Nov 30, 2011

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு - பாகம் 1

Disclaimer: அமெரிக்க முதலாளிகளின் அடிவருடி, MNC நாய், முதலாளித்துவ பூர்ஷ்வா சமூக பிரதிநிதி என ஆசையோடும், அன்போடும் திட்டும் இடதுசாரி நண்பர்கள், ப்ளட் பிரஷர் எகிறாமல் எஸ்’ஸாகவும் :))

என்ன நடந்தது ?

இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டினை ஊக்குவிக்கும் பொருட்டு, இது நாள் வரை இருந்த தடைகள் நீக்கப்பட்டன. நேரடி அன்னிய முதலீடு, பல்பொருள் வணிகத்தில் (Multi-brand retail) 51% வரைக்கும், ஒரு பொருள் வணிகத்தில் (Single brand retail) 100% வரைக்கும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ஒரு மில்லியன் (10 இலட்சம்) மக்கள்தொகைக்கு மேல் இருக்கும் 53 நகரங்களில் இப்போதைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இது சரியாக நிர்வகிக்கப்படும் பட்சத்தில், இது பிற சிறிய ஊர்களுக்கும் விரிவுப் படுத்தப்படும்.

இந்த 53 நகரங்களில் 28 நகரங்கள் அன்னிய முதலீட்டினை உள்ளே விட மறுக்கும் 11 மாநிலங்களில் இருக்கின்றன.. ஆக 53 - 28 = 25 நகரங்களில் நேரடியாக வால் மார்ட்டோ, கேர்போரோ வர சாத்தியங்கள் இருக்கிறது. அன்னிய முதலீட்டினை உள்விட மறுக்கும் மாநிலங்கள் எல்லாவற்றிலும் காங்கிரஸுக்கு மாறான ஆட்சி நடந்துவருவது ஆச்சர்யமல்ல. தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா, மேற்கு வங்கம், குஜராத் - முக்கியமானவை. ஆக, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், போபால், பாட்னாவில் கால் வைக்க முடியாது.

கேள்வி - பதில்கள்

இது சிறு வியாபாரிகளை அழித்துவிடும் ?

இதை விட அபத்தமான குற்றச்சாட்டு வேறெதுவும் இருக்கமுடியாது. இந்தியாவில் இருக்கும் சிறு வியாபாரிகளை மாதிரியான ஸ்மார்ட்டான கூட்டம் உலகில் வேறெங்குமில்லை. அவர்கள் தரும் சேவைகளை ஒரு நாளும் பெரு சில்லறை நிறுவனங்கள் தர முடியாது. வெறும் 200கிராம் உளுத்தம்பருப்பு ஒரு நாளும் வால் மார்ட்டால் செய்யமுடியாது. வீட்டுக்கு கொண்டு வந்து தருதல், ‘வீட்டுல கொடுத்துடுங்க அண்ணாச்சி, சம்பளம் வந்தவுடனே தந்துடறேன்” என்பது மாதிரியான கிரெடிட் வர்த்தகம், தெருவில் இஸ்லாமியர்கள் இருந்தால் பட்டையும், சோம்பும் பிரியாணிக்காக வாங்கி வைத்தல் போன்றது மாதிரியான நுகர்வோர் சார்ந்த CRMல் இன்றைக்கு, என்றைக்கும் அண்ணாச்சிக் கடைகள் தான் நம்பர் ஒன்னாக இருக்கும். இந்த அளவுக்கு கீழிறங்கி செய்யப்படும் சேவைகளை ஒரு நாளும் பெரு சில்லறை நிறுவனங்கள் செய்யுமா என்று தெரியாது.

இன்னொன்று, என்னுடைய சின்ன வயதில் சென்னையில் நான் அண்ணாச்சிக் கடைகளில் தேங்காய் பத்தைகளை வாங்கியிருக்கிறேன். இன்றைக்கு அண்ணாச்சிக் கடைகளே தேங்காய் பத்தைகள் விற்பதில்லை. முழு தேங்காய் தான். ஆக அவர்களும், காலத்துக்கேற்ப தங்களை புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆக பெரு சில்லறை நிறுவனங்களால், சிறு வியாபாரிகள், தெருமுனை அண்ணாச்சிக் கடைகள் அழிந்து விடும் என்பது தேவையற்ற பயம்.

இந்தியாவின் பரப்பளவிற்கும், நுகர்வோர்களின் தேவைக்களுக்கும் ஒரு சில பெரு நிறுவனங்கள் மட்டுமே போதுமெனக் கொண்டால் அதை விட முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது. சத்யம், ஐநாக்ஸ் தியேட்டர்களில் கூட்டம் வருவது போலவே, உதயமிற்கும், பைலட்டிற்கும் கூட்டம் போகிறது. இந்திய நுகர்வோரை ஒற்றை டெலிவரி தளத்தில் வைக்க முடியாது. வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு கடைகள். பெரு சில்லறை நிறுவனங்கள் பெருமளவில் வாங்குவதால், பொருளின் விலையினை கீழேக் கொண்டு வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம். அதே சமயத்தில், தெருமுனை கடைகள் தேவையான பொருள், தேவையான அளவுக்கு தருவதால் நாம் அங்கேயும் வாங்குவோம். இரண்டும் நீக்கமற நிறைந்திருக்கும்..

இது அன்னிய கருப்புப் பணத்தினை இந்தியாவுக்குள் கொண்டு வந்து வெள்ளையாக்கும் முயற்சி!

கருப்புப் பணம் என்று சொல்வது நகைப்புக்குரியது. அப்படியென்றால், இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்கள் மொக்கை என்று நாமே ஒத்துக் கொள்ளவேண்டி வரும். இந்தியாவில் பெறப்படும் அன்னிய முதலீடுகளுக்கு ரிசர்வ் வங்கியின் சான்றிதழ் தேவை. அதில் Source of Money முக்கியமானதாக இருக்கும். ஆனால், இந்தியாவுக்குள் “ஏழைப் பங்காளர்களாய்” வலம் வரும் வியாபார காந்தங்கள் சரியாய் வரி கட்டுகிறார்களா ? சுமோவும், ஸ்கார்பியோயும் பறக்கும் கோயம்பேடு வளாகத்தில் இருக்கும் வியாபாரிகளிடத்தில் கருப்புப் பணமே இல்லையா ?

ஒரு வேளை விவாதத்திற்கு கருப்புப் பணத்தை இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்கிறார்கள் என்றே கொள்வோம். இந்தியாவிற்குள் விற்கும்/வாங்கும் பொருட்களுக்கு வரி கட்டித்தானே ஆகவேண்டும். ஆனால் கோயம்பேடு கோயபல்ஸுகள் இதை இதுவரை செய்திருக்கிறார்களா ? இதுநாள் வரை வணிகம் கோயம்பேட்டில் “கேஷ்ஷாக” தானே நடக்கிறது. இந்த “கேஷ்ஷில்” தானே திண்டிவனம் தாண்டி வளைத்துப் போட்ட விவசாய நிலங்களை, சென்னைக்கு அருகே என்று வரிந்துக் கட்டிக் கொண்டு மார்க்கெட் செய்து கல்லா கட்டுகிறார்கள். துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கும் துரைகளால் கருப்புப் பணம் பெருகுகிறதா இல்லை இந்தியாவில் துண்டு விரித்து விட்டு 10 வருடங்களுக்கு பின்னால் வரப் போகும் லாபத்திற்காக இன்றைக்கு காசுபோடும் அன்னிய முதலாளிகளால் பெருகுகிறதா ?

முதலில் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை வர்த்தகத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட வரி நேரடியாக வசூலிக்கப்படும். இதன் மூலம், நீங்கள் ரூ.10க்கு பில் போட்டாலும், ரூ.10,000க்கு பில் போட்டாலும் வரி வசூலிக்கப்படும். அந்த வரி அரசாங்கத்திற்கு கட்டப்படுகிறதா என்று பார்ப்பது தான் அரசு பணியாளர்களின் வேலை. இதே வரி, ஒருங்கிணைக்கப்படாத வர்த்தகத்தில் நடக்காது. இப்போதைக்கு பெரிய “அண்ணாச்சி கடைகள்” மட்டும் தான் பில் கொடுக்கின்றனர். ஆக வரி நேரடியாக சில்லறை வர்த்தகத்தின் மூலம் போகும் என்பது தான் அடிப்படை. இதன்மூலம் அரசுக்கு வருவாய் பெருகுமேயொழிய குறையாது.

இது வேலையில்லாத திண்டாட்டத்தினை உருவாக்கும்?

முதலில் தமிழ்நாட்டில் எத்தனை விவசாயிகள் தங்களின் அடுத்த தலைமுறையும் விவசாயம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லுங்கள். எல்லா விவசாயிக்கும் தன் மகன்/மகள் பி.ஈ படித்து இன்போஸிஸில் வேலைக்கு சேர்ந்து கை நிறைய சம்பாதிக்கவேண்டும் என்பது் தான் எதிர்பார்ப்பு. இதை நிலை தான் இன்றைக்கு பல்வேறு சிறு கடைகள் வைத்திருப்பவர்களுக்கும். இதை தவறான எதிர்பார்ப்பு என்று சொல்ல முடியாது. நீங்களும், நானும் இணையத்தில் விவாதித்து டாலர்களில் சம்பாதிக்கும்போது, இந்திய இளிச்சவாய் கடைக்காரன் மட்டும் அங்கேயே இருக்கவேண்டும் என்று நினைப்பது வேறுவிதமான தீண்டாமை.

வால் மார்ட்டால் சிறு முதலாளிகளின் வாய்ப்பு பறிபோகும் என்று நினைப்பது மடமை. பிக் பஜார், ரிலையன்ஸ் ப்ரெஷ், ஸ்டார் பஜாரை எதிர்த்து ஒரு கடைக்காரரால் மேற்சொன்ன சேவைகளை செய்து நிற்கமுடியுமென்றால், அவர் வால் மார்ட்டையும் எதிர்த்து நிற்கமுடியும் என்பது ரொம்பவும் அடிப்படையான தர்க்கம். எதுவுமே செய்யாமல், நுகர்வோனுக்கும் சேவை செய்யாமல் ஒரு சிறு வியாபாரி நிற்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதில் இருக்கும் தர்க்கம் புரியவில்லை. மாறிவரக்கூடிய கன்ஸுமரிச சூழலில் (நீங்கள் எதிர்த்தாலும் இது தான் யதார்த்தம்) மதிப்பினைக் கூட்டாமல் யாருமே நிற்கமுடியாது என்பது தான் நிதர்சனம்.

இது தாண்டி, பெரு சில்லறை நிறுவனங்களில் ஆட்களின் தேவை அதிகம். அவர்களால் குழந்தை தொழிலாளர்களை வைக்க முடியாது. சமூக படிநிலையில் படிப்பினால் கீழிறிக்கும் பெருவாரியான ஆட்களுக்கு வேலை வாய்ப்பினை உண்டாக்கும் சாத்தியங்கள் பெரு சில்லறை நிறுவனங்களில் அதிகம். கடை தாண்டி, கொள்முதல், போக்குவரத்து, பேக்கிங் என நீளும் இடங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மத்திய அமைச்சர் ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்கிறார். இது எதன் அடிப்படையில் என்று தெரியாது. ஆனாலும், எனக்கு தெரிந்த வரையில் மேற்சொன்ன துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதை நிச்சயமாக சொல்ல முடியும்.

இது நுகர்வோர்களுக்கு எதிரானது ? விலைக்குறைந்த சீனப் பொருட்களால் கடைகள் நிரப்பப்படும். இந்திய சிறு பொருட்களுக்கு சந்தை இருக்காது. அன்னியப் பொருட்களால் கடைகள் நிரப்பப்படும்; சிறு தொழில்கள் பாதிக்கப்படும்; விவசாயிகள் அழிக்கப்படுவார்கள்.

முதலில் முதலாளித்துவ சிந்தனையின் அடிப்படையினை புரிந்து கொள்வோம். எது விற்கிறதோ, அதுவுமே போகும். எது லாபம் தருகிறதோ, எதை நுகர்வோர்கள் வாங்குகிறார்களோ அதுவுமே நிலைக்கும். தமிழ் சினிமாவுக்கும் முதலாளித்துவத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. நல்ல படம், கலைப்படம் என்றெல்லாம் இல்லை. வெண்ணிலா கபடிக்குழு ஜெயிக்கிற இதே ஊரில் தான் ’பாபா’வும், ’மன்மதன் அம்பு’வும் படுக்கின்றன. அன்னிய சில்லறை வர்த்தகத்திற்கும் இது பொருந்தும்.

மயோனீஸும், கிவி பழமும் இருந்தாலும் எல்லாரும் அதை வாங்கப் போவதில்லை. தமிழக தாம்பூலங்களில் வாழைப்பழத்திற்கு பதில் கிவியோ, இட்லிக்கு தொட்டுக் கொள்ள சட்னிக்கு பதில் சாஸோ மாறப் போவதில்லை. எத்தனை அன்னியப் பொருட்கள் வந்தாலும், நுகர்வோரின் பழக்க வழக்கத்தினை மாற்றுவது ரொம்ப கடினம். மேலாண்மை அறிவியியலில் இதை habitual change & behavioral altering என்று சொல்வார்கள். இது கஷ்டம். சுலபமான ஒரு உதாரணம். இந்தியாவில் பிட்சா கடைகள் வந்து கிட்டத்திட்ட 10 வருடங்கள் ஆகப் போகின்றன. இன்றளவிலும், பிட்சா ஹட், பிட்சா கார்னார், டொமினோஸே விட வசந்த பவன், சங்கீதா, சரவண பவன், உடுப்பி, கையேந்தி பவன்களில் தான் கூட்டமதிகம். வெளிநாட்டிலிருந்து ஒரு சமாச்சாரம் வந்தாலே இந்தியாவில் இருக்கும் அனைவரும் மாறிவிடுவார்கள் என்பது பேதமை. அது நடக்காது.

மாறாக, இந்த மாதிரியான கடைகளில் இந்தியப் பொருட்கள் அதிகமாக இருக்கும். ஏனெனில், இந்தியப் பொருட்கள் வைத்தாலேயொழிய கடையில் கல்லா கட்டாது என்பது இந்த முதலாளிகளுக்கும் தெரியும். ஆக வழக்கமாய் அண்ணாச்சி கடை அயிட்டங்களில் ஆரம்பித்து, நாட்டு மருந்து கடை லேகியம் வரைக்கும், விற்கும் என தெரிந்தால் கடைப் பரப்புவார்கள். ஆக சிறு/குறு தொழில்களுக்கு இது ஒரு சரியான distribution point.

இன்றைக்கே எத்தனை சிறு முதலாளிகள் விலைக் குறைந்த சீனத் தயாரிப்புகளை வாங்கி விற்கிறார்கள். இது வால் மார்ட் வந்து தான் செய்ய வேண்டும் என்கிற கட்டாயமில்லை. இது தாண்டி, 30% பொருட்கள் உள்ளூர் தயாரிப்புகளாக இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆக அன்னிய முதலாளிகள் ஒரேயடியாக இந்திய தயாரிப்பினை உதாசீனப்படுத்தவும் முடியாது.

விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது அடுத்த குற்றச்சாட்டு. இதுநாள்வரை, இந்த வர்த்தகம் எப்படி நடந்தது என்று தெரிந்தால் ஏன் ஒருங்கிணைந்த வணிகம் முக்கியமென்று சொல்ல முடியும்.

உதாரணத்திற்கு ஒரு விவசாயி ஒரு கீரைக்கட்டினை ரூ.1 க்கு அந்த ஊரிலிருக்கும் ஒரு கொள்முதல் முதலாளிக்கு விற்கிறார். கொள்முதல் முதலாளி, எல்லா விவசாயிகளிடத்திலிருந்து வாங்கி இதை 1.30ரூக்கு ஒரு மாவட்டத்திலுள்ள ஒரு பெரு முதலாளிக்கு விற்கிறார். பெரு முதலாளி, பல்வேறு சிற்றூர்களிடமிருந்து மொத்தமாய் தருவித்து. ரூ2 க்கு லாரியில் ஏற்றி, கோயம்பேடில் இருக்கிற ஒரு பெரு முதலாளிக்கு விற்கிறார். கோயம்பேடு முதலாளி, லாரி, டிரைவர் பேட்டா எல்லாம் சேர்த்து ரூ.2 க்கு வாங்கி ரூ.3 - 3.50க்கு கோயம்பேடு பெரு தரகர்களுக்கு விற்கிறார். தரகர்கள், ரூ.3 க்கு வாங்கி ரூ.3.25க்கு சிறு வியாபாரிகளுக்கு விற்கிறார்கள். சிறு வியாபாரிகள் கடைப் போட்டோ, அல்லது தள்ளுவண்டிகளில் கொண்டு வந்தோ அதை ரூ 4 - 5 க்கு நுகர்வோர்களுக்கு தருகிறார்கள். ஆக ரூ.1 க்கு வாங்கப்படும் ஒரு பொருள், கிட்டத்திட்ட 400% மடங்கு விலையேற்றப்பட்டு நுகர்வோனை வந்தடைகிறது. இடையில் கைமாற்றும் எல்லாரும், எவ்விதமான மதிப்பையும் அந்தப் பொருளுக்கு கூட்டவில்லை. ஆக விவசாயியும் பெரியதாய் பொருளீட்டவில்லை.

இன்றைக்கு ரிலையன்ஸ் ப்ரெஷ் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதால் குறைந்த விலைக்கு விற்க முடிகிறது. பஞ்சாப்பில் பார்தி-வால் மார்ட் விவசாயிகளிடத்தில் நேரடியாக காண்ட்ராக்ட் போட்டு கொள்முதல் செய்கிறார்கள். இதன் மூலம் விவசாயிகளுக்கு தொடர்ச்சியான வருமானமும், அறிவியல் வழி ஆலோசனைகளும், என்ன பயிரிட வேண்டும் என்பதில் ஆரம்பித்து, எப்படி வரும் பணத்தினை செலவு செய்வது வரை கற்றுக்கொடுக்கிறார்கள். ஐடிசி இதை 10 வருடங்களாக செய்துக் கொண்டிருக்கிறார்கள். மதிப்புக் கூட்டாமல் இடையில் பணம் சம்பாதிக்கும் கூட்டம் தான் இன்றைக்கு குரலுயர்த்திக் கொண்டு அன்னிய முதலீடு தேவையில்லை என்று சொல்கிறது.

இதை வேறுவிதவாகவும் பார்க்கலாம். இணையத்தில் டிக்கெட் புக் செய்யலாம் என்கிற நிலை வந்த பிறகு, வெற்று தரகர் கூட்டம் காணாமல் போனது. மாறி வரக்கூடிய பொருளாதார சூழலில், எல்லா இடங்களில் மதிப்பினைக் கூட்டியே ஆகவேண்டும். மதிப்பு கூட்டாமல் வெறும் கை மாற்றும், கை காட்டும் கூட்டம் வழக்கொழிந்துப் போவதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது ?

தமிழக நிலவரம் (இப்போதைக்கு)

முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கையில் மத்திய அரசு மாநில அரசுகளை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்தது எதேச்சதிகாரம் என்கிற ரீதியில் அறிக்கை கொடுத்திருக்கிறார். உண்மை என்னவென்றால், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது பற்றிய கருத்துக் கோரல் ஏற்கனவே அறிக்கையாக ஜூலை 9, 2010ல் வெளியிடப்பட்டது. மாநிலங்கள், விவசாயிகள், வர்த்தக அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் என பல்வேறு தரப்பினரடிமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டது. அதையொட்டியே இப்போதைய சட்டத்தினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

முதல்வரின் அறிக்கையில் 4 கோடி பேர்கள் வேலை வாய்ப்பினை இழப்பார்கள் என்று ஒரு வரி உள்ளது. 53 நகரங்கள் என்றுக் கொண்டாலே வெறும் 5.3 கோடி பேர்கள் மட்டுமே இந்த அன்னிய சில்லறை வர்த்தகத்தினை நேரடியாக பார்ப்பார்கள். 120 கோடி பேர்கள் கொண்ட நாட்டில் வெறும் 4.41% மட்டுமே இதை நேரடியாக எதிர்கொள்வார்கள். இதில் எப்படி 4 கோடி பேருக்கு வேலை போகும் என்று தெரியவில்லை. இந்த பெரு நகரங்கள் தாண்டி, இந்தியாவின் “அண்ணாச்சி கடைகள்” சுமார் 8 மில்லியன் என்று சொல்கிறார்கள்; 80 இலட்சம் கடைகள். இதில் 10 இலட்சம் கடைகள் இந்த 53 நகரங்களில் இருந்தாலே அபூர்வம். மேற்சொன்ன கேள்வி - பதில்களில், தமிழக அரசு எடுக்கும் முடிவு எவ்வளவு குறுகிய பார்வையுடையது என்று புரியும்.

டெல்லி முதல்வர் ஷீலா தீக்‌ஷித் மாநிலங்கள் மற்றும் எல்லா பங்குதாரர்களும் கலந்து தான் இந்த சட்டம் வந்திருக்கிறது என்று சொல்கிறார். இதன் காரசாரமான விவாதங்கள் நாடாளுமன்றத்திலும், இணையத்திலும் நடந்துக் கொண்டிருக்கின்றன. எதிர்ப்பலை அதிகமாக இருப்பதால் இதை கைவிடக் கூடிய சூழலும் உருவாகலாம். இப்போதைக்கு இது தான் நிலைமை.

அன்னிய முதலாளிகள் இந்தியாவுக்கு வருவதால் உள்ளூர் வியாபாரிகள் காணாமல் போவார்கள் என்று யோசிப்பதை விட, அன்னிய முதலாளிகளின் வருகையால் உள்ளூர் வியாபாரிகள் எப்படி தங்களின் இருப்பினை தக்க வைத்துக் கொள்வார்கள், தங்களின் மதிப்பினை நுகர்வோர்களுக்கு என எப்படி மாற்றியமைக்கப் போகிறார்கள் என்பது தான் முக்கியமான கேள்வி. மேலே சொன்ன பதில்கள் இதற்கு விடைகூறும் என்று நம்புகிறேன்.

அன்னிய சில்லறை வர்த்தக முதலீட்டில் ஆபத்தே இல்லையா என்றால் இல்லை. ஆனால், இது வரை அரசியல் கட்சிகள் சொல்லும் ஆபத்துகள் எதுவும் பெரிய அளவில் இல்லை. ஆனால் உலகமெங்கும் இது ஏற்கனவே நிறைந்திருப்பதால், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமான பிரச்சனைகள் எழுந்திருக்கின்றன. இதை விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

Labels: , , , ,


Comments:
தெளிவான அலசல். முழுக்க ஒத்துப் போகிறேன். தமிழ் ஊடகங்களில் இது போன்ற கட்டுரைகள் பதிப்பிக்கப்பட்டால் பலருக்கும் சென்றடையும்.

பாகம்-2 எப்போ?
 
First of all i'll clarify i'm not anti-capitalist, anti-U.S or a communist.

Can you update the status of our Desi beverage brands like Torino, maapillai vinayagar, ramakrishna. Any idea on what happened to them after the arrival of U.S. beverages. When its easy for the foreign companies to easily wipe-out our SME, no explicit detail is needed to state about tiny enterprenuers
 
A similar hot debate running here... Sorry for the cross posting ..https://www.facebook.com/syed.razik/posts/10150497353904810?notif_t=feed_comment
 
Good points Narain. I am still not able to make my decision...

Could you answer the following questions in your next post?

1. Is allowing FDI the only way to streamline supply chain? Are the existing large Indian players - Reliance, Birla, Future streamlining the supply chain? If these can do it why can't Bharthi do it alone? Why FDI?
2. FDI will generate millions of jobs - Do we have numbers from other countries to substantiate?
3. How can we control the black money that is in circulation in Koyambedu?
 
அருமையான பதிவு, நல்லது.
 
அருமையான பதிவு, நல்லது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]