Feb 27, 2013

வாத்தியார் ஐந்தாமாண்டு நினைவுக் கட்டுரை

அன்புள்ள ரங்கராஜன்,

'அப்பல்லோ தினங்களில்’ நீங்கள் சில நாட்கள் உங்கள் வாழ்நாளிலிருந்து காணாமல் போய்விட்டது என்று எழுதியிருந்தீர்கள். இப்போது வருடங்கள். பெரியதாய் ஒன்றும் மாறிடவில்லை. வருடாவருடம் நாமிருவரும் இந்த நாளில் பேசுவோம். நரகத்தில் எல்லோரும் நலமா ? சொர்க்கம் ரிட்டையர்டான மக்களுக்கு. நரகத்தில் தான் சுவாரசியமான மனிதர்களோடு இருக்க முடியும் என்று சொன்னதாக நினைவு. கசாப்பினையும், அப்சல் குருவினையும் பார்க்க நேர்ந்தால் கேட்டதாக சொல்லவும்.

சொர்க்கம் / நரகமென்று ஆரம்பித்தால் உங்களுடைய இயக்குநர் மணிரத்னம் நினைவுக்கு வருகிறார். நீங்கள் வசனமெழுதாத, செழுமைப்படுத்தாத அவருடைய படைப்புகளின் போதாமையைக் கண்டு கழிவிரக்கம் தான் பிறக்கிறது. கனவிலாவது வந்து நீங்கள் அவருக்கு கிளாஸ் எடுங்கள் ப்ளிஸ்! இன்னொரு ரோஜா, பம்பாய், உயிரே சாத்தியங்களுண்டு.

கஷ்மீர் பற்றி ’கற்றதும் பெற்றது’மில் எழுதியது நினைவுக்கு வருகிறது. cost benefit analysis படிப் பார்த்தால் இவ்வளவு கெளரவத்துக்கு செலவு செய்வது வீண் என்கிற ரீதியில் எழுதியிருந்தீர்கள். கஷ்மீருக்கு பொருந்துமோ இல்லையோ, அது சரியாக வசீம் அகமது கஷ்மிரீக்கு பொருந்தி இருக்கிறது. அது தான் உங்கள் நண்பர் கமலஹாசன் எடுத்த ”விஸ்வரூபம்”

உங்கள் ஆத்ம நண்பர் முட்டி, மோதி, நாராசமாக வசவுகள் வாங்கி, நீதிமன்றம் ஏறி, சமரசமாகி ஒரு வழியாக படத்தினை வெளியிட்டு, எல்டாம்ஸ் சாலை வீட்டினைக் காப்பாற்றிக் கொண்டார். தமிழில் போகிறப் போக்கைப் பார்த்தால் படமே எடுக்க முடியாதுப் போல. மதங்களைப் பற்றிப் பேசினால் பிரச்சனை. சாதியைப் பேசினால் பிரச்சனை. சிகரெட், மது காட்டினால் பிரச்சனை. விலங்குகளைப் பயன்படுத்தினால் பிரச்சனை. இப்போது புதிதாக பெண்களை அடிப்பதுப் போல காட்டினால் ஏ சான்றிதழ் தருவதாக உத்தேசமாம். இந்திய சென்சார் போர்டின் உறுப்பினர்கள் வாழும் உலகம் இந்தியா இல்லையென்று நினைக்கிறேன்.

இங்கே இது. அமெரிக்காவில் செனட்டர்கள் தொல்லை. அதனாலேயே ஆஸ்காரில் Zero Dark Thirtyக்கு பரிசு தராமல் ஒப்பேத்திவிட்டார்கள். நான்கைந்து செனட்டர்கள் அமெரிக்க ராணுவம் சித்ரவதையே செய்யவில்லை என்று சர்ச்சில் சூடமேற்றி அடித்து சத்தியம் செய்கிறார்கள். அபூ கரீப் எல்லாம் கிராபிக் நாவல்கள் போலிருக்கிறது.

நல்ல வேளையாக நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள் இல்லையென்றால் பவர் ஸ்டாரின் அடுத்தப் படத்துக்கு பஞ்ச் டயலாக் எழுதக் கூப்பிடுவார்கள். தமிழ் சினிமா ஒரு பூட்ட கேஸ் என்று நீங்களும், அசோகமித்திரனும் சொல்லும்போது புரியவில்லை. இப்போது தெரிகிறது. தமிழ் சினிமா என்கிற ஜந்து கிட்டத்திட்ட நாற்பது, ஐம்பது வருடங்களாகவே மம்மியை பாதுகாப்பதுப் போல பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பண்டம். இருந்தாலும் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மாதிரி சில சமயங்களில் அது எழுந்து நடக்கிறது.

ஸ்பெஷல் 26 என்றொரு இந்திப் படம். சிபிஜ கொள்ளையடிக்கும் படம். இந்த மாதிரி அரசுத் துறைகள் பற்றி நீங்கள் ரொம்ப காலத்துக்கு முன்பு எழுதியிருக்கிறீர்கள். ”அனிதாவின் காதல்களில்” அப்போதைய வருமானவரித் துறை கட்டமைப்புப் பற்றி எழுதியிருப்பீர்கள். வணிக முதலாளித்துவத்தினை எதிர்த்து அல்பாயுசில் உயிர்விட்ட சே குவாரா (குபாரா!!) படம் போட்ட டீ சர்ட் தான் அதிக விற்பனையாகிறது. சே ஒரு ப்ராண்டாய் மாறி ரொம்ப காலமாயிற்று. ஆனாலும், புரட்சி வரும் என்று வள்ளூவர் கோட்டத்தில் மைக் பிடித்து லவுட் ஸ்பீக்கரில் ஆர்ப்பரிக்கிறார்கள். மைக், ஷாமியானா, லவுட் ஸ்பீக்கர்கள் வாடகை விடுபவர்களை வாழ்விக்கவாவது வாராவாரம்  புரட்சி நடந்தே தீர வேண்டும்.

96 பக்கங்களில் இலக்கியம் சமைத்ததெல்லாம் பேப்பருக்கு பஞ்சமிருந்த உங்கள் காலம். நண்பர் நடத்தும் புத்தக்கடையில் 55 சிற்றிதழ்கள் வருகிறது. இதையெல்லாம் யார் படிக்கிறார்கள், யார் எழுதுகிறார்கள் என்று யோசித்தால் வியப்பாகவும், கவலையாகவும் இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் உயிரோடிருந்து வீட்டிலிருந்தால், மயிலாப்பூரின் போஸ்ட் மேன் நிலையை நினைத்தால் பகீரென்கிறது. பாவம் அந்த மனிதர்! ஆனாலும் இதிலும் ஒரு லாபமிருக்கிறது. இந்தியாவெங்கும் அஞ்சல் அலுவலகங்களைத் தொடர்ச்சியாக மூடிவருகிறார்கள். தமிழ்நாட்டில் சிற்றிதழ்கள் அதை மூடாமல் வைத்திருக்கிறார்கள். இதுவல்லவோ உண்மையான புரட்சி Mr.ரங்கராஜன்!

தினந்தந்தி ஞாயிறு மலரில் கவிதைப் போட ஆரம்பித்ததிலிருந்து தமிழ்நாட்டில் உயிர்வாழக் கூடிய இடங்களிலெல்லாம் கவிஞர்கள் இருக்கிறார்கள். இப்போது அறிவுஜீவிகள்; சமூகப் போராளிகள்; இலக்கியவாதிகள். இலக்கியப் பதிப்பகங்கள் இப்போதெல்லாம் கிலோ கணக்கில் புத்தகம் போடுகிறார்கள். சமீபத்தில் அப்படிப் பார்த்தது “கோபிகிருஷ்ணனின் தொகுப்பு”. கிட்டத்திட்ட 2 - 2.5 கிலோ இருக்கலாம். எடுத்து, மடக்கி, விரித்து தொடர்ச்சியாக செய்தால் ஆர்ம்ஸ் வளருவதற்காக சாத்தியங்கள் உண்டு. அறிவு வளருமா என்று தெரியாது. தமிழிலக்கியம் உடலையும் வளர்க்கும் போல.

இந்த படிநிலை பிரமாதமாக வளர்ந்திருக்கிறது. ஆரம்பநிலையில் தமிழும், கொஞ்சமாய் ஆங்கிலமும், உலகமும், உள்ளூர் அரசியலும் தெரிந்திருந்தால்

ரிப்போர்ட்டர்
பத்தி எழுதுபவர் (Columnist)
சமூகப் போராளி (பேஸ்புக், டிவிட்டர், சிற்றிதழ்கள், நாளிதழ்கள் இதிலடங்கும்)
அறிவுஜீவி (சமூகப் போராளி + குறைவாக எழுத வேண்டும்)
இலக்கியவாதி
இலக்கிய பதிப்பகம்
சினிமா வசனகர்த்தா / பேட்டா / டிஸ்கஷன் ஆள்

அத்தோடு வாழ்க்கை முடிந்தது.

ஹிந்துவின் மேட்ரிமோனியல் விளம்பரங்களில் நீங்கள் சமூகவியல் படித்தீர்கள். உங்களுக்கு ஹிந்து. எனக்கு டைம்ஸ் ஆப் இந்தியா. டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பின்னால் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அதை பிறகு சொல்கிறேன். கூகிள் contextual advertising எல்லாம் கண்டுபிடித்து ஆட் வேர்ட்ஸ் போட ஆறு வருடங்களானது. மூலம், பெளத்திரம், துரித ஸ்கலிதம், சொப்ன ஸ்கலிதம் போன்ற மனிதகுலப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்த மருத்துவர்கள் தங்களுடைய விளம்பரங்களை ஒட்டுமிடம் ட்ரான்ஸ்பார்மர், மூத்திர சந்துகள், இருட்டு இடங்கள். இதை விட பிரமாதமான contextual advertising-ஐ எவரால் செய்ய முடியும். நாமிதை 50 வருடங்களாக செய்துவருகிறோம். தமிழன் தீர்க்கதரிசி. இதன் சமூக, உளவியல், டிஸ்ட்ரிப்யுஷன் காரணங்களை ஆராய்ந்து யாரும் முனைவர் பட்டம் வாங்கவில்லை. நாம் இதை தீவிரமாக விவாதிப்போம்.

நீதிமன்றங்கள் மக்களின் மனசாட்சியையொட்டி தீர்ப்புகள் எழுதுகின்றன என்று எழுதும் நீதிபதிகள் சொல்கிறார்கள். மக்களுடைய மனசாட்சி டிவி ரிமோட் மாதிரி. மாறிக் கொண்டேயிருக்கும். அதற்காக நீதியும் மாற வேண்டுமா என்று கேட்டால் மெளனம் காக்கிறார்கள். தடியெடுத்தவன் தண்டல்காரன் என்கிற ரீதியில் நீதி பரிபாலனம் நடக்குமெனில் ஜனநாயகமெதற்கு. இதற்கு நீதித்துறையை மட்டும் குறை சொல்ல முடியாது. உலகம் உருவான காலத்திலிருந்து இவ்வளவு நல்லவர்களை, உத்தமர்களை, அறநெறியாளர்களைக் கொண்டிருக்குமா என்று தெரியாது. ஆனால், தமிழில் நான் படிக்கும் பேஸ்புக் துணுக்குகள் இதை உறுதிப்படுத்துகின்றன. நான் இப்போது காமெடி சேனல்கள் பார்ப்பதில்லை.

டைம்ஸ் ஆப் இந்தியாவை நான் விரும்பி வாங்குகிறேன். படிக்க அல்ல. வருட சந்தா ரூ.299. மாதத்துக்கு நான்கைந்து கிலோ தேறுகிறது. பழைய பேப்பர்காரர்கள் சென்னையில் சமத்துவத்தினைக் கொண்டு வந்து விட்டார்கள். தமிழ் பேப்பர், ஆங்கில பேப்பருக்கு முன்னாளில் வித்தியாசமிருந்தது. இப்போது கிடையாது. தமிழக அரசு சமப்படுத்த முடியாததை சாதித்து இருக்கிறார்கள். அவர்களை யாரும் பாராட்டவேயில்லை. கிலோ ரூ.10. மாதத்துக்கு ரூ.40-50, வருடத்துக்கு ரூ.500-600. போட்ட காசுக்கு இரண்டு மடங்கு கொடுக்கும் டைம்ஸ் ஏன் இன்னமும் சிட் பண்ட் ஆரம்பிக்கவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சரி அதை விடுங்கள். அறிவியலும், தொழில்நுட்பமும் பேசுவோம்.

”தலைமைசெயலகத்தில்” எழுதியது தான். நியுரான்களிலிருந்து வரும் சிக்னல்களில் தான் மூளை இயங்குகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் உலகமுழுவதும், சென்சார்கள் (sensors) இதை செய்யும். இந்தியாவில் சென்சார்கள் போடப்பட்ட சாலைகள் வந்தாலும் அங்கேயும் ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் நிற்பார். ஏனென்று கேட்க மாட்டீர்களென்று தெரியும். ஆடோமெடிக் டீ/காபி மெஷினுக்கே ஆள் வைக்கும் நாடிது.

உலகின் மூளையாக யார் இருப்பது என்பதில் தான் சிக்கல். ஜீனோவுக்கு தெரிந்தது கூட இன்னமும் உலகிற்கு தெரியாது. ஆனாலும், இந்தியர்கள் பிக் டேட்டா, க்ளவுட் கம்ப்யுடிங், அனலிடிக்ஸ் என்று அடுத்த அவுட்சோர்சிங்கிற்கு ரெடியாகிவிட்டார்கள். இண்டியானாபோலிஸில் ட்ரக்கினை ஒதுக்கி “மேட்டர்” செய்தால் நம்மாட்கள் அதை ஒரு காப்பி எடுத்து யூபோர்ன் டாட்.காமில் போட்டுவிட்டு, நல்லபிள்ளையாக “அவன் என்னமோ பண்றான்” என்று ரிப்போர்ட் எழுதுவார்கள்.

போன வார எட்ஜ்.ஆர்க் தளத்தில் ஒரு சுவாரசியம். லெரா பொரொடிட்ஸ்கி (Lera Boroditsky) என்றொரு ஸ்டான்பர்டு துணை பேராசிரியரின் நேர்காணல். அம்மையார் உளவியல், நியுரோசயின்ஸ் & ஸிம்பாலிக் ஸிஸ்டம்ஸில் கில்லி. மொழிகளும், அதன் இலக்கணங்களும் எப்படி மனிதனை கட்டமைக்கிறது என்பது தான் சாரம்.

உலகில் 7000 மொழிகள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு மொழியின் இலக்கணத்திலேயே அதன் மனித இயல்புகள் உருவாகுகின்றன என்கிறார் பேராசிரியர். உதா. துருக்கிய மொழியில் வினையை எழுதுதலே ஒரு சாகசம். வினையோடு நேரடியாக தொடர்பு இருந்தால் வேறு மாதிரியாகவும், வினையை வெளியிலிருந்து தொடர்புப் படுத்தினால் வேறாகவும் சொல்ல வேண்டுமாம். இந்தோனேஷியனில் இறந்த/எதிர் காலங்கள் கிடையாதாம். ரஷ்யனில் வினை வெறுமனே மாறாது. ஆடவர் / பெண்டீர் / ஆட்டுக்குட்டி என்று அதனடிப்படையில் மாறும். ஒரு மொழியின் இலக்கணமே அந்த மொழி சார்ந்த குழுவின் இயல்புகளையும், உலகத்தினைப் பற்றியப் பார்வையையும் பிரதிபலித்தால் உலகம் எப்படி அமைதியாக இருக்க முடியும்.

 “இராமன் இராவணைக் கொன்றான்” இந்த வாக்கியத்தை எப்படி மாற்றிப் போட்டாலும் பொருள் ஒன்று தான். இந்த மாதிரியான mathematically rigorous இலக்கணம் நம்முடையது. நீங்களும் இதைக் கற்றுக் கொடுக்க தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தீர்கள். என்ன பிரயோசனம்! எழுவாய், பயனிலை கேட்டால் இங்கே தெரிவது அனுஷ்காவின் மோவாய். விட்டுத் தள்ளுங்கள் ரங்கராஜன், சொர்கத்தில் ரம்பா, ஊர்வசி, மேனகை என்றால், இந்தி சினிமாவின் எல்லா ஹீரோயின்களும் நரகத்தில் தான்.

செமன்டிக்ஸையும், ஸிம்பாலிக் ஸிஸ்டத்தையும் உங்களை தவிர வேறு யாரோடு பேசுவது ? மூளைவியலும், பொரூளாதாரமும் சேர்ந்து இங்கே behavioral finance என்றொரு துறை உருவாகிக் கொண்டிருக்கிறது. மூளையின் எந்த லோபில் எது படிகிறது என்று தெரிந்துக் கொண்டு சந்தைப்படுத்தும் neuromarketing துறையொன்று தயாராகிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் இங்கேப் பேசினால் யுரேகா போர்ப்ஸ் சேல்ஸ்மென் மாதிரி பார்க்கிறார்கள்.

அறி-புனை கதைகள், அறிவியல் ரீதியான சிந்தனை, தொடர்ச்சியான தேடல், அதன் ஆழத்தையும் அகலத்தையும் விளாவும் வாக்கியங்கள் என்று நீங்கள் தமிழுக்கு தந்தது ஏராளம். துரோணர் தான். உங்களைச் சுற்றி என்னையும் சேர்த்து ஏகப்பட்ட ஏகலைவர்கள். சன் டிவியில் புதியதாய் மகாபாரதம் போடுகிறார்கள். துரோணராக வருகிறவரை ஒரு முறை வட பழனி பஸ் ஸ்டாண்டில் கோலி சோடாவோடு பார்த்திருக்கிறேன். உங்கள் உயரத்துக்கு தாடி வைத்து துரோணராக யோசித்துப் பார்த்தால் சகிக்கவில்லை. நீங்கள் வேண்டுமானால் பீஷ்மாராகி விடுங்கள். என்ன ஒரே பிரச்சனை மெக்சிகன் சலவைக்காரி ஜோக் சொல்ல முடியாது, அதை ஆப் லைனில் பேசிக் கொள்ளலாம்.

செத்தும் கொடுத்தான் சீதகாதி மாதிரி நீங்கள் போயிருந்தாலும் உங்களை வைத்து நடக்கும் வியாபாரங்கள் கன ஜோராக நடக்கின்றன. விகடன் சிறப்பு மலர் போட்டு கொண்டாடுகிறேன் என்கிறப் பெயரில் கொள்ளையடிக்கிறார்கள். நீங்கள் வாழ்ந்தப் போது உங்களைத் தூற்றிய அத்தனை இலக்கியவாதிகளும் மறக்காமல் பதிவு எழுதுகிறார்கள். விழாக்களுக்கு வருகிறார்கள். புத்தகம் போடுகிறார்கள். சே குவாராவுக்கு ஆன அதே ப்ராண்ட் வெறியாட்டம் இனி வரும் நாட்களில் உமக்கும் நடக்குமென்று தோன்றுகிறது. சீக்கிரமாய் வீட்டோடுப் பேசி பழையப் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொள்ள சொல்லுங்கள். சொல்ல முடியாது இன்னும் ஐந்து வருடத்தில் காபி டேபிள் புக் வரலாம். :)

நரகத்தில் இனி நாங்கள் அனுப்பப்போகும் ஜனாதிபதிகள், கவர்னர்கள், கொள்ளைக்காரர்களோடு பேசுங்கள். பல சுவாரசியங்கள் கிடைக்கும். இப்போதைக்கு இந்த ட்வீட்டோடு விடைப் பெறுகிறேன். அடுத்த வருடம் லெமன் ஹனி டீ யோடு மீண்டும் பேசலாம்.

Don't worry. When U have NO content with which 2 express the emotion U are feeling. It's not writers block. It's just DOWNLOADING time. - via @fatbellybella (aka ErykahBadoula)
22 comments:

karki bava said...

whattay!!!!!!

Jus brilliant..

next matchல ஆஃப் சைடுல 4 பாலு ஈசியா போடுறேன்.(அல்லது) அதிஷாவ போட சொல்றேன்.. சிக்ஸ் அடிச்சிக்கும் ஓய்

podiyan ajman said...

ப்ப்ப்ப்பா...

Achilles/அக்கிலீஸ் said...

Excellent article.. Well written..

Agila said...

Something happening to you when you write about Sujatha.. Excellent.. :))

Vijayashankar said...

LOVELY! CONCEPT for a blook on vaathiyaar

மல்லிகார்ஜுனன் said...

TRIBUTE TO MASTER! அட்டகாசமா எழுதியிருக்கீங்க. நெகிழ்வான பதிவு.

பரிசல்காரன் said...

இது நீங்க எழுதினதா.. சுஜாதாவே-வா?

Krishnan said...

Tribute to inimitable Sujatha in Sujatha-esque style ! brilliant

amas said...

எல்லா சுஜாதா விசிறிகளும் உங்கள் பதிவில் மூழ்கி மகிழ்ந்திருப்பார்கள். அருமை. I miss him.

amas32

Nataraj (ரசனைக்காரன்) said...

என்னசார் இப்படி ஒரு பேயாட்டம் ஆடியிருக்கீங்க :0

ஒவ்வொரு பத்தியின் கடைசி வரியும் அசத்தல்..

rajasundararajan said...

//மூலம், பெளத்திரம், துரித ஸ்கலிதம், சொப்ன ஸ்கலிதம் போன்ற மனிதகுலப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்த மருத்துவர்கள் தங்களுடைய விளம்பரங்களை ஒட்டுமிடம் ட்ரான்ஸ்பார்மர், மூத்திர சந்துகள், இருட்டு இடங்கள். இதை விட பிரமாதமான contextual advertising-ஐ எவரால் செய்ய முடியும். நாமிதை 50 வருடங்களாக செய்துவருகிறோம். தமிழன் தீர்க்கதரிசி.//

:))))))))))))))))))))

Lalitha said...

Outstanding !!!
Hope this can be shared in FB

நாராயணன் said...

எல்லோருக்கும் நன்றி.

தாராளமாக பகிரலாம்.

Mahesh said...

Terribly missing Sujatha... இதைப் படித்ததும் இன்னும் கணக்கிறது இதயம்...

ராம்குமார் - அமுதன் said...

இப்படி ஒரு கட்டுரை வாசிச்சதே இல்லன்னு சொன்னாக் கூட சரியாத்தான் இருக்கும்... வாத்தியாரப் பத்தி இத விட சுவாரஸ்யமா ஒரு கட்டுரை... சான்ஸே இல்ல...


Awesome work sir... Hats off and salutes..

butterfly Surya said...

கலக்கல்.

செம.. செம..

என். உலகநாதன் said...

அருமையான கட்டுரை சார்! வாசிச்சுகிடே இருக்கேன்.

ஆதி தாமிரா said...

Best one!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

கற்றதும் பெற்றதும் வாசித்த காலங்கள் வந்து சிலிர்க்கிறேன் இதை வாசித்த பின்பு. மிக அருமை.

யமுனா said...

//தமிழில் நான் படிக்கும் பேஸ்புக் துணுக்குகள் இதை உறுதிப்படுத்துகின்றன. நான் இப்போது காமெடி சேனல்கள் பார்ப்பதில்லை.// - செம!

மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக் இன்னுமா தெரிஞ்சுக்காம இருக்கீங்க? வாத்யார் சொன்னதா குமுதத்துல வந்தாச்சே? :-)

எப்பவும் போல அசத்தல் பதிவு. வாழ்துக்கள்

bhaskar Lakshman said...

Nice write up Narayanan. I shared this post in my FB.

poovizi said...

மைக், ஷாமியானா, லவுட் ஸ்பீக்கர்கள் வாடகை விடுபவர்களை வாழ்விக்கவாவது வாராவாரம் புரட்சி நடந்தே தீர வேண்டும்.//

இந்த கோட்பாடு எனக்கும் பிடித்திருக்கிறது

கிலோ ரூ.10. மாதத்துக்கு ரூ.40-50, வருடத்துக்கு ரூ.500-600. போட்ட காசுக்கு இரண்டு மடங்கு கொடுக்கும் டைம்ஸ்//

நல்ல ஐடியாவா இருக்கே
மொத்தத்தில் கலப்படமான அருமையான பதிவு .