Jul 25, 2011

சைவப் பூனை

ஹார்மோன் அவென்யு தொடரின் 4 வது பகுதி. முந்திய பகுதிகள் 1 | 2 | 3

ஐடிபிஐ ஏடிஎம்மில் நண்பன் அனுப்பிய ட்ரான்ஸ்பர் வந்ததா என்று பார்க்கப் போனால் திரை காறித் துப்பியது. பாலன்ஸ் ரூ.47. ஆனால், இது வெறும் ரூ.47 அல்ல, சாய்ப்ரபாவோடு சேராமல் போக வைத்த ரூ.47.

சாய்ப்ரபா சோமசுந்தரம். டெல்லிவாழ் தமிழ் குடும்பம். ஷீரடி பாபா குடும்ப தெய்வம். எல்லார் பெயரிலும் சாய். ஆனால் இதற்கும், ப்ரபா என்னை சாய்ததற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

ப்ரபாவை சந்தித்ததே ஒரு பெரும்கதை. நாங்கள் அன்றைக்கு ஒரு பெருங்கனவில் இருந்தோம். உலகினைப் புரட்டிப் போடக்கூடிய ஒரு மென்பொருளை தயாரிப்பதில் முனைந்திருந்தோம். அவ்வளவு வெறி. அந்த மென்பொருளை ப்ரோக்ராம் செய்யும் மொழி அப்போது இந்தியாவில் குறைவான ஆட்களுக்கே தெரிந்திருந்தது. அந்த மொழி தெரிந்து எனக்கு இணைய போரம்கள் மூலம் மாட்டிய ஒரு ஆள் - ஷோவனா முகர்ஜி.

டெல்லியில் இருந்த ஒரு பெங்காலி.  ஷோவனாவோடு பேச்சுவார்த்தை ஒடிக் கொண்டிருக்கும்போது தான் அவளோடு டெல்லி மெட்ரோவில் கூட ஒரு தமிழ்ப் பெண் பயணிக்கிறாள் என்பதும், அவளுக்கு ஏதோ தோஷத்தினால் கல்யாணமாகவில்லை என்பதும் தெரியவந்தது. டெல்லி மெட்ரோவில் காலை 8.40க்கு ஆரம்பித்து 8.55க்கு முடிந்து விடும் உரையாடல்கள். ரயில் சிநேகம். நீ தமிழ் தானே நீ கொஞ்சம் பேசு என்கிற ரெக்கமண்டேஷன் கொடுத்ததோடு ஷோவனா கல்யாணமாகி, லாஸ் வேகாஸ் கிளம்பிப் போனாள்.

முதலில் எல்லாரையும் போல ஹாய், ஹலோ என்னப் பண்றீங்க. பயோடெக்னாலஜி மாஸ்டர்ஸ். ஏதோ ஒரு இந்திய பார்மா நிறுவனத்தில் ஆராய்ச்சியில் வேலை. பி எச் டி படிக்க வேண்டுமென்கிற ஆசை. செவ்வாய் தோஷம். பேசுவதில் பெரும் தயக்கங்கள் இருந்தது. முதலிரண்டு வாரங்களில் அவள் பேசுவது எதுவுமே கேட்காமல், ஒரு வேளை என் காதில் தான் ஏதோ பிரச்சனையென்று நினைத்தேன். அவ்வளவு ரகசியம். ஏன் கல்யாணமாகவில்லை என்று ஆரம்பித்த பேச்சு, மெதுமெதுவாய் உள்விவரங்களில் நுழைந்தது. ஆசைகள், லட்சியங்கள், ஈடுபாடுகள், பயங்கள் என விரிவடைந்த சமயத்தில், ஒரு பயிலரங்கத்திற்காக ஜெர்மனி போனாள்.

இப்போதைய குஷ்பு உடல்வாகும், பாலுமகேந்திரா நாயகிகளின் நிறத்தோடும் எனக்கு மெயிலில் படம் வந்திறங்கியபோது, ஜெர்மனியில் இருந்தாள். Do you miss me? என்பதாக முதல் குறுஞ்செய்தி வந்திருந்தது. அதன்பின் அன்றைக்கு மட்டும் நாங்கள் குறுஞ்செய்தியில் பரிவர்த்தனை செய்தது, அடுத்த மாத பில்லில் ரூ.500 பழுத்தது. அதன்பின் அது பழகி விட்டது. ஒரு மாதிரி எதுவும் தீர்மானமாய் சொல்லிக் கொள்ளாமல் எல்லாவற்றையும் பேசித் தீர்த்தோம்.

பயம் விலகி, கூச்சங்கள் மறைந்து, உடல் பொது மொழியானது. சென்னையில் எந்த நிறுவனத்தில் வேலை பார்க்கலாம். இரு சாதி வீட்டாரையும் எப்படி சமாளிப்பது. கல்யாணம் செய்து கொண்டால் எந்த ஊரில் ரிசப்ஷன் வைப்பது. குழந்தைக்கு எங்கே ஸ்கூல் சீட் கிடைக்கும். பெட்ரூமில் வாட்டர் பெட் போடலாமா. சாண்ட்ரோ, ஸ்விப்ட், ஸ்பார்க் எந்த கார் வாங்கலாம். ஹனிமூனுக்கு ஐரோப்பா போகலாமா. கேள்விகள். கேள்விகள். கேள்விகள். பதில்கள். அலசல்கள். சீண்டல்கள். சண்டைகள். சமரசங்கள். ஊடல்கள். கூடல்கள். கொஞ்சல்கள். மொபைல் நிறுவனங்களுக்கு அந்த 9 மாதம் அபார லாபம்.

நாங்கள் வழக்கமாய் பேச ஆரம்பிக்கும் போது ஜார்ஜ் புஷ் லஞ்ச் சாப்பிட ஆரம்பித்திருப்பார். முடிக்கும் நேரத்தில் ஆஸ்திரேலியாவில் ‘கெளசல்யா சுப்ரஜா’ என சுப்ரபாதம் ஆரம்பித்திருக்கும். இதற்காகவே நள்ளிரவு பேக் ஒன்று வாங்கி வைத்திருந்தாள். ‘என்ன பண்ற’ என ஆரம்பிக்கும் விகர்ப்பமில்லாத கேள்விக்கு என் பதில் எப்பொழுதும் விஷமத்தனத்தோடு ‘என்ன பண்ணணும்’ என்றே ஆரம்பிக்கும்.

‘என்ன பண்ணுவே’
‘என்ன வேண்ணாலும்’
’அப்டீன்னா’
‘புரிஞ்சு புரியாத மாதிரி நடிக்காத’
‘இல்ல என்ன வேண்ணாலுமா, எங்க வேண்ணாலுமா-னு டவுட்’
‘எங்க வேணும்னு கேக்கறியோ, அங்க என்ன வேண்ணாலும்...........’

அதன்பின் நடக்கும் சம்பாஷனைகளை எழுதி யாராவது ரெக்கார்ட் செய்திருந்தால், இன்று சாரு நிவேதிதாவுக்கு ஆனது மாதிரி பல பிரச்சனைகள் எழுந்திருக்கலாம்.. உரையாடலிலேயே குழந்தைகள் பிறக்கும் சாத்தியங்களிருப்பின், நாங்களிருவரும் ஒரு கிராமத்தினை உருவாக்கியிருப்போம். பாத்ரூம் போகாமல் ஒரு நாளும் போனை வைத்ததில்லை. இப்படியாக அவரவர்கள் பாத்ரூமில் இந்த்ரியங்களை இலவசமாக ப்ளஷ் அவுட் பண்ணிக் கொண்டிருந்த காலத்தில் தான் ‘நான் மெட்ராஸ் வர்றேன். சொந்தக்காரங்க கல்யாணம். நாம பார்த்தே ஆகணும், என்ன பண்றேன்னு சொன்னியோ, அதை பண்ணு மொதல்ல’ என்கிற செய்தி வந்தது. அதில் ‘என்ன பண்றேன்னு சொன்னியோ’ என்பதில் கொஞ்சம் அழுத்தம் இருப்பதாகத் தோன்றியது.

சொன்னதற்கு பின் ஒரு வருடம் போனது. தொடர்புகள் குறைந்தது. திடீரென மெயில் வந்தது. கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. மதுரை. சென்னையில் செட்டிலாகப் போகிறேன் என்றாள். மீண்டும் மொபைல் நிறுவனங்கள் லாபம் பார்க்க ஆரம்பித்தன. இந்த முறை செலவு என்னுடையதில்லை. ஆனாலும் பியான்சி அழைத்து முடித்தபின் எனக்கு அப்டேட் வரும். என்ன பேசினார்கள். என்ன யோசிக்கிறார்கள். ஏன். எதற்கு. தெரியாது. சென்னையில் செட்டிலானாள். பின்னாளில் என்னை துரத்தியடித்த அந்த ரெஸ்டாரெண்டுக்கு டின்னருக்கு அழைத்தேன். கணவன் வெங்கடேஷ். என் அலைவரிசைக்கு ஒத்துப் போனான். உலகப் பொருளாதாரம், கரன்சிகள், ஜக்கி வாசுதேவ், அம்பத்தூர் ரியல் எஸ்டேட், க்ரீன் டீ பேசினோம். ஒரு வார்த்தைக் கூட அவளோடு பேசவில்லை.

போனதும், ஏன் தன்னோடு பேசவேயில்லை என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. அணிந்திருந்த சேலை, அதில் எத்தனை ப்ளீட்டுகள் உட்பட தனிப்பட்ட விஷயங்கள் சொன்னவுடன் வந்த குறுஞ்செய்தி ’ur a criminal. i thot u spoke to him. bloody u noted too many areas' ஹனிமூனுக்கு கொடைக்கானல் போனாள். அங்கிருந்தும் குறுஞ்செய்திகள் இந்த முறை கொஞ்சம் அப்பட்டமாக வந்திருந்தது. கொஞ்சம் சந்தேகங்கள் நிவர்த்தி செய்தேன். கஸ்டமர் சப்போர்ட் சர்வீஸ். இப்போது ப்ளே ஸ்கூலில் ஒரு பையன். சென்னையில் இருக்கும் ஒரு பன்னாட்டு பார்மா நிறுவனத்தில் சீனியர் பொறுப்பில் இருக்கிறாள்.

ரொம்ப நாள் கழித்து ஒரு தேவைக்காக போன் செய்தேன். பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். உள்ளுக்குள் ஒரே குறுகுறுப்பு. கணவன் தொழில் மாற்றிவிட்டான். வடசென்னையிலிருந்து புது சென்னைக்கு குடி மாறியிருக்கிறார்கள். கல்யாணமாகி இன்னும் ஒரு சுற்று பெருத்திருப்பாள். போனில் கேட்டதற்கு ஜிம்மிற்கு போவதாக சொன்னாள். வேறு ஒரு கேள்வி கேட்க நினைத்து, நேரில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போட்டேன்.

நங்கநல்லூரில் நண்பர் ஒருவருக்கு பணம் தரவேண்டி இருந்தது. முடித்து போன் செய்தால், ’ஒரு மாதிரி சங்கடமாகவும் பயமாவும் இருக்கு. உன்னை பார்க்கறதுக்கு அவர்கிட்ட பொய் சொல்லணும். இப்பவே நீ அனுப்பற எல்லா எஸ்மெஸ்ஸையும், கால் ஹிஸ்டரியும் அவர் கண்ணுல படாம அழிக்கிறேன். நாம பார்க்க வேண்டாம்.விட்டுரு’ என்றாள். எக்கச்சக்க கோவம். ”நான் எவ்வளவு பெரிய புண்ணியாத்மா, நான் அந்த மாதிரி ஆள் இல்லை, உடல் என்பதை கடந்து பல காத தூரம் போய்விட்டேன், என்னை சீப்பாக நினைக்காதே.” என்று முழ நீளத்துக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு வீடு திரும்பினேன். அத்தோடு முடிந்தது.

Btw, அன்றைக்கு நாங்கள் சென்னையில் சந்தித்தோம். நுங்கம்பாக்கம் இந்தியன் ஆயிலுக்கு பின்னாடி சென்னைவாழ் மக்களுக்கு தெரியாத ஒரு குட்டி ஹோட்டல் இருந்தது. அங்கே தான் ரூம் புக் செய்யலாம் என்று நண்பனிடத்தில் சொல்லியிருந்தேன். கீர்த்தியைப் பின்னாளில் பார்த்த அதே நுங்கம்பாக்கம் பாரிஸ்தா. வந்தாள். முகம் பார்த்து பேச கொஞ்சம் தயக்கங்கள் இருந்தன. ட்ராபிக். சென்னை வெயில். மேற்படிப்பு என்று உப்பு பெறாத விஷயங்களை பேசினோம்.

கேட்டாள். கல்யாணத்துக்கு முன்னால் எதுவும் வேண்டாம் என்றேன். ஒரு நிமிஷம் என் கண்களை உற்றுப் பார்த்தாள். ”நிஜமா சொல்றீயா. Are you sure” என்றாள். ’ஆமா. நான் ஸ்ட்ராங்கா இருக்கேன், வேண்டாம்’ என்றேன். ஒரு ஜிஞ்சர் ஹனி டீ குடித்து விட்டு கிளம்பினாள். போகும்போது கை கொடுத்தாள். தேவையில்லாத அழுத்தம் இருந்தது. கடைசியாய் பார்த்த பார்வையில் ஏமாற்றமும், கோவமும் இருந்தது.

சொல்லாமல் மறைத்தது, நண்பன் சொதப்பி விட்டான். ரூம் போடவில்லை. எந்த அபார்ட்மெண்ட் சாவியும் அன்றைக்கு  என்னிடத்தில் இல்லை. என் கிரெடிட் கார்ட் நிறைந்து விட்டது. கையில் காசில்லை. பாரிஸ்தாவில் ஜிஞ்சர் ஹனி டீ ரூ.53, இருந்த நூறு ரூபாயில் மிச்சமிருந்தது ரூ.47.

Labels: , , , , ,


Comments:
கல்யாணத்திற்கு முன்பும் பின்பும் உங்களுடன் சாய்பிரபா பழகியிருக்கிறாள்.

அப்படியிருக்க ஏன் உங்களிருவருக்கும் திருமணம் நடக்கவில்லை.?
 
this time exlcnt
 
பின்றீங்க தலைவரே!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]