May 5, 2011

உலகின் பெரிய தாதா யார்?

ஒசாமா பின் லேடன் சாகடிக்கப்பட்டார். War on Terror இன் முக்கிய தலையை சூரசம்ஹாரம் செய்தாகிவிட்டது. அடுத்தமுறை ஒபாமா இந்த விஷயத்தினை வைத்தே மீண்டும் ஆட்சிக்கு வருவார். உலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இந்த நிகழ்வினைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அரக்கன் ஒழிந்தான் ரேஞ்சுக்கு இதை ஊடகங்கள் பில்-டப் கொடுத்து, ஸ்கோரலர் ஒட்டுகிறார்கள். ஒசாமா பின் லேடன் போட்ட ஜட்டி முதற்கொண்டு இனி ஊடக பாடுபொருளாக மாறும்.

இந்த மிதமிஞ்சியக் கொண்டாட்டத்தில், நாம் கேட்க / கேட்டிருக்க வேண்டிய கேள்விகள் அனைத்தையும் வெகு சிலரே கேட்கத் துணிந்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசின் இரட்டை முகமும், அதைவிட மோசமான அமெரிக்காவின் இரட்டை நாக்குத் தன்மையும், தாந்தோன்றித்தனமும் மீண்டுமொருமுறை நிருபணமாகி இருக்கிறது.

ஒசாமா பின் லேடன் யார், எவர், எத்தனை மனைவிகள், குழந்தைகள் இன்னபிற விவரங்களை இணையத்தில் தேடி எடுத்துக் கொள்க. சில ஆதாரமான கேள்விகளுக்கான பதில்களையும், அப்பதில்கள் கிடைக்காத/சொல்லப்படாத பட்சத்தில் நாம் வாழும் உலகம் என்னவாக மாறக் கூடும் என்கிற யூகங்களையும் வைத்து கதைக்கலாம்.

ஒசாமா பின் லேடனை அழித்தொழித்ததால், அல்-குவாய்தா, இன்னபிற இஸ்லாம் ப்ராண்ட் தீவிரவாதம் ஒட்டு மொத்தமாக ஒழிந்துவிடுமா? தீவிரவாதம் இஸ்லாமிய மதவாத அடிப்படையில் மட்டுமே உலகமுழுவதும் இருக்கிறதா? மேற்கத்திய மீடியாக்கள் முன்வைக்கும் தீவிரவாதத்திற்கும், உலகில் இருக்கும் “தீவிரவாத” மனப்பான்மைக்குமான வித்தியாசங்கள் எவை?

அடிப்படைகள் தெரியாமல் நாம் ஊடக அல்வாக்களை உண்டு மயங்கி கிறங்கி திரிந்துக் கொண்டிருக்கிறோம். முதலில் லேடன் சார்ந்த தீவிரவாதத்தினைப் பற்றிப் பேசலாம். அல்-குவாய்தா, ஹமாஸ் மாதிரியான தீவிரவாதத்தினை முன்னெடுக்கும் கும்பல்களின் அடிப்படை தியரி - வஹாபிசம். இஸ்லாமிய திருமறை நெறிப்படி நடக்கவில்லையெனில், அவன் முஸ்லிமாய் இருந்தாலும் போட்டுத்தள்ளும் மனநிலையினை ஆராதிக்கும் கூட்டமிது.

அமெரிக்கா பாகிஸ்தானுக்குள் புகுந்து, ஒசாமா பின் லேடனை அழிக்கிறது. அமெரிக்காவின் அடிவருடி நாடுகளில் ஒன்றுதான் சவுதி அரேபியா. சவூதி சுல்தான், எகிப்திய எழுச்சி நடந்தப் போது மக்களுக்காக பணத்தினை வாரி இறைத்தார். மக்களோடு சேர்த்து அவர் வஹாபிசத்துக்கும் 30 வருடங்களாக இறைத்துக் கொண்டே இருக்கிறார். ஒரு பக்கம் அமெரிக்க ஆதரவு. இன்னொரு பக்கம் வஹாபிசத்துக்கான ஆதரவு. நம்மூர் திமுக-அதிமுக/பாஜக-காங்கிரஸ் கட்சிமாறி, கேப்மாரி அரசியல்வாதிகள் இதற்கு எவ்வளவோ பரவாயில்லை. அவர்களுக்கு மீட்டர் தான் மேட்டர். கொள்கை, கொத்தவரங்காய் சமாச்சாரங்கள் எல்லாம் கிடையாது. ஆனால், சவூதி அரேபியாவிற்கு மீட்டரும் வேண்டும்; கொள்கையும் வேண்டும்.

இந்த பிறழ்வுரீதியான திருமறை திருத்தல் வஞ்சகத்தனத்தினை யார் ஒதினார்கள் என்று தெரியவில்லை. ஊடக வன்முறை, நோபல் பரிசாளரை சிறையிலடைத்திருக்கும் வஞ்சக தேசம் என்றெல்லாம் சீனாவின் மீது திருவாய் மலரும் “ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும்” அமெரிக்க அரசோ, அதன் ஊடகங்களோ, அதிகாரிகளோ, சவூதியில் நடக்கும் ஊடக அடக்குமுறைப் பற்றியோ, ஒவ்வொரு வெயில் காலத்திற்கும் தண்ணீருக்கு அடித்துக் கொண்டு சாகும் மனிதர்களைப் பற்றியோ “பேசவே” மாட்டார்கள். ரஷ்யாவிற்கு தையல்களின் மீது மையல். அமெரிக்காவிற்கு ஆயிலின் மீது மையல்.

நாடு, எல்லை, இறையாண்மை என்பதையெல்லாம் உடைத்தெறிந்து தேசியம் என்பதே ஒரு கற்பிதம் என்று நிரூபித்த அமெரிக்கா தான் உண்மையான மார்க்ச்சீய நெறியினை பின்பற்றும் அரசு என்பது எத்தனை முட்டாள் மார்க்ச்சீயர்கள், லெனினியர்கள், இடது, வலது, நடு, மேல், கீழ், நீள அகல கம்யுனிஸ்டுகளுக்கு தெரியும்?

என்னதான் குட்டிச்சுவரு தேசமாக இருந்தாலும், பாகிஸ்தான் என்கிற நிலப்பரப்பினை ஒரு நாடாக அங்கீகரித்திருக்கிறோம். ஆனால் பாகிஸ்தான் அரசுக்கு “சொல்லாமல்” இந்த தாக்குதலை நடத்தி விட்டு, உலகிற்கு சொல்லியிருக்கும் அமெரிக்க அத்துமீறலை ஏன் யாருமே மிக முக்கியமான பிரச்சனையாக பேசவில்லை ? முஷ்ரப் லண்டனிலிருந்து பேசிய பாகிஸ்தானிய இறையாண்மைப் பற்றிய பேச்சு ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டதன் பின்னிருக்கும் அரசியல் என்ன ? 26/11 ல் செத்த அமெரிக்க/ஐரோப்பிய மக்களுக்காக இதை அமெரிக்காவோ, பிரிட்டிஷ் அரசோ, இந்தியாவில் புகுந்து இதை செய்திருந்தால் நாம் ஒத்துக் கொள்வோமா ? பணம் வாங்கிய ஒரே காரணத்துக்காக பாகிஸ்தானிய அரசு இன்றைக்கு மெல்லவும், விழுங்கவும் முடியாமல் கேணைத்தனமாக அறிக்கைகள் விட்டு, தாங்கள் தங்கள் சுயத்தினை இழக்கவில்லை என்றை நிரூபிக்க போராடுகிறார்கள். ஆனால் அவர்களின் அறிக்கையினை பாகிஸ்தானிலேயே யாரும் மதிக்கவில்லை என்பது தான் அவமானகரமான உண்மை.

அபோதாபாத் கன்டோன்மெண்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருந்த ஒரு பங்களாவில் தான் ஒசாமா தங்கியிருந்தாராம். சூர்யா/அமீர்கான் ரேஞ்சுக்கு இல்லாமல், ஒரு ஒட்டு மொத்த தேசமே ‘கஜினி’யாக இருப்பதின் பின்னிருக்கும் உளவியல் சிக்கல்களை பற்றிப் பேச யாராவது முன்வரவேண்டும். ஐ.நாவிற்கு அமெரிக்காவிற்கு ஜால்ரா அடிக்கும் வேலைகளை அதிகமாக இருப்பதால், இதற்கெல்லாம் பான் கீ மூனை கூப்பிடாதீர்கள். அதே சூட்டில், நாம் கொஞ்சம் உஷாராய் இருப்பதும் நல்லது. வாகா எல்லைக்கு 200 மீட்டருக்கு தள்ளி இருக்கும் பங்களா தாவூத் இப்ராஹிமிற்கு சொந்தமாய் இருக்கலாம். தாவூத் பேரை சொன்னால் சம்பந்தி மியான்தாத்திற்கு கோவம் வரும். என்னத்துக்கு வம்பு.

பாகிஸ்தானுக்கு பிடித்திருப்பது மருத்துவ மொழியில் அமெரிக்கமேனியா-கம்-பாரத்போபியா. போலியோவிற்கு சொட்டு மருந்தினை நாடு முழுக்க ஊற்றுவதுப் போல, இந்த செலக்டிவ், கால்குலேடிவ், ஸ்லேவ் அம்னிஷியாவிற்கும் எந்த மருந்தினையோ, ஊசியையோ, பாகிஸ்தான் முழுக்க கொடுக்கலாம்.

அமெரிக்காவின் அடுத்த டார்கெட் கடாபியாக தான் இருக்கும். ஐநாவில் உடனுக்கு உடனே தீர்மானத்தினை நிறைவேற்றி, அதற்கு சாப்பா குத்தி, இரவோடு இரவாக, ஷகிலா போஸ்டர் ஒட்டும் மக்களை விட வேகமாக லிபியாவில் வான்வெளித் தாக்குதல் நடத்தியற்கு காட்டிய சுறுசுறுப்பினை, கொஞ்சம் செத்துப் போய், அனாதையாய், வக்கிலாமலிக்கும் இலங்கையின் மீதான ஐ.நா அறிக்கையின் மீதும் காட்டலாம்.

வஹாபிசம் என்பது எவ்வளவு மோசமானதோ, அதற்கு ஈடான மோசமான விஷயம் தான் ப்ரீ மேசன், அடிப்படைவாத கிறிஸ்த்துவர்கள், நம்மூரில் காவி பயங்கரவாதம். ஆனால், War on Terrorரை தெளிவாக இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக சித்தரிக்கும், முன்னெடுக்கும் சக்திகளை கூர்ந்து கவனித்தால், இது வெறும் ஆயதங்களுக்கான சண்டையில்லை என்பது புலனாகும். புஷ்ஷின் அரசில் இதை முன்னெடுத்து சென்றவர்கள் அவருக்கு கோல்மால் ஆதரவளித்த சர்ச்சுகள், அடிப்படைவாத கிறிஸ்த்துவர்கள். மதம் + அரசியல் + செல்வாக்கு = கட்டுப்பாடில்லாத பயங்கரவாதம்.

ஒபாமா இதை பழிதீர்த்தல் என்கிறார். வாடிகன் உஷாராக ஸ்டேட்மெண்ட் விடுகிறது. பைபிளில் எங்கு ’அடிச்சா, திருப்பியடி’ என்று விஜய் பட பஞ்ச் டயலாக் வந்திருக்கிறது என்று யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். ஒபாமா தன்னை ஹாலிவுட் நாயகர்களுக்கு இணையாக நிறுவிக் கொண்டு தீவிரவாதத்தினை வேரோடு அறுத்தெறிந்த நாயகர் என்கிற பட்டப்பெயரினை முன்வைக்க மைக்கிற்கு பின் நிற்கிறார். பழி தீர்க்க இதென்ன மசாலா சினிமாவா? அடிப்படைப் பிரச்சனையை தீர்க்க முடியாமல் அல்லது தீர்க்க வேண்டுமென்ற முனைப்பில்லாமல் எதற்கு இந்த ஹீரோ வேஷம்? அமெரிக்கத் தளபதியின் வாக்குப்படி, ஒசாமா பின் லேடன் ஆயுதங்கள் இல்லாமல் இருந்தார். அவரின் ஒரு மனைவியினை சுட்டவுடன் தாக்க வந்ததால், சுடும்படி ஆயிற்று. ’ஜப்பானில் ஜாக்கிசான் கூப்பிட்டாக, அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக’ போன்றவற்றுக்கு இணையான வாதமிது. வரலாறு ஒரளவுக்கு தெரிந்தவர்களுக்கு லேடன் ஒரு அமெரிக்க உருவாக்கம் என்பது தெளிவாகத் தெரியும்.

இந்த அபாயம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. சோவியத்துக்கு எதிரா, லேடனை ஆதரி. வஹாபிசத்துக்கு ஆதரவா, லேடனை போடு. ஹோஸ்னி முபாரக் ஆயிலுக்கு திறக்கிறானா, அவனை ஆதரி. மக்கள் முழித்துக் கொண்டார்களா, உடனே எகிப்திய ராணுவம் மக்களோடு கூட நின்றதற்கு ஆதரவு தெரிவி. முபாரக்கை பின்வாசல் வழியாக ஒடச் சொல்.கடாபி அமெரிக்காவுக்கு எதிரா, உடனே வான்வெளித் தாக்குதல் நடத்து. சீனா, ரஷ்யா ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவா, உடனே ஐ.நா அறிக்கையை முன்வைத்து ராஜபக்‌ஷே பதில் சொல்லவேண்டும் என்று ஸ்டேட்மெண்ட் விடு. இந்த ப்ராண்ட் “உலக ரட்சக” போர்வை, வெறுமனே மடத்தனமாய் துப்பாக்கித் தூக்கும் தீவிரவாதிகளை விட மோசமான தீவிரவாதம். தன் நலன் முக்கியம் அதற்காக எவன் எக்கேடுக் கெட்டாலும், எழவாய்ப் போனாலும் அதைப் பற்றிய பிரக்ஞை கூட தேவையில்லை என்பதை நிறுவுவதும், அதை ஒரு கொள்கையாக மாற்றுவதும்தான் உலகின் மிகப்பெரிய தீவிரவாதம்.

மண்புழுவினை வெட்டினால், அது இரண்டாக உயிரோடு செயல்பட ஆரம்பிக்கும் என்பது இயற்கையின் விதி. அதற்கு ஈடானது தான் மதப்போதையில் நிகழும் மரணங்களும், கொலைகளும். இந்த 2-3 நாட்களில் அல்-குவாய்தாவின் உலகளாவிய அமைப்பு தலைவனின் மரணத்திற்கு பழிதீர்க்கும் நடவடிக்கைகளில் யோசிக்க ஆரம்பித்திருக்கும். இதுவரை இருந்துவந்த தீவிரவாத அமைப்புகளிலிருந்து அல்-கொய்தா வேறானது. அல்-கொய்தாவுக்கு நிறுவப்பட்ட தலைமை கிடையாது. வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு முகங்களில் அது autonomous ஆக செயல்பட்டு வருகிறது. இதை அழித்தொழிப்பது கடினம். இந்நேரத்திற்கு அதன் இந்திய ஆதரவுமுகங்களில் திட்டங்கள் தயாராக இருக்கலாம். ஆனால், தப்பு அல்-கொய்தாவின் மீது மட்டுமா ?

கான், அலி என்று முடியும் எந்த பெயராக இருந்தாலும், கொஞ்சம் தாடி வைத்து அரபியோ, உருதுவோ பேசினால், ப்ரிஸ்கிங் என்கிற பெயரில் அமெரிக்கா அடிக்கும் கூத்து மிகப்பெரிய உணர்வுகளை கல்லடிக்கிற வன்முறை என்பது சுரணையற்ற, நம்ப மறுக்கிற அமெரிக்க அடிவருடிகளுக்கு புரியுமா ? லிப்ட் கேட்டு வண்டியேறி, இறங்கும்போது ஒட்டுபவர் தன்னுடைய பேண்டின் பின்பக்கத்தினை தடவி பர்ஸ் இருக்கிறதா என்று பார்த்தால், பின்னால் உட்கார்ந்து வந்தவரின் மனநிலை எப்படி இருக்கும் ? வீரம் என்பது பயமில்லாத மாதிரி நடிப்பதல்ல. ஒரே ஒரு மாணவன் தாமதமாக வருவதால், காத்திருக்கும் ட்யுஷன் டீச்சரின் நிலையில் தான் உலகம் இருக்கிறது. இங்கே தவறு செய்பவர்களுக்காக, தவறு செய்யாதவர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒசாமா பின் லேடனைப் போட்டுத் தள்ளுவதால், ஈகோ திருப்தி பட்டிருக்கும். அந்த வகையில், கசாப்பினை நாம் போட்டுத் தள்ளாமல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி வழக்கினை முடித்திருக்கிறோம். இதுதான் நாகரீகமான உலகின் செயல். மனைவி அடுத்தவனோடு படுத்திருந்தாள் என்று தலையை வெட்டி ஸ்டேஷனில் சரண்டராகும் கணவனுக்கும், அமெரிக்காவுக்கும் என்ன பெரிய வித்தியாசம் ?

மேன்மையான நாகரீகம் என்பது பல்லுக்குப் பல், கண்ணுக்கு கண் இல்லை. குற்றமிழைத்தவனை அவனுடைய குற்றத்தினை உணரச் செய்து அதன் வலியினை உணரச் செய்தல் தான்.

காந்தி என் வழிகாட்டி என்று சொல்லிக் கொண்டு, கெளபாய் வேஷம் போட்டு துப்பாக்கிகளை தூக்கும் Mr.ஓபாமா, வெள்ளை மாளிகையில் எவனாவது தமிழன் இருப்பான். அவனிடத்தில் கேட்டு அசோகன் என்றொரு மன்னன் இந்தியாவில் இருந்தான், போர் வெறி பிடித்தலைந்த அவன், பின்னாளில் புத்த மதத்தின் மிகமுக்கியமான பரப்புரையாளனாக மாறினான் என்பதை ட்ரான்ஸ்லேட் செய்து படியுங்கள். வீரம் என்பதின் பொருளும், மன்னிப்பு என்பதின் அர்த்தமும் அப்போது தெரியும்.

புத்தம் சரணம் கச்சாமி!

Labels: , , , , , ,


Comments:
//என்னதான் குட்டிச்சுவரு தேசமாக இருந்தாலும், பாகிஸ்தான் என்கிற நிலப்பரப்பினை ஒரு நாடாக அங்கீகரித்திருக்கிறோம். ஆனால் பாகிஸ்தான் அரசுக்கு “சொல்லாமல்” இந்த தாக்குதலை நடத்தி விட்டு, உலகிற்கு சொல்லியிருக்கும் அமெரிக்க அத்துமீறலை ஏன் யாருமே மிக முக்கியமான பிரச்சனையாக பேசவில்லை ?//

இதுக்கு காரணம் பாகிஸ்தானின் இரட்டை போக்கு தான். தீவிரவாதத்தை ஒழிக்க ஆதரவு தருகிறோம் என்று கூறிவிட்டு, பின்னாளில் ஒசாமாவிடம் போட்டுகொடுத்து இருவரிடமும் நல்ல பெயர் இல்லை. அதனால் தான் பாகிஸ்தானின் இறையான்மை மீரப்பட்ட போதும் உலக நாடுகள் கண்டிக்கவில்லை. "பாகிஸ்தானுக்கு இது வேண்டும்" என்ற மனோபாவம்.
 
அற்புதமான முக்கியமான கட்டுரை.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]