Dec 27, 2013

ஜென்ம விரோதி

மதியம் 12 மணிக்கு நுங்கம்பாக்கம் டென்னிஸ் கிரவுண்டுக்கு பின்னால் நட்ட நடு ரோட்டில் செம குத்து ஆட்டம் ஆடியிருக்கீறார்களா ? நான் ஆடினேன். சாடிஸம் தான். ஆனால் வெறி அடங்காமல் உள்ளேப் பூத்த சந்தோஷத்தோடு ஆடினேன், பூர்ணிமாவைப் பார்த்த அந்த நாளில். பூர்ணிமா என் ஜென்ம விரோதி; இல்லையில்லை ஜென்ம ஜென்மத்துக்கும் விரோதி.

எனக்கும் ராஜிக்கும் 9 மாதங்கள் 17 நாட்கள் 4 மணி நேரம் 33 நிமிஷம் தான் வித்தியாசம். ராஜியிடம் காதலை சொன்ன அந்த இரவில் தான் ராஜீவ் காந்தி செத்துப் போனார். எனக்கு மறுநாள் காலை தினந்தந்தியில் ராஜீவின் லோட்டோ ஷூவை விட, ராஜி என்ன பதில் சொல்லப் போகிறாள் என்பது தான் மிகப்பெரியப் பிரச்சனையாக இருந்தது. ராஜி ஆமோதிக்கவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை. இது பூர்ணிமாவுக்கும் எனக்குமான கதை. இன்னும் கேட்டால் பூர்ணிமா என் வாழ்க்கையில் புகுந்து விளையாடிய கதை.

 ராஜி சொந்தக்கார பெண் தான். எட்டாவது படிக்கும்போது கே.கே.நகர் ரிசர்வ் வங்கி குவார்ட்டர்ஸில் மழைப் பெய்த மறுநாளில் ஒரு மரத்துக்கு கீழே நாய்க்குடை பூத்திருந்தது. அதைக் கீறினால் சிகப்பாய் வரும். அதை ரத்தம் என்று சொல்லி ஊரைக் கூட்டுவோம். அது ஒரு விளையாட்டு. அன்றைக்கு, காளான் கீறி திரும்பியபோது ராஜி நின்றிருந்தாள். கையை உதறியதில் சரியாய் ஒரு பொட்டு ராஜியின் நெற்றியில் போய் நின்றது. அவ்வளவு தான். சடாலென்று உள்ளே ஏதோ உடைந்தது. ராஜியை தவிர எல்லாரும் அரூபமானார்கள். மழை நின்ற மரத்திலிருந்து சொட்டிய துளிகளில் பில்ஹார்மானிக் குழுக்கள் இடத்தை அடைத்துக் கொண்டு வயலின்களை உச்சஸ்தாயியில் வாசிக்க ஆரம்பித்திருந்தார்கள். உலகின் பில்லியன் காதல்களில் அதுவும் ஒன்று தான். ஆனால் எனக்கு அது முதல்.

பத்தாவது படிக்கும் போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ராஜி லீவிற்கு வீட்டுக்கு வந்திருந்தாள். சொன்ன அன்றைக்கு ராஜீவ் காந்தி செத்துப் போனார். ஆனால், மொட்டை மாடியில் ஊறப்போட்ட ஊறுகாய் மாதிரி, காதல் ஸ்ட்ராங்காய் வளர்ந்தது. இரண்டு வருடங்கள் உள்ளே உறுத்திக் கொண்டிருந்ததை சொல்லி விட்டதால், கொஞ்சம் தெனாவெட்டு சேர்ந்திருந்தது. ராஜி படித்ததென்னமோ ஒரு கோ - எட் பள்ளியில். நானெல்லாம் இன்றைக்கு வரைக்கும் கே கம்யூன்களோடு தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அவள் பள்ளி ஆண் நண்பர்கள், பெண்கள் பற்றிப் பேசிக் கொண்டேயிருப்போம். ஆனால், காதலிக்கிறாளா என்கிற பதில் மட்டும் வராது. அப்போது தான் பூர்ணிமா அறிமுகமானாள்.

 என்னை விட ஒரு இஞ்ச் உயரம் அதிகம். அதுவே சங்கடமும் கூட. பூர்ணிமாவும் ராஜியும் பேசாத ரகசியங்கள் கிடையாது. பந்தர் தெருவில் டைரி, காலண்டர்கள் மாறிக் கொண்டேயிருந்தன. அத்தோடு வளர்ந்தது அவர்களின் நட்பும், என்னுடைய பதில் தெரியாத காதலும். நடுவில் கே.கே.நகரிலிருந்து அடையாரில் சொந்த வீட்டுக்கு மாறிப் போனாள். கல்லூரிப் போன முதல் வருடத்திலிருந்து வார இறுதிகள் அவள் வீட்டில் தான் கழிந்தது. டைப்ரைட்டிங் முடித்து, ஷார்ட் ஹேண்ட் வகுப்பிற்கு அப்பா துரத்தினார். ராஜி வீட்டின் பிட்மென்னின் ஷார்ட் ஹேண்ட் டிக்‌ஷனரி தான் என்னுடைய போஸ்ட்பாக்ஸாக மாறியிருந்தது.

 ஜி + 1-ன் மொட்டை மாடியில் தான் அது ஆரம்பித்தது. அன்றைக்கும் பூர்ணிமா வந்திருந்தாள். வழக்கமான காதல் போதையோடு மொட்டை மாடிக்கு போகலாம் என்று படிக்கட்டில் ஏறிய போது தான் இடி இறங்கியது. ‘சுந்தர் எங்கண்ணன்ப்பா; நான் எப்படி நீ அவனை லவ் பண்றேன்னு போய் சொல்ல முடியும்’ என்று அமைதியாய் தான் பூர்ணிமா சொன்னாள். என் காதில் அமிலமாய் விழுந்தது. தூர்தர்ஷனில் தலைவர் மரணத்துக்காக வாசிக்கும் ஷெனாய் காரர்கள் எனக்காக ஸ்பெஷலாய் வாசிக்க ஆரம்பித்தார்கள். ஒரு மாதம் எதுவுமே நிற்கவில்லை. மனம் கொள்ளாமல் அலைய ஆரம்பித்திருந்தேன். அண்ணா நகர் டவரின் கீழிருந்த ஒயின் ஷாப்பில் ஹேவர்ட்ஸ் 5000 எனக்காக தனியாக எடுத்து வைக்க ஆரம்பித்திருந்தார்கள். இந்த வைராக்கியமெல்லாம் ஒரே மாதம் தான். இந்த ஒரு மாதத்தில் ராஜி பல தடவை போன் செய்து நான் ஏன் வீட்டுக்கு வருவதில்லை என்று கேட்க ஆரம்பித்திருந்தாள்.

 முரளி அப்போது ‘இதயம்’ செய்திருந்தார். காதலுக்காக காதலியை தாரை வார்க்கிற ட்ரெண்டு தமிழ் சினிமாவைப் பிடித்து ஆட்ட ஆரம்பித்திருந்தது. சிவஞானம் பூங்காவில் நண்பர்கள் வேறு ”எல்லாத்தையும் ராஜிக்காக துறக்க ரெடியா இருக்கீயே நீ பெரியாள் மச்சி. நீ அவளை மிஸ் பண்ணலை, அவ தான் உன்னை மிஸ் பண்றா. நியாயமான காதல் எல்லாத்தையும் சாதிக்கும், உன்னோடது தெய்வீகம்டா. கண்டிப்பா அவ தான் உன் வொய்ஃப் நீ வேணும்னா பாறேன்” என்று என் கணக்கில் எதிரிலிருந்த கோபாலன் டீக்கடையில் அக்கவுண்ட் எழுத ஆரம்பித்திருந்தார்கள். லவ்வராக இருப்பதை விட தியாகியாக இருப்பதில் இருக்கும் கெளரவம் கொஞ்சம் போதையூட்டியது.

மீண்டும் அடையார்; மொட்டை மாடி. ஆனால் இந்த முறை, என் வசனங்கள் மாறியிருந்தது. ”நீ உன் மனசுல என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியாது, ஆனா நான் உன்னை மட்டும் தான் லவ் பண்ணுவேன். உனக்காகவே வாழ்வேன்; சாவேன்” etc etc என்று பூடகமாக வாராவாரம் பிட்மென் 186வது பக்கத்தில் ஒரு A4 தாளை சொருக ஆரம்பித்திருந்தேன். ஒரு லீப் வருடம் இப்படியேப் போனது. ஆகஸ்ட் 18 ஏதோ ஒரு வருடம். அன்றைக்கு வீட்டோடு எல்லோரும் தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலுக்கு வேண்டுதலுக்குப் போனார்கள். ராஜிக்கு பரீட்சை. அதனால் துணைக்கு நானும், பெரியம்மாவும். அன்றைய இரவு முதல் முறையாக ராஜி பேச ஆரம்பித்தாள். அதுநாள் வரை, அவளாய் வாயைத் திறந்து வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்று சொல்லவில்லை. அன்றைக்கும் சொல்லவில்லை. ஆனால் அட்வைஸ் பண்ண ஆரம்பித்தாள்.

ஒவராய் அட்வைஸ் புரண்டோடியபோது, அவள் கண்களைப் பார்த்துக் கேட்டேன்.

“இதெல்லாம் நீ எதுக்கு சொல்றேன்னு தெரியும். I know you have someone in your mind”.
கண்கள் சுருங்க என்னைப் பார்த்தாள்.

‘உனக்கெப்படி அது....”

”எல்லாம் தெரியும். தெரியாமலா இவ்வளவு வருஷம் பின்னாடி சுத்தறேன்” 

தீர்க்கமாக என்னைப் பார்த்து விட்டு. குட் நைட் என்று சொல்லிவிட்டுப் போனாள். அது தான் கடைசி. அதற்கு பின்னால் அவளுக்குப் பிடித்த கேட்பரீஸ் பெர்க்கும், அருண் ஐஸ்கீரிமின் இத்தாலியன் டிலைட்டுமாக வாங்கி ப்ரிட்ஜில் வைத்து விட்டுப் போய்விடுவேன். எங்களுக்கான சங்கேதமொழி ‘ப்ரிட்ஜ்ல இருக்கு’ அவ்வளவுதான். வாங்க வேண்டாமென்று அவளும் சொன்னதில்லை. நான் வாங்கியதை நிறுத்தியதுமில்லை.

கல்லூரி முடித்து, நான் வேலைக்குப் போக ஆரம்பித்த 90களின் இறுதியில், நான் படித்த அதே கல்லூரியில் அவள் மாஸ்டர்ஸ் சேர்ந்திருந்தாள். எல்லாரும் என்னுடைய ஜூனியர்கள் என்பதால், வேலைக்கு போகிற சாக்கில் கல்லூரி கேண்டீனில் உட்கார்ந்துக் கொண்டிருந்தேன். கல்லூரி கல்ட்சுரல்ஸில் பாட ஆரம்பித்தேன். எல்லா கிறுக்குத்தனங்களையும் ஜுனியர்களுக்கு தெரிந்தே செய்ய ஆரம்பித்தேன். அவர்களும் கண்டுக் கொள்ளவில்லை. ஆனாலும் சுந்தர் மனதினை உறுத்திக் கொண்டேயிருந்தான். சகஜமாக பார்ப்பாள். பேசுவாள். எல்லாம் செய்வாள், ஆனாலும் எங்களுக்கு இடையில் ஏதோ ஒரு மெளனம் நிலவியது.

ராஜியின் அக்காவின் கல்யாணத்திற்கு இழுத்துப் போட்டுக் கொண்டு எல்லாவற்றையும் செய்தேன். ஹோட்டலில் முதலிரவு. முதலிரவு அலங்காரமெல்லாம் முடிந்து நான், ராஜி, என்னுடைய இன்னொரு அக்கா மூவரும் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.

அக்கா பார்க்காத ஒரு சந்தர்ப்பத்தில் ராஜி மெதுவாய் காதில் கேட்டாள்.

 ”நாளைக்கு பூர்ணிமா வீட்டுக்கு போகணும். ட்ராப் பண்ணறயா”

 ஏதோ சாக்கு சொல்லி, ராஜியை என்னுடைய டிவிஎஸ் சாம்ப்பில் அழைத்துக் கொண்டு போய் பூர்ணிமா வீட்டில் நிறுத்தினேன். என்னதான் தியாகி பட்டமெல்லாம் போதையாக இருந்தாலும், அவள் வீட்டு வாசலில் நிற்பது awkward-ஆக இருந்தது. நீ போன் பண்ணு என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். போன் வரவேயில்லை. அவளும், பூர்ணிமாவும் ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய்விட்டார்கள். இந்தக் கோவத்தில் ஏதோ ஒரு அல்ப விஷயத்துக்கு முகத்தைத் தூக்கிக் கொண்டு அடையாரிலிருந்து வெளியேறினேன். நடுவில் ஒரே ஒரு நாள் போன் செய்து ‘பூர்ணிமாவுக்கு கல்யாணம் மதுரையில. மாப்பிள்ளை பெரிய இடம். வீட்ல அனுப்ப மாட்டேங்கறாங்க. நீ சொல்லேன்’ என்று ரெகமண்டேஷனுக்கு இழுத்தாள். அதையும் செய்தேன். லண்டன் போக இருந்த வாய்ப்பினை என் நேர்மையால் கெடுத்துக் கொண்டேன். அந்தக் கடுப்பில் வேலையே கதி என்று டெக்ஸ்டாப்பில் புதைந்தேன். பிறந்த நாள் வாழ்த்துக் கூட சொல்லவில்லை.

அடுத்த வருட ஆரம்பத்தில் ஒரு நாள் அந்த போன் வந்தது.

‘எங்க இருக்க’

‘பாம்பேல’

‘எப்ப வருவ’

‘அடுத்த வாரம்’

‘வீட்டுக்கு வா. உன்னோட பேசணும். மேரேஜ் பிக்ஸ் ஆயிடும் போல இருக்கு’ 

ஐஐடி பவாயின் டாய்லெட்டில் சத்தம் வராமல் அழுதேன். ரூமிலும் தொடர்ந்தது. இருக்கப் பிடிக்காமல், அடுத்த ப்ளைட் பிடித்து, நாலு வார்த்தை நறுக்கென்று கேட்கலாம் என்கிற முடிவில் சென்னை வந்தேன்.

வீட்டுக்குக் கூட போக தோணாமல் நேராக அடையார்.

 பெட்டி படுக்கைகளுடன் அந்த வீட்டில் யாருமே என்னை எதிர்பார்க்கவில்லை. ’அர்ஜெண்டா ஒரு மீட்டிங், அதான் ஏர்போர்ட்ல இருந்து நேரா வந்துட்டேன். இது இங்க இருக்கட்டும். வந்து எடுத்துக்கறேன்’ என்று ஜல்லியடித்து விட்டு, மாடிக்கு ஏறினேன். ப்ளைட்டில் இருக்கும்போதே என்ன பேச வேண்டும், எங்கே எகிற வேண்டும், எங்கே அழ வேண்டும் என்பதையெல்லாம் திரும்ப திரும்ப மனதில் ஒட்டிக் கொண்டிருந்தேன். இதயம் கொதித்துக் கொண்டிருந்தது. கோவமும், கையாலாகதனமும் தகித்துக் கொண்டிருந்தது.

‘அடுத்த வாரம் வர்றேன்னு சொன்னே ? ஏன் வீட்டுக்குப் போகலை. நேரா இங்க ஏன் வந்தே. வீட்ல எதாவது நினைச்சுக்கப் போறாங்க’

‘அதெல்லாம் இருக்கட்டும். ஏதோ பேசணும்னு சொன்னியே. btw, congratulations and a happy married life" என்று குத்தலுடன் ஆரம்பித்தேன்.

‘இங்க வேணாம்’ என்றவாறே கீழேப் பார்த்து ‘அம்மா உமா வீட்டுக்குப் போகணும். இவனை துணைக்கு கூட்டிட்டுப் போறேன்’ என்று பதிலுக்கு எதிர்பாராமல் கைனடிக் ஹோண்டா சாவியை கையில் திணித்தாள்.

 ப்ரூட் ஷாப் இன் க்ரீம்ஸ் ரோடு. அனாதையாக இருந்தது. பேச ஆரம்பித்தவனை சைகையால் தடுத்து நிறுத்தினாள்.

‘நான் பேசி முடிச்சிடறேன். நீ கோவமா இருக்கேன்னு தெரியும். முடிச்ச பின்னாடி திட்டு.

எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். ஆரம்பத்துல இது வெறும் இன்பாச்சுவேஷன்னு தான் நெனச்சேன். அதனால தான் விலகிப் போனேன். உன்கிட்ட இருந்து நான் ஒண்ணு மறைச்சிட்டேன். நான் யாரையும் லவ் பண்ணலை. பூர்ணிமா தான் அப்படி சொல்ல சொன்னா. அப்படி சொன்னாலாவது நீ என்னை விட்டுட்டு போயிடுவேன்னு நானும் நம்பினேன். அவ அண்ணனை லவ் பண்றேன், அது இதுன்னு அவ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினேன். ஆக்ட்சுவலி, பூர்ணிமாவுக்கு கூடப்பிறந்தவங்க யாருமே கிடையாது. ஐம் சாரி. நான் உன்னை ஏமாத்திட்டேன்.

ஆனா 12 வருஷமா நீ மாறவேயில்லை. இத்தனை வருஷமா இது பொய்யுன்னு சொல்ல என்னால முடியல. இத உள்ள வைச்சுக்கிட்டு என்னால உன் முகம் பார்த்து பேச ஒரு மாதிரி இருந்தது. உன்னோட வாழ முடியுமான்னு எனக்கு தெரியாது. ஆனா, எல்லாரையும் விட நீ தான் என்னை இத்தனை வருஷமா கொண்டாடியிருக்கே.

its over. நான் அப்பா பார்த்த பையனுக்கு ஒகே சொல்லிட்டேன். இதை சொல்லாம போக என்னால முடியலை. உன்னையும் விட முடியலை. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு. உன்னை அலைய வைச்ச பாவத்துக்கு, என்னால கல்யாணம் பண்ணிட்டு இந்த ஊர்ல நிம்மதியா வாழமுடியாது. இந்த பையன் குஜராத். நான் இனிமேல் சென்னையில இருக்க மாட்டேன்.

உன்னை நேருக்கு நேரா பார்க்கற தைரியம் எனக்கில்லை. I don't deserve you டா 

இத்தனை வருஷமா இதுக்காக தானே வெயிட் பண்ணே. யெஸ் ஐ லவ் யூ. ஆனா இது இதோட ஒவர். இதுக்கு மேல எதுவும் நடக்காது. போதுமா. என்னை விட்டுப் போயிடு.’

என்று அழ ஆரம்பித்தாள்.

பன்னிரண்டு வருடங்கள். இந்த ஒற்றை சொல்லுக்காக. ஆனால் கேட்டப்பிறகு அந்த சொல்லால் எந்தப் பயனும் இல்லை. எந்தப் பெண்ணை வாழ்நாள் முழுக்க கண் கலங்காமல் காப்பேன் என்று கர்வத்தோடு இருந்தேனோ, அதேப் பெண் என் முன்னால், எனக்காக அழுகிறாள். இனி ராஜி எனக்கு சொந்தமில்லை என்பதை நினைத்து மருகுவதா, என்னை பிடிக்குமென்று கடைசியாக ஒத்துக் கொண்டதற்காக சந்தோஷப்படுவதா என்று தெரியவில்லை.

எதுவுமே பேசாமல், ‘போலாம்’ என்று திரும்பினேன். ராஜியின் கல்யாணத்திலும் முன்னின்றேன். மோடியாளும் அகமாதபாத்தில் போய் செட்டிலானாள். செட்டிலான இரண்டாம் வருடத்தில் உண்டானாள். பிறகு குண்டானாள். வருடா வருடம் பிறந்தநாளுக்கு மட்டும் வாழ்த்து இரண்டு பக்கமும் போகும். அவ்வளவே.

 இப்போது கேட்கும் நண்பர்களுக்கு, we mutually decided to move on. you know, consanguinity issue, don't want to risk our kids என்று அலட்டலாக பதில் சொல்லிவிட்டு நகர்கிறேன்.

கட்.

 நுங்கம்பாக்கம். ஏதோ அவசரமாக ஒரு ப்ரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் என்று ப்ரெளசிங் செண்டர் தேடினேன். மாட்டிய ஒன்றில் உள்ளே நுழைந்து ctrl + P கொடுத்து விட்டு நிமிர்ந்தால் கல்லாவில் பூர்ணிமா. சட்டென்று அடையாளம் கண்டு கொண்டாள்.

கணவனுக்கு தொழிலில் பெரிய நஷ்டம். சென்னைக்கு குடிப் பெயர்ந்து விட்டார்கள். அம்மா வீட்டோடு வாடகையில்லாமல் குடித்தனம். கணவன் ஏதோ பி.பி.ஒவில் இருக்கிறான். நகைகளை விற்று இவள் ப்ரெள்சிங் சென்டர் நடத்துகிறாள். இரண்டு குழந்தைகள். ராஜியைப் பற்றிக் கேட்டாள். யாரோடும் பேசவில்லையாம். அவமானம் பிடுங்கி தின்பதை கழுத்திலிருந்த வெற்று மஞ்சள் கயிறு உணர்த்தியது.

ஐந்து ரூபாய் ப்ரிண்ட் அவுட்டிற்கு ஐம்பது ரூபாயை வைத்து விட்டு நக்கலோடு முகம் பார்த்து சொன்னேன் ‘சுந்தர் எப்படியிருக்கான்’ பதிலுக்கு எதிர்பாராமல் வெளியே வந்தவுடன் ஆட ஆரம்பித்தேன்.

 ஹார்மோன் அவென்யு தொடரில் இதுவரை

ஹார்மோன் அவென்யு 1 - 'வரா’து வந்த நாயகி
ஹார்மோன் அவென்யு 2 - ரோக் alias Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ்
ஹார்மோன் அவென்யு 3 - One spoiler is good for life
ஹார்மோன் அவென்யு 4 - சைவப் பூனை
ஹார்மோன் அவென்யு 5 - அனாவஸ்யமா பேசாதீங்கோ
ஹார்மோன் அவென்யு 6 - நான் = கார்த்தி
ஹார்மோன் அவென்யு 7 - அவள். அவன். அப்புறம்

Labels: , ,


Comments:
சுந்தர் எப்டி இருக்கான்னு நக்கலா கேட்டுகிட்டே டேபிள் மேல காசை வைக்கிற அந்த முகத்தை மட்டும் நினைச்சு பார்த்தேன்.. செம்ம்ம ரியாக்‌ஷன் :) :) மொத்த கதையின் Intentம் எங்கேயோ போயிடுச்சு...!! :) சூப்பர்ணா...!!
 
அண்ணா, அருமையான எழுத்து நடை... பூர்ணிமாவை நினைச்சா பாவமா இருக்கு, இந்த இடத்தில பதிலடி கொடுத்தது தப்போன்னு தோணுது. அவளு(ரு)க்கு மனசு கஷ்டமாயிருக்கும்.
Word verification நீக்கவும்...
 
(கதையின் ஹீரோ கார்த்தி என்று வைத்துக்கொள்வோம்) இறுதி வரை கார்த்தியிடம் இருந்த மதிப்பு கடைசி வரியில் சுக்கு நூறானது. ஒரு ஆணை விரும்புவதும் விரும்பாததும் அந்த பெண்ணின் உரிமை. கார்த்தியை ஏற்றுக்கொள்ளாமல் விட்டது பூர்ணிமா செய்த சரியான முடிவு என்று கடைசியில் நிரூபம். தயவு செய்து கார்த்தியை பாராட்டி தங்கள் தரத்தை குறைத்துக்கொள்ளாதீர்

 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]