Sep 21, 2011

நான் = கார்த்தி

நான் கொலை செய்யப் போகிறேன்.

முதலில் கத்தி ஷார்ப்பாக இருக்க வேண்டும். பெரிய கத்தியெல்லாம் தேவையில்லை. சின்ன சமையலறை கத்தி கூடப் போதும், ஆனால் அதை சரியாக பயன்படுத்த தெரியவேண்டும். கத்தியை முதலில் திருப்பி வைத்துக் கொள்ள வேண்டும். முனை நேராக இருக்கக் கூடாது, அது முழங்கையின் பின் மறைந்திருக்க வேண்டும். ஆளை ஒரங்கட்டி, திரும்பி நின்று முழங்கையில் மறைத்திருக்கும் கத்தியால் குத்த வேண்டும்.

அலறுவதற்கு முன் வாயைப் பொத்தி, தொண்டையின் நடுவே ஒரு கீறல். இப்போது பேச்சு வராது. பின் சரியாய் வயிற்றின் நடுவிலோ, நெஞ்சிலோ, மார்புக்கு நடுவிலோ, இன்னமும் கோவமாய் இருந்தால் இடுப்புக்கு கீழேயேவோ இறக்க வேண்டும். முக்கியமாய் உள்ளங்கை வியர்க்கக் கூடாது. வியர்வை இருந்தால் பிடிக்க முடியாது. கத்தியை முழுவதுமாய் சொருகக் கூடாது. எடுக்க சிரமம். முடிந்தால் கொஞ்சம் மண், ரப்பிஷை குத்திய இடத்தில் பரப்பி விட வேண்டும். உயிர் பிழைத்தாலும், செப்டிக் ஆகி, வாழ்நாள் முழுவதும் படும் அவஸ்தையில் தற்கொலை சுலபமாக தோன்றும்.

ஒரு கொலை செய்ய எவ்வளவு தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!

தேவா கற்றுக் கொடுத்தது. ராயபுரம் விஞ்ச்-சில் சார்லஸை அப்படித்தான் போட்டான். சரக்கு வாங்கிக் கொடுத்து, பெண்களோடு உல்லாசமாய் கடலுக்கு அனுப்பி வைத்தான். பின்னாலேயே, இன்னொரு மோட்டார் படகில் போய், பின்வழியே ஏறி, அரைக் கிறக்கத்திலும், முழுப் போதையிலும் இருந்த அவனை படகின் ஒரத்துக்கு கொண்டு வந்து, திரும்ப திரும்ப குத்தினான். போதையில் வலி தெரியாமல், சார்லஸ் மீன்களுக்கு இரையானான். ஆனால், இது நடந்து முடிந்த அன்றைக்கு ‘த்தா தெவுடியா பையன், என் தங்கச்சியை முடிச்சான்ல, அதான் போட்டேன்’ என்று கீறல் விழுந்த ரிக்கார்டாய் சொல்லிக் கொண்டேயிருந்தான். தேவா நல்லவன். ’த்ரோகங்றது பாதி தொறந்து வைச்ச மோர்ப் பானை மாதிரிடா, உட்டோம்னா நாறிடும். முச்சிரணும். அதான் ஸேப்’. கீதாபதோதேசம் எனக்கு டாஸ்மாக்குகளில் தான் கிடைக்கிறது.

’டேய் நெல்லா படி. தெருநாய் பொழப்பு என்னுது. வந்துடாத. எவனாவது மெர்சல் பண்ணா சொல்லு, உம்மேல டவுட் வராத மாறி தூக்கிறோம். இங்கெல்லாம் வராதே, போயிரு’

அவனுக்கு இந்த துரோகம் தெரியாது. சொன்னால் கோவப்படுவான். இது என் பிரச்சனை, நான் தான் முடிக்க வேண்டும். அவனுக்கு தெரியத் தேவையில்லை. தேவாவுக்கு சார்லஸ். எனக்கு ரேணுகா.

ரேணுகாவை இன்றைக்கு முடித்து விட வேண்டும். என்னவெல்லாம் சொன்னாள். விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உயிராய் உருகினாளே. Damn fucking bitch!

ரேணுகா.

பெயரை உச்சரிக்கும்போதே மண்டையில் சிலீரென்கிறது. உடலில் குளிர்காற்று உராய்கிறது. உள்ளே சூடும், குளிர்ச்சியுமாக கலவையாக, குழப்பமாக இருக்கிறது. ரேணுகாவை காதலித்தேன் என்பதை அழுத்தமாக சொல்ல தமிழில் வார்த்தைகள் இல்லை. வேறு விதமாய் சொல்கிறேன். சென்னையில் எத்தனை சாலைகளில், எத்தனை கடைகளில் ரேணுகாவின் பெயர் இருக்கிறது என்று என்னால் சொல்லமுடியும்.

ரேணுகா ஆட்டோமொபெல்ஸ், ரேணுகா ட்யுஷன் செண்டர், ரேணுகா சாரீஸ், ரேணுகா பாட்டு கிளாஸ், ரேணுகா பார்மசி. ரேணுகா ஹார்ட்வேர்ஸ். ரேணுகா மரக் கடை. ரேணுகா மொபைல் சிட்டி. ரேணுகா ஜூஸ் கூல் சென்டர். ரேணுகா. ரேணுகா.

ரேணுகா ஆட்டோமொபெல்ஸ் சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி இறக்கத்தில் இருக்கிறது. ரேணுகா ட்யுஷன் செண்டர் மேத்தா நகர், மோகன்பாபு சிலைக்கு எதிர் ரோட்டில் ஒரு பஞ்சர் கடைக்கு மேலே இருக்கிறது. ரேணுகா சாரீஸ் ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்கு பின்னால் இரண்டாவதாக திரும்பும் இடது புறத்தில் இரண்டாவது மாடியில் இருக்கிறது.

சென்னையில் 417 இடங்களில் ரேணுகா பெயரில் கடைகள் இருக்கிறது. இதெல்லாம் தேவையில்லாத சமாச்சாரம் தான். ஆனால் க்ரீம்ஸ் சாலை ’புரூட் ஷாப்’பில் ’கோகனெட் புட்டிங்’ சாப்பிடும்போது ஒரு நாள் கேட்டாள்

“ என்னை பிடிக்குமா, என் பேரு பிடிக்குமா”
“உன்னை சேர்ந்த எல்லாத்தையும் தான்”
“ஹா சும்மா கதை. அப்ப சென்னையில என் பேருல எத்தனை கடைங்க இருக்கும்னு கண்டுபிடிக்க முடியுமா.”


ஒரு வாரம் வேலைக்கு லீவு போட்டு சென்னையை சல்லடையாய் சல்லித்து எடுத்திருந்தேன். லிஸ்ட் போட்டு சொன்ன அடுத்த வாரம், மையிட்ட கண்கள் விரிய ”நெஜமா சொல்றீயா இல்ல கலாய்க்கறீயா” என்று கேட்டவளை, டாங்க் ரொப்பிக் கொண்டு இருபது இடங்களுக்கு அழைத்து சென்று காண்பித்தேன். பஸ் ஸ்டாண்டில் விட்ட போது கண்கள் கலங்கியிருந்தது. ‘டேய் நான் வேணாம்னு சொன்னாலும், என்னை விட்றாதே.’ என்றாள். ரேணுகா என்பது சுவாசமாய் மாறிவிட்டிருந்த காலமது. இன்றோடு சரியாய் ஒரு வருடம். ஒரு தகவலும் இல்லை.

ரேணுகா மறந்து விட்டாள். மொத்தமாய். போனில்லை. மெயில் இல்லை. எந்த தகவலுமில்லை. இப்போது வேறு ஒருவனோடு நாங்கள் தினமும் அளவளாவிய அதே ரெஸ்டாரெண்டில். அதே சீட்டில். அதே ஆரஞ்சு சுடிதார். அதே யார்ட்லி வாசனை. அதே அதே. அதே. இந்த இடம், இந்த வாசனை, இந்த முகம்..... வேண்டாம், என்னை உதாசீனப்படுத்தியவளை, நிராகரித்தவளை, மனதிலிருந்து தூக்கியெறிந்தவளை... இன்றைக்கு கொல்ல வேண்டும். கொன்றே ஆக வேண்டும். இத்தனை நாள் இங்கேயே தான் இருந்தேன். ஆனால் என்னை பார்க்கவேயில்லை. இன்றைக்கு தான் வசமாய் மாட்டியிருக்கிறாள். இது என் இடம். இங்கேயே திரும்பியும் வந்திருக்கிறாள்.

டிப்ஸாய் போஷித்த சர்வர் கூட என்னை கண்டுக் கொள்ளவில்லை. எதிரில் எச்பி லேப்டாபில் தலைநுழைத்திருக்கும் நெற்றியின் நடுவில் திருமண் தீற்றல் நீண்டிருந்த ராமானுஜமோ, பட்டாபியோ, பார்த்தசாரதியோ கூட என்னை கண்டு கொள்ளாதது தான் எரிச்சலை ஏற்றியது. யாருமே என்னை கண்டுக் கொள்ளவில்லை. நான் ஒருவன் இருக்கிறேன், என் கையில் ரெஸ்டாரெண்டின் கத்தி இருக்கிறது என்கிற பிரக்ஞை இல்லாமலிருக்கிறார்கள். இன்றைக்கு எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறேன்.

எதிர்ல லேப்டாப் பாக்கறே, நான் தெரியலையாடா நாயே. போட்டவுடனே உன்னையும் விட்னஸாக்குவாங்க. மாஜிஸ்ட்ரேட் கோர்ட்ல தேவுடு காப்பே இல்ல, அப்ப வைச்சுக்கறேண்டா....

இந்த இடம் எனக்கு மனப்பாடம். எவ்வளவு படிக்கட்டுகள். தட தடவென ஆடும் லிப்ட். கடமைக்கென்று ஒடும் பேன். எவ்வளவு விநாடிகளில் கீழே இறங்கும். எப்போது கரெண்ட் போகும். லிப்டில் அவள் எங்கே நிற்பாள். எத்தனை முறை கதவு மூடியவுடன் அவளை இறுக அணைத்து, வேண்டாம், வேண்டாம் forget that shit. focus on the bloody job. அவளை இதே லிப்டில் கொல்ல வேண்டும். வேறு எதுவும் தேவையில்லை. தேவையில்லாமல் பழையதை நினைத்துக் கொண்டு, மிஸ் பண்ணினால் மிஸஸாகி குழந்தைக்கு என் பெயர் வைப்பாள். அதுவா முக்கியம்.

என்ன செய்கிறாள் ?

ஏதோ பேசுகிறாள். அவனும் சீரியஸாய் கேட்கிறான். இவனை தெரியும். ரேணுகாவின் கசின். பிட்நெஸ் பைத்தியம். என் பக்கம் திரும்பக் கூட இல்லை. புஜமெல்லாம் பெருத்து ஜிம்மிற்கு தினமும் போவான் போலிருக்கிறது. ட்ராக்ஸில் தான் வந்திருந்தான். எப்படியும் லிப்டிற்கு பக்கத்தில் போவாள். அவன் லிப்டில் போகாமல் படிகளில் இறங்குவான். ஐந்தாவது மாடியிலிருந்து கீழேப் போக சரியாய் 42 நொடிகள். உள்ளே நுழைந்து முதல் பேராவில் சொன்ன வேலையை செய்ய வேண்டியது தான். சரியாய் ஒரு வருடம். இன்றைக்கு தான் நாள் வாய்த்திருக்கிறது.

சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சி தொலைங்களேன். லொட லொடன்னு ரேடியோ ஆர்ஜெ மாதிரி மொக்கை என்ன வேண்டி கிடக்கு

இப்படி தான் நாங்கள் காதலித்தப் போதும் அவள் பேசிக் கொண்டேயிருப்பாள். அல்பத்திலிருந்து ஐன்ஸ்டீன் வரைக்கும். இன்றைக்கு எனக்கு பொறுமையில்லை. போலீஸ், லாக்-அப், ஜெயில், கோர்ட் என தமிழ் சினிமாவில் பார்த்த அத்தனைக்கும் நான் ரெடி. லிப்ட் திறந்தவுடன் கூட்டம் கூடும். என்னை தர்ம அடி அடிப்பார்கள். மேனேஜர் போலீஸை அழைப்பான். எல்லாவற்றுக்கும் நான் ரெடி. என்னை விட்டவளை, உலகத்தை விட்டே அனுப்ப வேண்டும். அது போதும்.

இதோ எழுந்து விட்டாள்.

வா. வா. ஒரு வருஷமா இந்த தருணத்திற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேண்டீ. வாடீ என் காதலி...................

முதல் முறையாய் நேராய் பார்த்தேன். அவள் என்னை கவனிக்கவில்லை. ஆனால் கண்கள் கலங்கியிருந்தது, மை கலைந்திருந்தது. ”டேய் மடையா, மீண்டும் ஒரு முறை ஏமாறாதே”. மெதுவாய் நடந்து வந்து லிப்டுக்கு காத்திருந்தாள். கொஞ்சம் இடைவெளி விட்டு மறைவாய் காத்திருந்தேன். 0...1.......

ஹே ரேணு என்று குரல் கேட்டது. யாரிந்த கொலை பூஜையில் கரடி. ஷீலா. அடச்சே, இங்கேயுமா. நாங்கள் காதலித்த காலத்தில் இந்த ஷீலா சனியன் தான் கூடவே வந்து தள்ளி உட்கார்ந்து நன்றாக தின்று தீர்ப்பாள். ஷீலா ரேணுகாவின் தெருக்காரி. ஒரே கல்லூரி. ஒன்றாக போகாவிட்டால் சந்தேகம் வருமென்பதால், ஷீலாவையும் கூடவே கூட்டிக் கொண்டு அலைவோம்.....2.....3..........

சரி. முடிவு கட்டியாகிவிட்டது. ரேணுவை முடிக்க வந்த இடத்தில், இலவச இணைப்பாக ஷீலாவும். இவளாவது நான் வாங்கிக் கொடுத்த நன்றிக்காக எனக்கு சொல்லியிருக்கலாம். கடங்காரி, ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. ஒரு கொலை செய்தாலும், இரண்டாய் செய்தாலும் தண்டனை ஒன்று தான். தானாய் வந்து செத்தால், அதற்கு நானா பொறுப்பு. ...4.....5

கதவு திறந்தது. இருவரும் உள்ளே நுழைந்தார்கள். முகத்தில் மங்கி கேப் போட்டு உள்ளே நுழைந்தேன்.

ஷீலா “ டீ இன்னுமா அவனேயே நினைச்சுட்டு இருக்கே. அதான் எல்லாம் முடிஞ்சிப் போச்சு இல்லை. forget it yaar. இன்னுமா. Move on ரேணு”

ரேணு விசும்பலோடே ”எப்படிர்றீ முடியும். கார்த்தியால தான் இன்னைக்கு உயிரோட இருக்கேன். அவன் நெனவா கடைசியா மிஞ்சினது மங்கீ கேப்பும், ரெஸ்டாரெண்டும் தான். ஒரு வருஷமாச்சு. என்னை காப்பாத்திட்டு, அவன் போயிட்டான். நான் தெனந்தெனம் செத்துட்டு இருக்கேன்டீ. மறக்க முடியல” என முகம் மறைத்து அழ ஆரம்பித்தாள்.

Labels: , , ,


Comments:
பின்னுட்டீங்க.. எதிர்பார்க்காத முடிவு
 
யாருமே கண்டுக்கலை என்று நீங்க சொன்னதால், இறுதி முடிவு யூகிக்ககூடியதாக இருந்தது...

வினையூக்கி முயற்சிக்கும் வகையறா ;-)))
 
ஒரு கதையாகப் பார்த்தால் நல்ல கதை என்று சொல்ல மாட்டேன்.

ஆனால் இக்கதைக்கு நீங்கள் கொடுக்கும் ட்ரீட்மெண்ட்கள் அபாரம் :-)
 
//டிப்ஸாய் போஷித்த சர்வர் கூட என்னை கண்டுக் கொள்ளவில்லை. எதிரில் எச்பி லேப்டாபில் தலைநுழைத்திருக்கும் நெற்றியின் நடுவில் திருமண் தீற்றல் நீண்டிருந்த ராமானுஜமோ, பட்டாபியோ, பார்த்தசாரதியோ கூட என்னை கண்டு கொள்ளாதது தான் எரிச்சலை ஏற்றியது. யாருமே என்னை கண்டுக் கொள்ளவில்லை. நான் ஒருவன் இருக்கிறேன், என் கையில் ரெஸ்டாரெண்டின் கத்தி இருக்கிறது என்கிற பிரக்ஞை இல்லாமலிருக்கிறார்கள். இன்றைக்கு எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறேன்//

சிக்ஸ்த் சென்ஸ் மாதிரி..
 
அப்டியே.. .வழுக்கீட்டு போகுது நடை!
 
நரேன்,

அசத்தல்!

கத்தி பற்றிய முதல் இரண்டு பாராக்களை “டாக்ஸி டிரைவர்”-ல் ராபர்ட் டி நீரோ துப்பாக்கியை வைத்துக் கொண்டு ”You talkin' to me?” எனப் பேசும் மனநிலையுடன் பொருத்தி பார்த்தேன்.. அமர்க்களம் :)
 
நடை நல்லா இருந்தது. பாதியிலயே சிக்ஸ்த் சென்ஸ் மேட்டர்னு தோணிட்டது.
 

It's difficult to find well-informed people in this particular topic, however, you seem like you know what you're talking about! Thanks gmail login
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]