Oct 26, 2016

அலைகள் ஒய்வதில்லை - பகுதி 2

போன பகுதியில் என்ன நடக்கப் போகிறது என்பதை மேலோட்டமாகப் பார்த்தோம். அவை அப்படி நடக்க என்னென்ன காரணிகளை நமக்கேத் தெரியாமல் நாம் உருவாக்கி இருக்கிறோம் என்பது தான் இந்த பகுதி.

தகவல் தொழில்நுட்ப மூன்றாம் பேரலையில் தான் இணையம் வந்தது. பேஸ்புக் என்பது ஒரு வலைப்பின்னல். அமேசானோ, ப்ளிப்கார்ட்டோ இன்னொரு வலைப்பின்னல். உங்களுடைய ஆன்லைன் வங்கிக் கணக்கென்பது இன்னொரு வகையான வலைப்பின்னல். இவை அத்தனைக்கும் அடிப்படையான வலைப்பின்னல் தான் இணையம். இணையம் என்பது வலைப்பின்னல்களின் வலைப்பின்னல்.  ( It's a network and also a network of networks ).

இணையம் உருவான காலத்தில் (90கள்) பெருநிறுவனங்கள் நினைத்தது இணையப் பயன்பாட்டினை விற்றால் அதன் மூலம் இலாபம் பார்க்கலாமென்பது தான். ஆனால் அப்போது அவர்களுக்கு புரியாமல் போனது, இணையப் பயன்பாட்டினை ( Internet access / Broadband Connections ) அதிகரிக்க வேண்டுமெனில், இணையம் “பயன்பட” வேண்டும்.

இந்த “பயன்பாடு” என்பது யாஹூ காலத்தில் தளங்களின் தொகுப்பாக ஆரம்ப காலத்தில் இருந்தது. ஹாட் மெயில் இலவச மின்னஞ்சல் சேவையை உருவாக்கியது. கூகுள் அதை தேடலின் அடையாளமாக மாற்றியது. அமேசான் அதை மின் வணிகமாக கட்டமைத்தது. ஈ பே அதை பொருட்களின் பண்டமாற்றாக ஆரம்பத்திலும், சந்தையாக பின்னாளிலும் மாற்றியது. யூட்யூப் அதை வீடியோக்களின் தொகுப்பாக தந்தது. பேஸ்புக் அதை சமூக வலைத்தளமாக பின்னியது. ட்விட்டர் அதை ரியல் டைம் செய்தியோடாடையாக்கியது. லிங்க்டின் தனிநபர்களின் வேலை சார் வலைப்பின்னலாக உருவெடுத்தது.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உணரப்படாத மனித தேவை என்னவோ அதை பரவலாக்கியதும், சுலபமாக்கியதும், எளிமையாய் அதை உலகமெங்கும் பரவ செய்ததும் தான் இணையம் என்கிற பின்னலின் மகத்தான மானுட சுவாரசியம். எல்லைகளைத் தாண்டி உலகத்தினை 5” போனில் சுருங்க வைத்த இந்த பின்னலுக்கு பின்னான பின்னலின் கதை அதை விட சுவாரசியம்.

இந்த வலைப்பின்னல்கள் உருவாக்கிய முக்கியமான காரணி - Network Effect. இது ஏற்கனவே டெலிபோன் கண்டுபிடித்த காலத்திலேயே வந்து விட்டது என்றாலும், இதை பரவலாக்கியது மூன்றாம் பேரலை தான். நெட்வொர்க் என்பது ஒரு பின்னல். இதை ஹாட்மெயில் தான் இணையச் சூழலில் முதலாவதாக ஆரம்பித்து வைத்தது. ஹாட் மெயில் இலவசமாக @hotmail.com மின்னஞ்சல் முகவரிகளை தந்தது. அதற்கு முன்பேக் கூட மின்னஞ்சல்கள் இருந்தப் போதிலும், அவை அத்தனையும் வெறுமனே அகடமிக் ஆட்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.  ஹாட்மெயில் செய்த யுக்தி மாஸ்டர்ஸ்ட்ரோக்.

ஹாட்மெயில் உங்களுக்கு இலவசமாக மின்னஞ்சல் முகவரி தரும். ஆனால் அதை வைத்துக் கொண்டு நீங்கள் யாரோடாவது தொடர்பு கொள்ள வேண்டுமானால் அவர்களுக்கும் ஒரு மின்னஞ்சல் முகவரி இருத்தல் அவசியம். அதை அந்த இன்னொருவர் உருவாக்க நீங்களே அழைப்பு அனுப்பலாம். இப்போது நீங்கள் உங்கள் நண்பரை ஹாட்மெயிலில் முகவரி ஆரம்பிக்க சொல்வீர்கள். அவர் அவருடைய நண்பரை சொல்லுவார். From One to the Power of Many = Global users in less time. மேட்டர் ஒவர். இது காட்டுத்தீப் போல பரவ ஆரம்பித்தது. இதையே தான் நாம் பேஸ்புக்கிற்கு செய்தோம். வாட்ஸாப்பிற்கு செய்தோம். ஆண்ட்ராய்டு / ஆப்பிள் ஆஃப்புகளுக்கு செய்தோம்.

ஒரு பயனர் ஒரு சேவையை / பொருளைப் பயன்படுத்த வேண்டுமெனில் அந்த பயனரே அந்த சேவையின் மதிப்பினை உருவாக்குவார். இது தான் நெட்வொர்க் எஃபெக்ட்ஸின் அடிப்படை.

The Value of the Network is directly propotional to the Number of users on the Network, who in turn continuously creates value within the network, which in turn attracts more users for the network. 
இதை வேறுவிதமாக சொல்ல வேண்டுமெனில் ஒரு பின்னலை நாம் உருவாக்கி அதில் தொடர்ச்சியாக இயங்கும் போது அறிந்தோ, அறியாமலோ நாம் அந்த பின்னலுக்கான மதிப்பினைக் கூட்டுகிறோம். அப்படி கூட்டப்பட்ட மதிப்பானது அந்த பின்னலில் இருக்கும் அனைவருக்கும் போய் சேரும். பின்னலின் மதிப்பு உயருவதால் அதிகமான பயனர்கள் உள்ளே வருவார்கள். வருபவர்கள் மதிப்பினைக் கூட்டுவதால், இது மேலும் உயரும். இது ஒரு infinite loop.

ஆக பின்னலின் மதிப்பாகவும், மதிப்பின் பின்னலுமாகவும் ( Network's value and Value of the Network ) அது வைரஸ் போல பரவும். இந்த பரவலின் வேகத்தில் அது அதற்கு முன்பு நினைத்திராத சாத்தியங்களை உருவாக்கும்.

மார்க் ஸுகர்பெர்க் ஒரு நாளும் நாம் திமுக / அதிமுக, காவி / செக்யூலர், மோடி / ராகுல்,  விஜய் / அஜித்,  இளையராஜா / ஏ ஆர் ரஹ்மான், இலக்கியவாதிகள் / சாதாரணர்கள் என அடித்துக் கொள்வோம் என்றோ, உலகின் வரைப்படத்தில் கைநாட்டு வைக்கின்ற அளவுக்கே இருக்கக்கூடிய ஒரு மாநிலத்திலும், உலகம் முழுக்கப் பரவியிருக்கும் ஒரு இனம் இது அத்தனையையும் 24/7 செய்யும் என்றோ நினைத்திருக்கவே மாட்டார். ஆனால் ஒரு நெட்வொர்க் இதை  சாத்தியப் படுத்தி இருக்கிறது.

நெட்வொர்க் எஃபெக்ட் இதை தான் 90களுக்கு பிறகு தொடர்ச்சியாக  சாதித்தது. இந்த வலைப்பின்னல்கள் வெவ்வேறு விதமாக இருந்தாலும், அடிப்படை உங்களுடைய / உங்கள் வலைப்பின்னலின் மதிப்பினைத் தொடர்ச்சியாக உயர்த்த நீங்கள் இயங்கிக் கொண்டே இருப்பீர்கள். இருக்கிறீர்கள். இருந்தீர்கள்.

எளிதாக சொன்னால், இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் பகீர்வீர்கள். பிடிக்கவில்லையென்றால் நரேன் ஒரு ஆஃப் பாயில் என்று திட்டுவீர்கள். இதில் எதை செய்தாலும் நீங்கள் உங்களுக்கேத் தெரியாமல் மதிப்பினை உங்களுடைய வலைப்பின்னலில் உருவாக்குகிறீர்கள். இதை செய்யாமலும் நீங்கள் போகலாம். ஆனால் இதனுடைய தாக்கம் வேறு எங்காவது, ஏதாவது ஒரு வழியில் வெளிப்படும். (2 வருடத்துக்கு முன்னாடி நரேன் சொன்னாப்பல.....)


இந்த நெட்வொர்க் எஃபெக்ட் தான் நான்காவது பேரலைக்கான பிள்ளையார் சுழி.

இதற்கு நாம் எப்படி மாய்ந்து மாய்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கொஞ்சம் தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்போம் ?

கடந்த 25 ஆண்டுகளில் நாம் ஏராளமானவற்றினைத் தேடியிருக்கிறோம், போர்னோ உட்பட. பில்லியன்கள் கணக்கில் மின்னஞ்சல்கள் அனுப்பியிருக்கிறோம். மணிக்கணக்கில் முன்பு யாஹு மெஸஞரிலும், பின்னாளில் கூகிள் சாட்டிலும், இப்போது வாட்ஸாப், டெலிகிராம், லைன், ஹைக்கிலும் உரையாடி இருக்கிறோம். ஏகப்பட்ட ஃபோரம்களில் ஒரு விஷயத்தை விவாதித்து இருக்கிறோம். ட்வீட்டரில் 140 சொற்களுக்குள் ஒரு வாக்கியத்தை, விஷயத்தை எப்படி சொல்ல வேண்டுமென்று மெனக்கெட்டு இருக்கிறோம். பேஸ்புக்கில் எந்த கவர்ச்சிப் படம் போட்டால் லைக் தேத்த முடியுமென்று கூகுள் இமேஜில் தேடுகிறோம். அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், பேடிஎம் என்று யார் கம்மியாக பொருட்கள் கொடுக்கிறார்கள் என்று பத்து டேப்புகளில் இந்த மாடலா அந்த மாடலா என்று  கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணிக்கிறோம். யூட்யூப்பில் மோர்க்கிளி செய்வது எப்படி, என்னப் பொருட்கள் தேவை, எப்படி செய்ய வேண்டும் என்று படம் வரைந்து, செய்து, பாகங்கள் குறித்துக் கொடுத்திருக்கிறோம். வாட்ஸாப்பில் எந்த சொல்லைப் போட்டால் குழுமத்தில் கை உயர்த்துவார்கள் என்று சிந்திக்கிறோம். நண்பர்களுக்கிடையேயான குழுமங்களில் யார் என்ன சொல்வார், எப்படி மடக்கலாம், முஷ்டி உயர்த்தலாம் என்று subconscious-ஆக யோசிக்கிறோம். இது தான் நாம் இன்றைக்கு வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய உலகம். இதை இப்படி தான் நாம் இயக்கிக் கொண்டிருக்கிறோம்.

கூகுள் மேப்ஸில் உலகின் எந்த சந்துக்கும் வழியிருக்கிறது. என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவை விட அதிகமான தகவல்கள் இன்றைக்கு விக்கிப்பீடியாவில் இருக்கிறது.  ஒரு நாளைக்கு வாட்ஸாப்பிலும், பேஸ்புக் மெஸஞரிலும் மட்டுமே 60 பில்லியன் (60,000,000,000) செய்திகள் பரிமாறப் படுகின்றன. இது உலகின் அத்தனை டெல்கோ நிறுவனங்களில் பரிமாறப்படும் குறுஞ்செய்திகளை விட மூன்று மடங்கு அதிகம். இவை அத்தனையும் சொல்லும் செய்தி ஒன்றே ஒன்று தான்.

20 - 25 வருடங்களாக வெவ்வேறு வலைப்பின்னல்களில் நாம் நம்முடைய ‘மனிதத் தன்மைகளை’ நமக்கேத் தெரியாமல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். வேறுவிதமாக சொன்னால், மனிதர்களாகிய நாம் எப்படி கோவப்படுவோம், சிரிப்போம், சிந்திப்போம், நக்கலடிப்போம், கண்ணீர் விடுவோம், திட்டம் தீட்டுவோம் என்பதை கடந்த 25 வருடங்களில் இயந்திரங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறோம். இதை சாதி, இன, மத, நிற பேதங்களில்லாமல் தொடர்ச்சியாக ஆர்வத்தோடு செய்திருக்கிறோம். நாகரீக மனிதர்கள் என்று நாம் சொல்லிக் கொள்ளும் 5,000 (or 10,000 / 25,000) வருடங்களின் மொத்த அடிப்படைகளை வெறும் இருப்பதியந்தே வருடங்களில் ஒரு மகத்தான மானுட டேட்டாபேஸாக மாற்றி வைத்து விட்டோம்.

இந்த டேட்டாபேஸ் தான் நான்காவது இயந்திரப் பேரலையின் அடிப்படை.


இதில் We are, What We are is now merely an Data Point. நம்முடைய கோவங்கள், துக்கங்கள், மகிழ்ச்சிகள், காதல், சென்டிமெண்ட், பயங்கள், ஏக்கங்கள், தாபங்கள், விரகங்கள், ஆதங்கங்கள் என எல்லாமே பெருமளவிற்கு codify செய்யப்பட்டு விட்டது.

இந்த டேட்டாபேஸை தான் எதிர்காலத்தில் வரும் அறிவேந்திரங்கள் பயன்படுத்தப் போகின்றன. மனிதம் எப்படி இயங்கும் என்கிற பிட்டுப் பேப்பரை ஏற்கனவே நாம் அறிவேந்திரங்களுக்கு அவுட் செய்துவிட்டோம். இனி அவைகள் இதிலிருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு நமக்கு எதிரே நிற்கும். நம்மால் அதன் வேகம், திறமை, துரிதத்துக்கு முன்பு நிற்க முடியாது. நமக்கான குழியை நாம் தான் தோண்டி இருக்கிறோம். இது நாளைக்கு காலையிலோ, நவம்பரிலோ கண்டிப்பாக நடக்கப் போவதில்லை. ஆனால் இது தான் நம்முடைய எதிர்காலம்.

இதை எழுதுவதால் இது This is the end of humanity as we know it என்றுப் பயப்படத் தேவையில்லை. ஒவ்வொரு பேரலையும் அது நிகழ்ந்த காலத்தில் சாத்தானாக, மனித குலத்தின் முடிவாக தான் பார்க்கப்பட்டது.  ஆனால் அவற்றினைத் தாண்டி நாம் இதைப் படிக்கின்ற இந்த நொடி வரைக்கும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறோம். இந்த நான்காவது பேரலை எதை உருவாக்கும், எதை அழிக்கும், நாம் எப்படி ஜீவித்திருப்போம் என்பது அடுத்த பாகத்தில்.

(அலைகள் தொடரும் .... )

இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை

அலைகள் ஒய்வதில்லை  - 1 

Labels: , , , , ,


Comments:
நீங்க சொல்லியவற்றை நான் வேறு விதமாக யோசித்ததுண்டு. ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மற்றும் தமிழிலில் இருந்து ஆங்கிலம் என்றொரு மொழி மாற்றியை உருவாக்க (தெளிவான முறையில்) என்னன்ன செய்ய வேண்டும். நீங்க சொன்ன மாதிரி பலதரப்பட்ட தமிழ் வார்த்தைகள் உலகம் முழுக்க நடக்கும் உரையாடலில் எடுத்து டேட்டாபேஸ் தயாரிக்க முடியும். வட்டாரத்தமிழ், வழக்குத்தமிழ், பேச்சுத்தமிழ், தொடங்கி கண்டம் தாண்டிய தமிழ் வரைக்கும் எடுக்க முடியும் என்று நினைத்தது உண்டு. உங்கள் கட்டுரையின் மூலம் அது நிச்சயம் சாத்தியம்என்றே தோன்றுகின்றது.
 
ஆங்கிலம் > தமிழ் & தமிழ் > ஆங்கிலம் ஏற்கனவே மைக்ரோசாப்ட் உருவாக்கி விட்டது. இதை அரசு உலகின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களோடு சேர்த்து செய்தல் அவசியம். சாத்தியமெல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது. நாம் செய்யாமல் இருக்கிறோம் அல்லது நாம் சுணங்கிப் போய் சும்மா இருக்கிறோம் என்பது தான் உண்மை.
 
chothys
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]