸ்ட்ரா ப்ரீமியத்திற்கு தள்ளி, ரூ3 அதிகமாகப் போட வைத்தார்கள். திருப்பதியின் ஸ்பெஷல் தரிசன விஐபி கட்டணச் சேவை 2014 வரைக்கும் பதியப்பட்டிருக்கிறது. ரூ.50 கட்டினால் 25000 குறுஞ்செய்தி அனுப்பலாம் என்கிற திட்டத்தின் கீழ் திடீர் ஒழுக்கவாதிகள் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தருமாறு ஒரு நாளைக்கு 15 குறுஞ்செய்திகள் அனுப்பினார்கள்.

மக்களின் கூச்சல் 'இலவச' சமூக இணையத் தளங்களில் அதிகரித்தது. இலவச சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டும், 'அலுவலக இணையத்தில்' மும்முரமாய் நண்பர்கள் அன்னா ஹசாரேவுக்கான ஆதரவினை திரட்ட டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் தீவிரமாய் இயங்கினார்கள். உலகக் கோப்பை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் அடித்த ஒவ்வொரு நான்கும், 1:20க்கு பெட்டிங்கில் போனது. சிபிஐ விசாரித்த ராசாவின் உறவினரான தீபக் புஷ்பகநாதன் ’ஜிம்’மில் மாரடைப்பால் காலமானார். சென்னையில் சாதாரண பஸ்கள் குறைக்கப்பட்டு, டீலக்ஸும், வோல்வோவும் போக குறைந்தப் பட்ச கட்டணங்கள் ரூ.6-8யாய் மாறிப் போனது.

இன்ஸ்டண்ட் புத்தர்கள், மேகி காந்திகள், கட் & பேஸ்ட் கக்கன்கள் இந்தியாவெங்கும் ஜீன்ஸ், டீசர்ட்டில் பல் தெரிய சிரித்து, அகிம்சை ரீதியான ‘புரட்சியில்’ ஊழல் ஒழிந்தது என்று கோஷம் போட்டார்கள். அரசியல்வாதிகள் எல்லாம் அழுக்கு, ஊழல், அயோக்கியத்தனம் மிக்கவர்கள். மற்ற மக்கள் ‘யோக்கியர்கள்’ சேர்ந்து புரட்சித்து, ஊழலை ஒழிக்க மிகப் பெரியப் போராட்டத்தினை நடத்தி அதனை ’வென்று விட்டார்கள்’.

இந்தியாவில் அதிகாரிகள், மதகுருமார்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தன்னார்வல நிறுவனங்கள், தனியார் முதலாளிகள், தரகர்கள், சிறுத் தொழில் செய்பவர்கள், தெருவில் கடைப் போடுபவர்கள் என எல்லாரும் பாவம் இதுநாள் வரை லஞ்சமோ, ஊழலோ செய்யவே இல்லை.

எல்லாம் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் தான். அரசியல்வாதிகளை ஒழித்து அதிகாரிகளின் கீழ், இந்தியாவைக் கொண்டு வந்தால் எல்லாம் உருப்பட்டு விடும். யாரும் கை நீட்ட மாட்டார்கள். நாடு சுபிட்சமாகிவிடும். பைப்பினைத் திறந்தால் மணிக்கு ஏற்றாற்போல பாலும், தண்ணீரும், பன்னீரும் வரும். அன்னா ஹசாரே ஒரு அமைதியான ‘இந்தியன்’ தாத்தா. அவர் இருப்பதால், உண்ணாவிரதம் இருந்ததால், நாட்டில் எல்லாம் மாற்றத்திற்கு உட்பட்டுவிடும்.

இனி தமிழ்நாட்டில் யோக்கியசீலர்கள் யாரும் இலவச டிவி, லேப்டாப், மிக்சி, கிரைண்டர் இன்னபிற சாமான்கள் வாங்க மாட்டார்கள். ஏனென்றால் இது அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சம். ஊழல். அயோக்கியத்தனம். இனி ரேஷன் கடைகளில் கியுவில் நின்று எல்லாரும் தாங்கள் பெற்ற இலவச டிவியினை திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். ட்ராபிக் சிக்னலை இரவு 11 மணிக்குக் கூட மீறாமல் நின்று போவார்கள். ட்ராபிக் போலீஸ்காரர்கள் பிடிக்கும் லாரிக்காரர்களுக்கு வெயிலுக்கு இதமாய் மோர் வாங்கிக் கொடுப்பார்கள். நாம் நம்முடைய சாதி சான்றிதழை பொறுமையாகக் காத்திருந்து வாங்கிக் கொள்வோம். யாரும் ’தக்கலில்’ டிக்கெட் வாங்க மாட்டார்கள், ஏனென்றால் நாம் அனைவரும் ஒழுக்கவாதிகள். நமக்கு எல்லாம் தெளிவாகத் தெரியும். தேர்ந்தெடுத்து நாம் வேலை செய்வோம். அதிக விலையோ, இன்ஸ்டண்ட் செளகரியங்களோ, அரசு இலவசங்களோ தேவையில்லை.

டாஸ்மாக்கில் இனி எம்.ஆர்.பியில் எல்லாம் விற்பார்கள். மூன்று முட்டையை உடைத்து வெங்காயத்தை அதிகமாய்ப் போட்டு இரண்டு டபுள் ஆம்லெட் என்று இனி யாரும் ஏமாற்றமுடியாது. பி.வி.ஆர், சத்யம், ஐநாக்ஸில் இனி எல்லாம் எம்.ஆர்.பியில் கிடைக்கும். யாரும் அதிகமாக விற்கமாட்டார்கள். மக்கள் தங்கள் கஷ்டங்களை தாங்களே தாங்கிக் கொண்டு வெயிலில் நின்று 100% ஒட்டுப் போடுவார்கள். கவுன்சிலர்கள் திங்கள் - வெள்ளி வரை தொகுதியில் இருப்பார்கள். சேல்ஸ் ரெப்புகள் ட்ராவலிங் அலவன்சினை ‘உள்ளது உள்ளபடியே’ சொல்வார்கள்.

பூந்தமல்லி சுந்தரில் டோக்கன் முறை ஒழிக்கப்படும். பரங்கிமலை ஜோதியில் ஷகிலா படம் போடும் போது நடுவில் கூடுதல் நாற்காலிகள் போட்டு அதையும் விற்கமாட்டார்கள். ஜி.ஆர்.டி யிலும், பிரின்ஸிலும் மக்கள் நகை வாங்கும்போது சேவை வரிக் கட்டி, பில் வாங்குவார்கள். பத்திரிக்கையாளர்கள் பேட்டி முடிந்து வெளியே வரும்போது விஐபிகளிடமிருந்து ‘கவர்’ வாங்க மாட்டார்கள். நக்கீரன் திமுகவுக்கு எதிராகவும், தினமலர், விகடன் அதிமுகவுக்கு எதிராகவும் ‘நேர்மையான’ தகவல்களை முன்வைப்பார்கள்.

மக்கள் உத்தமர்களாகவே இருக்கிறார்கள். இந்த சட்டம், ஒழுங்கு, அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் மக்களைக் கெடுக்கிறார்கள். அதனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் சாதாரணர்களும் புரியும் படி திருத்தப்படும். சட்டப்புத்தகத்தைப் படித்த வழக்குரைஞர்கள் கால் சென்டரில் வேலைக்குப் போவார்கள். மருத்துவர்கள் நேர்மையாக டெஸ்ட் எல்லாம் எடுக்காமலேயே உங்களுக்கு எதுவும் இல்லை என்பதை முதலிலேயே சொல்வார்கள். இந்தியாவில் இருக்கும் பாதி ஸ்கேன் சென்டர்கள் மூடப்படும். சென்னையில் ஆட்டோக்கள் மீட்டரில் ஒடும். கிரெடிட் கார்ட் பெண்கள், போனில் நீங்கள் இந்த கார்டு வாங்கினால், வட்டிக் கட்டியே அழிந்தொழிந்துப் போவீர்கள் என்பதை தெளிவாய் சொல்வார்கள். ஏர்டெல் பில் வசூலுக்கு ஒடிசாவில் உங்கள் மீது கேஸ் இருக்கிறது என்று சொல்லாமல் பண்பாய் பேசுவார்கள். கோயம்பேட்டில் வியாபாரிகள், இனிமேல் தண்ணீர் தெளித்து “ப்ரெஷ் பூ” விற்காமல், நேர்மையாய் இருப்பார்கள்.

ஜன் லோக் பால் வருவதால், இந்தியாவில் ஊழல் ஒ’ழி/ளி/லி’ந்து விட்டது. திராவிட இயக்கங்கள் “ஊழல் சாம்ராஜ்யங்கள்” அதனால் ஊழலற்ற ஆட்சி அமைய ஐ.ஜே.கேயினை ஆதரியுங்கள்.

பின்குறிப்பு:

Labels: , , , ,


Comments:
ஓ.கே.., ஓ.கே..,
 
:)
 
//அதிகாரிகள், மதகுருமார்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தன்னார்வல நிறுவனங்கள், தனியார் முதலாளிகள், தரகர்கள், சிறுத் தொழில் செய்பவர்கள், தெருவில் கடைப் போடுபவர்கள் என எல்லாரும் பாவம் இதுநாள் வரை லஞ்சமோ, ஊழலோ செய்யவே இல்லை//

நச்!

//கிரெடிட் கார்ட் பெண்கள், போனில் நீங்கள் இந்த கார்டு வாங்கினால், வட்டிக் கட்டியே அழிந்தொழிந்துப் போவீர்கள்//

:))))
 
//திராவிட இயக்கங்கள் “ஊழல் சாம்ராஜ்யங்கள்” அதனால் ஊழலற்ற ஆட்சி அமைய ஐ.ஜே.கேயினை ஆதரியுங்கள்.//

அமைய,மலர இந்த ரேஞ்சுலதான் ஸ்டார்டிங்கெல்லாம் இருக்கு ஆனா ஃபினிஷிங்க் சரியில்லையே! நாம அதுக்கும் 1ம் செய்ய இயலாது #ஆதங்கம்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]