May 28, 2012

கர்வம் கொள்!


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸினை ஐபில் ஐந்தாவது சீசனில் வென்றது என்பது ஒரு நாள் செய்தி. ஆனால், ஷாருக்கான் என்கிற தனிமனிதனின் குரங்கு சேஷ்டைகளும், அதி மொக்கைத்தனங்களும் தான் பேசுபொருளாக இருந்தன. நான் ஷாருக்கின் பக்கம் இருக்கிறேன். இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடியதினை நிராகரிக்கிறேன்.

தமிழில் எழுதும் பெரும்பாலான ட்வீட்டர்கள் என்னை கடந்த 45 நாட்களாக பாலோ செய்திருந்தால், காரித் துப்பியிருப்பார்கள். நட்பின் மிகுதியால் உள்ளுக்குள் கறுவிக் கொண்டு சும்மா இருந்திருப்பார்கள். காரணம், நான் சென்னை சூப்பர் கிங்ஸினை தொடர்ச்சியாக ட்விட்டரில் நிராகரித்தது தான். இதில் எனக்கும் பிரபலமான ஒரு பதிவர்/ட்விட்டருக்கும் கிட்டத்திட்ட மனஸ்தாபமே வந்துவிட்டது என்கிற அளவில் இந்த கொலைவெறி முற்றிப் போனது.

கிரிக்கெட் ரசிகன் மற்றும் இன்றைக்கும் விடாப்பிடியாக கிரிக்கெட்டினை ஆடுபவன் என்கிற முறையில் கிரிக்கெட் எனக்கு வெறும் விளையாட்டல்ல. அது ஒரு மாதிரி தியானம். ஸ்டம்புகளுக்கு பின் நின்று அணியை வழி நடத்தி செல்லும்போதெல்லாம் மூளை கணக்கு போட்டுக் கொண்டே இருக்கும். ராகுல் திராவிடுக்கு நான் எழுதியதுப் போல அது ஒரு யோகம். நல்ல நேர்மையான கடுமையான உழைப்பினை சிந்தக் கூடிய கிரிக்கெட்டுக்கும், அணிக்கும், ஆட்டக்காரர்களுக்கும் நான் தொடர்ச்சியாக மரியாதை செலுத்தி வருகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸின் ஆதரவாளன் நான். ஆரம்பம் முதல் இன்று வரை. ஆனால்......

இந்த சீசனில் அவர்கள் ஆடிய ஆட்டத்தில் கிரிக்கெட்டின் கம்பீரமில்லை. ஆணவத்தின் நீளமிருந்தது. தோனியின் வழிநடத்துதலில் முன்பிருந்த street smartness இல்லை. தான் என்ன செய்தாலும் சரியாய் இருக்குமென்கிற அகம்பாவமிருந்தது. அதனாலேயே பின்னால் இறங்கி ஆடிவந்த அவர், திடீரென இரண்டாம் டவுன் ஆளாக இறங்கி லீக் ஆட்டங்களில் பந்துகளை வீணடித்ததில் ஆரம்பித்தது என்னுடைய கடுப்பு.

இறுதியாட்டத்தில் சென்னை கடைசி இரண்டு பந்துகளில் தோற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்றது. இது இனி வரலாற்று செய்தி. ஆனால், அதன் பின் தான் ஒரு வரலாறே ஆரம்பிக்கிறது.

ட்விட்டரில் ஷாருக்கானை ஏளனம் செய்யாத, பகடி செய்யாத, நிராகரிக்காத ஒரு ஆள் இல்லை. நான் ஷாருக்கான் பக்கம். தொடர்ச்சியாக ஷாருக்கானை ஆதரித்து எழுதியிருக்கிறேன். நிராகரிப்பின் வலி என்னவென்பது ஷாருக்கானின் குரங்கு சேஷ்டைகளில் அப்பட்டமாக தெரிந்தது.

ஐந்து வருடங்கள். முதல் மூன்று வருடங்கள் பட்டியலில் கடைசியில் இருந்த அணி தான் கே.கே.ஆர். சவுரவ் கங்குலியோடு தகராறு. ஷாருக்கானுக்கு கிரிக்கெட் தெரியாது. அணியை விற்கப் போகிறார் என பல்வேறு வதந்திகள். நீங்கள் பாலிவுட்டின் பாதுஷாவாக கூட இருக்கலாம். ஆனால், கிரிக்கெட் மைதானத்தில் சுண்டைக்காய் என்கிற அளவுக்கு எள்ளாடல்கள். 

காசில்லாமல் இருப்பது பிரச்சனையே இல்லை. காசிருப்பதும் பிரச்சனை இல்லை. ஆனால், காசிருந்தும் சில விஷயங்களை சாதிக்க முடியாமல் இருப்பதின் பின்னிருக்கும் வலியும், அவமானமும், அவமரியாதையும், நிராகரிப்பும், கடுமையும், கோவமும், சுய கேள்விகளும் அதை அனுபவித்தாலேயொழிய தெரியாது. நரகம் என்பது எமலோகத்தில் இல்லை. நீங்கள் நம்பும், எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களே உங்களை நம்பாமல் இருப்பது தான். ஷாருக்கானின் நிலையும் அப்படி தான். எல்லாரும் முகத்திற்கு நேர் ஒரு மாதிரி பேசிவிட்டு, ‘இவனுக்கெல்லாம் எதுக்கு கிரிக்கெட்டு, பேசாம டீமை வித்துட்டு போக வேண்டியது தானே’ என நக்கலடித்தவர்கள் ஏராளம். 

ஷாருக்கானை வெகு சுலபமாக தண்ணியடித்த குரங்கு என்று கூறி ஒதுக்கி விடலாம். ஆனால், ஷாருக் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று தெரிந்தால் அவ்வளவு சுலபமாக ஒதுக்கி விட முடியாது. படமெடுக்கப் போகிறோம், ஸ்பெஷல் எபெஃட்ஸ் மட்டுமே எக்கச்சக்கமாய் செலவாகும், என்ன செய்யலாம் என்கிற கேள்வி வந்த போது ஷாருக்கின் பதில் ”அதற்கென்ன. பணக்கார வீட்டு கல்யாணங்கள் நடனமாடுகிறேன். காசு வரும். படத்தில் போடுலாம்”. இது தான் ஷாருக். ஒரு காரியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், முழுமையாக அர்பணித்து, அதை வெற்றிக் கொள்ளும் வரை ஒயமாட்டார். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கிற ஒரு கலைஞன். ஐந்து வருடங்கள், ஊரே காரித் துப்பியும், அணியின் மீதும், வீரர்கள் மீதும் நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக அவர்களை ஊக்குவித்து, மொக்கை டீம் என்கிற பெயரினை மாற்றிக் காட்டியிருக்கிறார்.

ஷாருக்கின் அதிகப்பிரசங்கித்தனமான பேச்சோ, குட்டிக் கரணமோ, உணர்ச்சி வசப்படுதலோ இன்னபிற கொனஷ்டைகளோ என்னை எரிச்சலடைய செய்யவே இல்லை. மத்தியதர வர்க்க மதிப்பீட்டில் ஷாருக் ‘கெட்ட ஆட்டம் போட்டவன்’ தான். 

ஆனால், வலிகளையும் அவமானங்களையும் மீறி வெல்லும்போது அதன் உற்சாகம் எல்லா எல்லைகளையும் உடைத்துவிடும். இந்த மாதிரி கர்வம் கொள்வதில் எந்த தவறுமே இல்லை. இன்னும் சொல்லப் போனால், இந்த கர்வம் இல்லாமல் போனால் தான் தவறு. 

ஆனால் அதீத கர்வத்தோடு ஆடினால், சென்னை சூப்பர் கிங்ஸின் நிலை தான். ஐபில் இறுதிப் போட்டி வெறும் ஆட்டமல்ல. அது வாழ்வின் இரண்டு பக்கங்களின் நேரடியான பிரதிபலிப்பு.

Comments:
ஏகிளாஸ் கட்டுரை..
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]