Feb 27, 2013

வாத்தியார் ஐந்தாமாண்டு நினைவுக் கட்டுரை

அன்புள்ள ரங்கராஜன்,

'அப்பல்லோ தினங்களில்’ நீங்கள் சில நாட்கள் உங்கள் வாழ்நாளிலிருந்து காணாமல் போய்விட்டது என்று எழுதியிருந்தீர்கள். இப்போது வருடங்கள். பெரியதாய் ஒன்றும் மாறிடவில்லை. வருடாவருடம் நாமிருவரும் இந்த நாளில் பேசுவோம். நரகத்தில் எல்லோரும் நலமா ? சொர்க்கம் ரிட்டையர்டான மக்களுக்கு. நரகத்தில் தான் சுவாரசியமான மனிதர்களோடு இருக்க முடியும் என்று சொன்னதாக நினைவு. கசாப்பினையும், அப்சல் குருவினையும் பார்க்க நேர்ந்தால் கேட்டதாக சொல்லவும்.

சொர்க்கம் / நரகமென்று ஆரம்பித்தால் உங்களுடைய இயக்குநர் மணிரத்னம் நினைவுக்கு வருகிறார். நீங்கள் வசனமெழுதாத, செழுமைப்படுத்தாத அவருடைய படைப்புகளின் போதாமையைக் கண்டு கழிவிரக்கம் தான் பிறக்கிறது. கனவிலாவது வந்து நீங்கள் அவருக்கு கிளாஸ் எடுங்கள் ப்ளிஸ்! இன்னொரு ரோஜா, பம்பாய், உயிரே சாத்தியங்களுண்டு.

கஷ்மீர் பற்றி ’கற்றதும் பெற்றது’மில் எழுதியது நினைவுக்கு வருகிறது. cost benefit analysis படிப் பார்த்தால் இவ்வளவு கெளரவத்துக்கு செலவு செய்வது வீண் என்கிற ரீதியில் எழுதியிருந்தீர்கள். கஷ்மீருக்கு பொருந்துமோ இல்லையோ, அது சரியாக வசீம் அகமது கஷ்மிரீக்கு பொருந்தி இருக்கிறது. அது தான் உங்கள் நண்பர் கமலஹாசன் எடுத்த ”விஸ்வரூபம்”

உங்கள் ஆத்ம நண்பர் முட்டி, மோதி, நாராசமாக வசவுகள் வாங்கி, நீதிமன்றம் ஏறி, சமரசமாகி ஒரு வழியாக படத்தினை வெளியிட்டு, எல்டாம்ஸ் சாலை வீட்டினைக் காப்பாற்றிக் கொண்டார். தமிழில் போகிறப் போக்கைப் பார்த்தால் படமே எடுக்க முடியாதுப் போல. மதங்களைப் பற்றிப் பேசினால் பிரச்சனை. சாதியைப் பேசினால் பிரச்சனை. சிகரெட், மது காட்டினால் பிரச்சனை. விலங்குகளைப் பயன்படுத்தினால் பிரச்சனை. இப்போது புதிதாக பெண்களை அடிப்பதுப் போல காட்டினால் ஏ சான்றிதழ் தருவதாக உத்தேசமாம். இந்திய சென்சார் போர்டின் உறுப்பினர்கள் வாழும் உலகம் இந்தியா இல்லையென்று நினைக்கிறேன்.

இங்கே இது. அமெரிக்காவில் செனட்டர்கள் தொல்லை. அதனாலேயே ஆஸ்காரில் Zero Dark Thirtyக்கு பரிசு தராமல் ஒப்பேத்திவிட்டார்கள். நான்கைந்து செனட்டர்கள் அமெரிக்க ராணுவம் சித்ரவதையே செய்யவில்லை என்று சர்ச்சில் சூடமேற்றி அடித்து சத்தியம் செய்கிறார்கள். அபூ கரீப் எல்லாம் கிராபிக் நாவல்கள் போலிருக்கிறது.

நல்ல வேளையாக நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள் இல்லையென்றால் பவர் ஸ்டாரின் அடுத்தப் படத்துக்கு பஞ்ச் டயலாக் எழுதக் கூப்பிடுவார்கள். தமிழ் சினிமா ஒரு பூட்ட கேஸ் என்று நீங்களும், அசோகமித்திரனும் சொல்லும்போது புரியவில்லை. இப்போது தெரிகிறது. தமிழ் சினிமா என்கிற ஜந்து கிட்டத்திட்ட நாற்பது, ஐம்பது வருடங்களாகவே மம்மியை பாதுகாப்பதுப் போல பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பண்டம். இருந்தாலும் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மாதிரி சில சமயங்களில் அது எழுந்து நடக்கிறது.

ஸ்பெஷல் 26 என்றொரு இந்திப் படம். சிபிஜ கொள்ளையடிக்கும் படம். இந்த மாதிரி அரசுத் துறைகள் பற்றி நீங்கள் ரொம்ப காலத்துக்கு முன்பு எழுதியிருக்கிறீர்கள். ”அனிதாவின் காதல்களில்” அப்போதைய வருமானவரித் துறை கட்டமைப்புப் பற்றி எழுதியிருப்பீர்கள். வணிக முதலாளித்துவத்தினை எதிர்த்து அல்பாயுசில் உயிர்விட்ட சே குவாரா (குபாரா!!) படம் போட்ட டீ சர்ட் தான் அதிக விற்பனையாகிறது. சே ஒரு ப்ராண்டாய் மாறி ரொம்ப காலமாயிற்று. ஆனாலும், புரட்சி வரும் என்று வள்ளூவர் கோட்டத்தில் மைக் பிடித்து லவுட் ஸ்பீக்கரில் ஆர்ப்பரிக்கிறார்கள். மைக், ஷாமியானா, லவுட் ஸ்பீக்கர்கள் வாடகை விடுபவர்களை வாழ்விக்கவாவது வாராவாரம்  புரட்சி நடந்தே தீர வேண்டும்.

96 பக்கங்களில் இலக்கியம் சமைத்ததெல்லாம் பேப்பருக்கு பஞ்சமிருந்த உங்கள் காலம். நண்பர் நடத்தும் புத்தக்கடையில் 55 சிற்றிதழ்கள் வருகிறது. இதையெல்லாம் யார் படிக்கிறார்கள், யார் எழுதுகிறார்கள் என்று யோசித்தால் வியப்பாகவும், கவலையாகவும் இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் உயிரோடிருந்து வீட்டிலிருந்தால், மயிலாப்பூரின் போஸ்ட் மேன் நிலையை நினைத்தால் பகீரென்கிறது. பாவம் அந்த மனிதர்! ஆனாலும் இதிலும் ஒரு லாபமிருக்கிறது. இந்தியாவெங்கும் அஞ்சல் அலுவலகங்களைத் தொடர்ச்சியாக மூடிவருகிறார்கள். தமிழ்நாட்டில் சிற்றிதழ்கள் அதை மூடாமல் வைத்திருக்கிறார்கள். இதுவல்லவோ உண்மையான புரட்சி Mr.ரங்கராஜன்!

தினந்தந்தி ஞாயிறு மலரில் கவிதைப் போட ஆரம்பித்ததிலிருந்து தமிழ்நாட்டில் உயிர்வாழக் கூடிய இடங்களிலெல்லாம் கவிஞர்கள் இருக்கிறார்கள். இப்போது அறிவுஜீவிகள்; சமூகப் போராளிகள்; இலக்கியவாதிகள். இலக்கியப் பதிப்பகங்கள் இப்போதெல்லாம் கிலோ கணக்கில் புத்தகம் போடுகிறார்கள். சமீபத்தில் அப்படிப் பார்த்தது “கோபிகிருஷ்ணனின் தொகுப்பு”. கிட்டத்திட்ட 2 - 2.5 கிலோ இருக்கலாம். எடுத்து, மடக்கி, விரித்து தொடர்ச்சியாக செய்தால் ஆர்ம்ஸ் வளருவதற்காக சாத்தியங்கள் உண்டு. அறிவு வளருமா என்று தெரியாது. தமிழிலக்கியம் உடலையும் வளர்க்கும் போல.

இந்த படிநிலை பிரமாதமாக வளர்ந்திருக்கிறது. ஆரம்பநிலையில் தமிழும், கொஞ்சமாய் ஆங்கிலமும், உலகமும், உள்ளூர் அரசியலும் தெரிந்திருந்தால்

ரிப்போர்ட்டர்
பத்தி எழுதுபவர் (Columnist)
சமூகப் போராளி (பேஸ்புக், டிவிட்டர், சிற்றிதழ்கள், நாளிதழ்கள் இதிலடங்கும்)
அறிவுஜீவி (சமூகப் போராளி + குறைவாக எழுத வேண்டும்)
இலக்கியவாதி
இலக்கிய பதிப்பகம்
சினிமா வசனகர்த்தா / பேட்டா / டிஸ்கஷன் ஆள்

அத்தோடு வாழ்க்கை முடிந்தது.

ஹிந்துவின் மேட்ரிமோனியல் விளம்பரங்களில் நீங்கள் சமூகவியல் படித்தீர்கள். உங்களுக்கு ஹிந்து. எனக்கு டைம்ஸ் ஆப் இந்தியா. டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பின்னால் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அதை பிறகு சொல்கிறேன். கூகிள் contextual advertising எல்லாம் கண்டுபிடித்து ஆட் வேர்ட்ஸ் போட ஆறு வருடங்களானது. மூலம், பெளத்திரம், துரித ஸ்கலிதம், சொப்ன ஸ்கலிதம் போன்ற மனிதகுலப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்த மருத்துவர்கள் தங்களுடைய விளம்பரங்களை ஒட்டுமிடம் ட்ரான்ஸ்பார்மர், மூத்திர சந்துகள், இருட்டு இடங்கள். இதை விட பிரமாதமான contextual advertising-ஐ எவரால் செய்ய முடியும். நாமிதை 50 வருடங்களாக செய்துவருகிறோம். தமிழன் தீர்க்கதரிசி. இதன் சமூக, உளவியல், டிஸ்ட்ரிப்யுஷன் காரணங்களை ஆராய்ந்து யாரும் முனைவர் பட்டம் வாங்கவில்லை. நாம் இதை தீவிரமாக விவாதிப்போம்.

நீதிமன்றங்கள் மக்களின் மனசாட்சியையொட்டி தீர்ப்புகள் எழுதுகின்றன என்று எழுதும் நீதிபதிகள் சொல்கிறார்கள். மக்களுடைய மனசாட்சி டிவி ரிமோட் மாதிரி. மாறிக் கொண்டேயிருக்கும். அதற்காக நீதியும் மாற வேண்டுமா என்று கேட்டால் மெளனம் காக்கிறார்கள். தடியெடுத்தவன் தண்டல்காரன் என்கிற ரீதியில் நீதி பரிபாலனம் நடக்குமெனில் ஜனநாயகமெதற்கு. இதற்கு நீதித்துறையை மட்டும் குறை சொல்ல முடியாது. உலகம் உருவான காலத்திலிருந்து இவ்வளவு நல்லவர்களை, உத்தமர்களை, அறநெறியாளர்களைக் கொண்டிருக்குமா என்று தெரியாது. ஆனால், தமிழில் நான் படிக்கும் பேஸ்புக் துணுக்குகள் இதை உறுதிப்படுத்துகின்றன. நான் இப்போது காமெடி சேனல்கள் பார்ப்பதில்லை.

டைம்ஸ் ஆப் இந்தியாவை நான் விரும்பி வாங்குகிறேன். படிக்க அல்ல. வருட சந்தா ரூ.299. மாதத்துக்கு நான்கைந்து கிலோ தேறுகிறது. பழைய பேப்பர்காரர்கள் சென்னையில் சமத்துவத்தினைக் கொண்டு வந்து விட்டார்கள். தமிழ் பேப்பர், ஆங்கில பேப்பருக்கு முன்னாளில் வித்தியாசமிருந்தது. இப்போது கிடையாது. தமிழக அரசு சமப்படுத்த முடியாததை சாதித்து இருக்கிறார்கள். அவர்களை யாரும் பாராட்டவேயில்லை. கிலோ ரூ.10. மாதத்துக்கு ரூ.40-50, வருடத்துக்கு ரூ.500-600. போட்ட காசுக்கு இரண்டு மடங்கு கொடுக்கும் டைம்ஸ் ஏன் இன்னமும் சிட் பண்ட் ஆரம்பிக்கவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சரி அதை விடுங்கள். அறிவியலும், தொழில்நுட்பமும் பேசுவோம்.

”தலைமைசெயலகத்தில்” எழுதியது தான். நியுரான்களிலிருந்து வரும் சிக்னல்களில் தான் மூளை இயங்குகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் உலகமுழுவதும், சென்சார்கள் (sensors) இதை செய்யும். இந்தியாவில் சென்சார்கள் போடப்பட்ட சாலைகள் வந்தாலும் அங்கேயும் ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் நிற்பார். ஏனென்று கேட்க மாட்டீர்களென்று தெரியும். ஆடோமெடிக் டீ/காபி மெஷினுக்கே ஆள் வைக்கும் நாடிது.

உலகின் மூளையாக யார் இருப்பது என்பதில் தான் சிக்கல். ஜீனோவுக்கு தெரிந்தது கூட இன்னமும் உலகிற்கு தெரியாது. ஆனாலும், இந்தியர்கள் பிக் டேட்டா, க்ளவுட் கம்ப்யுடிங், அனலிடிக்ஸ் என்று அடுத்த அவுட்சோர்சிங்கிற்கு ரெடியாகிவிட்டார்கள். இண்டியானாபோலிஸில் ட்ரக்கினை ஒதுக்கி “மேட்டர்” செய்தால் நம்மாட்கள் அதை ஒரு காப்பி எடுத்து யூபோர்ன் டாட்.காமில் போட்டுவிட்டு, நல்லபிள்ளையாக “அவன் என்னமோ பண்றான்” என்று ரிப்போர்ட் எழுதுவார்கள்.

போன வார எட்ஜ்.ஆர்க் தளத்தில் ஒரு சுவாரசியம். லெரா பொரொடிட்ஸ்கி (Lera Boroditsky) என்றொரு ஸ்டான்பர்டு துணை பேராசிரியரின் நேர்காணல். அம்மையார் உளவியல், நியுரோசயின்ஸ் & ஸிம்பாலிக் ஸிஸ்டம்ஸில் கில்லி. மொழிகளும், அதன் இலக்கணங்களும் எப்படி மனிதனை கட்டமைக்கிறது என்பது தான் சாரம்.

உலகில் 7000 மொழிகள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு மொழியின் இலக்கணத்திலேயே அதன் மனித இயல்புகள் உருவாகுகின்றன என்கிறார் பேராசிரியர். உதா. துருக்கிய மொழியில் வினையை எழுதுதலே ஒரு சாகசம். வினையோடு நேரடியாக தொடர்பு இருந்தால் வேறு மாதிரியாகவும், வினையை வெளியிலிருந்து தொடர்புப் படுத்தினால் வேறாகவும் சொல்ல வேண்டுமாம். இந்தோனேஷியனில் இறந்த/எதிர் காலங்கள் கிடையாதாம். ரஷ்யனில் வினை வெறுமனே மாறாது. ஆடவர் / பெண்டீர் / ஆட்டுக்குட்டி என்று அதனடிப்படையில் மாறும். ஒரு மொழியின் இலக்கணமே அந்த மொழி சார்ந்த குழுவின் இயல்புகளையும், உலகத்தினைப் பற்றியப் பார்வையையும் பிரதிபலித்தால் உலகம் எப்படி அமைதியாக இருக்க முடியும்.

 “இராமன் இராவணைக் கொன்றான்” இந்த வாக்கியத்தை எப்படி மாற்றிப் போட்டாலும் பொருள் ஒன்று தான். இந்த மாதிரியான mathematically rigorous இலக்கணம் நம்முடையது. நீங்களும் இதைக் கற்றுக் கொடுக்க தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தீர்கள். என்ன பிரயோசனம்! எழுவாய், பயனிலை கேட்டால் இங்கே தெரிவது அனுஷ்காவின் மோவாய். விட்டுத் தள்ளுங்கள் ரங்கராஜன், சொர்கத்தில் ரம்பா, ஊர்வசி, மேனகை என்றால், இந்தி சினிமாவின் எல்லா ஹீரோயின்களும் நரகத்தில் தான்.

செமன்டிக்ஸையும், ஸிம்பாலிக் ஸிஸ்டத்தையும் உங்களை தவிர வேறு யாரோடு பேசுவது ? மூளைவியலும், பொரூளாதாரமும் சேர்ந்து இங்கே behavioral finance என்றொரு துறை உருவாகிக் கொண்டிருக்கிறது. மூளையின் எந்த லோபில் எது படிகிறது என்று தெரிந்துக் கொண்டு சந்தைப்படுத்தும் neuromarketing துறையொன்று தயாராகிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் இங்கேப் பேசினால் யுரேகா போர்ப்ஸ் சேல்ஸ்மென் மாதிரி பார்க்கிறார்கள்.

அறி-புனை கதைகள், அறிவியல் ரீதியான சிந்தனை, தொடர்ச்சியான தேடல், அதன் ஆழத்தையும் அகலத்தையும் விளாவும் வாக்கியங்கள் என்று நீங்கள் தமிழுக்கு தந்தது ஏராளம். துரோணர் தான். உங்களைச் சுற்றி என்னையும் சேர்த்து ஏகப்பட்ட ஏகலைவர்கள். சன் டிவியில் புதியதாய் மகாபாரதம் போடுகிறார்கள். துரோணராக வருகிறவரை ஒரு முறை வட பழனி பஸ் ஸ்டாண்டில் கோலி சோடாவோடு பார்த்திருக்கிறேன். உங்கள் உயரத்துக்கு தாடி வைத்து துரோணராக யோசித்துப் பார்த்தால் சகிக்கவில்லை. நீங்கள் வேண்டுமானால் பீஷ்மாராகி விடுங்கள். என்ன ஒரே பிரச்சனை மெக்சிகன் சலவைக்காரி ஜோக் சொல்ல முடியாது, அதை ஆப் லைனில் பேசிக் கொள்ளலாம்.

செத்தும் கொடுத்தான் சீதகாதி மாதிரி நீங்கள் போயிருந்தாலும் உங்களை வைத்து நடக்கும் வியாபாரங்கள் கன ஜோராக நடக்கின்றன. விகடன் சிறப்பு மலர் போட்டு கொண்டாடுகிறேன் என்கிறப் பெயரில் கொள்ளையடிக்கிறார்கள். நீங்கள் வாழ்ந்தப் போது உங்களைத் தூற்றிய அத்தனை இலக்கியவாதிகளும் மறக்காமல் பதிவு எழுதுகிறார்கள். விழாக்களுக்கு வருகிறார்கள். புத்தகம் போடுகிறார்கள். சே குவாராவுக்கு ஆன அதே ப்ராண்ட் வெறியாட்டம் இனி வரும் நாட்களில் உமக்கும் நடக்குமென்று தோன்றுகிறது. சீக்கிரமாய் வீட்டோடுப் பேசி பழையப் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொள்ள சொல்லுங்கள். சொல்ல முடியாது இன்னும் ஐந்து வருடத்தில் காபி டேபிள் புக் வரலாம். :)

நரகத்தில் இனி நாங்கள் அனுப்பப்போகும் ஜனாதிபதிகள், கவர்னர்கள், கொள்ளைக்காரர்களோடு பேசுங்கள். பல சுவாரசியங்கள் கிடைக்கும். இப்போதைக்கு இந்த ட்வீட்டோடு விடைப் பெறுகிறேன். அடுத்த வருடம் லெமன் ஹனி டீ யோடு மீண்டும் பேசலாம்.

Don't worry. When U have NO content with which 2 express the emotion U are feeling. It's not writers block. It's just DOWNLOADING time. - via @fatbellybella (aka ErykahBadoula)
Labels: , , ,


Feb 14, 2013

அவள். அவன். அப்புறம்.....


அப்புறம் ...............................................

என்ன

ஒண்ணுமில்லை

சரி

ஒண்ணுமில்லையா

ஆமா ஒண்ணுமில்லை

சரி வைச்சிடறேன்

வைக்கப் போறியா

நீ தான் ஒண்ணுமில்லைன்னு சொல்றியே

ஒண்ணுமில்லைன்னா ஒண்ணுமில்லைன்னு அர்த்தமா

அதுக்கென்ன அர்த்தம்

ஒண்ணுமில்லைன்னு (சிரிக்கிறாள்)

நீ தானே என் பொன்வசந்தம் ஏன் ப்ளாப் ஆச்சுன்னு இப்ப தெரியுது

என்ன தெரியுது?

ஏன் நீயும் தானே படம் பார்த்தே

நான் பார்த்தேன். எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா ஏன் ப்ளாப் ஆச்சு

ம்ம்ம்ம்ம். நீ நூறு தடவை பார்க்கலை, அதனால.

இல்ல நீ ப்ளாப்புக்கு காரணம் சொல்லு

ஒண்ணுமில்லை

என்னது

இல்ல படத்துல ஒண்ணுமில்லைனு சொன்னேன்.

ஒ அப்படியா. ஒண்ணுமில்லாத படத்தை தான் நீ நாலு தடவை பார்ப்பியா

(யாருடி போன்ல... இந்த நேரத்துல

ஒண்ணுமில்லை மா, வித்யாகிட்ட நோட்ஸ் கேட்டுட்டு இருக்கறேன் 

அந்த வித்யாவுக்கு வேலையே இல்லையா, கடன்காரி இப்பவா போன் பண்ணுவா, சீக்கிரம் பேசிட்டு வை  

சரிம்மா)

யாரு

அம்மா

என்னவாம்

ம்ஹும். போன்ல யாருன்னு கேட்டாங்க, வித்யான்னு சொல்லிட்டேன்

யாரு அந்த ஹை ஹீல்ஸ் வித்யாவா

ஆமா. அவ ஹை ஹீல்ஸ் போடறாளா இல்லையான்னு பாரு. சரி இன்னைக்கு என்னோட துப்பட்டா என்ன கலர்

அதுக்குள்ள எதுக்குடி கோவப் படற

இல்ல நீ சொல்லு. இப்ப சொல்லு. இன்னைக்கு என்னோட துப்பட்டா என்ன கலர்

ரெட்

மரமண்டை. நான் இன்னைக்கு போட்டிருந்தது வயலட். உனக்கு கவனம் இங்கிருந்தா தானே, எவ ஹை ஹீல்ஸ் போடறான்னு பார்க்க தானே

அலையுது

ச்ச்ச்சு.. It's ok. My mistake. நான் நியாபகம் வைச்சுக்கல. ஐ லவ் யூ

(யாருடா இந்த நேரத்துல  

மகேஷ் டா, நாளைக்கு காலையில மேட்ச் ப்ராக்டிஸும், ஸ்பெஷல் கிளாஸும், அதான் பேசறோம் 

கிளாஸ் கட் அடிச்சுட்டு கிரிக்கெட் ஆடப் போயிடப் போறே இதுல என்ன பேசறது இருக்கு

இல்ல இல்ல எக்ஸாம் வருது கிளாஸ் போவோம்

எக்கேடோ கெட்டு ஒழி என் ட்ராக்ஸ் பார்த்தியா

கீழே அம்மா தோய்க்கப் போட்ருங்காங்க போல, வாஷிங் மெஷின் மேல இருந்தது

அம்மாஆஆஆஆஆஆ......... )

யாரு உங்க அண்ணனா

ஆமாம்

இவ்ளோ நேரம் வெளிய சுத்திட்டு இப்ப தான் வர்றானா. அண்னன் வெளியே, தம்பி போன்லயா

ஏய்.... அவன் என்ன பண்ணான் நமக்குள்ள

ஏன் அண்ணனை சொன்னா கோவம் வருமா உனக்கு

அப்படியில்லை

பின்ன எப்படி, நீ இப்ப அப்படி தானே பேசின

சரி விடு.

எதை

இந்த விஷயத்தை

சரி. நீ ஏன் அந்த படம் ப்ளாப் ஆச்சுன்னு சொல்லு, அதுவும் என்கிட்ட பேசும்போதுன்னு இழுத்தே.....

எல்லா பொண்ணுங்களும் இப்படி தானா

இப்படி தானான்னா எப்படி

இப்படி தான். கேள்வி கேட்டுட்டே இருப்பீங்களா

நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்றே

இல்ல ஒரு விஷயத்துல இருந்து அப்படியே இன்னொரு விஷயத்துக்கு ஜம்ப் பண்ணிட்டு கேட்டுட்டே இருக்கியே அதான் கேட்டேன்

நான் குதிக்கலை. நீ தான் ஒண்ணுமில்லைன்னு சொன்னதுக்கு படத்தை இழுத்தே, அப்புறம் வித்யா. துப்பட்டா, எங்கம்மா, உங்கண்ணன்னு வ்ரிசையா

அப்புறம்

அப்புறமென்ன.... ஒண்ணுமில்லை

சரி போய் தூங்கு. மணி 12.30 ஆக போகுது

குட் நைட். பை

அவ்ளோதானா

வேற என்ன சொல்லணும்

என்ன சொல்லணும்ன்னு தெரியாதா

ஐ லவ் யூ. பை

எதுக்குடி இவ்ளோ கோவத்தோட ஐ லவ் யூ சொல்றே, இதுக்கு நீ சொல்லாமலேயே இருந்திருக்கலாம்

அப்ப எதுக்கு என்னை போக சொன்னே

டைம் ஆச்சேன்னு சொன்னேன். தப்பா

ஐயோடா, சாருக்கு இன்னைக்கு தான் டைம் தெரியுதோ. இவ்வளவு நாளா எங்க போச்சு. வாட்ச் கட்டலையா

நக்கலு.....

ஆமாம்.

சரி போ. வாட்ச் கட்டாமயே சொல்றேன் போய் தூங்கு

போயிடுவேண்டா. அப்புறம் நொய் நொய்ன்னு எஸ் எம் எஸ் அனுப்பாதே.

இல்லை அனுப்பல

அப்ப போகவா

நீ தான் போறேன்னு சொன்னீயே

நான் எங்க போறேன்னு சொன்னேன். நீ தான் போன்னு சொன்னே

அப்ப இரு

ம்ம்ம்ம்

என்ன

.......................

இருக்கியாடீ, ஏதாவது பேசு

இருக்கேன்

இன்னும் கோவம் தீரலையா

கோவமெல்லாம் இல்ல

பின்ன

ஐ லவ் யூ

ம்ம லவ் யூ டூ

தா

ம்ம்ம்

என்ன

ம்ம்ம்

என்னடீ

ம்ம்ம்ம்

வேணுமா

ம்ம்ம்

என்ன கலர் ட்ரஸ் போட்டு இருக்கே

வேண்டாம் ஆரம்பிக்காதே

வேணாமா

ம்ம்ம்ம்

வேணுமா, வேணாமா

வேணும் ஆனா வேணாம்

ஐ லவ் யூ

ம்ம்ம்

நீ வேணும்டீ. இப்ப வேணும்.

ம்ம்ம்

அன்னைக்கு கோயில்ல உன்னை தாவணில பார்த்த போது அப்படியே பறக்கறா மாதிரி இருந்தது

ம்ம்ம். நீ ஏன் வந்தே

உன்னை பார்க்க தான்

பார்க்க வந்தவன் உள்ள வர வேண்டியது தானே செருப்பு நிறுத்தற இடத்துலயே இருந்தே. தம்மு தானே

ச்சீ. தம் எல்லாம் கோயில் முன்னாடி அடிக்க மாட்டேன்

சரி. வேற எப்ப அடிப்பே, ப்ரெண்டோஸோட, டீக்கடையில, பின்னாடி அடிக்க மாட்டேன்னு நம்பறேன்.

நீ நம்பலைன்னாலும் அதான் உண்மை. உன்மேல சத்தியம்.

பொழச்சு போ

நேரம் தான்.

என்ன நேரம் தான்

இல்லை டயம் என்னாச்சுன்னு பார்த்தேன்னு சொல்ல வந்தேன்

மணி 12.53 போதுமா

இல்லை போதாது

என்னது

உன் கூட பேசறது போதலைன்னு சொல்ல வந்தேன்

ஆமா, இப்படியே டெய்லி பேசி பேசி தான் கிளாஸ்ல தூங்கி வடியறோம்

சரி விடு. ஏ.ஆர்.ரஹ்மான் கூட நைட் எல்லாம் வேலை பார்த்துட்டு காலையில தூங்குவாராம்.

என்ன வேலை

ம்ம்ம் !%#(*$%@%(*@(#$^%$(@($*@)@)^$%@%@&@!#%$^

சீ நாயே, எப்ப பார்த்தாலும் அதே நினைப்பு

எப்ப பார்த்தாலும் இல்லைடீ, உன்னை பார்த்தா மட்டும்

ம்ம்ம். வரும் வரும். நேத்திக்கு ஏன் காலேஜ் பஸ்ல பின்னாடி உட்கார்ந்துட்டு மெஸேஜா அனுப்பினே

ஹாங். சும்மா போரடிச்சுது, அதனால அனுப்பினேன். என்னடி கேள்வியிது

இல்ல ரீமா நேத்து லீவு, என் பக்கத்து சீட் காலியா தான் இருந்தது. நீ ஏன் பின்னாடி உட்கார்ந்தேன்னு தெரியல அதனால கேட்டேன்.

அட நாயே, இதை ஒரு மெஸேஜ்ல சொல்லியிருக்ககூடாது. முன்னாடி வந்திருப்பேன்ல

வேண்டாம். வேண்டாம். வந்தா நீ என்ன பண்ணுவேன்னு தெரியும்

என்ன பண்ணுவேன்

எனக்கு தெரியும்

அதான் சொல்லேன்

செய்றவன் நீ உனக்கு தெரியாதா. நான் சொல்லணுமா

செய்றது நானா இருந்தாலும், உன் குரல்ல கேக்கறது ஒரு சுகம் தான்

ஒண்ணும் தேவையில்லை

போடீ

போடா

போடீ நாயே

போடா லூசு

ஐ லவ் யூ

ஐ லவ் யூ டூ. லவ் யு. லவ் யு. லவ் யு.

இப்ப பக்கத்துல இருந்தா அப்படியே கட்டிப் பிடிச்சு, உன்னை தூக்கி

ஸ்டாப். ஸ்டாப் போதும் ஏற்கனவே உன் பில் எகிறிட்டு இருக்கு. இப்ப வேண்டாம். சரி நான் வைச்சிடறேன். அம்மா காலையில ஏதோ கோயிலுக்கு

போகணும்னு சொன்னாங்க, இப்பவே லேட்டு. நான் போய் தூங்கறேன்

அவ்ளோ தானா.

அவ்ளோ தான்

சரி போ

குட் நைட்

குட் நைட்.

------------------------------------------------------------------
u put ur fone at 1.35 now 3.20 can't sleep mis u badly luv u mwahhhhhhhhh
------------------------------------------------------------------

அவன்
-----------------------------------------

சொல்லு மச்சி, என்னடா இந்த நேரத்துல

மயிரு.... ஒரு மணி நேரமா போன் பிஸி. யாருகிட்டடா மொக்கைப் போட்டிருந்த

விட்றா.

ங்கோத்தா சொல்லப் போறியா இல்லையா, நளினியா இல்லை அந்த கம்யுட்டர் செண்டர் பொண்ணா

இல்லைடா இவ வேற

வேறன்னா

காலேஜ்ல சொன்ன மேட்டர்

ஓ அந்த பிகரா என்னா மச்சி எத்தன படம்

இல்ல மாமே, பெருசா எதுவுமில்லை. சும்மா பேஸ்புக்கு, அப்பப்ப கொஞ்சம் அவ்ளோ தான்

ஆ.... தோடா... த்தா நீ சும்மா இருக்கே, இதை நான் நம்பணும்... சோக்கா போடறியே பிட்டு

மச்சி இல்லைன்னு சொன்னா இல்லடா. த்தா சத்யம்ல நீ தானே என் பொன்வசந்தம், காலியா இருக்கும்னு கூட்டிட்டு போனா, புல் ஏசி, தெவுடியா

பையன், ஒரே குளிரு, அவ துப்பட்டா, பேக் எல்லாம் டைட்டா கட்டிட்டு படம் பார்த்தா.... தொட கூட இல்லை... 400 ரூவா தண்டம்.

பொண்ணுன்னா செலவு பண்ணுவே. ஒரு கட்டிங் வாங்கி தர மாட்டே. சரி வுடு ஏதோ சொல்றே. நாளைக்கு விஜயால ஒரு மேட்டர் படம் சாயந்திரம்

வந்துடு

சாயந்திரமா மச்சி.... ஒரு வேலை இருக்கு

மச்சான், மேட்டரோட மேட்டரா.. என்சாய்... வுடு, டிவிடி தர்றேன் பார்த்துக்க @%*#&$#*(#%(*#(#(*#((@(

ஒரு மயிரும் இல்ல. நீ சரக்கடிச்சிட்டு சபையில எதையாவது சொல்லி வைக்காதே. போனை வை. நான் கூப்பிடறேன்.


அவள்
-----------------------------------------------------------------
என்னடீ ஆச்சு

ஒண்ணும் ஆகலை

ஒண்ணும் ஆகாமயா ஒருத்தன் 3.20க்கு மெஸேஜ் அனுப்பறான்

விட்ரீ... சும்மா டைம்பாஸ்...

டைம்பாஸ் தானே

ஆமா விகடனோட டைம்பாஸ். அவனும் நாலு தடவை சத்யம் கூட்டிட்டு போய் என்னன்னமோ ட்ரை பண்ணான். இடமே கொடுக்கலை. இவன் சும்மா.

வினோத் தான் கொஞ்சம் தாராளமா செலவு பண்றான். கொஞ்சம் பேக்கு வேற. கை படாம பேசுவான். தொட்டா கூட சாரி சொல்லுவான் அவன் சேஃப்

இவன், வினோத், ரகு, விக்டர் பாத்துடீ, எவனாவது எதையாவது செய்யப் போறான்

அதெல்லாம் ஒண்ணும் ஆகாது

(போன் அடிக்கிறது)

ஹாய் மகேஷ்.... என்ன இந்த நேரத்துல

--------------------

ஒ அப்படியா. நான் ப்ரீ தான்

--------------------

அப்புறம் ...............................................

Labels: , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]