May 11, 2011

கிறுக்கெட்

35 வெங்கடராமய்யர் தெரு, கொண்டித்தோப்பில் 8 வயதில் ஆரம்பித்தது அந்த கிறுக்கு. ஓட்டு வீடு. தாழ்வாய் இறங்கிய ஓட்டிற்கு எதிர்ப்புறம் பெரிய மொட்டை மாடி. மொட்டை மாடி தான் படுக்கையறை. பின் கட்டில், மழை வந்தால் மட்டும், ஓடு இறங்கியிருக்கும் தாழ்வாரத்தில் படுக்கை. மொட்டை மாடியின் சிமெண்ட் தரையும், காரை சுவர்களும் தான் ஈடன் கார்டன். அப்பா தலையணையை செங்குத்தாக சுவரோரம் நிறுத்தி, ஸ்டம்பாக்கி, தச்சர் செய்துக் கொடுத்த தேக்கு கட்டையில் அண்டர் ஆர்ம்ஸில் சொல்லிக் கொடுத்த கிறுக்கு. வாழ்நாள் கிறுக்கு. இது கிறுக்கின் பரிணாம வளர்ச்சி 1.0

வீட்டின் பின்னால் இருந்த புழக்கடையில் ஆரம்பித்தது அது. புழக்கடை என்பது 31/2 அடியில் அகலமாகவும் 22 அடியில் நீளமாகவும் இருந்த ஒரு வெற்று துண்டு. எங்களுடையது திண்ணை வீடு. திண்ணையின் வெளியே இருந்த துண்டு இடத்திலும் சுவரில் மூன்று கோடுகள் எந்நேரமும் கிறுக்கியிருக்கும். பின்னாளில் வெளியில் ஆடும்போது, மனிதாபிமானமிக்க வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய காம்பவுண்டு சுவரின் மேல் கண்ணாடிகளைப் பதித்து வைத்திருப்பார்கள். ’பேட்’டினால் தெளிவாய் அவற்றை செதுக்கி, கைகளுக்குள் ரப்பர் செருப்பை கிளவுஸாய் அணிந்து சுவரேறி குதித்து ஜி-2, ஜி-4க்கு மேல் போய் வீட்டினுள் இறங்கிய பந்தினை எடுத்த ராணுவ சாகசங்கள், கிறுக்கு முத்திப் போனதற்கான அடையாளங்கள்.

9-10 வயதில் தெருவில் விளையாட ஆரம்பித்த கணத்திலிருந்து, 27 வருட வெயில் என் தலையில் இறங்கியிருக்கிறது. தெருவில், போலிஸ் லைன் சாக்கடைகளில், கிராஸ் பிட்சின் அகோரித்தனமான சுடுகாட்டின் பின்னிருக்கும் புல்வெளிகளில், ஐ ஒ சியின் ரயில்வே ட்ராக்கில் அதிகாலை 5 மணிக்கு ஸ்டம்பினை நட்டு பிட்ச் பிடித்து தூங்கிய கணங்களில், மாதவரத்தின் அப்போதிருந்த காலி மனைகளில், புது வீடு கட்டியவுடன் மொட்டை மாடியில், எதிர் வீடு, பக்கத்துவீடு மாடிகளில், மெரீனா கடற்கரையில் என கிறுக்கு பிடித்து ஒடிய இடங்கள் எத்தனையோ.

முதலில் ஆடியது ட்யூப் பால். ட்யூப் பால் செய்வது என்பது வடசென்னையின் அருகிக் கொண்டிருக்கும் கலாச்சாரத்தில் ஒன்று. புறா ரேஸ், முதுகு பஞ்சர், ஐஸ் பாய், மாஞ்சா, கானா போன்றவை இன்னபிற. சைக்கிள் கடையெல்லாம் ஏறி இறங்கி, பஞ்சர் போன ட்யூப்பினை வாங்குவது முதல்படி. [”ண்ணா, ண்ணா பழய ட்யூப் எதுன்னா இருந்தா குடுன்னா, அடி வாங்ன ட்யூப்பா இருந்தாலும் பரவால்லன்னா”] ஒரு சிறிய கல் அல்லது ரப்பர் தேட வேண்டும். அந்த ரப்பர், கோயிலின் பின்னால் இருக்கும் குளத்தில் கொட்டும், ரப்பர் பேக்டரிகளின் உதிரிகள். அதைப் பொறுக்கி எடுத்து வர வேண்டும். ரப்பரின் ஒரே பிரச்சனை, அடிக்க அடிக்க பந்தின் உருவம் மாறிவிடும். கருங்கல் இருந்தால் மாறாது. ஆனால் உடம்பில் பட்டால் “உண்டை” வாங்க வேண்டும்.

இந்த கல்/ரப்பர் சேகரிப்பு தான் அடிப்படை. இது கிடைத்தவுடன், பழைய ஹிந்து, தினந்தந்திப் பேப்பர்களை தண்ணீரில் நனைக்க வேண்டும். முழுவதுமாய் நனைந்தால், பிய்ந்து கொள்ளும். அதனால், தண்ணீர் பட்டும் படாமலும் இருக்க வேண்டும். அமெரிக்க பெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சவால் விடும் தொழில்நுட்பமது. நனைத்த பேப்பரினை முதலில் கல்/ரப்பரினைச் சுற்றி உருண்டை பிடிக்க வேண்டும். எவ்வளவு பேப்பர்களை கசக்கி, அழுத்தி, தரையில் போட்டு உருட்டி, லட்டுக்கு உருண்டை பிடிப்பதுப் போல தொடர்ச்சியாக பிடித்து அதை உருளையான ஒரு உருவத்திற்கு கொண்டு வரவேண்டும். ஒரளவுக்கு கிரிக்கெட் பந்தளவிற்கு உருண்டை வந்தவுடன் ஆரம்பமாகும் அடுத்த பணி.

அம்மாவின் தையல் மிஷினில் இருக்கும் பெரிய கத்திரியினை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து ட்யூப் வெட்டவேண்டும். ட்யூப் வெட்டுதலில் முக்கியமான கட்டம், பஞ்சர் போட்ட இடங்களை முழுவதுமாக கத்தரித்து எறிந்து விடவேண்டும். மெல்லியதாகவும், அதை சமயத்தில் இழுத்தால் விரிவாகவும் வருவது போல பல வெட்டுக்களையும், ”பேண்டேஜ் ட்யூப்” என்றழைக்கப்படும் உருவத்தில் அகலமான வெட்டு சிலவையும் வெட்ட வேண்டும். அடுத்த நாள் காலையில் துணி வெட்டும் போது மொன்னையாகும் கத்திரியின் அம்மாவின் கோவம், துடைப்பத்தாலோ, மோர் மத்தாலோ, ஈர்க்குச்சியாலோ, துணி வெளுக்கிற கட்டையாலோ என் முதுகில் விடியும்.

வெட்டிய ட்யூப் வெட்டுக்களை அந்த கிரிக்கெட் உருண்டையின் மீது பொருத்தவேண்டும். கட்டை விரலிலும், ஆள்காட்டி விரலிலும் ரத்தமும், தோல் பிய்த்தலும் தொடர்ச்சியாக நடந்தேறும். ப்ரண்ட் புட்டில் சரேலென எகிறும் பந்து கீழே ஹாண்டிலை பிடித்திருக்கும் கட்டைவிரலில், தோல் பிய்ந்த இடத்தில் படும்போது வரும் வலி என்பது, உயிர் போகும் வலி. அதை உணர்ந்தாலேயொழிய எழுத்தில் விவரிக்கமுடியாது. ட்யூப் பால் தான் என் ஆரம்ப கிறுக்கின் அஸ்திவாரம். அங்கிருந்து தான் இந்த கிறுக்கு இன்றளவுக்கும் மறக்க முடியாத கிறுக்காய் மாறிப் போனது.

ட்யூப் பாலில் ஆரம்பித்த கிறுக்கு, தெருவில் ஆடும்போது ரப்பர் பாலிலும், மைதானத்தில் ரப்பர் கார்க் அல்லது கார்க் பாலிலும் மாறியது. இந்த ரப்பர் கார்க் என்கிற வஸ்து, அணு ஆயுதத்திற்கு பிறகு உலகம் கண்டுபிடித்த மோசமான கண்டுபிடிப்பு. ரப்பரின் எழும்பலும், கார்க்கின் வலிமையும் கொண்ட அது இடுப்பில்,காலில், தொடையில் படும் போது தெறிக்கும் உள்காயம், வடிவேலுவினை மூத்திர சந்தில் வைத்து குமுக்கும் வலிக்கு ஈடானது. ஆனாலும், நானும் நல்லவனாகவே நடந்துக் கொண்டிருக்கிறேன்.

ஒன்பதாவது படிக்கும்போது தான் லொட்டை நாராயணன் என்ற கொருக்குப் பேட்டையில் இருந்த நண்பன் அங்கிருந்த ஒரு டீம்மில் சேர்த்து விட்டான். அதுவரை ஆடியது அனைத்தும் தெரு & பள்ளிக் கிறுக்கு. தெரு முடிந்தால், பக்கத்து வீட்டில் கிறுக்கினைப் பார்ப்பது. பக்கத்து வீட்டில் தான் டிவி இருந்தது. எல்லா டெஸ்ட் மேட்சையும் ஒன்று விடாமல் கோடுகள் மேலும் கீழும் போகும் கறுப்பு வெள்ளை டிவியில் கவாஸ்கருக்காகவும் பின்னாளில் ராமன் லம்பாவாவிற்காகவும் பார்த்தது இன்றளவும் தெளிவாக நினைவில் இருக்கிறது. ராமன் லம்பாவின் ஸ்டேன்ஸ் இன்றளவும் உலகின் எந்த ஆட்டக்காரரும் வைக்காத ஒரு ஸ்டேன்ஸ். “ராப்பிச்சை” என்று ரவி சாஸ்திரியை கரித்துக் கொட்டித் தீர்த்த காலம். கொஞ்ச நாள் இங்கிலாந்து சீரிஸில் ஆடிய ஆட்டத்தால், வென்சர்க்கரும் என்னுடைய ஆஸ்தான ஆளாக இருந்தார். ஆனால், என் கடமையுணர்ச்சியனைத்தும் பழைய பேப்பர் கடையில், தெருவில், ஹிந்துவில் சன்னியின் படங்களை சேகரிப்பதிலேயே விடிந்தது. சன்னி 100 என்கிற படப் புத்தகக் களஞ்சியம் என் வாழ்நாளின் சாதனைகளுள் ஒன்றாக இன்றளவும் கருதுகிறேன்.

வாரக் கடைசியில் இங்கென்றால், வார நாட்களில் 9.30 மணி பள்ளிக்கு 7.45க்கே போய்விடுமோம். ராமகிருஷ்ணாவிலிருந்து, ஜி.எம்.டி.டி.வி என்றழைக்கப்பட்ட குருசாமி முதலியார் தொண்டை மண்டல துளுவ வேளாள மேல்நிலைப்பள்ளியில் தான் என் ஆறாம் வகுப்பு தொடங்கியது. அங்குதான் நான், மாதவன், வேலுமணி, சதிஷ், விஜி, நாராயணன் என்றொரு பெரும் கூட்டம் கிறுக்கை வாழ்நாள் லட்சியமாக கொண்டு ஆடியது.

மிலிட்டரி பேகினை ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கி, ரப்பர் பால், மாவு பேட்டோடு 8.00 மணிக்கு ஆரம்பிக்கும். ப்ரேயர் ஆரம்பிக்கும் 9.25 மணிக்கு முன் மொத்த பள்ளியும் நாங்கள் ஆடுவதைப் பார்க்கும். ஆனால், கே பி எஸ், சிதம்பரம் போன்ற வாத்தியார்களின் புல்லட் சவுண்ட் கேட்கும்போதே நாங்கள் பையை எடுத்து எஸ்ஸாகி கூட்டத்தோடு கூட்டமாய் கலந்திருப்போம். அந்த கிறுக்கு, +2 படிக்கும்வரை நீடித்தது. பத்தாவது முடித்தபின் அதே பள்ளி என்பதால், கொஞ்சம் ‘துளிர்’ விட்டு கே பி எஸ் வரும் போதே டவுன் தி ட்ராக் வந்து சிக்ஸ் அடித்த காலமெல்லாம் உண்டு.

பால் மேட்ச், ரூ.10 பெட் மேட்ச், பனியன் கழட்டி வெற்றுடம்புடனும் அவமானத்துடனும் களத்தினை 10 முறை வலம் வரும் பெட் மேட்ச், டிரிங்க்ஸ் ஸ்பான்சர் மேட்ச் என்று கிறுக்கின் எல்லா பர்முடேஷன் காமினேஷன்களும் அறிமுகமான காலமது. பள்ளிக்கு வெளியே விற்கும் கொய்யாக்காய் முதற்கொண்டு நாங்கள் கிறுக்கிறாக அடகு வைக்காத பொருளை அன்றைய எங்கள் உலகத்தில் இல்லை.

வெஸ்பானிஷ் - WESPANIZ - West Indies, England, Srilanka Pakistan, Newzealand, India, Zimbabwae என்பதின் உலகமகா சுருக்கமே நான் ஆடிய டீமின் பெயர். நடத்தியவர் அருண் என்கிற ஒரு டெய்லர். அவருக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே ட்ராக்குக்கு அந்தப் பக்கம் ஒரு கடை இருந்தது. அவர் கடையில் தான் எங்களுடைய ‘கிட்’ இருக்கும். ஷூ வாங்க கூட நாதியில்லாத காலமது. ஒரு தேய்ந்துப் போன கான்வாஸினை போட்டுக் கொண்டும், கிரெளன் தியேட்டர் வாசலில் போட்டிருந்த ஒரு செகண்ட் சேல்ஸ் ட்ராக்ஸை வாங்கிக் கொண்டு அதில் ஸ்டென்சில் கட்டிங்கில் சாயம் வாங்கி வெஸ்பானிஷ் என்று எழுதி டெய்லர் கடையில் காய வைத்து ஒரு வெள்ளை டீ சர்ட்டினை வாங்கிக் கொண்டு ஐ ஒ சி கிரவுண்டில் விளையாட ஆரம்பித்தது கிறுக்கின் பரிணாம வளர்ச்சி 2.0

வெஸ்பானிஷின் ஆஸ்தான விக்கெட் கீப்பர் நான். அப்துல் என்றொரு கறிக்கடை பாய் ஒருவர் தான் எங்களின் அனில் கும்ப்ளே. லெக் ஸ்பின் போடுகிறேன் பேர்வழி என்று மாங்கா அடிக்கும் எம்காதகன். கிறுக்கின் உபகரணங்களான பேடு, கார்டு, கிளவுஸ், தைய் பேடு அனைத்தும் அறிமுகமான காலமது. அதுவரை வெற்று காலில் வெய்யில் தெரியாமல் ஒடியிருக்கிறேன். அருண் நன்றாக ஆடுவார். டெய்லர் கடை, டீம் மேனேஜ்மெண்ட் + தியாகராய கல்லூரியில் மாலைக் கல்லூரிப் படிப்பு. நான் ஆறாவது டவுனில் இறங்கி, கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி ரபீக்கோடு ஒபனிங் ஆடத் தேறினேன். எமகாதக, சோறு தண்ணியில்லாத பயிற்சி. இன்றளவும் என்னுடைய ஸ்டேன்ஸ் முதற்கொண்டு நான் ஆடக் கூடிய அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொடுத்த குருகுலம் வெஸ்பானிஷ் தான்.

பள்ளியில், வீட்டின் மொட்டை மாடியில் இல்லை மைதானத்தில் என்று கிறுக்கு அலைக்கழித்த காலம். பத்தாவது முடித்தவுடன், அந்த தெருவில் இருந்த ஒரு பெண் கல்லூரி போக, அந்த பெண்ணின் சைக்கிளை என் அம்மா ஆசையாய் வாங்கிக் கொடுத்தார். உள்ளுக்குள்ளே லேடீஸ் சைக்கிள் என்கிற கடுப்பிருந்தாலும், சைக்கிள் கைவசமான மகிழ்ச்சியில் என் இறக்கைகள் விரிய ஆரம்பித்திருந்தன. அருணின் பைக்கில் பின்னால் கிட் தூக்கி போன காலம் போய், “அண்ணா நானே பேட், ஸ்டம்ப் எடுத்துட்டு வந்துடறேன்” என்று சொல்லி சைக்கிளின் பின் கேரியரில் அனைத்தையும் வைத்து ஊரேப் பார்க்க, வெஸ்பானிஷ் ட்ராக்ஸ் அணிந்து போகும்போது, அடுத்த சுனில் கவாஸ்கர் நான் தான் என்று வெங்கடராமய்யர் தெருவில் எல்லோரும் நினைத்ததாக நான் நினைத்துக் கொண்டேயிருந்தேன்.

கல்லூரி வந்தப் போது கூட வெஸ்பானிஷில் ஆடிக் கொண்டிருந்தேன். ஆனால் கல்லூரியிலிருந்தே நினைவுகள் வேறு திசையில் போக ஆரம்பித்திருந்தது. முதல் காதல், பின் சினிமாவின் மீதான மோகம். எப்படியாவது டி எப் டி படித்து விடலாமென்றிருந்த கனவு என என் ஆரம்பகால கிறுக்கு பிற கிறுக்குகளில் இடப்பெயர்ச்சியடைய தொடங்கியிருந்தது. கல்லூரி முடித்தவுடன் வேலை. பின் கணினி மீதான ஆர்வமென்று வாழ்க்கை பின்னாளில் ஸ்பின்னானது. 2000 த்திற்கு பிறகு ஆடவில்லையென்றாலும், தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டத்தின் சூட்சுமங்களும், ஸ்ட்ரடஜிகளும் பிடிபட்ட காலமது.

ஆனாலும் பிடிவாதமாய் கிறுக்குத்தனத்தினை பார்ப்பது தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. 2008ல் ஐ பி எல் ஆரம்பித்த காலகட்டத்தில், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மீண்டும் கிறுக்குத்தனத்தினை மெரீனாவில் அரங்கேற்றினோம். தொடர்ச்சியாக மெரீனாவில் ஆடிய காலத்தில் தான் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்காக எங்களுடைய டீம்மினை தேர்ந்தெடுத்தார்கள். மெரீனாவில் ஆடிய ஆட்டமும் கிறுக்குத்தனத்தின் உச்சம். டென்னிஸ் பால் விளையாட்டுக்கு, மணலில் பந்து எழும்பாது என்று அரை பாய் (half mat) போட்டு ஆடிய கும்பலது. இருபுறமும் மூன்று ஸ்டம்புகள், அரை பாய், நான்கு எல்லையில் கொடிகள் என வெறித்தனமாய் ஆடிய கூட்டம். சன் டிவிக்காக ஆடியது தான் கடைசி. அதிலும் இறுதி வரை வந்து ஒரு சூழ்ச்சி பந்தால்,முதல் பந்தில் ஆட்டமிழந்தாலும், 6 ஒவர்களில் 13 ரன்களை வைத்துக் கொண்டு டிபெண்ட் செய்ததும், என் ஒவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியினை கிட்டத்திட்ட தோற்கடித்ததும் வாழ்வில் ரீவெண்ட் செய்யமுடியாத உயர்வுகள்.

சென்னையின் வெயில் தலையில் வீழ்ந்துக் கொண்டேயிருந்தனாலோ என்னவோ, எந்த வியாதியும் கிட்டவே நெருங்கவில்லை. வைட்டமின் டி வஞ்சகமில்லாமல் வாரி வழங்கியது கிறுக்கு தான். விளையாடாத நாட்களில் தான் வேனிற் கால சங்கடங்கள் ஆட்டுவித்திருக்கின்றன. பெண், பொன், நிலம், அதிகாரம் மாதிரியான கிறுக்குகள் ஒரு காலத்திற்கு பிறகு நம்மை நிலை குலையச் செய்துவிடும். ஆனால் இந்த கிறுக்கு அப்படியல்ல. வாழ்நாள் முழுக்க இருந்தாலும், இது வளம் தரும் கிறுக்கு.

இப்போது பிடித்திருப்பது கிறுக்கின் பரிணாம வளர்ச்சி 3.0

இப்போது ஆட ஆரம்பித்திருப்பது மாமா ப்ளே. காலில் ஷூக்கள், கேட்ட நேரத்தில் மோர், லெமன், தண்ணீர், பைக்கில் பயணம், ஒரளவுக்கு பெரிய கிட் என்று எல்லாம். வயதாகிவிட்டது. செலவு செய்ய முடியும். நல்ல ஷு போட முடியும். ஜெர்ஸி, ட்ராக்ஸ் வாங்க முடியும். that ball just moved outside the offstump, i should have left that out, mis judged it என்று உரையாட முடியும். ஆடும்போதே போன் வந்தால் பேச முடியும். பீட்டர் மாமாக்கள் ஆடிய ஆட்டத்தினை நான் சின்ன வயதில் பார்த்து பொறாமை பட்டு நானும் ஒரு நாள் சொந்த பேட் வாங்கியே தீருவேன் என்று சபதம் போட்ட நாட்களை நினைவுறுத்துகிறது. நானும் இன்றைக்கு பீட்டர் மாமா தான். எல்லா வசதிகளும் வந்து விட்டன. ஆனாலும் கிறுக்கு விடவேயில்லை.

இன்றைக்கும் மிடில், லெக் கார்டு எடுத்து முதல் பந்தினை எதிர்நோக்கும் அந்த நொடி வாழ்வின் மகோன்னதமான கணம். உலகம் மறந்துப் போய், என்னுள் இருக்கும் சுயமும் விலகி, பாலகுமாரன் அவ்வப்போது சொல்லும் தியானத்தில் எங்கோ வெளியில் மிதக்கிறேன் என்பது மாதிரியான நேரமது. கவனமுழுவதும் பவுலரின் கைகளை நோக்கியே குவிந்திருக்கும் அந்த நொடி தான், இன்றளவும் என்னுள் கிறுக்கினை உயிர்ப்பித்துக் கொண்டேயிருக்கும் தேவ கணம். செக்ஸுக்கு பின் ஒரு ஆணின் எல்லா கவனமும் ஒரு கணத்தில் குவிந்திருப்பது கிறுக்கில் தான் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஞாயிறு காலை 6 மணி போல நந்தம்பாக்கம் வாங்கள், என்னையும் சேர்த்து ஒரு கூட்டமே கிறுக்கு பிடித்து ஆடிக் கொண்டிருக்கும் கிறுக்கெட்டை, சாரி கிரிக்கெட்டை.

தொடர்பு கொள்ள: அதிஷா: dhoniv at gmail க்கு ஒரு மடல் அனுப்புங்கள்.

Labels: , , ,


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]