Jul 25, 2011

சைவப் பூனை

ஹார்மோன் அவென்யு தொடரின் 4 வது பகுதி. முந்திய பகுதிகள் 1 | 2 | 3

ஐடிபிஐ ஏடிஎம்மில் நண்பன் அனுப்பிய ட்ரான்ஸ்பர் வந்ததா என்று பார்க்கப் போனால் திரை காறித் துப்பியது. பாலன்ஸ் ரூ.47. ஆனால், இது வெறும் ரூ.47 அல்ல, சாய்ப்ரபாவோடு சேராமல் போக வைத்த ரூ.47.

சாய்ப்ரபா சோமசுந்தரம். டெல்லிவாழ் தமிழ் குடும்பம். ஷீரடி பாபா குடும்ப தெய்வம். எல்லார் பெயரிலும் சாய். ஆனால் இதற்கும், ப்ரபா என்னை சாய்ததற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

ப்ரபாவை சந்தித்ததே ஒரு பெரும்கதை. நாங்கள் அன்றைக்கு ஒரு பெருங்கனவில் இருந்தோம். உலகினைப் புரட்டிப் போடக்கூடிய ஒரு மென்பொருளை தயாரிப்பதில் முனைந்திருந்தோம். அவ்வளவு வெறி. அந்த மென்பொருளை ப்ரோக்ராம் செய்யும் மொழி அப்போது இந்தியாவில் குறைவான ஆட்களுக்கே தெரிந்திருந்தது. அந்த மொழி தெரிந்து எனக்கு இணைய போரம்கள் மூலம் மாட்டிய ஒரு ஆள் - ஷோவனா முகர்ஜி.

டெல்லியில் இருந்த ஒரு பெங்காலி.  ஷோவனாவோடு பேச்சுவார்த்தை ஒடிக் கொண்டிருக்கும்போது தான் அவளோடு டெல்லி மெட்ரோவில் கூட ஒரு தமிழ்ப் பெண் பயணிக்கிறாள் என்பதும், அவளுக்கு ஏதோ தோஷத்தினால் கல்யாணமாகவில்லை என்பதும் தெரியவந்தது. டெல்லி மெட்ரோவில் காலை 8.40க்கு ஆரம்பித்து 8.55க்கு முடிந்து விடும் உரையாடல்கள். ரயில் சிநேகம். நீ தமிழ் தானே நீ கொஞ்சம் பேசு என்கிற ரெக்கமண்டேஷன் கொடுத்ததோடு ஷோவனா கல்யாணமாகி, லாஸ் வேகாஸ் கிளம்பிப் போனாள்.

முதலில் எல்லாரையும் போல ஹாய், ஹலோ என்னப் பண்றீங்க. பயோடெக்னாலஜி மாஸ்டர்ஸ். ஏதோ ஒரு இந்திய பார்மா நிறுவனத்தில் ஆராய்ச்சியில் வேலை. பி எச் டி படிக்க வேண்டுமென்கிற ஆசை. செவ்வாய் தோஷம். பேசுவதில் பெரும் தயக்கங்கள் இருந்தது. முதலிரண்டு வாரங்களில் அவள் பேசுவது எதுவுமே கேட்காமல், ஒரு வேளை என் காதில் தான் ஏதோ பிரச்சனையென்று நினைத்தேன். அவ்வளவு ரகசியம். ஏன் கல்யாணமாகவில்லை என்று ஆரம்பித்த பேச்சு, மெதுமெதுவாய் உள்விவரங்களில் நுழைந்தது. ஆசைகள், லட்சியங்கள், ஈடுபாடுகள், பயங்கள் என விரிவடைந்த சமயத்தில், ஒரு பயிலரங்கத்திற்காக ஜெர்மனி போனாள்.

இப்போதைய குஷ்பு உடல்வாகும், பாலுமகேந்திரா நாயகிகளின் நிறத்தோடும் எனக்கு மெயிலில் படம் வந்திறங்கியபோது, ஜெர்மனியில் இருந்தாள். Do you miss me? என்பதாக முதல் குறுஞ்செய்தி வந்திருந்தது. அதன்பின் அன்றைக்கு மட்டும் நாங்கள் குறுஞ்செய்தியில் பரிவர்த்தனை செய்தது, அடுத்த மாத பில்லில் ரூ.500 பழுத்தது. அதன்பின் அது பழகி விட்டது. ஒரு மாதிரி எதுவும் தீர்மானமாய் சொல்லிக் கொள்ளாமல் எல்லாவற்றையும் பேசித் தீர்த்தோம்.

பயம் விலகி, கூச்சங்கள் மறைந்து, உடல் பொது மொழியானது. சென்னையில் எந்த நிறுவனத்தில் வேலை பார்க்கலாம். இரு சாதி வீட்டாரையும் எப்படி சமாளிப்பது. கல்யாணம் செய்து கொண்டால் எந்த ஊரில் ரிசப்ஷன் வைப்பது. குழந்தைக்கு எங்கே ஸ்கூல் சீட் கிடைக்கும். பெட்ரூமில் வாட்டர் பெட் போடலாமா. சாண்ட்ரோ, ஸ்விப்ட், ஸ்பார்க் எந்த கார் வாங்கலாம். ஹனிமூனுக்கு ஐரோப்பா போகலாமா. கேள்விகள். கேள்விகள். கேள்விகள். பதில்கள். அலசல்கள். சீண்டல்கள். சண்டைகள். சமரசங்கள். ஊடல்கள். கூடல்கள். கொஞ்சல்கள். மொபைல் நிறுவனங்களுக்கு அந்த 9 மாதம் அபார லாபம்.

நாங்கள் வழக்கமாய் பேச ஆரம்பிக்கும் போது ஜார்ஜ் புஷ் லஞ்ச் சாப்பிட ஆரம்பித்திருப்பார். முடிக்கும் நேரத்தில் ஆஸ்திரேலியாவில் ‘கெளசல்யா சுப்ரஜா’ என சுப்ரபாதம் ஆரம்பித்திருக்கும். இதற்காகவே நள்ளிரவு பேக் ஒன்று வாங்கி வைத்திருந்தாள். ‘என்ன பண்ற’ என ஆரம்பிக்கும் விகர்ப்பமில்லாத கேள்விக்கு என் பதில் எப்பொழுதும் விஷமத்தனத்தோடு ‘என்ன பண்ணணும்’ என்றே ஆரம்பிக்கும்.

‘என்ன பண்ணுவே’
‘என்ன வேண்ணாலும்’
’அப்டீன்னா’
‘புரிஞ்சு புரியாத மாதிரி நடிக்காத’
‘இல்ல என்ன வேண்ணாலுமா, எங்க வேண்ணாலுமா-னு டவுட்’
‘எங்க வேணும்னு கேக்கறியோ, அங்க என்ன வேண்ணாலும்...........’

அதன்பின் நடக்கும் சம்பாஷனைகளை எழுதி யாராவது ரெக்கார்ட் செய்திருந்தால், இன்று சாரு நிவேதிதாவுக்கு ஆனது மாதிரி பல பிரச்சனைகள் எழுந்திருக்கலாம்.. உரையாடலிலேயே குழந்தைகள் பிறக்கும் சாத்தியங்களிருப்பின், நாங்களிருவரும் ஒரு கிராமத்தினை உருவாக்கியிருப்போம். பாத்ரூம் போகாமல் ஒரு நாளும் போனை வைத்ததில்லை. இப்படியாக அவரவர்கள் பாத்ரூமில் இந்த்ரியங்களை இலவசமாக ப்ளஷ் அவுட் பண்ணிக் கொண்டிருந்த காலத்தில் தான் ‘நான் மெட்ராஸ் வர்றேன். சொந்தக்காரங்க கல்யாணம். நாம பார்த்தே ஆகணும், என்ன பண்றேன்னு சொன்னியோ, அதை பண்ணு மொதல்ல’ என்கிற செய்தி வந்தது. அதில் ‘என்ன பண்றேன்னு சொன்னியோ’ என்பதில் கொஞ்சம் அழுத்தம் இருப்பதாகத் தோன்றியது.

சொன்னதற்கு பின் ஒரு வருடம் போனது. தொடர்புகள் குறைந்தது. திடீரென மெயில் வந்தது. கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. மதுரை. சென்னையில் செட்டிலாகப் போகிறேன் என்றாள். மீண்டும் மொபைல் நிறுவனங்கள் லாபம் பார்க்க ஆரம்பித்தன. இந்த முறை செலவு என்னுடையதில்லை. ஆனாலும் பியான்சி அழைத்து முடித்தபின் எனக்கு அப்டேட் வரும். என்ன பேசினார்கள். என்ன யோசிக்கிறார்கள். ஏன். எதற்கு. தெரியாது. சென்னையில் செட்டிலானாள். பின்னாளில் என்னை துரத்தியடித்த அந்த ரெஸ்டாரெண்டுக்கு டின்னருக்கு அழைத்தேன். கணவன் வெங்கடேஷ். என் அலைவரிசைக்கு ஒத்துப் போனான். உலகப் பொருளாதாரம், கரன்சிகள், ஜக்கி வாசுதேவ், அம்பத்தூர் ரியல் எஸ்டேட், க்ரீன் டீ பேசினோம். ஒரு வார்த்தைக் கூட அவளோடு பேசவில்லை.

போனதும், ஏன் தன்னோடு பேசவேயில்லை என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. அணிந்திருந்த சேலை, அதில் எத்தனை ப்ளீட்டுகள் உட்பட தனிப்பட்ட விஷயங்கள் சொன்னவுடன் வந்த குறுஞ்செய்தி ’ur a criminal. i thot u spoke to him. bloody u noted too many areas' ஹனிமூனுக்கு கொடைக்கானல் போனாள். அங்கிருந்தும் குறுஞ்செய்திகள் இந்த முறை கொஞ்சம் அப்பட்டமாக வந்திருந்தது. கொஞ்சம் சந்தேகங்கள் நிவர்த்தி செய்தேன். கஸ்டமர் சப்போர்ட் சர்வீஸ். இப்போது ப்ளே ஸ்கூலில் ஒரு பையன். சென்னையில் இருக்கும் ஒரு பன்னாட்டு பார்மா நிறுவனத்தில் சீனியர் பொறுப்பில் இருக்கிறாள்.

ரொம்ப நாள் கழித்து ஒரு தேவைக்காக போன் செய்தேன். பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். உள்ளுக்குள் ஒரே குறுகுறுப்பு. கணவன் தொழில் மாற்றிவிட்டான். வடசென்னையிலிருந்து புது சென்னைக்கு குடி மாறியிருக்கிறார்கள். கல்யாணமாகி இன்னும் ஒரு சுற்று பெருத்திருப்பாள். போனில் கேட்டதற்கு ஜிம்மிற்கு போவதாக சொன்னாள். வேறு ஒரு கேள்வி கேட்க நினைத்து, நேரில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போட்டேன்.

நங்கநல்லூரில் நண்பர் ஒருவருக்கு பணம் தரவேண்டி இருந்தது. முடித்து போன் செய்தால், ’ஒரு மாதிரி சங்கடமாகவும் பயமாவும் இருக்கு. உன்னை பார்க்கறதுக்கு அவர்கிட்ட பொய் சொல்லணும். இப்பவே நீ அனுப்பற எல்லா எஸ்மெஸ்ஸையும், கால் ஹிஸ்டரியும் அவர் கண்ணுல படாம அழிக்கிறேன். நாம பார்க்க வேண்டாம்.விட்டுரு’ என்றாள். எக்கச்சக்க கோவம். ”நான் எவ்வளவு பெரிய புண்ணியாத்மா, நான் அந்த மாதிரி ஆள் இல்லை, உடல் என்பதை கடந்து பல காத தூரம் போய்விட்டேன், என்னை சீப்பாக நினைக்காதே.” என்று முழ நீளத்துக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு வீடு திரும்பினேன். அத்தோடு முடிந்தது.

Btw, அன்றைக்கு நாங்கள் சென்னையில் சந்தித்தோம். நுங்கம்பாக்கம் இந்தியன் ஆயிலுக்கு பின்னாடி சென்னைவாழ் மக்களுக்கு தெரியாத ஒரு குட்டி ஹோட்டல் இருந்தது. அங்கே தான் ரூம் புக் செய்யலாம் என்று நண்பனிடத்தில் சொல்லியிருந்தேன். கீர்த்தியைப் பின்னாளில் பார்த்த அதே நுங்கம்பாக்கம் பாரிஸ்தா. வந்தாள். முகம் பார்த்து பேச கொஞ்சம் தயக்கங்கள் இருந்தன. ட்ராபிக். சென்னை வெயில். மேற்படிப்பு என்று உப்பு பெறாத விஷயங்களை பேசினோம்.

கேட்டாள். கல்யாணத்துக்கு முன்னால் எதுவும் வேண்டாம் என்றேன். ஒரு நிமிஷம் என் கண்களை உற்றுப் பார்த்தாள். ”நிஜமா சொல்றீயா. Are you sure” என்றாள். ’ஆமா. நான் ஸ்ட்ராங்கா இருக்கேன், வேண்டாம்’ என்றேன். ஒரு ஜிஞ்சர் ஹனி டீ குடித்து விட்டு கிளம்பினாள். போகும்போது கை கொடுத்தாள். தேவையில்லாத அழுத்தம் இருந்தது. கடைசியாய் பார்த்த பார்வையில் ஏமாற்றமும், கோவமும் இருந்தது.

சொல்லாமல் மறைத்தது, நண்பன் சொதப்பி விட்டான். ரூம் போடவில்லை. எந்த அபார்ட்மெண்ட் சாவியும் அன்றைக்கு  என்னிடத்தில் இல்லை. என் கிரெடிட் கார்ட் நிறைந்து விட்டது. கையில் காசில்லை. பாரிஸ்தாவில் ஜிஞ்சர் ஹனி டீ ரூ.53, இருந்த நூறு ரூபாயில் மிச்சமிருந்தது ரூ.47.

Labels: , , , , ,


Jul 18, 2011

Lets Play. Match On!

நந்தம்பாக்கம் கால்பந்து மைதானத்தில் ஒரு கிரிக்கெட் வரலாறு நிகழ்வு நடந்தேறியது பற்றிய எவ்விதமான செய்தியோ, துணுக்கோ போடாத தமிழ் நாளிதழ்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் சிபிஐ ரெய்டில் மாட்டி அல்லாடுவார்கள் என்கிற சாபத்தோடு மேலேப் படியுங்கள்.

நாங்கள் CTCC என்றொரு கிரிக்கெட் அணியினை உருவாக்கி, அதன் அருமை பெருமைகளை அவ்வப்போது டிவிட்டரில் போட்டு, டிவிட்டரின் ட்ராபிக்கையும், கூடவே எங்களின் ட்ராபிக்கையும் ஏற்றிக் கொள்வது ஊரறிந்த ரகசியம். அந்த ’நாங்கள்’ ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மழையோ, வெயிலோ நந்தம்பாக்கம் இராணுவ மைதானத்தில் ஆஜராகி ஆட ஆரம்பித்து விடுவோம். எங்களுக்கும் மைதானங்களும் ராசியே இல்லை. நாங்கள் முதலில் ஆடிய மைதானத்தினை ராணுவம் கம்பிப் போட்டு தடுத்தது. அது மத்திய அரசின் சதி. அங்கிருந்து உள்ளேப் போய் ஆடிய இன்னொரு மைதானத்தை சுற்றிலும் அதிமுக கொடிகள்; ’ஆடுகளம்’ அயுப் நினைவு கோப்பை மாதிரி ஏதோ ஒரு த்ரோ டோர்னமெண்ட் வழக்கமாய் ஆடும் பிட்ச்-ற்கு பக்கத்தில் ஆடிக் கொண்டிருந்தார்கள். மாநில அரசின் சதி. எங்களை ஆடவிடாமல் தடுக்க எவ்விதமான முயற்சிகளை மேற்கொண்டாலும், நாங்கள் ஏதாவது வழி கண்டறிந்து ஆடுவது வழக்கம்.

வழமை மாறாமல், நாங்கள் ஆடும் மைதானத்துக்கு பின்னால் இருந்த ஒரு கால்பந்து மைதானத்தினை தேர்ந்தெடுத்து, முன்னாடியே போய் ஸ்டம்ப் அடித்தோம். 11 பேர்கள் வந்திருந்தார்கள். வழக்கம்போல இரண்டு அணியாய் பிரித்து, சாமி ஒரு அணியினையும் (நான் அந்த அணி) கார்க்கி இன்னொரு அணியையும் தலைமேயேற்க ஆட ஆரம்பித்தோம். ஒன்றும் பெரியதாய் சொல்லிக் கொள்வது போல இல்லை. நாங்கள் இரண்டாவதாய் ஆடி, சேஸ் செய்து இரண்டு பந்துகள் மிச்சம் வைத்து வென்றோம். அது ஒரு சாதாரண 6 ஒவர் மேட்ச். இன்றைக்கும் அதே மாதிரி ஆறாறு ஒவராய் ஆட வேண்டியது தான் என்று எண்ணிய நேரத்தில் தான் அது நடந்தது.

அந்த அது - பக்கத்தில் ஸ்டம்ப் அடித்த ஒரு அணி, மேட்ச் போட்டுக்கலாமா என்று கேட்டார்கள். எனக்கு வயிற்றில் குபிரென ‘ஒரம் போ’ வில் ஆர்யா கையேந்திப் பவனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இன்னொரு ட்ரைவர் வந்து ‘ரேஸ் விடலாமா’ என்று வம்புக்கு இழுப்பது போலவே இருந்தது. முதலில் பேச்சுவார்த்தைக்கு களம் பல கண்ட கார்க்கிப் போனார். போய் திரும்பி வந்து 12-12 ஒவர்கள் இரண்டு மேட்ச் ஆடலாமா என்று கேட்கிறார்கள் என்று திரும்பி வந்தார். இரண்டு 24 ஒவர்கள் சிரமம் என்று திரும்பவும் தூது அனுப்பினோம். இறுதியில் ஒரு மேட்ச் 14-14 ஒவர்கள் என்று முடிவானது. இந்த மேட்ச் போடுவதற்கு முன்னால் விதிகள் தெளிவாக கண்டறியப்பட்டன. வைடு, நோ பால்களுக்கு ரன்கள் இல்லை. ஒவர் த்ரோ உண்டு. பைஸ் உண்டு. எல்.பி.டபிள்யு கிடையாது. இரண்டு பவுலர்கள் மட்டும் 4 ஒவர்கள் போடலாம். எல்லைக் கோடு நிர்ணயிக்கும் பணியினை கார்க்கி சிரமேற்கொண்டு செய்தார். ரூ.25 பெட் மேட்ச். டிவிட்டர் வரலாற்றிலேயே அரை அமெரிக்க டாலருக்கும் குறைவானத் தொகையில், பொன்னேட்டில் பொறிக்கப் பட வேண்டிய ஒரு வேலையினை எங்களையும் அறியாமல் நாங்கள் செய்ய தொடங்கியிருந்தோம்.

ஒரு வரலாறு எவரும் அறியாமல் உருவாகிக் கொண்டிருப்பது தெரியாமல் எல்லாரும் அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். உலகம் காலை ஹிந்துவிலும், காபியிலும் முழுகிக் கொண்டிருந்தது. ஒபாமா படுக்கப் போய்விட்டார். ரெய்னா சோமர்செட்க்கு எதிரில் ட்ரா பண்ணிய திருப்தியில் உறங்கிக் கொண்டிருந்தார்.

டாஸ் ஜெயித்து பேட்டிங் எடுத்தோம். ஸ்மிதேஷும் அக்‌ஷய்யும் இறங்கினார்கள் ஸ்மிதேஷ் இடது கை சேவாகாய் மாறி முதல் 7 ஒவர்களில் பின்னி பெடலெடுத்தார்.அவர் நண்பர் தான் முதல் விக்கெட். அடுத்து ஸ்மிதேஷ் வெளியேறும் போது 46/2 ஒன் டவுனில் பிரிட்டோவும், இரண்டாவது டவுனில் நானும் இறங்கினேன். நான் இறங்கிய ராசி, ரன்னர் முனையில் நின்றுக் கொண்டிருந்த பிரிட்டோ ஒரு பைஸ்-க்கு அவசரப்பட்டு ரன் - அவுட் ஆனார். அடுத்த ஒவரின் முதல் பந்து இஷாந்த் சர்மா, ரிக்கி பாண்டிங்கிற்கு போடுவது மாதிரியான என் காலுக்கும் பேட்டுக்கும் இடையில் புகுந்து நடு ஸ்டம்பினை சிதறடித்தது. பெவிலியனுக்கு (பெவிலியன் என்பது கீப்பருக்கு பின்னிருக்கும் கொஞ்சுண்டு புல் தரை) ஒரு ரன்னோடு திரும்பினேன். பிரிட்டோவிற்கு அடுத்து இறங்கிய ரிஷி, எனக்கடுத்து இறங்கிய சுவாமி கொஞ்சம் தடுப்பாட்டமாடினார்கள். சுவாமி ரன் -அவுட். ரிஷிக்கு ஸ்டம்புகள் உடைந்தா என்று நினைவில்லை. பின், கார்க்கி, சேகர், ஹரிஷ் என இறங்கி விக்கெட்டை கொடுத்து வீணாய் பெவிலியனுக்கு திரும்ப இறுதி இரண்டு ஒவர்கள் வேதாளம் (அர்ஜுன்) & அதிஷா.

இறுதியில் தன்முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதியன் வேதாளம் தன்னுடைய பங்காக அடித்து ஸ்கோரினை 85ஆக முடித்தார். அதிஷா இன்னொருமுறை தான் பேட்டிங்கில் ஒரு மெக்ராத் என்று நிரூபித்து ஸ்டம்புடு ஆகி வெளியேறினார். எண்ணிக்கை 85. நான் பெவிலியனில் இருக்கும்போதே 80+ என்பது பவுலிங்கில் தடுக்கக்கூடிய ஒரு ஸ்கோர் என்று சொல்லியிருந்தேன். 14 ஒவர்களில் 86 அடித்தால் எதிரணி வெற்றி.

நந்தம்பாக்கம் இராணுவ மைதானத்தின் வரலாற்றிலேயே எங்கள் அணி தான் முதன் முதலில் huddle செய்து டீம் ஸ்ட்ராடஜி செய்தார்கள் என்பதை பெருமிதத்துடன் சொல்லிக் கொள்வதோடு , அந்த huddle-ஐ நாட்டுக்கு சேவை செய்யாமல் ஒசியில் ரம்மடித்து மிலிட்டரி ஸ்கூலில் வரும் ஆண்டிகளோடு மொக்கை போடும் ஜவான்களுக்கு அர்ப்பணிக்கிறோம். ஸ்மிதேஷ், அதிஷா முதல் ஸ்பெல். அக்‌ஷய், சேகர் இரண்டாவது ஸ்பெல் என்று முடிவானது.

முதல் ஒவர் ஸ்மிதேஷ். அற்புதமாக போட்டார். 5 ரன்கள். இரண்டாவது ஒவர் அதிஷா 7 ரன்கள் கொடுத்து, 12 ரன்கள். இதில் ரிஷி கவர்ஸ்-ஸில் இருந்த அடித்த அற்புதமான த்ரோவில், நான் அடித்த ரன் - அவுட் தரப்படவில்லை. UDRS மட்டும் நிறுவப் பட்டிருந்தால் இரண்டாம் ஒவரிலேயே விக்கெட்டைப் பறித்திருப்போம்.

மூன்றாவது ஒவர் ஸ்மிதேஷ். முதல் விக்கெட் ஸ்மிதேஷின் காட் & பவுல்ட். இரண்டாவது வந்த கேட்சினை விட்டாலும், கார்க்கியின் த்ரோ என் கையில் வந்து, மூன்று ஸ்டம்புகளையும் வீழ்ந்த்தியதில் போனது. அக்‌ஷய் தான் pick of our bowlers. 3 விக்கெட்டுகள். அதிலொன்று நான் கேட்ச் பின்னால் நின்று கேட்ச் பிடித்தது.  ரன்னும், விக்கெட்டும் தொடர்ச்சியாய் வந்தும் வீழ்ந்தும் கொண்டிருந்தது.

இறுதியில் 4 ஒவர்கள். அவர்களிடத்தில் 4 விக்கெட்கள். 29 ரன்கள் அடிக்க வேண்டும். சேகர் போட்ட 11வது ஒவரில் 2 நான்குகள், 2 ஒரு ரன்கள். 3 ஒவர்கள் 19 ரன்கள் அடித்தால் வெற்றி.

நான், அதிஷா, ஸ்மிதேஷ், ஸ்வாமி என கூடிய கூட்டம் உயர் பொதுமட்டக் குழுவானது. நீண்ட நேர விவாதத்துக்கு பிறகு ஸ்மிதேஷ் 12 மற்றும் 14 ஒவரையும் ஸ்மிதேஷின் நண்பர் 13 ஒவரையும் போடலாம் என உயர் பொதுமட்டக்குழு முடிவெடுத்தது. பொதுக்குழுவில் முடிவெடுத்து நாசமாய் போன அரசியல் கட்சிகளின் வரலாறு தெரிந்தாலும், எங்களுக்கு அந்த நிமிடத்தில் தோன்றவேயில்லை.

முதல் பந்து 4. இரண்டாம் வந்து லாங் ஆப்பில் 6. 3 ஒவர்களில் 19 என்பது இரண்டு ஒவர்கள், நான்கு பந்துகளில் இப்போது வெறும் 9 ரன்கள். ஸ்மிதேஷுக்கு கால் பிடிப்பு  என்று அமர்ந்து விட்டார். அடுத்த 4 பந்துகளில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கார்க்கி அணிக்காக தன்னுடைய சொத்தில் ரூ.25 யை இழந்தார். அடுத்த 20 வருடங்களில் அந்த ரூ.25 நல்ல பரஸ்பரநிதியில் போட்டிருந்தால் வந்திருக்கக்கூடிய சில,பல்லாயிரங்கள் இதனால் போனது என்பது வருத்தமே.

ஆட்டத்தினைத் தோற்றாலும், ஒரு அணியாய் ஆடியதில் எக்கச்சக்க ஆச்சர்யங்கள். வழமையாய் வைடுகளை வாரி வழங்கி, எவ்விதமான கட்டுப்பாடுகளுமின்றி வரும் த்ரோக்கள் ஒவர் த்ரோவிற்கு ரன் உண்டு என்று தெரிந்தவுடன் ஒரே ஒரு முறை மட்டுமே ஒவர் த்ரோவில் ரன் கொடுத்தோம். அதிஷாவின் ஒரு ஒவர் தவிர எல்லாரும் பெரும்பாலும் வைடுகள் குறைத்தேப் போட்டார்கள். முதல்முறையாய் ஆடியவர்களின் கண்ணில் கொஞ்சமாய் வெறியும், நிறைய ஆர்வமும் தெரிந்தது. த்ரோ அடிக்கும்போது பேக்-அப் இருந்தது ஆச்சர்யம். ஒரு சில லாங் ஆன், லாங் ஆப் பீல்டிங் சொதப்பல்கள் தவிர பீல்டிங் கனக்கச்சிதம்.

ஸ்மிதேஷின் ஒபனிங் ஆட்டம், ஸ்மிதேஷ் நண்பரின் பவுலிங், கார்க்கியின் த்ரோ, வேதாளத்தின் தேர்டு மென் பீல்டிங் என நீளும் சந்தோஷங்களில், நான் விட்ட லோ கேட்ச், மேட்சினை மாற்றியிருக்ககூடிய அதிஷாவின் பந்தில் ஹரிஷ் விட்ட கேட்ச், டீப் கவர் பாயிண்டில் ஆள் இல்லாமல் விட்ட இரண்டொரு வாய்ப்புகள் என சொதப்பல்களும் அடக்கம்.
இன்னும் திருத்திக் கொள்ளவேண்டிய விஷயங்கள் ஏராளமாய் இருக்கிறது. ஆனாலும், ஒரணியாய் சடாலென மேட்ச் போட்டு ஆடியபோது இருந்த ஒருங்கிணைப்பு அபாரம்.

தனிப்பட்ட ரீதியில், என்னுடைய கீப்பிங் திறமை இன்னும் வழக்கொழியவில்லை என்பது ஆறுதல். ஸ்மிதேஷ் போட்ட முதல் ஒவரில் ஒவர் பவுன்ஸ் ஆன ஒரு பந்தினை, கால்பந்து கோல்கீப்பர் மாதிர் டாப் ஹிட்ச் அடித்து எடுத்தது, உடல் இன்னும் நியுரான்களின் பேச்சினைக் கேட்கிறது என்பதற்கு சாட்சி.

Man of the Match: சந்தேகமில்லாமல் முரளி (@JMR_CHN). முரளி தான் எங்கள் அணியின் மேனேஜர், CFOமுரளி வரும்போது தான் நாங்கள் மேட்ச் பிக்ஸ் செய்து முடித்திருந்தோம். சரியாக 11 பேர்கள் வேறு அணியில் இருந்தோம். ஆனால் எவ்விதமான ஈகோ தூக்கல்களும் இல்லாமல், மேட்ச் ஆரம்பித்ததிலிருந்து, முடியும் வரை கூடவே இருந்த உணர்வுக்கான ஒரே நன்றிக்கடன் அடுத்து ஆடும் மேட்சினை வென்று முரளியினிடத்தில் ரூ.25 கொடுப்பது தான். தான் ஆடாவிட்டாலும், சரியாக லெமன், மோர், ரோஸ்மில்க் வாங்கிக் கொடுத்த அவரின் கடமையுணர்வு, விஜயகாந்த் நாட்டினை பாகிஸ்தானிய தீவிரவாதிகளிடமிருந்து காப்பதை விட முக்கியமானது.  -

மிஸ் பண்ணியது: லக்கி, ஜவஹர், விக்கி, ராஜேஷ் பத்மநாபன், லலிதா ராம், மணிகண்டன்

இதன்மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் (முக்கியமாய் பெங்களூரில் சென்னைப் போலவே கிரிக்கெட் ஆடும் சக ஹிருதயர்களுக்கு) we are match ready now. உங்கள் கார்ப்பரேட் அலுவலக டீமோடு மேட்ச் போட்டுக் கொள்ளலாமா என்று சொல்லுங்கள். இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும், நாங்களே கார் எடுத்துக் கொண்டு வந்து ஆடிவிட்டுப் போவோம். ஆனால் எங்களுடைய பெட் அதிகமாக இருக்கக் கூடும். :)

Labels: , , ,


Jul 15, 2011

One spoiler is good for life

மூன்று வருடங்களுக்கு முன் "சர்வ மங்கள மாங்கல்யே ஷிவேஏஏஏஏஏஏ சர்வார்த்தா ஸ்வாதிகே” என்று போஸ்னிய பாடகி அல்மா பெர்ரொவிக் பாட தலை நிற்காத பிறந்த குழந்தைப்போல தலையாட கேட்டுக் கொண்டிருந்தப் போது தான் அரட்டைப் பெட்டியில் மோகன் வந்து அந்த குட்டி புத்தாவினை இறக்கினான் - “விது டிவோர்ஸ் பண்ணிட்டு சென்னைக்கு வந்துட்டா”

விது. வித்தார்தினி. இந்தப் பெயரை நீங்கள் எங்குமே கேட்டிருக்க மாட்டீர்கள். ஆண் குழந்தை பிறந்தால் சித்தார்த்தா என்கிற புத்தரின் பெயரை தான் வைப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்றிருந்த விதுவின் அப்பாவிடம் நர்ஸ் காட்டிய குழந்தைக்கு ஆண்குறி இல்லை. அதனால் சித்தார்த்தா, வித்தார்தினியாய், பெயரில் பெண் வேடம் பூண்டார்.

விது அண்ணா ஆதர்ஷில் பி.எஸ்.சி கணிதம் படித்தாள். நான் வைணவக் கல்லூரியில் பொருளாதாரம். என்னோடு வெவ்வேறு துறையாய் இருந்தாலும் படித்தவர்களில் இருவர் முக்கியம். ராஜீவ். விஷ்வா. ராஜீவ் பி.காம். விஷ்வா பி.ஏ - கார்ப்பரேட் செகரட்டரிஷிப். இப்போதைக்கு இவ்வளவு போதும்.

விதுவின் அப்பாவுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். அந்த கால பி.ஏ. ஹானர்ஸ். அவருடைய மொத்த உறவுகளிலேயே நான் மட்டுமே ஆடம் ஸ்மித்தின் வெல்த் ஆப் நேஷன்ஸில் வரும் இன்விசிபிள் ஹாண்ட் தியரியை விளக்குமாறு கேட்டவன். அதனாலேயே பிரியமதிகம். எப்போதாவது அவர் வீட்டுக்குப் போனால், அந்த பிரியம் தட்டு காலியானால் வந்து விழும் மூன்றாவது ரவுண்ட் தோசையில் தெரியும்.

விது காதலித்தது ராஜீவை. ராஜீவ் ஒரு மல்லு. சேட்டன். என்.சி.சியில் இருந்ததால் ஆள் ஆறடியில் புஜபல பராக்கிரமத்தோடு, இளமைக் கால கயாமத் சே கயாமத் தக் அமீர்கான் மாதிரி இருப்பான். எவ்வளவு புகைத்தாலும் கறுக்காத உதடுகள். விதுவும் ராஜீவும் காண்டீனில் இருந்தால் எங்களுக்கு எல்லாம் அன்றைக்கு ஜாக்பாட். பையன் காதல் மயக்கத்தில் எதைக் கேட்டாலும் வாங்கித் தருவான். பாக்கெட் மணியாக ஐந்து ரூபாய் கிடைத்தால் பெரிய விஷயமாய் இருந்த காலமது. கேண்டீன் தாத்தாவுக்கு அவர்கள் இருவரும் வந்து உட்கார்ந்தால் ஒரு 100-150க்கு வியாபாரம் நடக்குமென்கிற தெம்பு வந்துவிடும்.

விது இருந்தது புரசைவாக்கத்தில். கங்காதீஸ்வரர் கோவில் பஸ் ஸ்டாப்பில் ஏறுவாள். விஷ்வாவுக்கு வீடு சூளையில். எனக்கு மின்ட். முதலாமாண்டின் இறுதிவரை பாடாவதி 14ஏ அல்லது 59 ஏறி ஊர் உலகம் சுற்றி அரும்பாக்கம் போவது தான் என் ரூட். போகிற வழியில் விஷ்வாவும், விதுவும் ஏறுவார்கள். விதுவின் புன்னகை. விஷ்வாவின் ‘சரிதா எங்கே’ என்னும் விசாரிப்போடே ஒரு வருடம் போனது. சரிதா ஜுனியர் ஆர்டிஸ்ட் செய்யும் தோழி வேலையை சரியாக செய்வாள். நானும் விதுவும் பஸ்ஸில் வரும்போதோ, பார்க்கும்போதோ, தனியாய் இருக்கும்போதோ காதல் பற்றி எதுவும் பேச மாட்டோம்.

விஷ்வாவுக்கு விதுவையும், எனக்கு சரிதாவையும் பிடிக்கவே பிடிக்காது. விஷ்வா எப்போதும் தனியாய் என்னிடத்தில் ’சரியான அட்டு பிகர் மச்சி. ராஜீவ் என்னத்த பார்த்தான். சரிதா பாரு. நல்ல கேரள திமிரு. எப்படியாவது ஒரு நாள் இவள தூக்கணும்’ என்று புலம்பியிருக்கிறான். இரண்டாம் ஆண்டின் ஆரம்பத்தில் வைணவக் கல்லூரியில் ஸ்ட்ரெய்க் வந்தது. வடசென்னை மாணவர்களாகிய நாங்கள் தான் வைணவக் கல்லூரியின் முதல் ஸ்ட்ரெயிக்கிற்கு காரண கர்த்தார்க்கள். ஏதோ பிரச்சனை. ரோஷம் பொத்துக் கொண்டு கோஷம் போட்டோம். வெறும் 30 நிமிடங்கள். டி.சி தருவேன் என்றவுடன் ரோஷம் மலையேறி, கோஷம் செத்தது. கிடைத்த கேப்பில் சரக்கடிக்கப் போனோம்.

சரக்கடிக்கப் போன அரும்பாக்கம் அய்யனார் ஒயின்ஸில் விஷ்வா விதுவைப் பற்றி ஏதோ பேச, ராஜீவிற்கு கோவம் வந்த கலாட்டாவில் அதன்பின் இருவரும் பேசிக் கொள்வதேயில்லை. கைகலப்பில் முடியவேண்டியது, இரண்டு பேருமே போதையில் இருந்ததால் நண்பர்களால் திசைக்கொன்றாய் பேக் செய்யப்பட்டார்கள்.

இந்த விஷயம் எப்படியோ விதுவுக்கு போனது. விதுவின் கோவம், நான் விஷ்வாவோடு சுற்றியது. ராஜீவிற்கு ஆதரவளிக்காமல் இருந்தது. அந்த அய்யனார் ஒயின்ஸ் தகராறுக்கு பிறகு, விஷ்வாவும் ராஜீவும் ஒரு மாதிரி ஒருவரை ஒருவர் தவிர்த்து, பின் பச்சையப்பன் கல்லூரியோடு நடந்த தகராற்றில் ஒன்று சேர்ந்தார்கள். இது நடந்த ஒரு வாரத்தில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் பஸ் ஸ்டாண்டில் Dont spoil my life idiots. Get the hell out of my sight என்று விது எங்கள் இருவரையும் பார்த்து சொன்னதோடு 14 ஏ முடிவுக்கு வந்தது. என்னுடைய பஸ் ரூட் மாறி, பாரிமுனைக்கு வந்து 15 ஆர் பிடித்து மொத்த வடசென்னை கும்பலோடு ஐக்கியமாகி, கானா பாடி, கல்லூரி போனதில் மிச்சமிருந்த ஒன்றரையாண்டுகள் ஒடிப் போனது.

நடுவில் விஷ்வாவும் நானும் கொஞ்ச நாள் சரிதாவின் பின்னால் போனோம். சரிதா சரியான மலையாளச் சேச்சி. வீட்டில் ஏதாவது ஒரு சேட்டனைப் பார்த்து வைத்திருப்பார்கள் போல. தலைகுனி்ந்தே வந்தாள். போனாள். மூன்றாண்டு முடிந்தப் போது, ஏதோ கண்ணீர் விட்டாள் என்று நாங்களிருவருமே கற்பனை செய்து கொண்டோம். விஷ்வா என்னை விட தீவிரமாய் இருந்தான். நான் அப்போது வேறொரு காதலில் தீவிரமாய் இருந்ததால், சரிதா பற்றி எவ்விதமான சிந்தனையும் இல்லை. முக்கியமாய், விஷ்வாவோடு சுற்றியதற்கு காரணம், விஷ்வாவின் யமஹா RX 100.

பேர்வெல்லின் போது மட்டும், ராஜீவோடு ஒரு முறை விதுவை பார்க்கப் போயிருந்தேன். அவள் பார்த்த பார்வையில் இருந்த வன்மமும், கோவமும் ‘எதுக்கு இவனை கூட்டிட்டு வந்தே’ என்கிற அளவில் இருந்தது. கல்லூரி முடிந்ததும், விது-ராஜீவ் காதல் வழக்கமான காதல் போல குடும்ப பிரச்சனைகளால் காணாமல் போனது.

பக்கத்து வீட்டிலிருந்து பேராசிரியர் பன்னீர்செல்வம் [இப்போது அவர் முனைவர். பன்னீர் செல்வம்] மூலம் விது அப்பா எனக்கு சொல்லியனுப்பியிருந்தார். போனால், விதுவை காணோம்.

“வாடா, விதுவை மச்சினன் பெங்களூர் கூட்டிண்டு போயிருக்கான். ஏதோ கம்யூட்டராம். படிச்சா அவன் வேலை பார்க்கற கம்பெனில சேர்த்துப்பாளாம், ஏதோ அமெரிக்கான்னு சொல்றா. எனக்கு ஒண்ணும் புரியலை. நீங்க அனுப்புங்கோ நான் பார்த்துக்கறேன்னு மச்சினன் சொன்னான், அனுப்பிட்டேன், எல்லாம் பகவான் படியளக்கணும். இது எதையோ உளறிண்டே போச்சு. காலாகாலத்துல ஒரு கால்கட்டு போட்டா, என் கடமை முடிஞ்சதுனு மந்த்ராலயம் போயிட்டு வரணும்” என்றார்.

ஏதோ நடந்திருக்கிறது ஆளை பார்சல் செய்து மாமா தன்னுடைய அப்பனின் கடமையை நிறைவேற்றிவிட்டார் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. நான் பேசுவதற்கு வாய்ப்பே இல்லாமல், அவர் பேசுவதை மட்டுமே கேட்டுவிட்டு, ஆமா மாமா நீங்க சொல்றது கரெக்ட் என்று சொன்னப் போதுதான் எதுவுமே வீட்டில் தரவில்லை என்று உறைத்தது. அத்தோடு முடிந்தது.

விது பெங்களூர் போனதை சொன்னதும், ராஜீவ் தாடி வளர்த்தான். என் சாதி பெயர் சொல்லித் திட்டினான். இருந்தாலும் டீ வாங்கிக் கொடுத்தான். ஐடிசிக்கு வருமானத்தினை ஏற்றினான். போதையேறிய ஒரு நாள் இரவு 11 மணி வரை, கல்லூரி எதிரே இருந்த டீக்கடையில் புலம்பி விட்டு ஜீன்ஸில் வாந்தியெடுத்தான். விஷ்வாவின் யமஹாவில் டிரிப்ள்ஸ் அடித்து அண்ணாநகரில் வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்த போது, நான் சாகப் போறேன் என்றான். அடுத்த ஆறு மாதங்களில் க்ளீன் ஷேவ் அடித்து, டேராடூன் இந்திய மிலிட்டரி அகாதமியில் சேர்ந்தான்.

இரண்டு வருடங்களில் விதுவின் வீட்டிலிருந்து மூலையில் மஞ்சள் தடவி, உபயகுசலோபரி இப்பவும் நாளது ______ வருஷம் என ஆரம்பித்து பத்திரிகை வந்தது. ராஜீவினை ஏமாற்றிய கோவத்தில் போகவில்லை. இதில் ராஜீவும் அந்நேரத்தில் எங்களை தலை முழுகியிருந்தான். ஒசியில் கிடைக்கும் என்று நினைத்திருந்த மிலிட்டரி சரக்கும் வராத ஆத்திரத்தில், பத்திரிக்கையை கிழித்துப் போட்டு, பானாசோனிக் பாக்ஸ் மெஷின் விற்றுக் கொண்டிருந்தேன். விஷ்வா ஆர்பிஜி செல்லூலாரில் சேர்ந்து, அவ்வப்போது பேசுவான். பேச்சு சரிதா, விதுவிலிருந்து விலகி, மச்சி இரண்டு கனெக்‌ஷன் கொடேன், டார்கெட் முடிக்கணும் என்ற நிலைக்கு வரும்போது, போன்கால்கள் குறைந்தன.

வருடங்களோட, விது, விஷ்வா, ராஜீவ் எல்லாம் பெயரளவில் மட்டுமே நினைவிலிருந்தார்கள். ராஜீவ் இப்போது மேஜராகவோ, உப மேஜராகவோ ஏதோ வாயில் நுழையாத வடகிழக்கு மாநிலத்தில் மிலிட்டரி ரம்மும், ராஜஸ்தானி மனைவியுமாக இருக்கிறான் என்று கேள்வி. விஷ்வாவோடு 2003 வரைக்கும் தொடர்பிருந்தது. மோகன் இறக்கிய குண்டு ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் அதிர்வோடு இருந்தது. பத்தாவது நிமிடத்தில் பார்கலேஸ் வங்கியின் EMI கட்டாத போன் காலில் விது காணாமல் போய், வெட்கமின்றி பொய் சொன்னேன்.

நிற்க. மூன்று மாதங்களுக்கு முன் என் நெருங்கிய கல்லூரித் தோழன் செல்வா திடீரென செத்துப் போனான். இறுதி ஊர்வலத்தில், பேசிய போது தான், எல்லாரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைத்தோம். லிங்க்டின், பேஸ்புக் என தேடியதில், பேஸ்புக்கில் கிடைத்தான் - விஷ்வா.

இடம்: பஹ்ரைன்
வேலை: மேனேஜர் - டவர் மேனேஜ்மெண்ட், ஸெயின் பஹ்ரைன்
கல்யாணம்: ஆகிவிட்டது
குழந்தைகள்: 2
பொழுதுபோக்கு: படிப்பது, கிரிக்கெட், பாட்மிட்டன்
போட்டோ ஆல்பம் போய் பார்த்தால், விஷ்வா, ஒரு கைக்குழந்தையுடன் விது. கூடவே ஒரு பையன் முறைப்பாய்.

Mrs.Vidhu, one spoiler is good enough for your life!

Labels: , , , ,


Jul 12, 2011

ரோக் alias Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ்

அஸெண்டாஸ் பேஸ்-2 வின் லிப்ட் திறக்கும்போது புயலடிக்குமென்பது சத்தியமாய் தரைத் தளத்தில் லிப்டுக்காக காத்திருந்தப் போது தெரியாது.

எவனோ ஒரு அவுட்சோர்சிங் நிறுவனம். எதோ ஒரு ப்ராஜக்ட் மேனேஜர். மொபைல் இண்டர்பேஸ் டிசைனில் குழப்பம். உள்ளே இருக்கும் ஆட்கள் ஜல்லியடிக்கிறார்கள். அவர்களுக்கு குண்டியடிக்கவும், மானேஜர் அன்னிய வாடிக்கையாளனிடம் மரியாதையை காபாற்றிக் கொள்ளவும் ஒரு வெளியாள் வேண்டும். அந்த வெளியாள் நான். பணியாளை செய்ய சொன்னால், லீவு போடுவான். காரணம் சொல்லுவான். ப்ராஜெக்ட் மாற்று என்று அடம்பிடிப்பான். எச்.ஆரை மிரட்டுவான்.

வெளியாள் ஒரு அவுட்சோர்ஸ் பண்ணப்பட்ட அடிமை. எதை வேண்டுமானாலும் நிறைவேற்றுமாறு கேட்கலாம். கொடுக்கவேண்டிய பணத்தினை இழுத்தடிக்கலாம். அக்கவுண்ட்ஸில் ஆள் இல்லை என்று சாக்கு சொல்லலாம். விபி-பைனான்ஸ் ஊருக்கு போய்விட்டார். கையெழுத்து வாங்க முடியவில்லை, பொறு என்று இழுக்கலாம். முக்கியமாய் வெளியாளை நடு இரவு 12.00 மணிக்கு அழைத்து முடிந்ததா என்று கேட்கலாம். பணியாளனைக் கேட்க முடியாது. சரி இதெல்லாம் professional hazards. நாம் மேட்டருக்கு வருவோம்.

2 பெட்ரூம் ப்ளாட்டின் ஒரு பெட்ரூம் அளவிற்கு ஒரு லிப்ட். சுற்றிலும் அலுமினியம் மினுத்தது. 12வது பட்டனை அழுத்தி விட்டு, கூடவந்தவர்களை பராக்கு பார்க்க ஆரம்பித்தேன். திரும்பிய பக்கமெல்லாம் நீலம். எவனொருவன் அடர்நீல, வெளிர் நீல சட்டையை அலுவலகப் பயன்பாட்டுக்காக கண்டுபிடித்தானோ, அவனுக்கு கும்பி பாகம் தான். பத்தாவது மாடியிலேயே எல்லோரும் இறங்கி விட்டார்கள். தனியனாய் 12வது மாடி திறந்த போது தன்யானானேன். எதிரே ரோகிணி.

ரோகிணி.

நெருங்கிய வட்டாரங்களில் ரோக் (Rogue). ஐந்து வாக்கியங்கள் பேசினால், மூன்று இடங்களில் மயிரு என்கிற வார்த்தை அதில் இல்லாமலிருக்காது. விளம்பர வட்டத்தில் அவளை Hairy Rogue என்று இரட்டை அர்த்தத்தில் அழைப்பதைப் பொருட்படுத்த மாட்டாள். கேட்டால் வரும் பதில் அதை விட கொச்சையாக இருக்கும்.

ரோக்கும் நானும் பழக ஆரம்பித்ததே ஒரு பெருங்கதை. அப்போது அவள் ஆர் கே சாமி பிபிடிஒ என்கிற விளம்பர ஏஜென்சியில் இருந்தாள். அது ஒரு பெரிய ஏஜென்சி. பெரிய உருவாக்கங்கள் எல்லாம் வராது. ஆனால் வாடிக்கையாளர்கள் எல்லாம் பெரு முதலாளிகள். அதனால் வண்டி ஒடியது. ப்ரீல்க்ரீம் அப்போது தான் இந்தியாவில் நுழைந்திருந்தது. ஜெல் என்கிற வடிவம் இந்தியாவிற்கு புதிது. பக்கத்திலிருந்த அவர்களின் மார்கெட் ரிசர்ச் நிறுவனம், இந்திய ஆண்கள் தலைக்கு தேங்காய் எண்ணெய், ஆமணக்கு, விளக்கெண்ணெய் என வரிசையாக போடுவார்களேயொழிய, ஜெல் பயன்பாடு குறைவு என்று 80 பக்கத்தில் டைப்பியிருந்தது.

எனக்கான வேலை, ஜெல்லை இந்தியாவில் பிரபலப்படுத்துவது. ஜெல் தடவி, முடியினை நேர்க் குத்தாக, வகிடாக, ஈரமாக, பிக்காரித் தனமாக இருந்தால் ஊரில் இருக்கும் பெண்கள் அத்தனை பேரும் ஜட்டி, பிராவோடு கூப்பிட்ட நேரத்தில் படுக்க வருவார்கள் என்பதை ஸ்தாபிப்பது. அதற்கு டிஜிட்டலில் ஒரு ஸ்டெயில் கைடு தயாரிப்பது. தலையளவு, சிகை அடர்த்தி இதை வைத்துக் கொண்டு ப்ரோக்ராம் எழுதி, யார் வந்து அந்த தொடுதிரை கியாஸ்க்கின் முன் நின்றாலும், அவர்களை போட்டோ எடுத்து, சிகையலங்காரத்தினை மாற்றிக் காட்டுவது. இது தான் அந்த மயிர் பிடுங்குகிற வேலை.

ரோகிணி அப்போது கிரியேடிவ் சைடில் கிடையாது. அக்கவுண்ட் மேனேஜ்மெண்ட். வாடிக்கையாளன் ஆபிஸில் இருக்கும் ப்ராண்ட் மேனேஜர்களோடு மொக்கைப் போட்டு வியாபாரத்தினை விருத்தி செய்வது. ரோகிணி நன்றாக இருந்தாலும், ஆண்களுக்கு அவளை பிடிப்பதில் சங்கடங்கள் இருந்தன. ஒரு சந்திப்பில், ஒரு மும்பாய்கார குப்தா You look stunning in this T.shirt என்று சொல்லப்போக, உடனே இவள், I look all the more stunning without it, is that what you wanted to convey என்று கேட்கப் போக, குப்தா என்ன சொல்வது என்று தெரியாமல் அடுத்த ஜெட் ஏர்வேஸில் டிக்கெட் போட்டான்.

முதல் 3-4 வாரங்கள், ப்ராஜெக்ட் ப்ரீப், கிரியேடிவ் ஸினர்ஜி என்று ஜல்லியடித்துப் போனது. ஐந்தாவது வாரத்தில் தான் வாடிக்கையாளன், நாங்கள் இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்று தெரியவேண்டுமென்பதற்காக ஒரு சந்திப்பினைக் கேட்டான். ஆர் கே சாமி இதை அவுர்சோர்ஸ் செய்கிறது என்று சொன்னால், அக்கவுண்ட் போய்விடும். அதனால், நானும் ஆர் கே சாமி ஊழியன் என்று சொல்லிக் கொண்டு, அவள் காரில் வாடிக்கையாளன் அலுவலகத்திற்கு போனோம். அதுவரை எனக்கும் அவளுக்குமான உறவு என்பது வெறும் ஹாய், ஹலோ, நான்கெந்து இமெயில்கள்.

அந்த நிறுவனம் சாந்தோமில் இருந்தது. ஒரே நேர் சாலை. ஆனாலும் அவளின் தனிப்பட்ட வேலை நந்தனத்தில் இருந்தது. சாரி யா என்று சொல்லிக் கொண்டு முதலில் நந்தனம் போனோம். போகும் போது காரில் குலம் கோத்திரம் ஜாதகமெல்லாம் விசாரித்தாள். அவளுக்கு திருமணமாகி 4 வருடங்களாகியிருந்தது. குழந்தைகள் இல்லை. கணவன் ஒரு கிறிஸ்துவன். Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ். ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. காதலித்து திருமணமாகி முடிந்த ஒரு வருடத்தில் காதல் காலாவதியாகியிருந்தது. வீடிருந்தது நுங்கம்பாக்கத்தில். அப்பா ஐஏஎஸ். அம்மா வங்கி அதிகாரி. பணத்திற்கு பிரச்சனையில்லை. என்னை விட 9 வயது பெரியவள். வாடிக்கையாளன் சந்திப்பு முடிந்து, லஞ்ச் சாப்பிடப் போகலாம் என்று ராதாகிருஷ்ணன் ரோடு சரவண பவனில் உட்கார்ந்த போது அவள் சொன்ன ஒரு ஏ ஜோக் எங்கள் இருவரின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தது.

உள்ளே இருந்த அரக்கன் உரையாடலை ஒட்டுக் கேட்டிருப்பான். அலுவலக வாசலில் இறக்கிவிட்டப் போது, ”lets have coffee sometime” எனக் கேட்க, எங்கே என அவள் கேட்டப்போது தான், எனக்கு சடாரென உறைத்தது. எனக்கு தெரிந்தது எல்லாம் ஐந்து நட்சத்திர காபி ஷாப்கள். இப்போது போல் தெருமுனைகளில் எல்லாம் காபி ஷாப்கள் அப்போது கிடையாது. அங்கே போனால், நான் வாங்குகிற கட்டணத்தில் 10% போய்விடும். மொக்கையாய் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவளே ”சவேரா” என்றாள். சவேரா பரவாயில்லை.

அந்த சனிக்கிழமை சவேராவில் 2 மணி நேரம் பேசி முடித்தப் போது, ஏதோ என்னை பிடித்திருப்பதுப் போல எதையோ சொன்னாள். என்ன சொன்னாள் என்று நினைவில்லை. என்னுடைய சந்தோஷமே என்னையும் ஒரு பெண் மதித்து 2 மணி நேரம் காபி ஷாப்பில் கூட பேசுகிறாள் என்பதே. 2011ல் சென்னையின் எல்லா காபி ஷாப்களும், ஐந்து நட்சத்திர விடுதிகளும் எனக்கு அத்துப்படி. பெண்கள் இன்னமும் சாதாரணம். அன்றைக்கு சடாலென முப்பத்து முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிய ஆரம்பித்திருந்தார்கள்.

சவேராவின் சர்வர்கள் நான் வந்தவுடன் வெந்நீர் வைக்க பழகியிருந்தார்கள். மூன்று மாதங்களில் தினமும் மொபலைலில் குட் மார்னிங்கில் ஆரம்பித்து குட் நைட்டில் முடித்து, நடுவில் அலுவலகத்தில் யாஹு மெஸெஞ்சரில் எந்நேரமும் வளவளத்துக் கொண்டிருந்தோம். இழுத்து இழுத்து ஆறு மாதத்தில் ப்ரீல்க்ரீம் மொத்த ப்ராஜெக்ட்டையும் கேன்சல் செய்தார்கள். இனிப் பேச ஒன்றுமில்லை. அதுவரை ப்ரீல்க்ரீம் ஒரு சாக்கு. இப்போது அதுவும் போனது. அப்போது தான் திரையில் மெஸெஞ்சரில் அந்த செய்தி மின்னியது - Wanna come home?

ஏ ஜோக்குகள், உடல் சீண்டல்கள், கொச்சையான வர்ணனைகள் என்று ஒடிக் கொண்டிருந்தாலும் ஒரு நாளும் உடல்ரீதியான உறவு என்பதை யோசித்ததில்லை. அடுத்தவன் மனைவி. ஏதோ பொழுது ஒடிக் கொண்டிருக்கிறது. கிளுகிளுப்பு. அத்தோடு சரி. ஆனால் வீட்டுக்கு அழைப்பது அது தான் முதல் முறை. சரி என்ன ஆனாலும் போய் பார்த்துவிடுவோம் என்று ஒரு மாதிரியான உற்சாகத்தினை வரவழைத்துக் கொண்டு, காலிங் பெல்லினை அழுத்திய நாள் ஒரு வெள்ளி மாலை. கிறிஸ்துமஸுக்கு முந்திய நாள்.

’சாட்’டில் பேசிய தைரியம், நேரில் இல்லை. கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தது. காபி வந்தது. குடித்தேன். ’பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ்’ அப்போது தான் பிரபலமாகி வந்தார்கள். கொஞ்சம் பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் கேட்டேன். அவர் டூருக்கு போயிருக்கிறார் என்று தெரிந்தது. ”வெயிட் பண்ணு” என்று உள்ளேப் போய் நைட்டி மாற்றிக் கொண்டு வந்தாள். மணி 9.30. ”சரி கிளம்பறேன்” என்று சொன்னவுடன் ஒகே என்று சொல்லி, லிப்ட் பக்கம் வந்தாள். நான்காவது மாடியில் அவள் வீடு. லிப்ட் உள்ளே போய் பை சொல்லி கீழே வந்தேன். லிப்ட் தரைத் தளத்தில் திறப்பதற்குள் மொபைலில் குறுஞ்செய்தி வந்திருந்தது.

போகணுமா?.....

திரும்பவும் 4 மாடி அழுத்தி மேலேப் போனால், அங்கேயே நின்றிருந்தாள். ”போகலை. என்ன” எனக் கேட்க. உள்ளே வா என்று உத்தரவு வந்தது. உள்ளே நுழைந்தவுடன், செருப்பினை விட்டு திரும்புகையில் முகம் பிடித்து உதட்டோடு உதடு அழுத்தி மூச்சு திணறுவது போல் முத்தம் கொடுத்தவுடன் எல்லா தளைகளும் உடைந்தது. அடுத்த 2 மணி நேரத்திலும், அதன்பின்னான 6 மாத இடைவெளிகளிலும் நாங்கள் செய்தது ஆதி நல்ல காரியம். நேரம் காலமில்லாமல், நெறிகள் தவிர்த்த crashயாய் ஆரம்பித்து, பின் சிறு காதலும் பெருங் காமமுமாக மாறி முங்கி, முயங்கி, புணர்ந்து வள்ளுவத்தின் மூன்றாம் பாலினமாக மாறி சுற்றிய நாட்கள். Adultery. Affair. Extramarital sex. கணவன் கோர்ட்டுக்கு போனால், உடனடியாக மணமுறிவு கிடைக்கும்.

திடீரென ஒரு நாள், தான் லண்டன் போவதாக சொன்னாள். என்னாலும் எதையும் சொல்ல முடியவில்லை. எந்த வரைமுறைக்கும் உட்படாத உறவில் எதை சொல்லி நிறுத்தி வைப்பது. என் உலகம் சடாலென சுழல ஆரம்பித்தது. கைகளிலிருந்து எதுவோ நழுவியது. அதன் பின் யாஹூவில் இல்லை. எதுதிலுமில்லை. எந்த தொடர்பும் இல்லை. காலம் வேகமாக ஒடி, இப்போது இன்னொரு லிப்ட் திறப்பில் நிற்கிறது.

இதன் பின்னால் நிகழ்ந்த உரையாடல்கள் அப்படியே ஆங்கிலத்தில் கீழே

What a surprise!

Oh wow! Rogue holy shit, been long time

Glad to meet you. Happily married, settled & working for a NGO now. Don't stare at me like this. I am not the old Rogue. Hey i gotta go.

Nah. I have moved on. Good to hear.

Married ? how many kids?

No. I missed you, and so still remaining single. My No is the same. What's yours?

You naughty bastard. Same mischievous eyes.Come some time to this _______ Trust, i will be around. Won't give you my No. No Old days Rain. Don't cross my life.

Ah Rogue! I dint mean that. alright. will drop in sometime.

See ya around. Bye

Bye.

உள்ளேப் போய் சந்திப்பு முடிந்து திரும்பிய போது ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

U still make me crave bastard.This is not my No, using frnds. Pls dont come to d Trust. don wanna cu again. btw, got a girl, she may be urs too .... - Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ்

Labels: , , , ,


Jul 11, 2011

உயிர் பெரிது

அந்த கணம் இனி நான் வாழப்போகும் காலம் முழுதும் நினைவில் தங்கும். சுபயோக சுகதினமான வெள்ளிக்கிழமை (8 ஜூலை) மாலை 4.30க்கு மத்திய கைலாஷ் சந்திப்பில், அடியேன் வைகுந்த ப்ராப்தியடைந்து, பொது மருத்துவமனையிலோ, ராயப்பேட்டை மருத்துவமனையிலோ போஸ்ட் மார்ட்டம் முடித்து, போரூர் மின்மயானத்தில் ஒரு டம்ளர் சாம்பலாய் மாறி, யாராவது எனக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து முடித்திருப்பார்கள். உயிரோடு இருக்கிறேன். ஒரு கீறல், சிராய்ப்புகள் கூட இல்லாமல் தப்பித்தாகி விட்டது. Am alive. Seems for the third time, i got an extension to my life.

முதல் நாள், இணையமில்லாத காரணத்தினால், 'ரெசிடென்சி'யின் நள்ளிரவு உணவுவிடுதியில் அமர்ந்து நண்பரின் டேட்டா கார்டு சகிதம் ’கான்பரன்ஸ் கால்’ முடித்து வீடு வந்து சேரும்போது மணி அதிகாலை 2.00. அந்த உரையாடலையொட்டி வெள்ளிக் காலையில் கிட்டத்திட்ட ஐந்து மணிநேரம் ஆராய்ந்து, கொடுத்த ‘ஆபர்’ ஒர் டூபாக்கூர், ப்ராடு என்று கண்டறிந்த போது எஞ்சியது அலுப்பும், ஆயாசமும் தான். One more in the long list of people i wanted to forget & move on. நல்ல வேளையாக நண்பருக்கு ஒரு பைசா இழப்பு இல்லை. காபாற்றியாகி விட்டது. ப்ராடுகள், ஏமாற்றுவர்கள் என கிரிமினல் கும்பல் எல்லாம் என் கண்களுக்கும் மட்டுமே மாட்டுகிறார்கள். வெளவால்களுக்கு இருட்டில் கண் தெரிவதுப் போல, பரந்து விரிந்திருக்கும் உலகில் தொடர்ச்சியாக எனக்கு மட்டுமே இந்த மொள்ளமாறி, முடிச்சவக்கி, கேப்மாரி, ப்ராடு கும்பல்கள் தெரிந்துக் கொண்டேயிருக்கின்றன. வெள்ளிக்கிழமை காபாற்றியது Linkedin வழியாக உலகில் அப்பாவி தொழில்முனைவோர்களை ஏமாற்றும் கும்பல்.

கோவமும், விரக்தியும், ஆயாசமும், சலிப்புமாக மாறி மாறி வாழ்ந்துக் கொண்டிருக்கும் என் வாழ்வில் என் தனிப்பட்ட குழப்பங்கள், பிரச்சனைகள் தாண்டி இந்த மாதிரியான நபர்கள் வேறு என்னை துரத்திக் கொண்டேயிருக்கிறார்கள். நானும் காபாற்றிக் கொண்டேயிருக்கிறேன். இதனால் எனக்கு பைசா பிரயோசனமில்லை என்றாலும், மற்றவர்களுக்கு பைசா இழப்பில்லை. I have started losing my trust on values which were close to my heart. என்னளவில் உலகம் மோசமான புதைகுழியாய் மாறி கிட்டத்திட்ட ஐந்து வருடங்களாகின்றன. அது வேறு பிரச்சனை. எல்லாவிதமான ப்ராடு கும்பல்களையும், நுனிநாக்கு அலம்பல்களையும், உள்ளொன்று வைத்து புறம் பேசும் மகானுபாவர்களுமாக என் சந்திப்புகள் நடக்கின்றன. எல்லாருக்கும் படுத்து எழுந்தவுடன் கோடீஸ்வரனாக வேண்டிய கட்டாயங்கள் இருக்கிறது போலும். அதுக்கு விளையாட நானா கிடைத்தேன்.

என் தேடல்களும், வாசிப்பும் வேறாக இருக்கிறது. என் குழப்பங்கள், வாழ்வியல் சங்கடங்கள், துரோகங்கள், முதுகு குத்தல்கள், உறவுமுறை சிக்கல்கள் என நான் தீர்க்க வேண்டிய காஷ்மீர் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்றன. உள்ளே இருக்கும் கடவுளை தின்று மிருகம் வளர்ந்தால் பரவாயில்லை. என் கடவுள் ப்ராய்லர் கோழி போல இறப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறார் போலிருக்கிறது. தினமும் செத்துக் கொண்டேயிருக்கிறார். என்னை மாதிரியான ஒரளவுக்கு விஷயம் தெரிந்த ஆட்கள் மிருக குணங்களோடு இருப்பது மகா சிக்கல்.

மேற்சொன்ன, பின் இன்ன பிற லெளகீக 24x7 பிரச்சனைகளோடு வண்டி ஒட்டியது என் தவறு. முழுமையான தவறு என்மீது மட்டுமே. பல்வேறு குழப்பங்களோடு வண்டி அனிச்சையாய் ஒடிக் கொண்டிருந்தது. அந்த தேவையில்லாத வளைவினை நான் எடுத்திருக்கக் கூடாது. ஆனாலும் மனக்கிலேசங்களோடு அனிச்சையாய் திரும்புவனுக்கு என்ன தெரியும்? அந்த வளைவினை எடுத்து திரும்பலாமா, நேராக போகலாமா, யூ டர்ன் அடிக்கலாமா என்கிற குழப்பத்தில் சாலையில் வண்டியை வைத்துக் கொண்டு சஞ்சல முடிவெடுத்துக் கொண்டிருக்கும்போது தான் அது நடந்தது. வேகமாய் வந்த அந்த ’பாஸ்ட் ட்ராக்’ இண்டிகோ, நான் எப்படி போவேன் என்று தெரியாமல் ப்ரேக் அடிக்க முயன்று தோற்று, கிட்டத்திட்ட டிரைவர் ப்ரேக்கின் மீது ஏறி நிற்காத குறையாய் ஒரு கால்வட்டமடித்து நின்ற போது, வண்டிக்கும் எனக்குமான இடைவெளி ஒரு காலடிக்கும் குறைவே. மரணம் ஒரு காலடி இடைவெளியில் வந்து நின்றுவிட்டு நான் அப்புறம் வர்றேன் என்று போனது.

தமிழின் எல்லா கெட்டவார்த்தைகளின் அர்ச்சனைகளோடும், வசைகளோடும், தொடர் உடல் நடுக்கங்களோடும், என்ன நடந்தது என்று கிரகித்துக் கொண்டு அதை உணர்வதற்கும் நேரம் தேவைப்பட்டது. அதன்பின் நடந்தது எல்லாமே முடுக்கி விடப்பட்ட பொம்மை போல நடந்தது. நண்பர் அரவிந்தனைப் பார்த்தது, காபி டேயில் ப்ரெளனி உண்டது, லக்கி/அதிஷாவை சந்தித்து இரவு 10 வரை உரையாடியது. இதில் அவர்கள் மூவர் தான் பேசினார்கள். நான் வெறுமனே மனமெங்கோ பயணிக்க, பார்வையாளனாய் மட்டுமே இருந்தேன். எதுவும் நிரந்தரமில்லை என்று மண்டையில் உறைக்க 35 வருடங்களாகியிருக்கிறது.

Life is fragile என்று சொல்வதற்கும், உணர்வதற்குமான மன இடைவெளி வெகு அதிகம். உணர்ந்தாகி விட்டது. இனி என்ன?

Over and Out.

பின்குறிப்பு: கருப்புப் பணம் போன வாரம் எழுதாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

Labels: , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]