Jul 15, 2011

One spoiler is good for life

மூன்று வருடங்களுக்கு முன் "சர்வ மங்கள மாங்கல்யே ஷிவேஏஏஏஏஏஏ சர்வார்த்தா ஸ்வாதிகே” என்று போஸ்னிய பாடகி அல்மா பெர்ரொவிக் பாட தலை நிற்காத பிறந்த குழந்தைப்போல தலையாட கேட்டுக் கொண்டிருந்தப் போது தான் அரட்டைப் பெட்டியில் மோகன் வந்து அந்த குட்டி புத்தாவினை இறக்கினான் - “விது டிவோர்ஸ் பண்ணிட்டு சென்னைக்கு வந்துட்டா”

விது. வித்தார்தினி. இந்தப் பெயரை நீங்கள் எங்குமே கேட்டிருக்க மாட்டீர்கள். ஆண் குழந்தை பிறந்தால் சித்தார்த்தா என்கிற புத்தரின் பெயரை தான் வைப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்றிருந்த விதுவின் அப்பாவிடம் நர்ஸ் காட்டிய குழந்தைக்கு ஆண்குறி இல்லை. அதனால் சித்தார்த்தா, வித்தார்தினியாய், பெயரில் பெண் வேடம் பூண்டார்.

விது அண்ணா ஆதர்ஷில் பி.எஸ்.சி கணிதம் படித்தாள். நான் வைணவக் கல்லூரியில் பொருளாதாரம். என்னோடு வெவ்வேறு துறையாய் இருந்தாலும் படித்தவர்களில் இருவர் முக்கியம். ராஜீவ். விஷ்வா. ராஜீவ் பி.காம். விஷ்வா பி.ஏ - கார்ப்பரேட் செகரட்டரிஷிப். இப்போதைக்கு இவ்வளவு போதும்.

விதுவின் அப்பாவுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். அந்த கால பி.ஏ. ஹானர்ஸ். அவருடைய மொத்த உறவுகளிலேயே நான் மட்டுமே ஆடம் ஸ்மித்தின் வெல்த் ஆப் நேஷன்ஸில் வரும் இன்விசிபிள் ஹாண்ட் தியரியை விளக்குமாறு கேட்டவன். அதனாலேயே பிரியமதிகம். எப்போதாவது அவர் வீட்டுக்குப் போனால், அந்த பிரியம் தட்டு காலியானால் வந்து விழும் மூன்றாவது ரவுண்ட் தோசையில் தெரியும்.

விது காதலித்தது ராஜீவை. ராஜீவ் ஒரு மல்லு. சேட்டன். என்.சி.சியில் இருந்ததால் ஆள் ஆறடியில் புஜபல பராக்கிரமத்தோடு, இளமைக் கால கயாமத் சே கயாமத் தக் அமீர்கான் மாதிரி இருப்பான். எவ்வளவு புகைத்தாலும் கறுக்காத உதடுகள். விதுவும் ராஜீவும் காண்டீனில் இருந்தால் எங்களுக்கு எல்லாம் அன்றைக்கு ஜாக்பாட். பையன் காதல் மயக்கத்தில் எதைக் கேட்டாலும் வாங்கித் தருவான். பாக்கெட் மணியாக ஐந்து ரூபாய் கிடைத்தால் பெரிய விஷயமாய் இருந்த காலமது. கேண்டீன் தாத்தாவுக்கு அவர்கள் இருவரும் வந்து உட்கார்ந்தால் ஒரு 100-150க்கு வியாபாரம் நடக்குமென்கிற தெம்பு வந்துவிடும்.

விது இருந்தது புரசைவாக்கத்தில். கங்காதீஸ்வரர் கோவில் பஸ் ஸ்டாப்பில் ஏறுவாள். விஷ்வாவுக்கு வீடு சூளையில். எனக்கு மின்ட். முதலாமாண்டின் இறுதிவரை பாடாவதி 14ஏ அல்லது 59 ஏறி ஊர் உலகம் சுற்றி அரும்பாக்கம் போவது தான் என் ரூட். போகிற வழியில் விஷ்வாவும், விதுவும் ஏறுவார்கள். விதுவின் புன்னகை. விஷ்வாவின் ‘சரிதா எங்கே’ என்னும் விசாரிப்போடே ஒரு வருடம் போனது. சரிதா ஜுனியர் ஆர்டிஸ்ட் செய்யும் தோழி வேலையை சரியாக செய்வாள். நானும் விதுவும் பஸ்ஸில் வரும்போதோ, பார்க்கும்போதோ, தனியாய் இருக்கும்போதோ காதல் பற்றி எதுவும் பேச மாட்டோம்.

விஷ்வாவுக்கு விதுவையும், எனக்கு சரிதாவையும் பிடிக்கவே பிடிக்காது. விஷ்வா எப்போதும் தனியாய் என்னிடத்தில் ’சரியான அட்டு பிகர் மச்சி. ராஜீவ் என்னத்த பார்த்தான். சரிதா பாரு. நல்ல கேரள திமிரு. எப்படியாவது ஒரு நாள் இவள தூக்கணும்’ என்று புலம்பியிருக்கிறான். இரண்டாம் ஆண்டின் ஆரம்பத்தில் வைணவக் கல்லூரியில் ஸ்ட்ரெய்க் வந்தது. வடசென்னை மாணவர்களாகிய நாங்கள் தான் வைணவக் கல்லூரியின் முதல் ஸ்ட்ரெயிக்கிற்கு காரண கர்த்தார்க்கள். ஏதோ பிரச்சனை. ரோஷம் பொத்துக் கொண்டு கோஷம் போட்டோம். வெறும் 30 நிமிடங்கள். டி.சி தருவேன் என்றவுடன் ரோஷம் மலையேறி, கோஷம் செத்தது. கிடைத்த கேப்பில் சரக்கடிக்கப் போனோம்.

சரக்கடிக்கப் போன அரும்பாக்கம் அய்யனார் ஒயின்ஸில் விஷ்வா விதுவைப் பற்றி ஏதோ பேச, ராஜீவிற்கு கோவம் வந்த கலாட்டாவில் அதன்பின் இருவரும் பேசிக் கொள்வதேயில்லை. கைகலப்பில் முடியவேண்டியது, இரண்டு பேருமே போதையில் இருந்ததால் நண்பர்களால் திசைக்கொன்றாய் பேக் செய்யப்பட்டார்கள்.

இந்த விஷயம் எப்படியோ விதுவுக்கு போனது. விதுவின் கோவம், நான் விஷ்வாவோடு சுற்றியது. ராஜீவிற்கு ஆதரவளிக்காமல் இருந்தது. அந்த அய்யனார் ஒயின்ஸ் தகராறுக்கு பிறகு, விஷ்வாவும் ராஜீவும் ஒரு மாதிரி ஒருவரை ஒருவர் தவிர்த்து, பின் பச்சையப்பன் கல்லூரியோடு நடந்த தகராற்றில் ஒன்று சேர்ந்தார்கள். இது நடந்த ஒரு வாரத்தில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் பஸ் ஸ்டாண்டில் Dont spoil my life idiots. Get the hell out of my sight என்று விது எங்கள் இருவரையும் பார்த்து சொன்னதோடு 14 ஏ முடிவுக்கு வந்தது. என்னுடைய பஸ் ரூட் மாறி, பாரிமுனைக்கு வந்து 15 ஆர் பிடித்து மொத்த வடசென்னை கும்பலோடு ஐக்கியமாகி, கானா பாடி, கல்லூரி போனதில் மிச்சமிருந்த ஒன்றரையாண்டுகள் ஒடிப் போனது.

நடுவில் விஷ்வாவும் நானும் கொஞ்ச நாள் சரிதாவின் பின்னால் போனோம். சரிதா சரியான மலையாளச் சேச்சி. வீட்டில் ஏதாவது ஒரு சேட்டனைப் பார்த்து வைத்திருப்பார்கள் போல. தலைகுனி்ந்தே வந்தாள். போனாள். மூன்றாண்டு முடிந்தப் போது, ஏதோ கண்ணீர் விட்டாள் என்று நாங்களிருவருமே கற்பனை செய்து கொண்டோம். விஷ்வா என்னை விட தீவிரமாய் இருந்தான். நான் அப்போது வேறொரு காதலில் தீவிரமாய் இருந்ததால், சரிதா பற்றி எவ்விதமான சிந்தனையும் இல்லை. முக்கியமாய், விஷ்வாவோடு சுற்றியதற்கு காரணம், விஷ்வாவின் யமஹா RX 100.

பேர்வெல்லின் போது மட்டும், ராஜீவோடு ஒரு முறை விதுவை பார்க்கப் போயிருந்தேன். அவள் பார்த்த பார்வையில் இருந்த வன்மமும், கோவமும் ‘எதுக்கு இவனை கூட்டிட்டு வந்தே’ என்கிற அளவில் இருந்தது. கல்லூரி முடிந்ததும், விது-ராஜீவ் காதல் வழக்கமான காதல் போல குடும்ப பிரச்சனைகளால் காணாமல் போனது.

பக்கத்து வீட்டிலிருந்து பேராசிரியர் பன்னீர்செல்வம் [இப்போது அவர் முனைவர். பன்னீர் செல்வம்] மூலம் விது அப்பா எனக்கு சொல்லியனுப்பியிருந்தார். போனால், விதுவை காணோம்.

“வாடா, விதுவை மச்சினன் பெங்களூர் கூட்டிண்டு போயிருக்கான். ஏதோ கம்யூட்டராம். படிச்சா அவன் வேலை பார்க்கற கம்பெனில சேர்த்துப்பாளாம், ஏதோ அமெரிக்கான்னு சொல்றா. எனக்கு ஒண்ணும் புரியலை. நீங்க அனுப்புங்கோ நான் பார்த்துக்கறேன்னு மச்சினன் சொன்னான், அனுப்பிட்டேன், எல்லாம் பகவான் படியளக்கணும். இது எதையோ உளறிண்டே போச்சு. காலாகாலத்துல ஒரு கால்கட்டு போட்டா, என் கடமை முடிஞ்சதுனு மந்த்ராலயம் போயிட்டு வரணும்” என்றார்.

ஏதோ நடந்திருக்கிறது ஆளை பார்சல் செய்து மாமா தன்னுடைய அப்பனின் கடமையை நிறைவேற்றிவிட்டார் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. நான் பேசுவதற்கு வாய்ப்பே இல்லாமல், அவர் பேசுவதை மட்டுமே கேட்டுவிட்டு, ஆமா மாமா நீங்க சொல்றது கரெக்ட் என்று சொன்னப் போதுதான் எதுவுமே வீட்டில் தரவில்லை என்று உறைத்தது. அத்தோடு முடிந்தது.

விது பெங்களூர் போனதை சொன்னதும், ராஜீவ் தாடி வளர்த்தான். என் சாதி பெயர் சொல்லித் திட்டினான். இருந்தாலும் டீ வாங்கிக் கொடுத்தான். ஐடிசிக்கு வருமானத்தினை ஏற்றினான். போதையேறிய ஒரு நாள் இரவு 11 மணி வரை, கல்லூரி எதிரே இருந்த டீக்கடையில் புலம்பி விட்டு ஜீன்ஸில் வாந்தியெடுத்தான். விஷ்வாவின் யமஹாவில் டிரிப்ள்ஸ் அடித்து அண்ணாநகரில் வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்த போது, நான் சாகப் போறேன் என்றான். அடுத்த ஆறு மாதங்களில் க்ளீன் ஷேவ் அடித்து, டேராடூன் இந்திய மிலிட்டரி அகாதமியில் சேர்ந்தான்.

இரண்டு வருடங்களில் விதுவின் வீட்டிலிருந்து மூலையில் மஞ்சள் தடவி, உபயகுசலோபரி இப்பவும் நாளது ______ வருஷம் என ஆரம்பித்து பத்திரிகை வந்தது. ராஜீவினை ஏமாற்றிய கோவத்தில் போகவில்லை. இதில் ராஜீவும் அந்நேரத்தில் எங்களை தலை முழுகியிருந்தான். ஒசியில் கிடைக்கும் என்று நினைத்திருந்த மிலிட்டரி சரக்கும் வராத ஆத்திரத்தில், பத்திரிக்கையை கிழித்துப் போட்டு, பானாசோனிக் பாக்ஸ் மெஷின் விற்றுக் கொண்டிருந்தேன். விஷ்வா ஆர்பிஜி செல்லூலாரில் சேர்ந்து, அவ்வப்போது பேசுவான். பேச்சு சரிதா, விதுவிலிருந்து விலகி, மச்சி இரண்டு கனெக்‌ஷன் கொடேன், டார்கெட் முடிக்கணும் என்ற நிலைக்கு வரும்போது, போன்கால்கள் குறைந்தன.

வருடங்களோட, விது, விஷ்வா, ராஜீவ் எல்லாம் பெயரளவில் மட்டுமே நினைவிலிருந்தார்கள். ராஜீவ் இப்போது மேஜராகவோ, உப மேஜராகவோ ஏதோ வாயில் நுழையாத வடகிழக்கு மாநிலத்தில் மிலிட்டரி ரம்மும், ராஜஸ்தானி மனைவியுமாக இருக்கிறான் என்று கேள்வி. விஷ்வாவோடு 2003 வரைக்கும் தொடர்பிருந்தது. மோகன் இறக்கிய குண்டு ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் அதிர்வோடு இருந்தது. பத்தாவது நிமிடத்தில் பார்கலேஸ் வங்கியின் EMI கட்டாத போன் காலில் விது காணாமல் போய், வெட்கமின்றி பொய் சொன்னேன்.

நிற்க. மூன்று மாதங்களுக்கு முன் என் நெருங்கிய கல்லூரித் தோழன் செல்வா திடீரென செத்துப் போனான். இறுதி ஊர்வலத்தில், பேசிய போது தான், எல்லாரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைத்தோம். லிங்க்டின், பேஸ்புக் என தேடியதில், பேஸ்புக்கில் கிடைத்தான் - விஷ்வா.

இடம்: பஹ்ரைன்
வேலை: மேனேஜர் - டவர் மேனேஜ்மெண்ட், ஸெயின் பஹ்ரைன்
கல்யாணம்: ஆகிவிட்டது
குழந்தைகள்: 2
பொழுதுபோக்கு: படிப்பது, கிரிக்கெட், பாட்மிட்டன்
போட்டோ ஆல்பம் போய் பார்த்தால், விஷ்வா, ஒரு கைக்குழந்தையுடன் விது. கூடவே ஒரு பையன் முறைப்பாய்.

Mrs.Vidhu, one spoiler is good enough for your life!

Labels: , , , ,


Comments:
Good one :)

//ஆமா மாமா நீங்க சொல்றது கரெக்ட் என்று சொன்னப் போதுதான் எதுவுமே வீட்டில் தரவில்லை என்று உறைத்தது. அத்தோடு முடிந்தது.

Liked this line very much.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]