Oct 26, 2016

அலைகள் ஒய்வதில்லை - பகுதி 2

போன பகுதியில் என்ன நடக்கப் போகிறது என்பதை மேலோட்டமாகப் பார்த்தோம். அவை அப்படி நடக்க என்னென்ன காரணிகளை நமக்கேத் தெரியாமல் நாம் உருவாக்கி இருக்கிறோம் என்பது தான் இந்த பகுதி.

தகவல் தொழில்நுட்ப மூன்றாம் பேரலையில் தான் இணையம் வந்தது. பேஸ்புக் என்பது ஒரு வலைப்பின்னல். அமேசானோ, ப்ளிப்கார்ட்டோ இன்னொரு வலைப்பின்னல். உங்களுடைய ஆன்லைன் வங்கிக் கணக்கென்பது இன்னொரு வகையான வலைப்பின்னல். இவை அத்தனைக்கும் அடிப்படையான வலைப்பின்னல் தான் இணையம். இணையம் என்பது வலைப்பின்னல்களின் வலைப்பின்னல்.  ( It's a network and also a network of networks ).

இணையம் உருவான காலத்தில் (90கள்) பெருநிறுவனங்கள் நினைத்தது இணையப் பயன்பாட்டினை விற்றால் அதன் மூலம் இலாபம் பார்க்கலாமென்பது தான். ஆனால் அப்போது அவர்களுக்கு புரியாமல் போனது, இணையப் பயன்பாட்டினை ( Internet access / Broadband Connections ) அதிகரிக்க வேண்டுமெனில், இணையம் “பயன்பட” வேண்டும்.

இந்த “பயன்பாடு” என்பது யாஹூ காலத்தில் தளங்களின் தொகுப்பாக ஆரம்ப காலத்தில் இருந்தது. ஹாட் மெயில் இலவச மின்னஞ்சல் சேவையை உருவாக்கியது. கூகுள் அதை தேடலின் அடையாளமாக மாற்றியது. அமேசான் அதை மின் வணிகமாக கட்டமைத்தது. ஈ பே அதை பொருட்களின் பண்டமாற்றாக ஆரம்பத்திலும், சந்தையாக பின்னாளிலும் மாற்றியது. யூட்யூப் அதை வீடியோக்களின் தொகுப்பாக தந்தது. பேஸ்புக் அதை சமூக வலைத்தளமாக பின்னியது. ட்விட்டர் அதை ரியல் டைம் செய்தியோடாடையாக்கியது. லிங்க்டின் தனிநபர்களின் வேலை சார் வலைப்பின்னலாக உருவெடுத்தது.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உணரப்படாத மனித தேவை என்னவோ அதை பரவலாக்கியதும், சுலபமாக்கியதும், எளிமையாய் அதை உலகமெங்கும் பரவ செய்ததும் தான் இணையம் என்கிற பின்னலின் மகத்தான மானுட சுவாரசியம். எல்லைகளைத் தாண்டி உலகத்தினை 5” போனில் சுருங்க வைத்த இந்த பின்னலுக்கு பின்னான பின்னலின் கதை அதை விட சுவாரசியம்.

இந்த வலைப்பின்னல்கள் உருவாக்கிய முக்கியமான காரணி - Network Effect. இது ஏற்கனவே டெலிபோன் கண்டுபிடித்த காலத்திலேயே வந்து விட்டது என்றாலும், இதை பரவலாக்கியது மூன்றாம் பேரலை தான். நெட்வொர்க் என்பது ஒரு பின்னல். இதை ஹாட்மெயில் தான் இணையச் சூழலில் முதலாவதாக ஆரம்பித்து வைத்தது. ஹாட் மெயில் இலவசமாக @hotmail.com மின்னஞ்சல் முகவரிகளை தந்தது. அதற்கு முன்பேக் கூட மின்னஞ்சல்கள் இருந்தப் போதிலும், அவை அத்தனையும் வெறுமனே அகடமிக் ஆட்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.  ஹாட்மெயில் செய்த யுக்தி மாஸ்டர்ஸ்ட்ரோக்.

ஹாட்மெயில் உங்களுக்கு இலவசமாக மின்னஞ்சல் முகவரி தரும். ஆனால் அதை வைத்துக் கொண்டு நீங்கள் யாரோடாவது தொடர்பு கொள்ள வேண்டுமானால் அவர்களுக்கும் ஒரு மின்னஞ்சல் முகவரி இருத்தல் அவசியம். அதை அந்த இன்னொருவர் உருவாக்க நீங்களே அழைப்பு அனுப்பலாம். இப்போது நீங்கள் உங்கள் நண்பரை ஹாட்மெயிலில் முகவரி ஆரம்பிக்க சொல்வீர்கள். அவர் அவருடைய நண்பரை சொல்லுவார். From One to the Power of Many = Global users in less time. மேட்டர் ஒவர். இது காட்டுத்தீப் போல பரவ ஆரம்பித்தது. இதையே தான் நாம் பேஸ்புக்கிற்கு செய்தோம். வாட்ஸாப்பிற்கு செய்தோம். ஆண்ட்ராய்டு / ஆப்பிள் ஆஃப்புகளுக்கு செய்தோம்.

ஒரு பயனர் ஒரு சேவையை / பொருளைப் பயன்படுத்த வேண்டுமெனில் அந்த பயனரே அந்த சேவையின் மதிப்பினை உருவாக்குவார். இது தான் நெட்வொர்க் எஃபெக்ட்ஸின் அடிப்படை.

The Value of the Network is directly propotional to the Number of users on the Network, who in turn continuously creates value within the network, which in turn attracts more users for the network. 
இதை வேறுவிதமாக சொல்ல வேண்டுமெனில் ஒரு பின்னலை நாம் உருவாக்கி அதில் தொடர்ச்சியாக இயங்கும் போது அறிந்தோ, அறியாமலோ நாம் அந்த பின்னலுக்கான மதிப்பினைக் கூட்டுகிறோம். அப்படி கூட்டப்பட்ட மதிப்பானது அந்த பின்னலில் இருக்கும் அனைவருக்கும் போய் சேரும். பின்னலின் மதிப்பு உயருவதால் அதிகமான பயனர்கள் உள்ளே வருவார்கள். வருபவர்கள் மதிப்பினைக் கூட்டுவதால், இது மேலும் உயரும். இது ஒரு infinite loop.

ஆக பின்னலின் மதிப்பாகவும், மதிப்பின் பின்னலுமாகவும் ( Network's value and Value of the Network ) அது வைரஸ் போல பரவும். இந்த பரவலின் வேகத்தில் அது அதற்கு முன்பு நினைத்திராத சாத்தியங்களை உருவாக்கும்.

மார்க் ஸுகர்பெர்க் ஒரு நாளும் நாம் திமுக / அதிமுக, காவி / செக்யூலர், மோடி / ராகுல்,  விஜய் / அஜித்,  இளையராஜா / ஏ ஆர் ரஹ்மான், இலக்கியவாதிகள் / சாதாரணர்கள் என அடித்துக் கொள்வோம் என்றோ, உலகின் வரைப்படத்தில் கைநாட்டு வைக்கின்ற அளவுக்கே இருக்கக்கூடிய ஒரு மாநிலத்திலும், உலகம் முழுக்கப் பரவியிருக்கும் ஒரு இனம் இது அத்தனையையும் 24/7 செய்யும் என்றோ நினைத்திருக்கவே மாட்டார். ஆனால் ஒரு நெட்வொர்க் இதை  சாத்தியப் படுத்தி இருக்கிறது.

நெட்வொர்க் எஃபெக்ட் இதை தான் 90களுக்கு பிறகு தொடர்ச்சியாக  சாதித்தது. இந்த வலைப்பின்னல்கள் வெவ்வேறு விதமாக இருந்தாலும், அடிப்படை உங்களுடைய / உங்கள் வலைப்பின்னலின் மதிப்பினைத் தொடர்ச்சியாக உயர்த்த நீங்கள் இயங்கிக் கொண்டே இருப்பீர்கள். இருக்கிறீர்கள். இருந்தீர்கள்.

எளிதாக சொன்னால், இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் பகீர்வீர்கள். பிடிக்கவில்லையென்றால் நரேன் ஒரு ஆஃப் பாயில் என்று திட்டுவீர்கள். இதில் எதை செய்தாலும் நீங்கள் உங்களுக்கேத் தெரியாமல் மதிப்பினை உங்களுடைய வலைப்பின்னலில் உருவாக்குகிறீர்கள். இதை செய்யாமலும் நீங்கள் போகலாம். ஆனால் இதனுடைய தாக்கம் வேறு எங்காவது, ஏதாவது ஒரு வழியில் வெளிப்படும். (2 வருடத்துக்கு முன்னாடி நரேன் சொன்னாப்பல.....)


இந்த நெட்வொர்க் எஃபெக்ட் தான் நான்காவது பேரலைக்கான பிள்ளையார் சுழி.

இதற்கு நாம் எப்படி மாய்ந்து மாய்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கொஞ்சம் தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்போம் ?

கடந்த 25 ஆண்டுகளில் நாம் ஏராளமானவற்றினைத் தேடியிருக்கிறோம், போர்னோ உட்பட. பில்லியன்கள் கணக்கில் மின்னஞ்சல்கள் அனுப்பியிருக்கிறோம். மணிக்கணக்கில் முன்பு யாஹு மெஸஞரிலும், பின்னாளில் கூகிள் சாட்டிலும், இப்போது வாட்ஸாப், டெலிகிராம், லைன், ஹைக்கிலும் உரையாடி இருக்கிறோம். ஏகப்பட்ட ஃபோரம்களில் ஒரு விஷயத்தை விவாதித்து இருக்கிறோம். ட்வீட்டரில் 140 சொற்களுக்குள் ஒரு வாக்கியத்தை, விஷயத்தை எப்படி சொல்ல வேண்டுமென்று மெனக்கெட்டு இருக்கிறோம். பேஸ்புக்கில் எந்த கவர்ச்சிப் படம் போட்டால் லைக் தேத்த முடியுமென்று கூகுள் இமேஜில் தேடுகிறோம். அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், பேடிஎம் என்று யார் கம்மியாக பொருட்கள் கொடுக்கிறார்கள் என்று பத்து டேப்புகளில் இந்த மாடலா அந்த மாடலா என்று  கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணிக்கிறோம். யூட்யூப்பில் மோர்க்கிளி செய்வது எப்படி, என்னப் பொருட்கள் தேவை, எப்படி செய்ய வேண்டும் என்று படம் வரைந்து, செய்து, பாகங்கள் குறித்துக் கொடுத்திருக்கிறோம். வாட்ஸாப்பில் எந்த சொல்லைப் போட்டால் குழுமத்தில் கை உயர்த்துவார்கள் என்று சிந்திக்கிறோம். நண்பர்களுக்கிடையேயான குழுமங்களில் யார் என்ன சொல்வார், எப்படி மடக்கலாம், முஷ்டி உயர்த்தலாம் என்று subconscious-ஆக யோசிக்கிறோம். இது தான் நாம் இன்றைக்கு வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய உலகம். இதை இப்படி தான் நாம் இயக்கிக் கொண்டிருக்கிறோம்.

கூகுள் மேப்ஸில் உலகின் எந்த சந்துக்கும் வழியிருக்கிறது. என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவை விட அதிகமான தகவல்கள் இன்றைக்கு விக்கிப்பீடியாவில் இருக்கிறது.  ஒரு நாளைக்கு வாட்ஸாப்பிலும், பேஸ்புக் மெஸஞரிலும் மட்டுமே 60 பில்லியன் (60,000,000,000) செய்திகள் பரிமாறப் படுகின்றன. இது உலகின் அத்தனை டெல்கோ நிறுவனங்களில் பரிமாறப்படும் குறுஞ்செய்திகளை விட மூன்று மடங்கு அதிகம். இவை அத்தனையும் சொல்லும் செய்தி ஒன்றே ஒன்று தான்.

20 - 25 வருடங்களாக வெவ்வேறு வலைப்பின்னல்களில் நாம் நம்முடைய ‘மனிதத் தன்மைகளை’ நமக்கேத் தெரியாமல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். வேறுவிதமாக சொன்னால், மனிதர்களாகிய நாம் எப்படி கோவப்படுவோம், சிரிப்போம், சிந்திப்போம், நக்கலடிப்போம், கண்ணீர் விடுவோம், திட்டம் தீட்டுவோம் என்பதை கடந்த 25 வருடங்களில் இயந்திரங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறோம். இதை சாதி, இன, மத, நிற பேதங்களில்லாமல் தொடர்ச்சியாக ஆர்வத்தோடு செய்திருக்கிறோம். நாகரீக மனிதர்கள் என்று நாம் சொல்லிக் கொள்ளும் 5,000 (or 10,000 / 25,000) வருடங்களின் மொத்த அடிப்படைகளை வெறும் இருப்பதியந்தே வருடங்களில் ஒரு மகத்தான மானுட டேட்டாபேஸாக மாற்றி வைத்து விட்டோம்.

இந்த டேட்டாபேஸ் தான் நான்காவது இயந்திரப் பேரலையின் அடிப்படை.


இதில் We are, What We are is now merely an Data Point. நம்முடைய கோவங்கள், துக்கங்கள், மகிழ்ச்சிகள், காதல், சென்டிமெண்ட், பயங்கள், ஏக்கங்கள், தாபங்கள், விரகங்கள், ஆதங்கங்கள் என எல்லாமே பெருமளவிற்கு codify செய்யப்பட்டு விட்டது.

இந்த டேட்டாபேஸை தான் எதிர்காலத்தில் வரும் அறிவேந்திரங்கள் பயன்படுத்தப் போகின்றன. மனிதம் எப்படி இயங்கும் என்கிற பிட்டுப் பேப்பரை ஏற்கனவே நாம் அறிவேந்திரங்களுக்கு அவுட் செய்துவிட்டோம். இனி அவைகள் இதிலிருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு நமக்கு எதிரே நிற்கும். நம்மால் அதன் வேகம், திறமை, துரிதத்துக்கு முன்பு நிற்க முடியாது. நமக்கான குழியை நாம் தான் தோண்டி இருக்கிறோம். இது நாளைக்கு காலையிலோ, நவம்பரிலோ கண்டிப்பாக நடக்கப் போவதில்லை. ஆனால் இது தான் நம்முடைய எதிர்காலம்.

இதை எழுதுவதால் இது This is the end of humanity as we know it என்றுப் பயப்படத் தேவையில்லை. ஒவ்வொரு பேரலையும் அது நிகழ்ந்த காலத்தில் சாத்தானாக, மனித குலத்தின் முடிவாக தான் பார்க்கப்பட்டது.  ஆனால் அவற்றினைத் தாண்டி நாம் இதைப் படிக்கின்ற இந்த நொடி வரைக்கும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறோம். இந்த நான்காவது பேரலை எதை உருவாக்கும், எதை அழிக்கும், நாம் எப்படி ஜீவித்திருப்போம் என்பது அடுத்த பாகத்தில்.

(அலைகள் தொடரும் .... )

இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை

அலைகள் ஒய்வதில்லை  - 1 

Labels: , , , , ,


Oct 23, 2016

அலைகள் ஒய்வதில்லை - பகுதி 1

”There are today lots of people (middle-level managers) earning between `30 lakhs and `70 lakhs per year. Half of them will lose their jobs in the next 10 years.”
- மோகன் தாஸ் பை, முன்னாள் இன்போசிஸ் இயக்குனர் ***

+++++

இது மனித குல வரலாற்றில் ஒரு சின்ன அத்தியாயம். இப்படி தான் வரலாறு முழுக்க நடந்திருக்கிறது.

இது ஆரம்பம். 

இதன் நீட்சி நமக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் அவ்வளவு உவப்பாக இருக்காது. We are going to see a whole lot of unrests, civil disobedience & blood on the street.

எதிர்காலம் இவ்வளவு அச்சமூட்டுவதாக இருக்குமா என்று கேட்கலாம். ஆனால் வரலாறு அப்படி தான் இதுவரை இருந்திருக்கிறது.  சராசரி மனித மனம் ‘மாற்றத்தினைக்’ கண்டு ஒடி ஒளிந்திருக்கிறது. வரலாற்றில் மாற்றங்கள் நிகழ்ந்தப் போதெல்லாம் அந்த மாற்றத்தினைப் புரிந்துக் கொள்ளாத ஒரு பெருங்கூட்டம் ‘புரட்சி’ என்று இறங்கி நகரங்களை, கிராமங்களை, நாடுகளை ரத்தத்தில் மிதக்க விட்டிருக்கிறது. அதுவே அடுத்த 20 - 30 வருடங்களிலும் நமக்கும் நடக்கலாம். இது புரிய காலச்சக்கரத்தில் 700 ஆண்டுகள் நாம் பின்னோக்கிப் போக வேண்டும்.

அங்கிருந்து தான் இயந்திரங்களின் பேரலைகள்^ (Industrial Revolution) ஆரம்பிக்கிறது. 1784-இல் நீராவி என்ஞினின் கண்டுப்பிடிப்பில் ஆரம்பிக்கிறது இந்த கதை. தண்ணீரை ஆவியாக்கி, அதை இயக்கமாக்கி, அந்த இயக்கத்தையே எரிப் பொருளாக மாற்றி ஒரு நீளமான இரும்பு பெட்டியை நகர வைத்தது. அதற்கு முன்னால் வரை அவ்வளவு பெரிய கனமான பொருளை முன் தள்ளி செல்ல யானைகள், குதிரைகள், அடிமைகள் தேவைப்பட்டார்கள். மனித குலம் பார்த்திராத சாதனையது. இலட்சக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியில் வளர்ந்திருந்த ஒரு இனம், முதன் முறையாக இயற்கையை தன்னுடைய தேவைக்கு மாற்றியதின் ஆரம்பம் அது தான்.

இதுவரை இதுப் போல மூன்று பேரலைகள் வந்திருக்கின்றன. ஒவ்வொரு பேரலைகளைப் பற்றியும் விரிவாக பின்னால் பார்ப்போம். சுருக்கமாய்,  முதல் பேரலை நீராவி என்ஞின்கள், ரயில் ட்ராக்குகள்,  முதல் மெக்கானிகல் இயந்திரங்கள் என்று ஆரம்பித்தது. கிட்டத்திட்ட நூறு ஆண்டுகளுக்கு பிறகு 1870-இல் இரண்டாவது ஆரம்பித்தது. இதில் தான் நாம் மின்சாரம் கண்டுபிடித்தோம். பெரு உற்பத்தி (Mass Production) என்பது உருவானது அப்போது தான். இந்த இரண்டு பேரலைகளின் ஊடே உருவானது தான் இரண்டு உலகப் போர்கள். இரண்டாம் உலகப் போரின் முடிவில் கிட்டத்திட்ட உலகின் முன்னேறிய நாடுகள் அத்தனையும் மக்களை கொல்லாத, ஆனால் போரிடத் தேவையான சாதனங்களை கண்டறிய வேண்டும் என்று ஒதுங்கியதில் ஆரம்பிக்கிறது மூன்றாவது பேரலை. 1950களில் ஆரம்பித்து கிட்டத்திட்ட 2000கள் வரை நீண்டது தான் தகவல் தொழில்நுட்ப பேரலை. இப்போது நாம் இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதில் தான் மின்னணு சாதனங்கள், கணினிகள், வலைப்பின்னல்கள் என எல்லாவற்றையும் உருவாக்கினோம். இப்போது மெதுவாக தலையெடுத்து இனி வரும் அத்தனைத் தலைமுறைகளையும் ஒட்டு மொத்தமாக மாற்றப் போவது நான்காம் பேரலை. இது நாள் வரை நிகழ்ந்த பேரலைகளுக்கும், இதற்கும் ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு. அதனாலேயே இது மனிதகுல வரலாற்றின் சுனாமியாக அடுத்த 200 / 300 வருடங்களில் கொண்டாடப்படும்.

Four Industrial Revolutions

பிரிட்டிஷ் அரசு உலக முழுவதும் காலனியாதிக்கத்தைப் பரப்பியதற்கு காரணமும் இது தான். இயந்திரங்களினால் டெக்ஸ்டெல் மில்கள் உருவாயின. அதற்கான மூலப் பொருட்கள் எங்கெல்லாம் கிடைத்ததோ, அங்கெல்லாம் பிரிட்டிஷ் ஆட்களும், பிற ஐரோப்பிய நாடுகளும் பயணித்தன. இந்தியா என்கிற நிலப்பரப்பு அதனால் தான் பிரிட்டிஷ் மட்டுமல்லாமல், போர்த்துகீசியர்கள், டச்சு காரர்கள், ப்ரெஞ்சு காரர்கள் என பிரித்தாளப்பட்டது. இதில் பிரிட்டிஷ் அரசு மேலெழுந்ததற்கு காரணம், முதல் இரண்டு பேரலைகளின் சூழலும், கண்டுப்பிடிப்பாளர்களும், அதற்கு தோதான eco-systemகளும் அன்றைய ஐரோப்பாவில் அமைந்திருந்தது. முக்கியமாய் நிலக்கரி அவர்களுக்கு கிடைத்தது.

முதலாம் பேரலை உருவானதற்கான காரணமுமே கூட அதற்கு முந்தைய மூன்று நூற்றாண்டுகளில் தான் (15 - 17ஆம் நூற்றாண்டுகள்) ஐரோப்பாவின் ‘மறுமலர்ச்சி’ (Renaissance) நடந்திருந்தது. உண்மையில் இன்றைக்கு நாம் taken for granted என்று எடுத்துக் கொள்ளும் பலவற்றுக்கும் மூலமென்பது இந்த மறுமலர்ச்சி^^ + மெடிசி காலகட்டம் தான். இப்போது நடக்க ஆரம்பித்திருப்பதை இயந்திரமயமாக்கல் என்று சுருக்க முடியாது.

இதற்கு முன் நடந்த மூன்று பேரலைகளிலும் மனிதர்கள் தங்களுடைய வேலையினை சுலபமாகவும், தொடர்ச்சியாகவும் செய்யும் இயந்திரங்களைக் கண்டறிந்தார்கள். அவற்றினை மனிதர்களே இயக்கினார்கள். இந்த இயந்திரங்களை இயக்கத் தெரிதல் என்பது ஒரு திறனாக மாறியது. அவை பெரும்பாலும் பத்து மனிதர்கள் செய்யும் பணியினை (tasks) வேகமாகவும், சீராகவும் செய்தது. அதை இயக்கவும், ரிப்பேரானால் சரிப் பார்க்கவும், அவற்றுக்கான உள்ளீடுகளை தரவும் மனிதர்கள் இருந்தார்கள்.

இன்றைய இயந்திரங்களை இந்த கேடகிரியில் கொண்டு வருவதே தவறு. அவை முதலில் மனிதர்களால் கண்காணிக்கப்பட்டு, நிறுவப்பட்டு, இயக்கப்படும் dump machines அல்ல. அவைகள் கொஞ்சம் கொஞ்சமாய் மனிதர்களின் திறமை என்று சொல்லப்பட்ட அறிவாற்றலை (intelligence) தங்களுக்குள் கிரகித்துக் கொள்ளும் சக்தியுடைய அறிவேந்திரங்கள் (Smart Machines). பல சமயங்களில் நாம் இதுநாள் வரை ‘இயந்திரங்கள்’ என்று நம்பிய பெரிய, கண் முன்னே தெரியும் மெக்கானிகல், எலக்ட்ரிக்கல் பொருட்கள் அல்ல இவை. கண்ணுக்கே தெரியாத மென்பொருள் வரிகளில் இயங்குபவை.  இவற்றை ‘அவை’ என அஃறிணையாக எதிர்காலத்தில் சொல்ல மாட்டார்கள்.

ஏன் இவை ஸ்பெஷலானவை ?

திறன் / திறமை என்பது தான் இதுநாள் வரை மனிதர்களின் ஆதார ”வேலையாக” இருந்தது. இந்த திறமைகளை பகுப்பாய்தல் (analytical), படைபாற்றல் (creative), உழைப்பு சார் வேலைகள் என்று முப்பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். மருத்துவம், கணக்காய்தல், பொறியியல் இவை பகுப்பாய்தலின் கீழ் வரும். இதற்கு நீங்கள் துறை சார்ந்து படித்தல் அவசியம். அவற்றை மனனம் செய்தும், அதை தகுந்த இடத்தில், தகுந்த தரவுகளின் வழியே ஆய்ந்து முடிவெடுத்தல் அவசியம். கலை, இலக்கியம், ஊடகம் இவை படைப்பாற்றலின் கீழ் வரும். மனித குல ஆதாரத் தொழிலான வேளாண்மை, ஆடு மாடு மேய்தல், மீன் பிடித்தல் உழைப்பு சார் தொழில்கள், இவை ஜீன்களால் கடத்தப்படும் native intelligence-ன் கீழ் வரும். துறை சார்ந்து படித்தல் இருந்தாலுமே கூட புதிது புதியதாய் உருவாக்கம் இங்கே அவசியம். கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்கள் இன்ன பிற இந்த இரண்டும் கலந்த கலவையாக உருவாவார்கள்.

இந்த ‘திறமைகள்’ இருப்பதனால் தான் மனிதர்கள் ‘வேலைப்’ பார்த்தார்கள். இந்த ‘திறமைகளை’ கற்றுக் கொள்ள முடியும். படித்தல், அனுபவம், பார்வைகள், முன்னோர்களின் அனுபவங்களின் விளைவுகளை கற்றுத் தேர்தல் என நாம் “திறமைகளைக்’ “கற்றுக் கொள்கிறோம்”. கற்றுக் கொண்டவற்றை துறை சார்ந்து பயன்படுத்துதல் ‘வேலை’ என்றழைக்கப் பட்டது. இந்த ‘வேலைகளுக்கு’ சன்மானமாக ‘ஊதியமோ / கூலியோ / சம்பளமாக’ ஒன்று வழங்கப்பட்டது. இது பணமாக இருந்தது. பணத்தை வைத்துக் கொண்டு மனிதர்கள் தங்களுக்கு தேவையானதை அதற்கு ஈடான ‘மதிப்பைக்’ கொடுத்துப் பெற்றுக் கொண்டார்கள். இதை எழுதுகின்ற இந்த நொடி வரை உலகம் இப்படி தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அறிவேந்திரங்கள் இந்த அடிப்படையை தான் மாற்றப் போகின்றன. பொருள் என்பது சேவையாகவும், அந்த சேவை என்பது பைனரி எண்களாகவும் மாறி விட்டால் என்ன செய்வோம் ?

இயந்திர உலகில் ஒரு கூடுதல் பொருளை உருவாக்க அதற்கான உட்பொருட்களும், உழைப்பும், மனிதர்களின் திறமையும் தேவைப்பட்டது. அறிவேந்திர உலகில் ஒரு கூடுதல் சேவையை உருவாக்கும் எல்லா காரணிகளும் (திறன், திறமை, உழைப்பு, ஈடுபொருள்) டிஜிட்டலாகி சன்மானம் தேவை இல்லை என்றானால் என்ன செய்வது ? The marginal cost of creating something is either near zero or zero and What if the cost of "delivering work" also is Zero ? மேலும் இந்த அறிவேந்திரங்கள் தொடர்ச்சியாக தங்களை upgrade செய்துக் கொள்ள முடியும்.

சிம்பிளாய் நாம் 'இன்னொரு' மருத்துவரை உருவாக்க வேண்டுமெனில் உலகில் ஒரு குழந்தை பிறக்க வேண்டும். அந்த குழந்தை +2-வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். ஐந்து வருடங்கள் மருத்துவம் பயில வேண்டும். ஹவுஸ் சர்ஜனாக இருக்க வேண்டும். ஐந்தாறு வருடங்கள் பயிற்சி செய்ய வேண்டும். இதெல்லாம் சரியாக நடந்தால் 30-32 ஆண்டுகளில் நமக்கு ஒரு மருத்துவர் கிடைப்பார். அதாவது ஒரு நல்ல மருத்துவரை நாம் உருவாக்க நமக்கு 30 - 32 ஆண்டுகள் தேவை.

அறிவேந்திரங்களுக்கு அது ஒரே ஒரு file transfer.

One Single / Simple File Transfer Vs 
32 Years of Human Development.   Game Over. 

எவை தேவை, எவை எரிதங்கள் (spam) என்பதை நாம் முடிவு செய்வதில்லை; அறிவேந்திரங்களே முடிவு செய்து ஒரங்கட்டி விடுகின்றன. எவ்வளவு தூரம் நடந்தால் / ஒடினால் எவ்வளவு கலோரிகள் குறையும், என்ன உண்ண வேண்டும், எதை ஈடு கட்ட வேண்டும் என்பதை மருத்துவர்களிடம் போகாமலே உங்கள் கைக்கடிகாரம் சொல்லும். என்ன தேடினீர்கள், எதை உண்டீர்கள், எங்கேப் போனீர்கள், யாரோடு பேசினீர்கள் என்பதைப் பொறுத்து சாய்ஸ்கள் மாறும்.

இவையனைத்தையும் இதற்கு முன்னால் ‘இந்தந்த திறமைகளோடு’ இருந்த மனிதர்கள் ‘ஊதியம்’ பெற்றுக் கொண்டு வழிக் காட்டினார்கள். இப்போது ‘அவர்கள்’ தேவையில்லை. அவர்களை விட சிறப்பாக இந்த அறிவேந்திரங்கள் இயங்கும். இவற்றை நாம் இப்போதே பயன்படுத்துகிறோம், இவை முழுமையான அறிவேந்திர பயன்பாட்டில் 1% கூட இல்லை. இது தான் நான் மேலே சொன்ன ஆரம்பம்.

இது 1,000 சொற்கள் கட்டுரையில் முடிகிற விஷயமில்லை. இவை எந்தெந்த காரணிகளால் உருவாயின, இதற்கு முன் என்ன நடந்தது, அங்கிருந்து நாம் எப்படிப் பரிணாம வளர்ச்சியில் மேலெழுந்திருக்கிறோம், என்னென்ன காரணிகள் இப்போது இதை மாற்றப் போகின்றன, இனி என்ன நடக்கும் எனப் பார்ப்போம்.

++++

*** இந்தியாவின் மென்பொருள் துறையில் வேலைப்பார்ப்பவர்களின் எண்ணிக்கை 42.5 இலட்சம். இதில் மிடில் மேனேஜர்கள் அளவில் இருப்பவர்கள் 10-12% அதாவது 4,50,000; இவர்களில் பாதிப் பேர் அதாவது 2,50,000 அடுத்தப் பத்தாண்டுகளில் வேலை இழப்பார்கள். ஏனென்றால் ஒரு மேனேஜரின் வேலை என்பது வேலை நடக்கிறதா இல்லையா என்றுப் பார்ப்பது. இதை செய்ய இப்போதே இயந்திரங்களும், மென்பொருட்களும் வந்து விட்டன. இன்னும் பரவலாக மாறவில்லை. மாறினால் இந்த நிலையில் இருக்கும் அனைவரின் வேலைகளும் காணாமல் போகும்.

^ இயந்திரப் புரட்சி என்று தமிழில் மொழிப்பெயர்க்கிறார்கள். முதலில் இவை ‘புரட்சி’ (Revolution) அல்ல. இவை அந்தந்த காலக்கட்டங்களில் நிகழ்ந்த பல்வேறு முன்னேற்றங்களின் convergence. உ.தா நிலக்கரி சுரங்கங்களின் கண்டுபிடிப்பு தான் நீராவி, பின்னாளில் Coal Engine உருவாக்க உதவியது. ஆக இவை ஏதோ ஒரு vaccum-இல் நடக்கவில்லை. It's a combination of multiple discoveries, innovations & implementations. இவை மொத்தமும் ஒரு அலையாக வரலாற்றில் நிகழ்ந்து ஒட்டு மொத்த மனித சமூகத்தின் பார்வைகளையும், தேவைகளையும் மாற்றியிருக்கிறது. It swept humanity once & for all. அதனால் இதை பேரலை என்றே சொல்ல விழைகிறேன்.

^^ மெடிசி 14-ங்காம் நூற்றாண்டில், இன்றைய இத்தாலியின் ஒரு அங்கமாக இப்போது இருக்கும் அன்றைய ‘ப்ளாரென்ஸ் குடியரசின்’ குடிப்பெயர்ந்த யூதக் குடும்பம். கொசிமோ தே மெடிசி தான் ஆவணப்படுத்தப்பட்ட முதல் மெடிசி குடும்பத்து ஆள். மூன்று போப்கள் இந்த குடும்பத்திலிருந்து வந்திருக்கிறார்கள். கலை, இலக்கியம், அரசாளுமே, மேலாண்மை, பயணங்கள், புவி அரசியல் என 400 வருடங்களில் இந்த குடும்பத்தின் பங்களிப்பு அதிகம். வங்கி என்று நாம் அழைக்கும் Banking துறையே இவர்கள் உருவாக்கியது தான்.

(அலைகள் தொடரும் ... )

Labels: , , , , , ,


Oct 20, 2016

இட்லி மாவுக் கடையும், Innovator Dilemma-வும்

க்ளேய்டன் கிறிஸ்டியன்சன் (Clayton Christensen) என்கிறப் பெயர் நவீன மேலாண்மை அறிவியலில் (Management Science) ஒரு முக்கியமான பெயர். ஹாலிவுட்டிற்கு அர்னால்டு எப்படியோ, அந்த மாதிரி ;) ஹார்வேர்டு பிசினஸ் ஸ்கூல் பல்கலைக்கழக பேராசிரியரான அவர் 1997ல் முன்வைத்த டிஸ்ரப்ஷன் (Disruption Theory) உலகப் பிரசித்தம். கிட்டத்திட்ட நவீன மேலாண்மையின் பைபிள் இந்த புத்தகம் தான்.

இது நாள் வரை உலகின் பல்வேறு தொழில் மாறுதல்களில் இந்த கோட்பாடு தான் முக்கியமானதாக இருக்கிறது. டிஸ்ரப்ஷனல் நிறுவனங்கள் அதுநாள் வரை கோலோச்சிய பெரு நிறுவனங்களை அவர்கள் அறியாமலே வீழ்த்தி பெரு நிறுவனங்களாக உயரும். அப்போது கோலோச்சிய பெரு நிறுவனங்களை விட இந்த டிஸ்ரப்ஷனல் நிறுவனங்கள் சிறப்பாக இருக்காது, இன்னும் சொல்லப் போனால் ஆரம்ப காலங்களில் இந்த டிஸ்ரப்ஷனல் நிறுவனங்களை பெரு நிறுவனங்கள் மதிக்கக் கூட மதிக்காது. ஏதோ விளையாட்டாக சின்ன அளவில் எதையோ செய்துக் கொண்டிருக்கிறார்கள் அது நம்மை பாதிக்காது என்று கண்டும் காணாமல் விடுவார்கள்.

உங்கள் ஊரில் ஒரு இட்லி மாவுக் கடை இருப்பதாகக் கொள்வோம். இந்த இட்லி மாவுக் கடை இந்த தியரியின் முக்கியமான அங்கமென்பது அதன் நிறுவனருக்குக் கூடத் தெரியாது. ஒரு இட்லி மாவுக் கடை என்ன செய்கிறது ? மாவினை அரைக்கிறது. கிலோக் கணக்கில் வாடிக்கையாளர்களுக்கு விற்கிறது. இதிலென்ன பெரிய டிஸ்ரப்ஷன் கோட்பாடு ஒளிந்துக் கொண்டிருக்கிறது என்று எள்ளி நகையாடலாம்.

டிஸ்ரப்ஷன் கோட்பாடு சொல்வது இது தான்: Jobs to be done. அதாவது ‘தேவையான வேலையை தேவையான சமயத்தில் சரியாக செய்வது’.  எது டிஸ்ரப்ஷன் என்பதை முதலில் படம் வரைந்து பாகம் குறிக்கலாம்.

இட்லியோ, தோசையோ போட அரைத்த இட்லி மாவு தேவை. இட்லி மாவுக் கடைகள் வருவதற்கு முன்னால் நாம் இந்த ‘வேலையை’ எப்படி செய்தோம் ? முதலில் அரிசியையும், உளுந்தையையும் தருவிக்க வேண்டும். சரியான விகிதத்தில் நீர் சேர்க்க வேண்டும். இதை அரைக்க ஆட்டுக்கல்லோ அல்லது கிரைண்டரோ வேண்டும். பதமாக மாவு சரியான குழைவில் அரைப்படுகிறதா என்றுப் பார்க்க வேண்டும். இவையெல்லாம் sequential-ஆக நடக்கும். The No. of Jobs to get the batter done, can be divided into these steps.அதாவது முதலில் தேவையான பொருட்களைத் தருவித்தல், நீர் சேர்த்தல், அரைத்தல், பதம் பார்த்தல். ஒரு முழுமையான இட்லி / தோசை போட இத்தனை படிகளில் வேலைகள் நிறைவாக நடந்தால் தான் இட்லியை அவிக்கவோ, தோசையை ஊற்றவோ முடியும்.

இங்கே தான் இட்லி மாவு கடைகள் கிறிஸ்டியன்சனின் கோட்பாட்டில் வந்து விழுகின்றன. இந்த வேலைகள் அத்தனையையும் அவை ஒருங்கே தனியாக செய்கின்றன. வாடிக்கையாளராகிய உங்களுடைய வேலையை ஒரே ஒரு பரிவர்த்தனையில் (எத்தனை கிலோ மாவு ?) இவை முடித்து வைக்கின்றன. இது ஒரு பயனராக உங்களுக்கு சுலபமானது. ஆனால் இது ஒரு bottom-up disruption. இவை காலி செய்பவை கிரைண்டர் நிறுவனங்களை, இட்லி அரிசி பேக்கேஜிங் நிறுவனங்களை, மின் பயன்பாட்டை.

இவை வருவதற்கு முன்பு வரை, கிரைண்டர் உருவாக்கிய நிறுவனங்கள் நினைத்தது தங்களுடையப் போட்டியாளராக தங்களை விட சிறப்பான, அதி தொழில்நுட்ப வசதியோடு கூடிய இன்னொரு கிரைண்டர் நிறுவனத்தை. ஆனால் தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் இந்த இட்லி மாவுக் கடைகள் தான் கிரைண்டர் உருவாக்கிய நிறுவனங்களை காலி செய்துக் கொண்டிருக்கின்றன.

இப்போது கிரைண்டர்கள் வீட்டில் வாங்கத் தேவையில்லை. இட்லி அரிசி தனியாக வாங்கத் தேவையில்லை, அதற்காக மளிகை லிஸ்டில் எக்ஸ்ட்ரா ஐட்டம் போட வேண்டியதில்லை. கிரைண்டர் இருந்து அரைக்கும் போது மின்சாரம் இருக்க வேண்டுமே என்கிற பதைபதைப்பு அனாவசியம். ஆக இவற்றினை உருவாக்கிய அத்தனை நிறுவனங்களுக்கும் தேவைகள் குறைந்துப் போனது. அவர்கள் ஒரு நாளும் ஒரு இட்லி மாவுக் கடை தங்களுடையப் போட்டியாளாராக வருவார் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆக உங்களுடைய தேவை aka "Jobs to be done" - ‘இட்லி மாவு’ என்பது தான். அது இதற்கு முன் நேரடியாக கிடைக்காததால் மற்ற எல்லா ‘வேலைகளையும்’ செய்ய வேண்டியதிருந்தது. ஒரு இட்லி மாவுக் கடை இதற்கு முன் தேவைப்பட்ட அத்தனை ‘பொருள் / சேவைகளை’ காலி செய்து விட்டது. ”இட்லி மாவு” என்கிற புது பொருளையும், அதற்கான சந்தையையும் இது உருவாக்கி விட்டது. Game Over.

கோட்பாட்டின் அடிப்படைகள்


ஒரு இட்லி மாவுக் கடை இவையத்தனை சாரம்சங்களையும் கொண்டிருப்பதால் தான் நாம் மிக எளிதில் மாறி விட்டோம். இது இட்லி மாவுக் கடைகளோடு மட்டும் முடிவதில்லை. ஷேர் ஆட்டோ வந்த பின், சாதா ஆட்டோக்களுக்கு இது தான் நிகழ்ந்தது. ஓலாவும், ஊபரும் வந்த பின் டாக்சிகளுக்கு இது தான் நடந்தது. டிஷ் ஆண்டென்னாக்கள் கேபிள் டிவி நிறுவனங்களை அப்படி தான் விழுங்கிக் கொண்டிருக்கின்றன. ஏர் பிஎன்பியும், ஓயோ ரூம்களும் சிறு / குறு / பெரு ஹோட்டல்களை இப்படி தான் சிதைக்க ஆரம்பித்திருக்கின்றன. செல்போன் டவர்கள் பரவலான காலக்கட்டத்தில் இப்படி தான் ஐபோனும், ஆண்ட்ராய்ட் போன்களும் நோக்கியாவையும், ப்ளாக்பெர்ரியையும் கொன்றன.  எல்லா விஷயங்களும் அடங்கியிருந்த வெகுஜன இதழ்களிடமிருந்து, ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் பார்க்கும் (ஜோசியம், பெண்கள், நிதி மேலாண்மை, வீடு, ஆன்மீகம், சினிமா) இதழ்கள் வெளி வர ஆரம்பித்தன. டிவிடியிலிருந்து ஸ்ட்ரீமிங்கிற்கென்று நெட்ப்ளிக்ஸ், ப்ளாக்பஸ்டரை அப்படி தான் கொன்றது. இப்போது சென்னையில் ஆன்-லைன் லாண்டரி நிறுவனங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. இவை கொஞ்ச நாளில் வாஷிங் மெஷின் / தண்ணீர் பயன்பாடு தேவைகளை காலி செய்யும்.

டிஸ்ரப்ஷன் கோட்பாடு என்பது வெறும் மேலாண்மை கோட்பாடல்ல. அது வாழ்வியல் கோட்பாடு. எதில் நீங்கள் உங்களுடைய நேரத்தையும், கற்றலையும், ஆற்றலையும் செலவிட்டால் அதிகபட்ச வெளிப்பாடு இருக்குமென்பதையும், ஒரு தேவையை எப்படி பகுதிகளாக பிரித்து அதில் எதில் நீங்கள் ஜொலிக்க முடியும் என்பதை சொல்வதும் ஆகும். இனி எதிர்காலங்களில் ஜெனரிக் தேவைகளை இயந்திரங்கள் பார்த்துக் கொள்ளும். அதில் மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய குறிப்பிட்ட Jobs to be done என்ன என்பதை கண்டு கொள்ளுதல் தான் சர்வைவலுக்கான வழி.

* Innovator Dilemma என்பது தான் கிறிஸ்டியன்சன் எழுதிய முதல் புத்தகம். இதில் அவர் எப்படி சின்ன ஸ்டீல் நிறுவனங்கள் அமெரிக்க ஸ்டீல் நிறுவனங்களை காலி செய்தன என்று எழுதியிருப்பார். டிஸ்ரப்ஷன் தியரி என்பது அங்கிருந்து உருவானது. அதற்கு பிறகு அவர் எழுதிய புத்தகங்கள் பெரு நிறுவனங்கள் டிஸ்ரப்ஷனல் நிறுவனங்களை எப்படி சமாளிப்பது, டிஸ்ரப்ஷனல் மனநிலையை நிறுவனங்கள் / மனிதர்களிடையே எப்படி உருவாக்குவது என நீண்டது. விவரங்களுக்கு கூகிளிடுங்கள்.

Disruption Theory | Clayton Christensen

Go disrupt the world!

Labels: , , ,


Oct 19, 2016

எது அரசியல் ?

500 ஆண்டுகளுக்கு முன்னான ஐரோப்பாவில் தேவாலயங்கள் மன்னர்களை நிர்வகித்தன. மன்னர்கள் தங்களுடைய பிரபுகளின் வழியாக குடிகளை நிர்வகித்தனர். அன்றைக்கான அரசியல் தேவை மதத்தை தாண்டுவது. முதல் தொழிற்புரட்சி அப்போது தான் நடந்தது.

300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெள்ளையர்கள் இந்தியா என்கிற நிலப்பரப்பை தங்கள் நிர்வாகத்திற்குள் கொண்டு வந்தார்கள். சமஸ்தானங்களை மண்டியிட செய்தார்கள். அன்றைய அரசியல் தேவை முடியாட்சி அகற்றி, சுயநிர்ணய உரிமையை பெறுவது. மன்னராட்சிகள் தாண்டி, நிர்வாகத்தினை கையிலெடுப்பது.

தமிழகத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு பார்ப்பனர்கள் எல்லா முடிவுகளையும் எடுத்தனர். குடிமக்கள் என்னவாக வாழவேண்டுமென்பதிலிருந்து சட்டம், நீதி, நிதி, அரசாங்க கட்டமைப்பு என அவர்கள் கோலோச்சினர். பார்ப்பனர் அல்லாதாரும் சமமாக நடத்தப் படவேண்டுமென்கிற வேட்கையில் உருவானது தான் திராவிட இயக்கங்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்பு வர்க்கப் போராட்டமும், 40 ஆண்டுகளுக்கு முன்பு இடைநிலை சாதிகளின் இட ஒதுக்கீடு போராட்டங்களும், 25 ஆண்டுகளுக்கு முன்பு தலித்திய எழுச்சியும் தான் இங்கே அரசியல்.

ஆனால்,

உலகமயமாக்கலுக்கு பின்னான ஒரு சூழலில் எது அரசியல், எதற்கான அரசியல், எப்படியான அரசியல் என்பது முக்கியமான கேள்வி.

சந்தைப் பொருளாதாரத்தில் எல்லோரும், எல்லோர்க்கும், எல்லாமும் கிடைக்கும் என்பது தான் தியரி. அப்படி நடந்திருந்தால்,


எகனாமிட்ரிக் மாடல்கள், புள்ளி விவரங்கள், தலையணை சைஸ் புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் திரும்ப திரும்ப சொல்வது ஒன்று தான். Globalization is technically over. எல்லா நாடுகளும், அரசுகளும் தங்களுடைய மக்களையும் பொருளாதாரத்தையும் எப்படி காபாற்றிக் கொள்வது என்பதில் இறங்கிவிட்டார்கள். அதனால் தான் உலகெங்கிலும் nationalist right wing கூச்சல் சத்தமாகக் கேட்கிறது.


உண்மையில் 21-ஆம் நூற்றாண்டில் ஒன்றரை தசாம்சங்களை மட்டுமே நாம் கடந்திருக்கிறோம். ஆனால் அதற்குள் உருவாகி இருக்கக் கூடிய சிக்கல்கள் எவற்றையும் 20 நூற்றாண்டுகளாகவும், அதற்கும் முன்னதாகவும் நாம் படித்திருக்கும் வரலாறுகளாலும், கோட்பாடுகளாலும் தீர்க்க முடியாது என்பது தான் நிதர்சனம். இதுநாள் வரை அரசியல் என்பது ஒற்றை கோட்பாடுகளால் நிரம்பியவை - மதம், நில ஆளுமை, முடியாட்சி, சர்வாதிகாரம், இனக்குழுகளின் அதிகாரம், செல்வம் சேர்த்தல் இன்னபிற. ஆனால் 21-ஆம் நூற்றாண்டின் வாழ்வியல் இடியாப்ப சிக்கல்கள் வேறு.

இந்தியாவை ஆண்ட மன்னர்கள் யாரிடத்திலும் செல்போன் இருந்ததில்லை. ஒரு செய்தியை கடத்த ஏராளமான ஆயத்தங்களையும், வீரர்களையும், புறாக்களையும், தகவல் கோபுரங்களையும் வைக்க வேண்டியதிருந்தது. இன்றைக்கு ஒரு ஏழை குடிமகனின் கையில் இருக்கும் செல்பேசியிலிருந்து உலகமுழுமைக்கும் யாரோடு வேண்டுமானாலும் பேச முடியும். அதனால் அந்த ஏழை குடிமகன், மன்னரை விட செல்வாக்கு மிகுந்தவன் என்று சொல்லுவோமா ?

கார் வைத்திருப்பது என்பது ஒரு காலத்தில் சமூக படிநிலை உச்சத்தின் அடையாளம்.  ஆனால் வெகுவாக நகரமயமாகிக் கொண்டிருக்கிற சூழலில் ஒரு ஆஃப்பினை தட்டினால் வீட்டு வாசலில் கார் வந்து நிற்கிறது. கார் வைத்திருப்பதை விட, காரை பயன்படுத்துவது தான் அந்தஸ்த்தின் அடையாளம். இதை பத்து வருடங்களுக்கு முன்பாக கூட நாம் நினைத்து பார்த்ததில்லை.

ட்ராவல் ஏஜென்சிகள் என்றொரு தொழில் ஒரு காலத்தில் இருந்தது. பஸ்ஸோ, காரோ, ரயிலோ, விமானமோ பயனாளரே நேரடியாக ஆன்லைனிலோ, செல்பேசியிலோ டிக்கெட்டினை புக் செய்து கொள்ளலாம் என்ற நிலை பரவலாக வந்தவுடன் இந்த வேலைக்கான தேவை முடிந்துவிட்டது. இடைத்தரகர்களான ட்ராவல் ஏஜெண்டுகளை தொழில்நுட்பம் கொன்றுவிட்டது. ட்ராவல் ஏஜென்சிகள் என்றொரு தொழிலும், பணியாளர்களும் அருகி, கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தொழில் மட்டுமே 10 வருடங்களாக செய்து வந்தவர்களுக்கு இன்றைக்கு வேறு வேலை கிடைக்காது. இந்த இடைத்தரகர்கள் ஒழிப்பு என்பது வெறும் பயணத்தில் மட்டும் கிடையாது. வீடு தரகர்கள், வரி விளம்பரங்கள், கார் / டூவீலர் புரோக்கர்கள் என ஒவ்வொன்றாய் அழியும். பகிரங்கமாக சொன்னால், உங்களுடைய திறமை, அனுபவம் என்பவை இனிமேல் in a way, meaningless.

கடந்த இருவத்தைந்து வருடங்களில் நாம் 2000+ வருடங்களில் தீர்க்க முடியாத பல சிக்கல்களை தாண்டி விட்டோம். ஆக 2000 வருடங்களாக நாம் பேசி வந்த சிக்கல்களின் தீர்வுகள் எதுவுமே இப்போது பயன்படாது. இது வேறு உலகம். இங்கே வேறு தேவைகள், வேறு ஆர்வங்கள், வேறு அடிப்படைகள், வேறு கனவுகள், வேறு பேராசைகள். இது நாம் படித்த, விளையாடிய, வளர்ந்த உலகம் கிடையாது. இது முற்றிலும் மாறுபட்ட களம். இவற்றை நாம் இது நாள் வரை பேசி வந்த முதலாளித்துவம், கம்யுனிசம் என்கிற அளவீடுகளால் விளக்க முடியாது. இவற்றுக்கு நடுவே நானொரு லிபரடேரியன் என்று சொல்லும் கூச்சல்களையும் புறந்தள்ளுங்கள். நாம் 60/70களில் சந்தித்த ’Big Government' என்பது வேறு வகையில் திரும்ப வரும்.

கூகிளோ, ரிலையன்ஸோ, ப்ராக்டர் & கேம்பிளோ, ஃபைசரோ, லீவெஸோ வருடம் முழுதும் சம்பாதிக்கும் தொகை உலகின் பல நாடுகளின் ஜிடிபியை விட அதிகம். தொழில்நுட்பமும், அறிவியலும், தகவல் பரிமாற்றங்களும் இதுநாள் வரை போட்டு வைத்திருந்த ஏராளமான வேலிகளையும், எல்லைகளையும் தகர்த்தெறிந்துவிட்டன. வேலிகள் ஒரு காலத்தில் அரசியலுக்கான அச்சாரங்கள். வேலிகளே காணாமல் போகும் போது, அதன்பின்னான அரசியல் என்னாகும் ? அதுவும் மறைந்தொழியும்.

நிறுவனங்கள் அரசாங்கங்களை நிர்ப்பந்திக்கும். அறிவியல் நிறுவனங்களை வழிநடத்தும். தகவல் தொழில்நுட்பம் இப்போதிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்தி, புதிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். செயற்கை நுண்ணறிவும், இயந்திர பொது அறிவும் ஏராளமான வேலைகளை மனிதர்களிமிருந்து பிடுங்கும். அவையே ஏராளமான புதிய வேலைகளை உருவாக்கும். பணம் என்பதன் உருவமும், பரிமாற்றமும், தேவையும் மாறும். வேலை என்பதின் தேவையும், அதன் பொருளும் மாறும். அரசாங்கங்கள் எல்லைகளற்ற பரிவர்த்தனைகளையும், தொடர்புகளையும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறும். தனி மனிதர்களை வெறுமனே புள்ளிவிவரமாக, ஒரு பொருளை / சேவையை பயன்படுத்தும் நுகர்வோனாக மட்டுமே, கட்டுக்குள் கொண்டு வர, தொழில்நுட்பம் எல்லாவிதமான சாம தான பேத தண்ட முறைகளையும் கையாளும். அதிகாரமென்பது அரசாங்கங்களிடமிருந்து மனிதர்கள் பயன்படுத்தக் கூடியதை உருவாக்கக்கூடிய நிறுவனங்களின் கையில் நழுவும்.  க்ரோனி கேப்டலிசம் என்று நாம் ஒரு காலத்தில் சொன்னது, ப்ளோடோக்ரேசியாக (Plutocracy) உருமாறலாம்.

என்னளவில் இனி வரும் காலங்களில் இந்த அடையாள, வாழ்வியல், சமூக, பொருளாதார விஷயங்களை ஆராய்வதும், விவாதிப்பதும், அலசுவதும், சிந்திப்பதும் தான் அரசியல். இந்த அரசியல் சதுரங்கத்திற்குள் எவற்றை தேடி, எவற்றை விலக்கி நமக்கான வெளியையும், இருப்பையும் நாம் எப்படி தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் என்பது தான் உண்மையான அரசியல் விவாதம். இந்த வேறு உலகத்தின் அரசியல் வேறு.

இதை வெறுமனே மேம்போக்காக திமுக/அதிமுக, காங்கிரஸ்/பாஜக, மோடி/ராகுல் காந்தி, ஹிந்துத்துவா/இஸ்லாமிய அடிப்படைவாதம் என பேசுவதால் மாறப் போவதில்லை. இனி அவற்றை இங்கே பேசவும் போவதில்லை. நம்முடைய எதிர்காலமென்பது நாம் எதிர் வரப் போகும் இந்த அறிவியல் தொழில்நுட்ப சுனாமியை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தான். அது தான் நம்முடைய வாழ்வு, பார்வை, சமூகம், உறவுகள், நிதி, பொருளாதாரம், ப்ரைவசி, தொடர்புகள் என எல்லாவற்றையும் தீர்மானிக்கப் போகிறது.

இது தான் 21ஆம் நூற்றாண்டின் அரசியல்.

இனி மேல் நான் இந்த அரசியலை தான் பேசப் போகிறேன்.

Let's begin!!

Labels: , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]