Jul 18, 2011

Lets Play. Match On!

நந்தம்பாக்கம் கால்பந்து மைதானத்தில் ஒரு கிரிக்கெட் வரலாறு நிகழ்வு நடந்தேறியது பற்றிய எவ்விதமான செய்தியோ, துணுக்கோ போடாத தமிழ் நாளிதழ்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் சிபிஐ ரெய்டில் மாட்டி அல்லாடுவார்கள் என்கிற சாபத்தோடு மேலேப் படியுங்கள்.

நாங்கள் CTCC என்றொரு கிரிக்கெட் அணியினை உருவாக்கி, அதன் அருமை பெருமைகளை அவ்வப்போது டிவிட்டரில் போட்டு, டிவிட்டரின் ட்ராபிக்கையும், கூடவே எங்களின் ட்ராபிக்கையும் ஏற்றிக் கொள்வது ஊரறிந்த ரகசியம். அந்த ’நாங்கள்’ ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மழையோ, வெயிலோ நந்தம்பாக்கம் இராணுவ மைதானத்தில் ஆஜராகி ஆட ஆரம்பித்து விடுவோம். எங்களுக்கும் மைதானங்களும் ராசியே இல்லை. நாங்கள் முதலில் ஆடிய மைதானத்தினை ராணுவம் கம்பிப் போட்டு தடுத்தது. அது மத்திய அரசின் சதி. அங்கிருந்து உள்ளேப் போய் ஆடிய இன்னொரு மைதானத்தை சுற்றிலும் அதிமுக கொடிகள்; ’ஆடுகளம்’ அயுப் நினைவு கோப்பை மாதிரி ஏதோ ஒரு த்ரோ டோர்னமெண்ட் வழக்கமாய் ஆடும் பிட்ச்-ற்கு பக்கத்தில் ஆடிக் கொண்டிருந்தார்கள். மாநில அரசின் சதி. எங்களை ஆடவிடாமல் தடுக்க எவ்விதமான முயற்சிகளை மேற்கொண்டாலும், நாங்கள் ஏதாவது வழி கண்டறிந்து ஆடுவது வழக்கம்.

வழமை மாறாமல், நாங்கள் ஆடும் மைதானத்துக்கு பின்னால் இருந்த ஒரு கால்பந்து மைதானத்தினை தேர்ந்தெடுத்து, முன்னாடியே போய் ஸ்டம்ப் அடித்தோம். 11 பேர்கள் வந்திருந்தார்கள். வழக்கம்போல இரண்டு அணியாய் பிரித்து, சாமி ஒரு அணியினையும் (நான் அந்த அணி) கார்க்கி இன்னொரு அணியையும் தலைமேயேற்க ஆட ஆரம்பித்தோம். ஒன்றும் பெரியதாய் சொல்லிக் கொள்வது போல இல்லை. நாங்கள் இரண்டாவதாய் ஆடி, சேஸ் செய்து இரண்டு பந்துகள் மிச்சம் வைத்து வென்றோம். அது ஒரு சாதாரண 6 ஒவர் மேட்ச். இன்றைக்கும் அதே மாதிரி ஆறாறு ஒவராய் ஆட வேண்டியது தான் என்று எண்ணிய நேரத்தில் தான் அது நடந்தது.

அந்த அது - பக்கத்தில் ஸ்டம்ப் அடித்த ஒரு அணி, மேட்ச் போட்டுக்கலாமா என்று கேட்டார்கள். எனக்கு வயிற்றில் குபிரென ‘ஒரம் போ’ வில் ஆர்யா கையேந்திப் பவனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இன்னொரு ட்ரைவர் வந்து ‘ரேஸ் விடலாமா’ என்று வம்புக்கு இழுப்பது போலவே இருந்தது. முதலில் பேச்சுவார்த்தைக்கு களம் பல கண்ட கார்க்கிப் போனார். போய் திரும்பி வந்து 12-12 ஒவர்கள் இரண்டு மேட்ச் ஆடலாமா என்று கேட்கிறார்கள் என்று திரும்பி வந்தார். இரண்டு 24 ஒவர்கள் சிரமம் என்று திரும்பவும் தூது அனுப்பினோம். இறுதியில் ஒரு மேட்ச் 14-14 ஒவர்கள் என்று முடிவானது. இந்த மேட்ச் போடுவதற்கு முன்னால் விதிகள் தெளிவாக கண்டறியப்பட்டன. வைடு, நோ பால்களுக்கு ரன்கள் இல்லை. ஒவர் த்ரோ உண்டு. பைஸ் உண்டு. எல்.பி.டபிள்யு கிடையாது. இரண்டு பவுலர்கள் மட்டும் 4 ஒவர்கள் போடலாம். எல்லைக் கோடு நிர்ணயிக்கும் பணியினை கார்க்கி சிரமேற்கொண்டு செய்தார். ரூ.25 பெட் மேட்ச். டிவிட்டர் வரலாற்றிலேயே அரை அமெரிக்க டாலருக்கும் குறைவானத் தொகையில், பொன்னேட்டில் பொறிக்கப் பட வேண்டிய ஒரு வேலையினை எங்களையும் அறியாமல் நாங்கள் செய்ய தொடங்கியிருந்தோம்.

ஒரு வரலாறு எவரும் அறியாமல் உருவாகிக் கொண்டிருப்பது தெரியாமல் எல்லாரும் அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். உலகம் காலை ஹிந்துவிலும், காபியிலும் முழுகிக் கொண்டிருந்தது. ஒபாமா படுக்கப் போய்விட்டார். ரெய்னா சோமர்செட்க்கு எதிரில் ட்ரா பண்ணிய திருப்தியில் உறங்கிக் கொண்டிருந்தார்.

டாஸ் ஜெயித்து பேட்டிங் எடுத்தோம். ஸ்மிதேஷும் அக்‌ஷய்யும் இறங்கினார்கள் ஸ்மிதேஷ் இடது கை சேவாகாய் மாறி முதல் 7 ஒவர்களில் பின்னி பெடலெடுத்தார்.அவர் நண்பர் தான் முதல் விக்கெட். அடுத்து ஸ்மிதேஷ் வெளியேறும் போது 46/2 ஒன் டவுனில் பிரிட்டோவும், இரண்டாவது டவுனில் நானும் இறங்கினேன். நான் இறங்கிய ராசி, ரன்னர் முனையில் நின்றுக் கொண்டிருந்த பிரிட்டோ ஒரு பைஸ்-க்கு அவசரப்பட்டு ரன் - அவுட் ஆனார். அடுத்த ஒவரின் முதல் பந்து இஷாந்த் சர்மா, ரிக்கி பாண்டிங்கிற்கு போடுவது மாதிரியான என் காலுக்கும் பேட்டுக்கும் இடையில் புகுந்து நடு ஸ்டம்பினை சிதறடித்தது. பெவிலியனுக்கு (பெவிலியன் என்பது கீப்பருக்கு பின்னிருக்கும் கொஞ்சுண்டு புல் தரை) ஒரு ரன்னோடு திரும்பினேன். பிரிட்டோவிற்கு அடுத்து இறங்கிய ரிஷி, எனக்கடுத்து இறங்கிய சுவாமி கொஞ்சம் தடுப்பாட்டமாடினார்கள். சுவாமி ரன் -அவுட். ரிஷிக்கு ஸ்டம்புகள் உடைந்தா என்று நினைவில்லை. பின், கார்க்கி, சேகர், ஹரிஷ் என இறங்கி விக்கெட்டை கொடுத்து வீணாய் பெவிலியனுக்கு திரும்ப இறுதி இரண்டு ஒவர்கள் வேதாளம் (அர்ஜுன்) & அதிஷா.

இறுதியில் தன்முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதியன் வேதாளம் தன்னுடைய பங்காக அடித்து ஸ்கோரினை 85ஆக முடித்தார். அதிஷா இன்னொருமுறை தான் பேட்டிங்கில் ஒரு மெக்ராத் என்று நிரூபித்து ஸ்டம்புடு ஆகி வெளியேறினார். எண்ணிக்கை 85. நான் பெவிலியனில் இருக்கும்போதே 80+ என்பது பவுலிங்கில் தடுக்கக்கூடிய ஒரு ஸ்கோர் என்று சொல்லியிருந்தேன். 14 ஒவர்களில் 86 அடித்தால் எதிரணி வெற்றி.

நந்தம்பாக்கம் இராணுவ மைதானத்தின் வரலாற்றிலேயே எங்கள் அணி தான் முதன் முதலில் huddle செய்து டீம் ஸ்ட்ராடஜி செய்தார்கள் என்பதை பெருமிதத்துடன் சொல்லிக் கொள்வதோடு , அந்த huddle-ஐ நாட்டுக்கு சேவை செய்யாமல் ஒசியில் ரம்மடித்து மிலிட்டரி ஸ்கூலில் வரும் ஆண்டிகளோடு மொக்கை போடும் ஜவான்களுக்கு அர்ப்பணிக்கிறோம். ஸ்மிதேஷ், அதிஷா முதல் ஸ்பெல். அக்‌ஷய், சேகர் இரண்டாவது ஸ்பெல் என்று முடிவானது.

முதல் ஒவர் ஸ்மிதேஷ். அற்புதமாக போட்டார். 5 ரன்கள். இரண்டாவது ஒவர் அதிஷா 7 ரன்கள் கொடுத்து, 12 ரன்கள். இதில் ரிஷி கவர்ஸ்-ஸில் இருந்த அடித்த அற்புதமான த்ரோவில், நான் அடித்த ரன் - அவுட் தரப்படவில்லை. UDRS மட்டும் நிறுவப் பட்டிருந்தால் இரண்டாம் ஒவரிலேயே விக்கெட்டைப் பறித்திருப்போம்.

மூன்றாவது ஒவர் ஸ்மிதேஷ். முதல் விக்கெட் ஸ்மிதேஷின் காட் & பவுல்ட். இரண்டாவது வந்த கேட்சினை விட்டாலும், கார்க்கியின் த்ரோ என் கையில் வந்து, மூன்று ஸ்டம்புகளையும் வீழ்ந்த்தியதில் போனது. அக்‌ஷய் தான் pick of our bowlers. 3 விக்கெட்டுகள். அதிலொன்று நான் கேட்ச் பின்னால் நின்று கேட்ச் பிடித்தது.  ரன்னும், விக்கெட்டும் தொடர்ச்சியாய் வந்தும் வீழ்ந்தும் கொண்டிருந்தது.

இறுதியில் 4 ஒவர்கள். அவர்களிடத்தில் 4 விக்கெட்கள். 29 ரன்கள் அடிக்க வேண்டும். சேகர் போட்ட 11வது ஒவரில் 2 நான்குகள், 2 ஒரு ரன்கள். 3 ஒவர்கள் 19 ரன்கள் அடித்தால் வெற்றி.

நான், அதிஷா, ஸ்மிதேஷ், ஸ்வாமி என கூடிய கூட்டம் உயர் பொதுமட்டக் குழுவானது. நீண்ட நேர விவாதத்துக்கு பிறகு ஸ்மிதேஷ் 12 மற்றும் 14 ஒவரையும் ஸ்மிதேஷின் நண்பர் 13 ஒவரையும் போடலாம் என உயர் பொதுமட்டக்குழு முடிவெடுத்தது. பொதுக்குழுவில் முடிவெடுத்து நாசமாய் போன அரசியல் கட்சிகளின் வரலாறு தெரிந்தாலும், எங்களுக்கு அந்த நிமிடத்தில் தோன்றவேயில்லை.

முதல் பந்து 4. இரண்டாம் வந்து லாங் ஆப்பில் 6. 3 ஒவர்களில் 19 என்பது இரண்டு ஒவர்கள், நான்கு பந்துகளில் இப்போது வெறும் 9 ரன்கள். ஸ்மிதேஷுக்கு கால் பிடிப்பு  என்று அமர்ந்து விட்டார். அடுத்த 4 பந்துகளில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கார்க்கி அணிக்காக தன்னுடைய சொத்தில் ரூ.25 யை இழந்தார். அடுத்த 20 வருடங்களில் அந்த ரூ.25 நல்ல பரஸ்பரநிதியில் போட்டிருந்தால் வந்திருக்கக்கூடிய சில,பல்லாயிரங்கள் இதனால் போனது என்பது வருத்தமே.

ஆட்டத்தினைத் தோற்றாலும், ஒரு அணியாய் ஆடியதில் எக்கச்சக்க ஆச்சர்யங்கள். வழமையாய் வைடுகளை வாரி வழங்கி, எவ்விதமான கட்டுப்பாடுகளுமின்றி வரும் த்ரோக்கள் ஒவர் த்ரோவிற்கு ரன் உண்டு என்று தெரிந்தவுடன் ஒரே ஒரு முறை மட்டுமே ஒவர் த்ரோவில் ரன் கொடுத்தோம். அதிஷாவின் ஒரு ஒவர் தவிர எல்லாரும் பெரும்பாலும் வைடுகள் குறைத்தேப் போட்டார்கள். முதல்முறையாய் ஆடியவர்களின் கண்ணில் கொஞ்சமாய் வெறியும், நிறைய ஆர்வமும் தெரிந்தது. த்ரோ அடிக்கும்போது பேக்-அப் இருந்தது ஆச்சர்யம். ஒரு சில லாங் ஆன், லாங் ஆப் பீல்டிங் சொதப்பல்கள் தவிர பீல்டிங் கனக்கச்சிதம்.

ஸ்மிதேஷின் ஒபனிங் ஆட்டம், ஸ்மிதேஷ் நண்பரின் பவுலிங், கார்க்கியின் த்ரோ, வேதாளத்தின் தேர்டு மென் பீல்டிங் என நீளும் சந்தோஷங்களில், நான் விட்ட லோ கேட்ச், மேட்சினை மாற்றியிருக்ககூடிய அதிஷாவின் பந்தில் ஹரிஷ் விட்ட கேட்ச், டீப் கவர் பாயிண்டில் ஆள் இல்லாமல் விட்ட இரண்டொரு வாய்ப்புகள் என சொதப்பல்களும் அடக்கம்.
இன்னும் திருத்திக் கொள்ளவேண்டிய விஷயங்கள் ஏராளமாய் இருக்கிறது. ஆனாலும், ஒரணியாய் சடாலென மேட்ச் போட்டு ஆடியபோது இருந்த ஒருங்கிணைப்பு அபாரம்.

தனிப்பட்ட ரீதியில், என்னுடைய கீப்பிங் திறமை இன்னும் வழக்கொழியவில்லை என்பது ஆறுதல். ஸ்மிதேஷ் போட்ட முதல் ஒவரில் ஒவர் பவுன்ஸ் ஆன ஒரு பந்தினை, கால்பந்து கோல்கீப்பர் மாதிர் டாப் ஹிட்ச் அடித்து எடுத்தது, உடல் இன்னும் நியுரான்களின் பேச்சினைக் கேட்கிறது என்பதற்கு சாட்சி.

Man of the Match: சந்தேகமில்லாமல் முரளி (@JMR_CHN). முரளி தான் எங்கள் அணியின் மேனேஜர், CFOமுரளி வரும்போது தான் நாங்கள் மேட்ச் பிக்ஸ் செய்து முடித்திருந்தோம். சரியாக 11 பேர்கள் வேறு அணியில் இருந்தோம். ஆனால் எவ்விதமான ஈகோ தூக்கல்களும் இல்லாமல், மேட்ச் ஆரம்பித்ததிலிருந்து, முடியும் வரை கூடவே இருந்த உணர்வுக்கான ஒரே நன்றிக்கடன் அடுத்து ஆடும் மேட்சினை வென்று முரளியினிடத்தில் ரூ.25 கொடுப்பது தான். தான் ஆடாவிட்டாலும், சரியாக லெமன், மோர், ரோஸ்மில்க் வாங்கிக் கொடுத்த அவரின் கடமையுணர்வு, விஜயகாந்த் நாட்டினை பாகிஸ்தானிய தீவிரவாதிகளிடமிருந்து காப்பதை விட முக்கியமானது.  -

மிஸ் பண்ணியது: லக்கி, ஜவஹர், விக்கி, ராஜேஷ் பத்மநாபன், லலிதா ராம், மணிகண்டன்

இதன்மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் (முக்கியமாய் பெங்களூரில் சென்னைப் போலவே கிரிக்கெட் ஆடும் சக ஹிருதயர்களுக்கு) we are match ready now. உங்கள் கார்ப்பரேட் அலுவலக டீமோடு மேட்ச் போட்டுக் கொள்ளலாமா என்று சொல்லுங்கள். இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும், நாங்களே கார் எடுத்துக் கொண்டு வந்து ஆடிவிட்டுப் போவோம். ஆனால் எங்களுடைய பெட் அதிகமாக இருக்கக் கூடும். :)

Labels: , , ,


Comments:
நண்பர் ஒருவர் கொடுத்த பேச்சுலர் பார்ட்டிக்கு போயிருந்ததால் இந்த வாரம் மேட்சில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்தவாரம் நிச்சயம் வந்துவிடுகிறேன் தோழர்களே!
 
சூப்பர் கவரேஜ்!!

என்னை பொறுத்தவரை, நாம chase பண்ணியிருந்தா கண்டிப்பா ஜெயிச்சிருப்போம். We had a good batting depth..We are better at chasing the target than setting it

I already know we are capable of winning matches :) & we will in the coming days!!

அன்புடன்,
ksawme

http://ksaw.me
 
தூள் டக்கர்
 
LBW இல்லை எண்டது உதைப்பந்தாட்ட மைதானம் என்பதாலோ? காலாலும் அடித்து விளையாடீனீர்களோ?
 
if u all can able to come coimbatore , definatly we play with you.
 
சூப்பரா எழுதி இருக்கீங்க தலைவா.. படிக்கும்போதே நாமளா இப்படி விளையாடினோம்'ன்னு புல்லரிக்குது. சூப்பர்..
 
மூணு வாரம் @_CTCC ஆட்டங்களின் பங்கேற்பாளன் என்கிற முறையில்...

மிஸ் பண்ணியது: லக்கி, ஜவஹர், விக்கி, ராஜேஷ் பத்மநாபன், லலிதா ராம், மணிகண்டன்

...மேற்படி லிஸ்டில் என் பெயரை கருப்பு-அவுட்டு பண்ணினதுக்கு வன்மை கண்டிப்பு செய்கிறேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]