Aug 4, 2011

அனாவஸ்யமா பேசாதீங்கோ

”நீங்க விளையாடி உடைச்சதுக்கு நாங்க திட்டு வாங்கணுமா. நான் எங்கம்மா மாறி இல்லை. எதையும் பட்டுன்னு கேட்டுருவேன். எங்கம்மா மாறி மூஞ்சியை தூக்கி வைச்சிண்டு, மூக்கு சிந்திண்டு இருக்க மாட்டேன். just behave yourself" 

விஷயம் இதுதான். நாங்கள், அதாவது நானும், என் நண்பர்களும் மொட்டை மாடியில் கிரிக்கெட் ஆடியபோது சுனில் கவாஸ்கராய் நினைத்தடித்த ஸ்கொயர் கட்டில், புகைப் போக்கி கண்ணாடியில் ஒரு சில்லு உடைந்தது. நாங்கள் கமுக்கமாய் கீழிறங்கி வெளியேறினோம். இது நடந்த மூன்றாவது நாள் யாருமில்லாமல் என் அறையில் ஏ.ஆர் ரஹ்மான் என்கிற புது இசையமைப்பாளனை கேட்டுக் கொண்டிருந்தப்போது தான் இந்துமதி என் அறை வாசலில் வந்து மேற்சொன்னதை கோவமாய் சொன்னாள்.

இந்துமதி. இந்து.

கோமளா மாமியின் ஒரே பெண். கோமளா மாமி எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர். என் அம்மாவிற்கும், கோமளா மாமிக்கும் ஆகவே ஆகாது. வழக்கமான வீட்டுக்காரம்மாவிற்கும், குடித்தனக்காரர்களுக்குமானப் பிரச்சனை.

ஏன் தண்ணீர் அதிகமாய் செலவழிக்கிறீர்கள் ? ஏன் ரேழியில் விளக்கு இரவில் எரிந்துக் கொண்டேயிருக்கிறது ? மொட்டை மாடியில் எதற்காக இன்னொரு கொடி கட்டி துணி காயப் போடுகிறீர்கள் ? ஏன் டிவி சத்தம் பெரியதாய் இருக்கிறது ? ஏன் வெளியாட்கள் அதிகமாக வருகிறார்கள் ? ஏன் துணி பிழியும் தண்ணீர் கொடியின் வழியே கீழே சொட்டுகிறது ? வற்றல் காயப் போட்டால், மொட்டை மாடியை ஏன் சுத்தப்படுத்தவதில்லை, காலில் பொத்துகிறது ? காலையில் கோலம் போட பயன்படுத்தும் தண்ணீர், சொட்டி, கீழே போட்டிருக்கும் தினந்தந்தி ஈரமாகிறது. எத்தனை தடவை சொல்லுவது ? ’தூரமானால்’ வீட்டுக்குள்ளேயே ஏன் இந்துமதி இருக்கிறாள், நாங்கள் ஆச்சாரமானவர்கள், நீங்கள் ஏன் ________ மாதிரி இருக்கிறீர்கள், எல்லாவற்றையும் தொடுகிறீர்கள் ? மொட்டை மாடியில் இருக்கும் கற்பூர முல்லை செடியில் இருந்து இலையை யார் கிள்ளியது ? ஒழுங்காய் ஏன் வாசலைப் பெருக்குவதில்லை, எறும்பு புற்று இருக்கிறது ?

எல்லா கேள்விக்கும் கோமளா மாமியின் ஒரே பதில் இது தான். ‘அனாவஸ்யமா பேசாதீங்கோ மாமி” என்றவுடன், கண்ணில் சீரியல் நாயகிகள் போல கண்ணீர் வரும். ஒன்பது கஜ புடவையின் முந்தானை கையில் வந்து, மூக்கினைப் பொத்திக் கொண்டு விசும்ப ஆரம்பிப்பாள். பின்னால், என் அம்மாவின் மீது கோவத்தோடு இந்துமதி நிற்பாள். என்னை விட 5 வயது பெரியவள். நீ வாம்மா என உள்ளே கூட்டிக் கொண்டுப் போவாள்.

உள்ளே போனவுடன் புலம்பல் ஆரம்பிக்கும். ‘பிரம்மஹத்தி பிராமணன். என்னை இந்த நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டார். கண்டவா கிட்ட ஏச்சும் பேச்சுமா கிடந்து அல்லாடறேன். ஒரு கேப்பாருண்டா. யாரும் சரியில்லை. கேக்கறதுக்கு எனக்கொரு நாதியிருக்கா. பொண் ஜன்மமா பொறந்து நான் படற அவஸ்தை, பெருமாளே, இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டு, என்னை அழைச்சுண்டு போயிடு. இவாளாண்ட சிக்கி சீரழியறதுக்கு ஒரேடியா போய் சேர்றது மேல்’

கோமளா மாமி, ஐந்து வீடுகள் தள்ளி இருந்த ஒரு கண்ணாடிக் கடைக்கார ஐயர் மாமாவின் ‘தொடுப்பு’ என்றும், இந்துமதி அதில் பிறந்த மகள் என்பதும் ஊரறிந்த ரகசியம். எங்கள் வீட்டுக்கு குடிவந்தபின், ஒரு நாள் கூட ஐயர் மாமா வீட்டுக்கு வரவில்லை. மாமிக்கான பணம் ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கியில் போடப்படும். மாமி இவ்வளவு புலம்பி விட்டு, மெதுவாய் ‘டீ இந்து, அவராண்டப் போயி கொஞ்சம் பணம் வாங்கிண்டு வா. அடுத்த வாரம், அமாவாசை, அவர் அவரப்பாக்கு தெவசம் பண்ணணும். அவாளாத்துல பட்சணம் செய்யமுடியாது. இங்க தான் செய்யணும்.’. இந்துமதிக்கு அவள் அப்பா பிடிக்குமா இல்லையா என்று இன்று வரைக்கும் எனக்கு தெரியாது. ஆனால் ஆண்கள் மீது ஒரு விதமான வெறுப்பு இருந்தது. என்னையே பல சமயங்கள், தெருநாயைப் பார்ப்பதுப் போல தான் பார்ப்பாள். இந்துமதிக்கு அதனாலேயே தன் அம்மாவின் மீதும், என் அம்மாவின் மீதும் கோவம்.

நான் அப்போது பி.டி.சாமியின் கதைகளைப் படிக்க ஆரம்பித்திருந்தேன். பி.டி.சாமியின் கதைகளில் வரும் மோகினிகளின் வழியே தான் என்னுடைய ஆரம்ப கால பெண் objectification ஆரம்பித்தது. மோகினிகள் அழகானவர்கள். பெரும்பாலும் இரவில் வருவார்கள். வெள்ளை சேலை தான் முழு நேரமும். அதுவும் உள்ளிருக்கும் ப்ளவுஸ் தெரியும், ட்ரான்ஸ்பரண்ட் சேலைகள். அவர்களின் ஜாக்கெட்டுகளும் பெரும்பாலும் வெள்ளையாகத் தான் இருக்கும். கொலுசு சத்தமும், வாசமும் தான் மோகினியின் அடையாளங்கள். மதர்த்த மார்புகளும், தாழ்வான தொப்புள் தெரியும் சேலையும், நீர்வீழ்ச்சியாய் இறங்கும் ஷாம்பூ போட்ட கூந்தலும், மல்லிகைப் பூ வாசமுமாக தான் மோகினிகள் வருவார்கள். அவர்களுக்கு கால்கள் இருக்குமா இருக்காதா என்கிற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. பிடி சாமி மோகினிகள் போடும் பிராக்கள், உள்பாவாடைகள் பற்றி எழுதியதே இல்லை. மார்க் & ஸ்பென்சரும், ராசாத்தி நைட்டியும் இல்லாத காலக்கட்டம் அது. அவர்களோடு கூடவே எப்போதும் கொஞ்சம் புராணப் படங்களில் போடப்படும் புகையும் வரும். இவ்வாறாக தான் பெண் உடலும், சம்போகமும் எனக்கு அறிமுகம்.

இந்துமதி கிட்டத்திட்ட மோகினி. கொலுசு சிணுங்கும் சத்தம், குறுஞ்செய்தி வருவதின் சத்தம் போலிருக்கும். மல்லியோ, ரோஜாவோ எப்போதும் இருக்கும். மாடர்னனாப் பெண்ணாய் இருந்தாலும், அவ்வப்போது தாவணி தரிசனங்களும் தருவாள். மாலை கோவிலுக்குப் போய்விட்டு வரும்போது பெரும்பாலும், இருட்டான படிக்கட்டுகளில் சந்திப்போம். என் கண்கள் போகும் திசைக்கும், அவள் கண்கள் போகும் திசைக்கும் சம்பந்தமேயிருக்காது. இந்த மாதிரியான மாலை நேர படிக்கட்டு சந்திப்புகளில் சில சமயங்கள் லேசான புன்முறுவலும், எப்போதாவது வெட்கமும், பெரும்பாலான சமயங்களில் சலனமில்லாத முகமும் தெரியும். கொலுசு சத்தம் கேட்டு, வேண்டுமென்றே வேகமாய் இறங்கி வந்து, இடிக்காமல் முகம் பார்த்து ‘சாரி’ சொல்லும் குசும்புத்தனம் உடல்முழுவதும் ஊறியிருந்தது. சடாலென, படையப்பாவில் வேல் பார்த்து ‘ஏர் ப்ரேக்’ அடிக்கும் காளைக்கு இணையாக, சரியாக இருவருக்கு இடையில் ஒரு ஜான் மட்டுமே இடைவெளியோடு, நிற்க கற்றுக் கொண்டேன். பிடி சாமியின் மோகினிகள் உடல் முழுக்க விரவி இம்சித்த காலம்.

இந்துமதி துணி எடுக்க மொட்டை மாடிக்குப் போகும் நேரம் பார்த்து, ஷார்ட்ஸ் அணிந்து, இல்லாத பாடியை முறுக்கேற்ற மாடிக்கு போவேன். துணி எடுக்கும் போது மெல்லியதாய் பாட்டு கேட்கும். பாட்டுக் கேட்டுக் கொண்டே, இரண்டு செங்கல் நிறுத்தி, கட்டைச் சுவற்றில் கால்வைத்து புஷ் அப்ஸ் எடுக்கும்போது பார்வை, தயங்காமல் இந்துவின் இடுப்பில் இருக்கும். அம்மாவிடம் எனக்கு பயம் அதிகம். இந்துமதிக்கோ என் அம்மாவைக் கண்டாலே ஆகாது. ஆனாலும், இந்த crush ஒரு ஒரமாய் ஒடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் தான் கதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட வசனத்திற்கு போகவேண்டும்.

புயலடித்ததுப் போல வெறும் 2 நிமிடங்கள். சொல்லிவிட்டுப் போய்விட்டாள். முதலில் எனக்கு கடுங்கோவமும், பின்பு ஒரு மாதிரி மகிழ்ச்சியும் வந்தது. கோவம், என் தவறினை சுட்டிக்காட்டியது. மகிழ்ச்சி, இதுநாள் வரை ஒரு வார்த்தைக் கூட பேசாதவள், என்னோடு பேச ஆரம்பித்தாள் என்பது. மெதுவாய் தைரியம் வந்து, அடுத்த நாள் மாலை துணி எடுக்கும்போது பேச ஆரம்பித்தேன். முதலில் என்ன பேச்சு வேண்டியிருக்கு என்று பார்த்தவள், கொஞ்சம் கொஞ்சமாய் பேச ஆரம்பித்தாள். மோகினியாட்டம் ஆரம்பித்தது. உள்ளே குறுகுறுவென்று இருக்கும். என் வீட்டில் யாருக்கும் தெரியக் கூடாது. ஆனாலும் பேச வேண்டும். பேச்சு ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் சைகை பரிபாஷைகள் பழகினோம். நான் என் ரூமே கதியென்று கிடந்தேன். அப்போது தான் ‘நான் மேலேப் போய் படிக்கிறேன்மா’ என்று சிக்னல் கொடுத்து மேலே வருவாள். நானும், கிரிக்கெட் ப்ராக்டீஸ் பண்ணுகிறேன் பேர்வழி என்று கதைப் பண்ணிக் கொண்டு மொட்டைமாடிக்குப் போக ஆரம்பித்தேன்.

மொட்டை மாடியில் empty nothings ஆரம்பிக்கும். அந்நாளில் எனக்கு தேவைப்பட்டது ஒரு பெண்ணின் சிநேகம். என்னோடும் பெண்கள் பேசுவார்கள், எனக்கும் ‘ஆள்’ இருக்கு என்று காண்பித்துக் கொள்ளத் தேவைப்பட்ட ஒரு துணை. இந்துமதிக்கு பேச ஆளே இல்லை. அம்மா, விட்டால் டூடோரியல் சென்டர், காசு வாங்க மட்டும் அப்பா; டிவி, ஆனந்தவிகடன், கோலம், துணிகள். பேச ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் பேச்சு காதல், கல்யாணம் என்று போனது.  அதற்கு ஏதுவாய், கோமளா மாமியும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தாள். ஜமுக்காளம், வெள்ளி டம்ளர் முதற்கொண்டு எல்லாம் என் வீட்டிலிருந்துப் போகும். அம்மாவின் கவலை தன் வீட்டிலும் ஒரு பெண் இருக்கிறாள். அதனால் உதவுவோம் என்பதாகக் கூட இருக்கலாம்.

கொத்தவால்சாவடியில் கணக்கு எழுதுபவரில் ஆரம்பித்து, டிவிஎஸ், சுந்தரம், ஹிந்து என தடிதடியாய் மாமாக்கள் வந்துப் போக ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு முறை வந்துப் போனபின்பும், நானும் இந்துவும், மொட்டை மாடியில் மாப்பிள்ளைகளை நக்கலடிப்போம். என் விரல் கூட இந்துவின் மேல் பட்டதில்லை. தமிழ் சினிமாவின் சாந்தி முகூர்த்தங்கள் வெறும் விளக்கணைப்பதும், திரியினை உள்ளிழுப்பதுமாக காட்டப்பட்டிருந்த காலம்.

ஒரு நாள் ஒருவர் வந்து, எல்லாம் ஒரு மாதிரி செட்டாகி இருந்த நேரம். மழை வருவதுப் போல இருந்ததால், இந்துவும், நானும் துணிகளைப் பொறுக்கிக் கொண்டு கீழிறங்கலாம் என்னும் போது, என் அம்மா மேலே வருவதுத் தெரிந்தது. எங்களிருவரையும் ஒன்றாகப் பார்த்தால், மீண்டும் விளக்குமாறோச்வம் ஆரம்பிக்கும். அதனால் மொட்டை மாடிக்கு பக்கத்தில் இருந்த ஸ்டோர் ரூமுக்குள் பதுங்கினோம்.

முதல் முறையாய், தூறலில் நனைந்திருந்த கூந்தல், அருகாமை, வெளியே அப்போது தான் ஆரம்பித்த மழை என கலவையாய் இருக்க, நான் மெதுவாய் அவள் பின்னாலிருந்து ‘எனக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்’ என ஆரம்பித்தேன். முதலில் புரியாமல், பின் புரிந்து ‘பக்கத்துல இருக்கு. நீ எடுத்துக்கலைன்னா அது யாரோட தப்பு’ என பதில் விளையாட, பிடி சாமி, மண்டையில் சாமியாட ஆரம்பித்தார். மெதுவாய் பின் கழுத்தில் முத்தம் இட்டவுடன் தான் எங்களின் சூழ்நிலை தெரிந்தது. சடாலென விலகி கீழிறங்கினாள். அது தான் நான் கடைசியாய் பேசியது. பின் நான் எதிரில் வந்தாலும் விலக ஆரம்பித்தாள். நானும் என்னுடைய முதல் காதலில் பிசியாக ஆரம்பித்தேன்.

வீட்டை விற்பதற்கு, 6 மாதங்களுக்கு முன் காலி செய்தார்கள். எங்கேப் போனார்கள், என்ன ஆனார்கள் என்று தெரியவேயில்லை. ஆனால், இந்து அவள் அம்மா மாதிரி இல்லை, கொஞ்சம் புத்திசாலி, அதனால் எங்கோ நன்றாக இருப்பாள் என்கிற உணர்வு மட்டும் இருந்தது.

ஐந்து வருடத்திற்கு முன், ஒரு நல்ல மழைநாளில் மும்பை விமான நிலையத்தில் டெக்கான் ஏர்லைன்ஸில் சென்னை திரும்ப செக்யுரிட்டி செக் முடித்து பஸ்ஸேறினேன். பின் வரிசையில் ஒரு குடும்பம். பேச்சு மட்டும் தமிழில்.

“அனாவஸ்யமா பேசாதீங்கோ. செம்பூர்லேந்து பொறப்படறச்சே நீங்க தானே எல்லாத்தையும் எடுத்து வைச்சேள். இப்ப பைலை காணோம்னு ஏன் அனாவஸ்யமா என் மேல பாயறேள். என் கொடுப்பனை உம்மகிட்ட மாட்டிண்டு அல்லாடணும்னு இருக்கு. பெருமாள் தான் உமக்கு பொறுமைய தரணும்’

‘சரிடீ எல்லாரும் இருக்கறச்சே தான் விசும்புவியோ, உங்கம்மாவுக்கு தப்பாம. உன்னாண்ட கேட்டேன் பாரு என்னை சொல்லணும்”


இந்து மாமி. ஒரே வித்தியாசம் கையில் புடவை முந்தானைக்கு பதில் துப்பட்டா.

இது ஹார்மோன் அவென்யு தொடரின் 5 வது பகுதி. முந்திய பகுதிகள் 1 | 2 | 3 | 4

Labels: , , ,


Comments:
Super ji..
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]