Aug 24, 2011

மூவர் உயிர் காக்கும் பொதுக்கூட்டம் - தொகுப்பு

3 பேர் உயிர் காக்கும் பொதுமக்கள் திரள் பொதுக்கூட்டம் நேற்று (21-ஆகஸ்ட்) இரவு எம்.ஜி.ஆர் நகரில் நடைப்பெற்றது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, இதுவரைக்கும் 20 வருடங்களை சிறையிலேயே கழித்திருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மீதான தூக்குத் தண்டனையை உறுதி செய்திருக்கக் கூடிய சூழலில் இந்த கூட்டம் நடைப்பெற்றது. இதுவரைக்கும் எத்தனையோ அரசியல் கூட்டங்களுக்கு நண்பர் அரவிந்தன் அழைத்திருக்கிறார். ஆனால் நான் போனதேயில்லை. இது உயிர் பிரச்சனை. அதனால் எவ்வளவு தாமதமானாலும் போக வேண்டுமென்கிற வைராக்கியத்தோடு இருந்தேன். வேலைகள் முடிந்து எம்.ஜி.ஆர் நகர் அடைய 9 ஆனது. கூட்டம் 7.30 மணிக்கே தொடங்கிவிட்டதாக சொன்னார்கள்.

தமிழருவி மணியன் பேச ஆரம்பித்திருந்தப் போது தான் உள்ளே வந்தேன். மணியனின் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். அதே சரளம் பேச்சிலும். தெள்ளத் தெளிவாக, தமிழை கணீரென உச்சரிக்கும் போக்கு சீர்காழி கோவிந்தராஜனுக்கு பின்னால் போய்விட்டதென்று நினைத்துக் கொண்டிருந்தேன். மணியன் காப்பாற்றி விட்டார். உலக நாடுகள் எத்தனை மரணத் தண்டனையை எடுத்து விட்டன, இந்த மூவர் வழக்கில் அரசு தரப்பில் சொல்லப்பட்ட பொய் செய்திகள், நீதியரசர் கிருஷ்ணய்யர் முன் வைத்த கோட்பாடு [ஒரு கொலைக்கு தண்டனையாக அரசே ஒரு கொலையை முன்வைக்குமானால், அந்த சட்டம் எதற்கு. குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புவது திருந்தவே, பரலோகம் என பயம் காட்ட அல்ல], நீதியரசர் பகவதி உள்ளிட்ட சட்டம் தெரிந்தவர்கள் இந்த வழக்கினைப் பார்த்த விதம், மத்திய அரசின் தெள்ளத் தெளிவான குற்றப்பார்வை என அடுக்கிக் கொண்டேப் போனார். கேட்டதில் மெய் மறந்து நின்ற பேச்சு. ஆதாரங்களும், ஆவணங்களுமாக அவர் சொன்ன ஒரு விஷயம், ஒரு குற்றத்திற்காக மரணத்தினை சட்டமே முன்வைத்தால், அது judicial murder. நீதியின் கொலை.

கொளத்தூர் மணி. மணி அண்ணனை பற்றிய அறிமுகமும் அரவிந்தனை தந்திருந்தார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனைப் பெற்றிட்ட 19 பேர்களை உச்சநீதி மன்றம் நிரபராதி என்று விடுவித்தது. இப்போது நீதியரசராக இருக்கும் சந்துரு தான் அதற்காக வாதாடி, வெற்றி பெற்று, வெளியில் கொண்டு வந்தார். கொளத்தூர் மணியின் பேச்சில் முக்கியமாக சொல்லப்பட்டது ‘ஒப்புதல் வாக்குமூலம்’. தடா சட்டமே காலாவதியாகி, அதை முன்வைத்து சொல்லப்பட்ட அத்தனை கூறுகளையும், உச்சநீதிமன்றம் தவிடு பொடியாக்கிய பின்னரும், தடா சட்டத்தின் அடக்குமுறையினாலும், சித்ரவதையினாலும் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தினை வைத்துக் கொண்டு தான் இந்த மரணத் தண்டனையை விலகவில்லை என்பது கோரமான உண்மை. தன் வாழ்க்கையிலேயே, தான் சிறையில் இருக்கும்போது, புலிகளுக்கு வேலூரில் தங்க இடமும், உணவும், வண்டியேற்றலும் செய்ததாக ‘ஒப்புதல் வாக்குமூலம்’ அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். கொளத்தூர் மணியும், உலகளாவிய அளவில் மரணத் தண்டனை தடை செய்யப்பட்ட நாடுகள் பற்றியும், அமெரிக்கா இன்னமும் மரணத் தண்டனையை வைத்திருந்தாலும், அங்கிருக்கும் 13 மாநிலங்களில் மரணத் தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், மரணத் தண்டனை ஒழித்த நாடுகளில் குற்றங்கள் குறைந்திருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அற்புதம் அம்மாள். பேரறிவாளனின் தாயார். அறிவார்ந்திருந்த கூட்டத்தில், உணர்வு மயமாகவும், குறைவாகவும் பேசியவர் இவரே. கூட்டம் உச்சு கொட்டாத குறையாய் அந்த தாயை கவனித்தது. அவர் தன் மகன் நிரபராதி என்பதையும், இது ஒரு அநியாயமான / அக்கிரமமான தீர்ப்பு என்பதையும் திரும்ப திரும்ப வலியுறுத்தினார்.

பழ.நெடுமாறன். கூட்டத் தலைவர். ஒருங்கிணைப்பாளர். ஆரம்பிக்கும் போது பேச்சு மிகச் சாதாரணமாக இருந்தது. 20 வருடங்களாக ராஜீவ் கொலை வழக்கின் வரலாற்றையும், அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மீட்ட கதையையும் விலாவரியாக சொன்னார். நடுநடுவே கலைஞர் கருணாநிதியை மறக்காமல் இடித்துரைத்தார். நெடுமாறன் சொன்னதில் முக்கியமானது, 1999ல் நால்வருக்கு [நளினி உட்பட்டு] மரணத் தண்டனை உறுதியானபின், தமிழர் பாதுகாப்பு பேரவையின் சார்ப்பாக யார் யாரோடெல்லாம் பேசினார்கள். நீதியரசர் நடராஜனை எவ்வாறு அணுகி இந்த வழக்குக்கு வாதாட வைத்தது, பின்னால் அதை நீதியரசர் சந்துரு மேற்கொண்டது, டெல்லியில் நடத்தப்பட்டப் பேச்சு வார்த்தைகள், இரண்டு ஜனாதிபதிகள் எப்படி இந்த கருணை மனுவினை பின்னால் தள்ளினார்கள், அதன் மூலம் சொல்லாமல் சொல்லப்பட்ட செய்திகள், தற்போது ஐ.மு.கூயின் இரண்டாம் ஆட்சியின் போது எப்படி பிரதீபா பாட்டீல் அந்த மனுவினை நிராகரித்தார், அதன்பின் வை.கோ முதலானவர்களை தொடர்பு கொண்டு உள்துறை அமைச்சகத்தோடு [ப.சிதம்பரம்] பேசிய விவரங்கள், பின் நிராகரிப்பு என முழு வரலாறையும் சொல்லி முடித்தார். சொல்லி முடித்த கையோடு, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆரவாரத்தோடும், கரவோசையோடும் ஒரு மனதாக ஏற்கப்பட்டது.

நெடுமாறனின் பேச்சில் கூட்டம் ரசித்தது. “ என்னுடைய நண்பர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு, சேலத்துல எம்.பி போட்டிப் போட்டு தோத்தாரு. மயிலாப்பூர்ல எம்.எல்.ஏ போட்டிப் போட்டு தோத்தாரு. இனி வரப்போற உள்ளாட்சி தேர்தல்ல போட்டியிட்டாலும் தோப்பாரு. காங்கிரஸுன்னு ஒரு கட்சி தமிழ்நாட்டுல செத்துப் போச்சுங்கறதை கூட தெரிஞ்சுகாம அவர் கட்சி தலைவரா இருக்காரு”

வை.கோ. கடைசியாக நான் வை.கோ பேசிக் கேட்டது 2001இல் ஒரு தெருமுனைக் கூட்டத்தில். பத்து வருடங்கள் கழித்து மீண்டும். மிக கோவமாக ஆரம்பித்த பேச்சு. காந்தி, நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயண், அம்பேத்கர் என மேற்கோள் காட்டிய பேச்சு. அப்படியே கோத்தபய ராஜபக்‌ஷேவின் மீது தாவியது. இலக்கியத் தமிழில் பேசிக் கொண்டிருந்தவர், அப்போது தான் பேச்சுத் தமிழுக்கு மாறி, கோத்தபய-வின் பேச்சினையும், அதன் திமிரையும், அரசியலையும் பின்னி பெடலெடுத்தார். அங்கே ஆரம்பித்தது கர்ஜனை. vintage வை.கோ.

“மத்திய சர்க்காருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த மூவரின் மீது அநியாயமாக சுமத்தப்பட்ட இந்த ஜோடிக்கப்பட்ட வழக்கு, தண்டனையிலிருந்து விலக்களி. இல்லையேல், 1947ல் சுதந்திரம் வாங்கி 2047இல் நூற்றாண்டு விழா கொண்டாடும்போது தமிழ்நாடு என்கிற மாநிலம் இந்திய இறையாண்மையோடு இணைந்திருக்காது”

“நான் பார்ததுலயே கல்லுனி மங்கன். நம்மோட பிரதமர். டாக்டர் மன்மோகன் சிங் தான். போய் கேக்கறோம், மனுவை வாங்கிட்டு, மெதுவா ”i will refer this matter to home ministry" என்று சொன்னார். இதுக்கு நீங்க எதுவும் சொல்லாமயே இருந்திருக்கலாமே. சரி போகட்டும்னு உள்துறை அமைச்சகம் வந்தேன். சிதம்பரத்தை 7 வருடங்கள் கழித்து பார்க்கறேன். பிரதமர் கல்லுனி மங்கன்னா, இந்த காரைக்குடி ஆளு அதை விட பெரியாளு. நானும் கணேசமூர்த்தியும் போனோம். பேசினாரு. ஒரு குற்றவாளிக்கு என்ன தண்டனை குடுத்திருக்காங்களோ, அது தான் எல்லாருக்கும் வரும். குத்தம் ஒண்ணுதானேனு பேசினாரு. நளினிக்கு மரணத் தண்டனை, ஆயுளா மாறினதால, இந்த மூணு பேருக்கும் மாறிடும்னு நம்பிகையோட வெளியே வந்தோம். ஆனா நம்ம ஆளு, உள்ள இருந்தே கெடுத்தாரு”

”ஜெயவர்த்தனே டெல்லியில், மத்திய சர்க்காரின் விருந்தாளியாய் வந்து Who is this MGR என்று கேட்ட மறுநாள், பாராளுமன்றத்திலே அதை எதிர்த்து கேள்விக் கேட்டவன் நான். எம்.ஜி.ஆர். என் மாநிலத்தின் முதலமைச்சர். அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி. ஜெயவர்த்தனேயின் அத்தகைய பேச்சு ஒப்புக் கொள்ள தக்கதல்ல."


நண்பர்களே, அந்நாளில், நான் அ.தி.மு.க வுக்கான எதிர் கட்சியில், மிகத் தீவிரமாய் அதிமுகவினை எதிர்த்து அரசியல் செய்தவன் என்பதை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.”

“டெல்லி அரசுக்கு சவால் விடுகிறேன். இது 1991 அல்ல. இது 2011. இனி எங்கள் ஊரில் முத்துகுமாரன்கள் தங்களுக்கு தீ வைத்துக் கொள்ள மாட்டார்கள். தமிழ் மக்களின் மன உணர்வுகள் புரியாமல் அடக்க நினைத்தால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு தீ வைப்பார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தில் சொல்லுகிறேன். இந்த மூவரின் உயிருக்காக யார் காலில் வேண்டுமானாலும் விழத் தயாராக இருக்கிறான் இந்த வை.கோ”

கிட்டத்திட்ட 45 நிமிடங்கள் வை.கோ பேசியிருப்பார். அத்தோடு கூட்டம் நிறைவுற்றது.

முக்கியமாய் எல்லோரும் பேசிய பேச்சின் சாரம்;
இப்போதைக்கு இந்த பாசக் கயிற்றின் முனை தமிழக அரசிடம் இருக்கிறது. அதை இறுக்குவதா, இறக்குவதா என்பதை ஜெ. தலைமையிலான அரசு தான் முடிவு செய்ய வேண்டும். 10 கோடி தமிழர்களின் எதிர்பார்ப்பாகவும் இதைக் கொள்ளலாம்.

தனிப்பட்ட அளவில், மரணத் தண்டனையை தடுத்து நிறுத்துவதன் மூலம், அரசுக்கு இரட்டை லாபம். ஜெ.யின் முந்தைய அரசில் தர்மபுரியில் மூன்று மாணவிகள் பஸ்ஸோடு வைத்து கொளுத்தப்பட்டதன் தீர்ப்பும் மரணத் தண்டனையே. ஆக, ஒரு பக்கம் தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஈழப் போராளிகள். இன்னொரு பக்கம் கட்சி தொ(கு)ண்டர்களின் உயிர். இந்த இரண்டையும் மனதில் கொண்டு, சுயநலத்திற்காகவாவது ஜெ. மரணத் தண்டனைக்கு எதிராக முடிவெடுப்பார் என்று நம்புகிறேன். இதில் நிறைய சுயநலங்கள் இருந்தாலும் அதில் பொது நலமும், முக்கியமாய் பொதுமக்களின் உணர்வுகளின் மீதான மரியாதையும் கலந்திருக்கிறது.

காத்திருப்போம்.

ஆச்சர்யம்: கூட்டம் இறுதிவரை கலையவே இல்லை. வை.கோ வின் பேச்சைக் கேட்டு முடித்தபின் பிளாஸ்டிக் நாற்காலிகளை எல்லாரும் அடுக்கியது

உறுத்தல்: கலைஞர் கருணாநிதி தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இந்த பிரச்சனையில் தவறே கூட செய்திருக்கலாம். ஆனால், அதை குத்திக் காட்டுதல் நாகரீமன்று. நமக்கு தேவை எல்லா கட்சிகளின் ஆதரவும், தமிழகம் முழுமைக்கான ஒரு குரலும். இன்றைக்கு நக்கலடிக்கப்படும் இதை கலைஞர் தான் தமிழ்செல்வனுக்கு இரங்கல் கவிதை பாடினார் என்பதை நினைவில் கொள்க.

சுவாரசியம்: வை.கோ பேச ஆரம்பித்தப் போது, நேரமாகி விட்டதால் [அப்போது மணி 11] மைக் இருந்த மேடையை கீழேக் கொண்டு போக, முன்னாடி வைக்கப்பட்ட ஒற்றை மைக்கில் தானே உயரத்தையும், தூரத்தையும் சரி செய்துக் கொண்டு, தோளில் போட்டிருந்த துண்டு கீழே விழாமல் பேசியது.

சொந்த கடுப்பு: உணர்வு சார்ந்த இந்த கூட்டத்திற்கும் ‘டைட்டாய் சரக்கேற்றிக்’ கொண்டு கப்படிக்க பக்கத்தில் நின்றிருந்த ஒரு புண்ணியவான்.

Labels: , , , , ,


Aug 4, 2011

அனாவஸ்யமா பேசாதீங்கோ

”நீங்க விளையாடி உடைச்சதுக்கு நாங்க திட்டு வாங்கணுமா. நான் எங்கம்மா மாறி இல்லை. எதையும் பட்டுன்னு கேட்டுருவேன். எங்கம்மா மாறி மூஞ்சியை தூக்கி வைச்சிண்டு, மூக்கு சிந்திண்டு இருக்க மாட்டேன். just behave yourself" 

விஷயம் இதுதான். நாங்கள், அதாவது நானும், என் நண்பர்களும் மொட்டை மாடியில் கிரிக்கெட் ஆடியபோது சுனில் கவாஸ்கராய் நினைத்தடித்த ஸ்கொயர் கட்டில், புகைப் போக்கி கண்ணாடியில் ஒரு சில்லு உடைந்தது. நாங்கள் கமுக்கமாய் கீழிறங்கி வெளியேறினோம். இது நடந்த மூன்றாவது நாள் யாருமில்லாமல் என் அறையில் ஏ.ஆர் ரஹ்மான் என்கிற புது இசையமைப்பாளனை கேட்டுக் கொண்டிருந்தப்போது தான் இந்துமதி என் அறை வாசலில் வந்து மேற்சொன்னதை கோவமாய் சொன்னாள்.

இந்துமதி. இந்து.

கோமளா மாமியின் ஒரே பெண். கோமளா மாமி எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர். என் அம்மாவிற்கும், கோமளா மாமிக்கும் ஆகவே ஆகாது. வழக்கமான வீட்டுக்காரம்மாவிற்கும், குடித்தனக்காரர்களுக்குமானப் பிரச்சனை.

ஏன் தண்ணீர் அதிகமாய் செலவழிக்கிறீர்கள் ? ஏன் ரேழியில் விளக்கு இரவில் எரிந்துக் கொண்டேயிருக்கிறது ? மொட்டை மாடியில் எதற்காக இன்னொரு கொடி கட்டி துணி காயப் போடுகிறீர்கள் ? ஏன் டிவி சத்தம் பெரியதாய் இருக்கிறது ? ஏன் வெளியாட்கள் அதிகமாக வருகிறார்கள் ? ஏன் துணி பிழியும் தண்ணீர் கொடியின் வழியே கீழே சொட்டுகிறது ? வற்றல் காயப் போட்டால், மொட்டை மாடியை ஏன் சுத்தப்படுத்தவதில்லை, காலில் பொத்துகிறது ? காலையில் கோலம் போட பயன்படுத்தும் தண்ணீர், சொட்டி, கீழே போட்டிருக்கும் தினந்தந்தி ஈரமாகிறது. எத்தனை தடவை சொல்லுவது ? ’தூரமானால்’ வீட்டுக்குள்ளேயே ஏன் இந்துமதி இருக்கிறாள், நாங்கள் ஆச்சாரமானவர்கள், நீங்கள் ஏன் ________ மாதிரி இருக்கிறீர்கள், எல்லாவற்றையும் தொடுகிறீர்கள் ? மொட்டை மாடியில் இருக்கும் கற்பூர முல்லை செடியில் இருந்து இலையை யார் கிள்ளியது ? ஒழுங்காய் ஏன் வாசலைப் பெருக்குவதில்லை, எறும்பு புற்று இருக்கிறது ?

எல்லா கேள்விக்கும் கோமளா மாமியின் ஒரே பதில் இது தான். ‘அனாவஸ்யமா பேசாதீங்கோ மாமி” என்றவுடன், கண்ணில் சீரியல் நாயகிகள் போல கண்ணீர் வரும். ஒன்பது கஜ புடவையின் முந்தானை கையில் வந்து, மூக்கினைப் பொத்திக் கொண்டு விசும்ப ஆரம்பிப்பாள். பின்னால், என் அம்மாவின் மீது கோவத்தோடு இந்துமதி நிற்பாள். என்னை விட 5 வயது பெரியவள். நீ வாம்மா என உள்ளே கூட்டிக் கொண்டுப் போவாள்.

உள்ளே போனவுடன் புலம்பல் ஆரம்பிக்கும். ‘பிரம்மஹத்தி பிராமணன். என்னை இந்த நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டார். கண்டவா கிட்ட ஏச்சும் பேச்சுமா கிடந்து அல்லாடறேன். ஒரு கேப்பாருண்டா. யாரும் சரியில்லை. கேக்கறதுக்கு எனக்கொரு நாதியிருக்கா. பொண் ஜன்மமா பொறந்து நான் படற அவஸ்தை, பெருமாளே, இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டு, என்னை அழைச்சுண்டு போயிடு. இவாளாண்ட சிக்கி சீரழியறதுக்கு ஒரேடியா போய் சேர்றது மேல்’

கோமளா மாமி, ஐந்து வீடுகள் தள்ளி இருந்த ஒரு கண்ணாடிக் கடைக்கார ஐயர் மாமாவின் ‘தொடுப்பு’ என்றும், இந்துமதி அதில் பிறந்த மகள் என்பதும் ஊரறிந்த ரகசியம். எங்கள் வீட்டுக்கு குடிவந்தபின், ஒரு நாள் கூட ஐயர் மாமா வீட்டுக்கு வரவில்லை. மாமிக்கான பணம் ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கியில் போடப்படும். மாமி இவ்வளவு புலம்பி விட்டு, மெதுவாய் ‘டீ இந்து, அவராண்டப் போயி கொஞ்சம் பணம் வாங்கிண்டு வா. அடுத்த வாரம், அமாவாசை, அவர் அவரப்பாக்கு தெவசம் பண்ணணும். அவாளாத்துல பட்சணம் செய்யமுடியாது. இங்க தான் செய்யணும்.’. இந்துமதிக்கு அவள் அப்பா பிடிக்குமா இல்லையா என்று இன்று வரைக்கும் எனக்கு தெரியாது. ஆனால் ஆண்கள் மீது ஒரு விதமான வெறுப்பு இருந்தது. என்னையே பல சமயங்கள், தெருநாயைப் பார்ப்பதுப் போல தான் பார்ப்பாள். இந்துமதிக்கு அதனாலேயே தன் அம்மாவின் மீதும், என் அம்மாவின் மீதும் கோவம்.

நான் அப்போது பி.டி.சாமியின் கதைகளைப் படிக்க ஆரம்பித்திருந்தேன். பி.டி.சாமியின் கதைகளில் வரும் மோகினிகளின் வழியே தான் என்னுடைய ஆரம்ப கால பெண் objectification ஆரம்பித்தது. மோகினிகள் அழகானவர்கள். பெரும்பாலும் இரவில் வருவார்கள். வெள்ளை சேலை தான் முழு நேரமும். அதுவும் உள்ளிருக்கும் ப்ளவுஸ் தெரியும், ட்ரான்ஸ்பரண்ட் சேலைகள். அவர்களின் ஜாக்கெட்டுகளும் பெரும்பாலும் வெள்ளையாகத் தான் இருக்கும். கொலுசு சத்தமும், வாசமும் தான் மோகினியின் அடையாளங்கள். மதர்த்த மார்புகளும், தாழ்வான தொப்புள் தெரியும் சேலையும், நீர்வீழ்ச்சியாய் இறங்கும் ஷாம்பூ போட்ட கூந்தலும், மல்லிகைப் பூ வாசமுமாக தான் மோகினிகள் வருவார்கள். அவர்களுக்கு கால்கள் இருக்குமா இருக்காதா என்கிற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. பிடி சாமி மோகினிகள் போடும் பிராக்கள், உள்பாவாடைகள் பற்றி எழுதியதே இல்லை. மார்க் & ஸ்பென்சரும், ராசாத்தி நைட்டியும் இல்லாத காலக்கட்டம் அது. அவர்களோடு கூடவே எப்போதும் கொஞ்சம் புராணப் படங்களில் போடப்படும் புகையும் வரும். இவ்வாறாக தான் பெண் உடலும், சம்போகமும் எனக்கு அறிமுகம்.

இந்துமதி கிட்டத்திட்ட மோகினி. கொலுசு சிணுங்கும் சத்தம், குறுஞ்செய்தி வருவதின் சத்தம் போலிருக்கும். மல்லியோ, ரோஜாவோ எப்போதும் இருக்கும். மாடர்னனாப் பெண்ணாய் இருந்தாலும், அவ்வப்போது தாவணி தரிசனங்களும் தருவாள். மாலை கோவிலுக்குப் போய்விட்டு வரும்போது பெரும்பாலும், இருட்டான படிக்கட்டுகளில் சந்திப்போம். என் கண்கள் போகும் திசைக்கும், அவள் கண்கள் போகும் திசைக்கும் சம்பந்தமேயிருக்காது. இந்த மாதிரியான மாலை நேர படிக்கட்டு சந்திப்புகளில் சில சமயங்கள் லேசான புன்முறுவலும், எப்போதாவது வெட்கமும், பெரும்பாலான சமயங்களில் சலனமில்லாத முகமும் தெரியும். கொலுசு சத்தம் கேட்டு, வேண்டுமென்றே வேகமாய் இறங்கி வந்து, இடிக்காமல் முகம் பார்த்து ‘சாரி’ சொல்லும் குசும்புத்தனம் உடல்முழுவதும் ஊறியிருந்தது. சடாலென, படையப்பாவில் வேல் பார்த்து ‘ஏர் ப்ரேக்’ அடிக்கும் காளைக்கு இணையாக, சரியாக இருவருக்கு இடையில் ஒரு ஜான் மட்டுமே இடைவெளியோடு, நிற்க கற்றுக் கொண்டேன். பிடி சாமியின் மோகினிகள் உடல் முழுக்க விரவி இம்சித்த காலம்.

இந்துமதி துணி எடுக்க மொட்டை மாடிக்குப் போகும் நேரம் பார்த்து, ஷார்ட்ஸ் அணிந்து, இல்லாத பாடியை முறுக்கேற்ற மாடிக்கு போவேன். துணி எடுக்கும் போது மெல்லியதாய் பாட்டு கேட்கும். பாட்டுக் கேட்டுக் கொண்டே, இரண்டு செங்கல் நிறுத்தி, கட்டைச் சுவற்றில் கால்வைத்து புஷ் அப்ஸ் எடுக்கும்போது பார்வை, தயங்காமல் இந்துவின் இடுப்பில் இருக்கும். அம்மாவிடம் எனக்கு பயம் அதிகம். இந்துமதிக்கோ என் அம்மாவைக் கண்டாலே ஆகாது. ஆனாலும், இந்த crush ஒரு ஒரமாய் ஒடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் தான் கதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட வசனத்திற்கு போகவேண்டும்.

புயலடித்ததுப் போல வெறும் 2 நிமிடங்கள். சொல்லிவிட்டுப் போய்விட்டாள். முதலில் எனக்கு கடுங்கோவமும், பின்பு ஒரு மாதிரி மகிழ்ச்சியும் வந்தது. கோவம், என் தவறினை சுட்டிக்காட்டியது. மகிழ்ச்சி, இதுநாள் வரை ஒரு வார்த்தைக் கூட பேசாதவள், என்னோடு பேச ஆரம்பித்தாள் என்பது. மெதுவாய் தைரியம் வந்து, அடுத்த நாள் மாலை துணி எடுக்கும்போது பேச ஆரம்பித்தேன். முதலில் என்ன பேச்சு வேண்டியிருக்கு என்று பார்த்தவள், கொஞ்சம் கொஞ்சமாய் பேச ஆரம்பித்தாள். மோகினியாட்டம் ஆரம்பித்தது. உள்ளே குறுகுறுவென்று இருக்கும். என் வீட்டில் யாருக்கும் தெரியக் கூடாது. ஆனாலும் பேச வேண்டும். பேச்சு ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் சைகை பரிபாஷைகள் பழகினோம். நான் என் ரூமே கதியென்று கிடந்தேன். அப்போது தான் ‘நான் மேலேப் போய் படிக்கிறேன்மா’ என்று சிக்னல் கொடுத்து மேலே வருவாள். நானும், கிரிக்கெட் ப்ராக்டீஸ் பண்ணுகிறேன் பேர்வழி என்று கதைப் பண்ணிக் கொண்டு மொட்டைமாடிக்குப் போக ஆரம்பித்தேன்.

மொட்டை மாடியில் empty nothings ஆரம்பிக்கும். அந்நாளில் எனக்கு தேவைப்பட்டது ஒரு பெண்ணின் சிநேகம். என்னோடும் பெண்கள் பேசுவார்கள், எனக்கும் ‘ஆள்’ இருக்கு என்று காண்பித்துக் கொள்ளத் தேவைப்பட்ட ஒரு துணை. இந்துமதிக்கு பேச ஆளே இல்லை. அம்மா, விட்டால் டூடோரியல் சென்டர், காசு வாங்க மட்டும் அப்பா; டிவி, ஆனந்தவிகடன், கோலம், துணிகள். பேச ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் பேச்சு காதல், கல்யாணம் என்று போனது.  அதற்கு ஏதுவாய், கோமளா மாமியும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தாள். ஜமுக்காளம், வெள்ளி டம்ளர் முதற்கொண்டு எல்லாம் என் வீட்டிலிருந்துப் போகும். அம்மாவின் கவலை தன் வீட்டிலும் ஒரு பெண் இருக்கிறாள். அதனால் உதவுவோம் என்பதாகக் கூட இருக்கலாம்.

கொத்தவால்சாவடியில் கணக்கு எழுதுபவரில் ஆரம்பித்து, டிவிஎஸ், சுந்தரம், ஹிந்து என தடிதடியாய் மாமாக்கள் வந்துப் போக ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு முறை வந்துப் போனபின்பும், நானும் இந்துவும், மொட்டை மாடியில் மாப்பிள்ளைகளை நக்கலடிப்போம். என் விரல் கூட இந்துவின் மேல் பட்டதில்லை. தமிழ் சினிமாவின் சாந்தி முகூர்த்தங்கள் வெறும் விளக்கணைப்பதும், திரியினை உள்ளிழுப்பதுமாக காட்டப்பட்டிருந்த காலம்.

ஒரு நாள் ஒருவர் வந்து, எல்லாம் ஒரு மாதிரி செட்டாகி இருந்த நேரம். மழை வருவதுப் போல இருந்ததால், இந்துவும், நானும் துணிகளைப் பொறுக்கிக் கொண்டு கீழிறங்கலாம் என்னும் போது, என் அம்மா மேலே வருவதுத் தெரிந்தது. எங்களிருவரையும் ஒன்றாகப் பார்த்தால், மீண்டும் விளக்குமாறோச்வம் ஆரம்பிக்கும். அதனால் மொட்டை மாடிக்கு பக்கத்தில் இருந்த ஸ்டோர் ரூமுக்குள் பதுங்கினோம்.

முதல் முறையாய், தூறலில் நனைந்திருந்த கூந்தல், அருகாமை, வெளியே அப்போது தான் ஆரம்பித்த மழை என கலவையாய் இருக்க, நான் மெதுவாய் அவள் பின்னாலிருந்து ‘எனக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்’ என ஆரம்பித்தேன். முதலில் புரியாமல், பின் புரிந்து ‘பக்கத்துல இருக்கு. நீ எடுத்துக்கலைன்னா அது யாரோட தப்பு’ என பதில் விளையாட, பிடி சாமி, மண்டையில் சாமியாட ஆரம்பித்தார். மெதுவாய் பின் கழுத்தில் முத்தம் இட்டவுடன் தான் எங்களின் சூழ்நிலை தெரிந்தது. சடாலென விலகி கீழிறங்கினாள். அது தான் நான் கடைசியாய் பேசியது. பின் நான் எதிரில் வந்தாலும் விலக ஆரம்பித்தாள். நானும் என்னுடைய முதல் காதலில் பிசியாக ஆரம்பித்தேன்.

வீட்டை விற்பதற்கு, 6 மாதங்களுக்கு முன் காலி செய்தார்கள். எங்கேப் போனார்கள், என்ன ஆனார்கள் என்று தெரியவேயில்லை. ஆனால், இந்து அவள் அம்மா மாதிரி இல்லை, கொஞ்சம் புத்திசாலி, அதனால் எங்கோ நன்றாக இருப்பாள் என்கிற உணர்வு மட்டும் இருந்தது.

ஐந்து வருடத்திற்கு முன், ஒரு நல்ல மழைநாளில் மும்பை விமான நிலையத்தில் டெக்கான் ஏர்லைன்ஸில் சென்னை திரும்ப செக்யுரிட்டி செக் முடித்து பஸ்ஸேறினேன். பின் வரிசையில் ஒரு குடும்பம். பேச்சு மட்டும் தமிழில்.

“அனாவஸ்யமா பேசாதீங்கோ. செம்பூர்லேந்து பொறப்படறச்சே நீங்க தானே எல்லாத்தையும் எடுத்து வைச்சேள். இப்ப பைலை காணோம்னு ஏன் அனாவஸ்யமா என் மேல பாயறேள். என் கொடுப்பனை உம்மகிட்ட மாட்டிண்டு அல்லாடணும்னு இருக்கு. பெருமாள் தான் உமக்கு பொறுமைய தரணும்’

‘சரிடீ எல்லாரும் இருக்கறச்சே தான் விசும்புவியோ, உங்கம்மாவுக்கு தப்பாம. உன்னாண்ட கேட்டேன் பாரு என்னை சொல்லணும்”


இந்து மாமி. ஒரே வித்தியாசம் கையில் புடவை முந்தானைக்கு பதில் துப்பட்டா.

இது ஹார்மோன் அவென்யு தொடரின் 5 வது பகுதி. முந்திய பகுதிகள் 1 | 2 | 3 | 4

Labels: , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]