Jun 27, 2011

’வரா’து வந்த நாயகி

எகனாமிக் டைம்ஸில் முகேஷ் அம்பானி பிபிக்கு ஏன் 30% ரிலையன்ஸின் ஆயில் சொத்துக்களை விற்றார் என்று முனைப்பாகப் படித்துக் கொண்டிருந்தப் போது, அடுத்தப் பக்கம் ஒட்டிக் கொண்டிருந்தது. கேபசினோவினை கலக்கக் கொடுத்த ஸ்பூனில் பக்கத்தை பிரிக்க முயன்று நிமிரும் போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. சடாலென ஸ்டாப் ப்ளாங்கில் பின்னிருந்த நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையின் சப்தங்கள் ம்யூட்டானது.

வரலட்சுமியை (பெயர் மாற்றம்) பாரிஸ்தாவில் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. வரலட்சுமி எனக்கு வரா. ஆனால், அந்தப் பெண் வராவாக இருக்க முடியாது. கூடாது.

வெள்ளை வெளேரென பிராமண நிறமும், கொஞ்சமே ப்ரெளன் நிற அலையும் முடியும், உதடு சுழிக்கும்போது விழும் குழியும், எல்லாரையும் பார்க்காத மாதிரி ஆனால் பார்த்துக் கொண்டே தலைமுடியை சரிசெய்யும் மானரிசமும், அச்சு அசல் வரலட்சுமியே தான். ’கும் சும்’மில் வரும் வித்யா பாலனைப் பார்த்தால், வராவை பார்க்கத் தேவையில்லை. ஆனாலும், அறிபுனை கதைகள் மாதிரி time freezing / delayed time processing algorithm எல்லாம் இன்னமும் நான் வாழும் உலகில் அறிமுகமாகவில்லை. அதனால் அது சாத்தியமே இல்லை.

கொண்டித் தோப்பு வெங்கடராமய்யர் தெருவின் இந்தப் பக்கத்தில் ஐந்து வீடுகள் தள்ளி வலதுப்புறம் என்னுடைய வீடு. அந்த பக்கத்தின் கடைக் கோடியில் இடதுப் பக்கத்தில் அவள் வீடு. என்னுடைய வீட்டுக்கும், அவளின் வீட்டுக்கும் பெரியதாய் உறவுகள் கிடையாது. ஆனால் தெருவில் இருக்கும் ஐயங்கார் குடும்பங்களுக்கு இடையேயான ச/சுமூக உறவோடு ’நல்லா இருக்கேளா’ என்பதோடு நின்றது. ஒவ்வொரு முறையும் தெருவினை அந்தக் கோடியில் கடக்கும்போதும், வரலட்சுமி வாசலில் இருப்பாளா என்கிற தவிப்பு இல்லாமல் கடந்ததேயில்லை. வரலட்சுமி நிற்கும் நேரத்தில் மெல்லியதாய் ஒரு புன்னகை. ஐந்தாம் வகுப்பு வரை ஒரேப் பள்ளி. பின்பு நான் ஆண்கள் மட்டுமே (முட்டாள்தனமாய்) இருக்கும் பள்ளிக்குப் போனேன்.

அந்த வயதிலிருந்து இரண்டரை எருமை வயதாகும் இன்று வரை அந்த உணர்வு என்னவென்றே தெரியவில்லை. பரிவா, பாசமா, காதலா, infatuation-ஆ, டோபமைன் தாக்கமா, ஹார்மோன் குழப்பமா, ப்ளாடோனிக் உறவா, கற்பிதங்களின் உருவமா.

ஆனாலும், தெருக் கோடி, வாசலில் அலைபாயும் கண்கள், பார்த்தால் வரும் புன்னகை, புன்னகையின் பின் நினைவுக்கு வந்த நதியா, கார்த்திகா, கோடை மழை வித்யா, எட்டாம் வகுப்பு அறிவியல் நோட்டைக் கொடுக்கும் போது லேசாய் தொட்ட விரல்கள், தாவணிப்போட்டு பக்கத்தில் பார்த்த ஒரு நாளில் எழும்பிய குட்டிக்கரா வாசனை, காலின் கொலுசு அசையும் மெல்லிய ஒலி என ஒட்டு மொத்தமாய் ஒரே நொடியில், நியுரான்களின் பழம் டேட்டா பேஸில் பதிந்திருந்தது, சடாலென கூகிள் சர்ச் ரிசல்ட் மாதிரி முன்னால் விழுந்தது. ஆனால் இது எப்படி சாத்தியம். 20 வருடங்கள் கழித்து, காலத்தினை எரேஸ் செய்து அச்சு அசலாய் என் முன்னே. Magical Realism at its best in real life.

சத்தியமாய் கனவில்லை. காசு கொடுத்து சில்லறை வாங்கினேன். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நியு சவுத் வேல்ஸ் மேட்சு கூடப் பார்த்தேனே. ஒருவேளை வராவின் பெண்ணாக இருக்குமோ? அம்மா சாடையோடு இருப்பாள் போல. அப்படியென்றால், வராவிற்கு 1995ல் கல்யாணமாகி 96ல் பெண் குழந்தைப் பிறந்து, இன்றைக்கு 15 வயதில் என் முன்னே நிற்கிறாளா? இப்போது என்ன செய்துக் கொண்டிருப்பாள்? நான் பார்த்த பெண்ணின் அம்மாவாய், ப்ராஜெக்ட் வொர்க்கும், புக்கக்த்தில் சீரியலும், அபார்ட்மெண்ட் மனக் குமறல்களோடும் இருப்பாளா? நான் நினைவிருக்குமா? நானாய் நினைவிருக்குமா? கணவன் ஸாப்ட்வேரா ? எம்.என்.சியில் வேலைப் பார்ப்பானா ? நாத்தனார்கள் தொல்லை இருக்குமா ? சென்னையா, பெங்களூரா, மங்களூரா, இல்லை வெளிநாடா, எதாவது Tier-2/3/4 நகரமா ? சென்னையாய் இருந்தால், மாம்பலமா, நங்கநல்லூரா, மடிப்பாக்கமா, அடையாரா, துரைப்பாக்கமா, குரோம்பேட்டையா, அண்ணா நகரா, பெரம்பூரா, ஆழ்வார்பேட்டையா ? சொந்த வீடா, வாடகை வீடா ? பேஸ்புக்கில் இருப்பாளோ ? ஒரு வேளை இருந்து தொடர்ந்து மெஸேஜ் அடித்தால் stalking பிரச்சனைகள் வருமோ ? ஐபி வைத்து சைபர் க்ரைமில் நிற்க வைத்தால் என்ன செய்வேன் ? வேலைக்குப் போகிறாளா, இல்லை வீட்டில் இருப்பாளா ?

கேள்விகள். கேள்விகள். கேள்விகள். அலையில் நனையும் கால்களுக்குக் கீழே, துகளாய் மறையும் மணல் போல, கரைந்துக் கொண்டேயிருக்கிறது காலம். நீண்ட கேள்விகளாலும், தூக்கமில்லா இரவுகளாலும் 72 மணி நேரங்கள் கரைந்துப் போனது. இந்த வாழ்வியல் குழப்பங்கள் அபாயகரமானவை. தனிமையின் கழிவிரக்கமும், சுயம் கரைந்த கையாலாகதனமும் கோவமும், மூத்திரக் கடுப்புப் போல உடலெங்கும். எரிச்சல் நாளங்களில் விரவியிருந்த 72 மணி நேரம்.

துக்கிஸ்டாக மாறி, கண்ணாடி வழியாய் பார்க்கும் எல்லாமே ப்ளாக் & வொயிட்டிலும், செபியா டோனிலும் தெரிந்த 72 மணி நேரங்கள். இளையராஜா மைண்ட், பாடி, சோலில் விரவிய 72 மணி நேரங்கள். கொண்டித்தோப்பு, செல்வம் பால் கடை, நடுநிசி குல்பி ஐஸ்கீரிம், அங்கே இருந்த கோயிலின் முன் வந்து பெவிகால் கொட்டிய லாரி, ரேஷன் கடையில் நின்ற கெரசின் கியு, எச்சில் தொட்டு திருப்பிய ரென் & மார்ட்டின், மப்பில் ரோட்டில் கிரிக்கெட் ஆடும்போது தகராறு செய்யும் அச்சகம் வைத்திருந்த பாபு, கன்னியப்பன் வைத்திருந்த வைக்கோல் கன்னுக்குட்டி, சைக்கிள் ரிக்‌ஷா ராஜகோபாலன், எல்லா வீட்டுக்கும் உழைத்து போட்ட குணாம்மா என ஆண்டனியின் கட் ஷாட்களில் நேரம்போவது தெரியாமல் கடந்துப் போனது என் கடந்த காலம்.

மீண்டும் அல்ப ஆசையாய், பாரிஸ்தாப் போய் உட்கார்ந்தால், அடுத்த யுகப்பிரளயம் நிகழ்ந்தது. கீர்த்தி உள்ளே வந்து ஹாய்’ சொன்னாள். கீர்த்தி ஒரு ரேடியோ ஜாக்கி. இளையராஜா ரசிகை. நாங்கள் சாட்டில் பேசும் நேரம் அமெரிக்காவில் எல்லோரும் லஞ்ச் முடித்திருப்பார்கள். ரொம்ப நாட்களாகவேத் தெரியும். ஒரு மாதிரியான மந்தமாய் உட்கார்ந்திருந்த அந்த நாளில், நாலு கேபசினோ மற்றும் 2 டாய்லெட் விடுப்புகளில், என் கதையை நானும், அவள் கதையை அவளும் மாய்ந்து மாய்ந்து சொல்லி, ஒருவரை இன்னொருவர் தேற்றலாம் என்று நினைத்து, எல்லாம் கரைந்து கண்ணாடி வழியேப் பார்க்கும்போது தெரியும் சத்தமில்லா வாகனங்கள் மாதிரி நிர்மலமானது மனது. அப்போது தான் முதல்முறையாக கீர்த்தியைக் கவனித்தேன். ம்ம். அழகாய் தான் இருக்கிறாள். இதை எப்படி இவ்வளவு நாள் பார்க்காமல் போனேன்.

3 மணி நேரம் கரைந்ததும், கிளம்பும் போது என்னையும் அறியாமல், பாத்துப் போ கீர்த்தி என்றப் போது, நுங்கம்பாக்கம் சாலைகள் பளீச்சென்று தெரிந்தது.

திரானனா திரானனா திரனா ......

Labels: , , ,


Comments:
இனிமையான நினைவுகளும், நிகழ்வுகளுமோ வாழ்க்கையை முழுமையாக்குகின்றன!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]