Oct 19, 2016

எது அரசியல் ?

500 ஆண்டுகளுக்கு முன்னான ஐரோப்பாவில் தேவாலயங்கள் மன்னர்களை நிர்வகித்தன. மன்னர்கள் தங்களுடைய பிரபுகளின் வழியாக குடிகளை நிர்வகித்தனர். அன்றைக்கான அரசியல் தேவை மதத்தை தாண்டுவது. முதல் தொழிற்புரட்சி அப்போது தான் நடந்தது.

300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெள்ளையர்கள் இந்தியா என்கிற நிலப்பரப்பை தங்கள் நிர்வாகத்திற்குள் கொண்டு வந்தார்கள். சமஸ்தானங்களை மண்டியிட செய்தார்கள். அன்றைய அரசியல் தேவை முடியாட்சி அகற்றி, சுயநிர்ணய உரிமையை பெறுவது. மன்னராட்சிகள் தாண்டி, நிர்வாகத்தினை கையிலெடுப்பது.

தமிழகத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு பார்ப்பனர்கள் எல்லா முடிவுகளையும் எடுத்தனர். குடிமக்கள் என்னவாக வாழவேண்டுமென்பதிலிருந்து சட்டம், நீதி, நிதி, அரசாங்க கட்டமைப்பு என அவர்கள் கோலோச்சினர். பார்ப்பனர் அல்லாதாரும் சமமாக நடத்தப் படவேண்டுமென்கிற வேட்கையில் உருவானது தான் திராவிட இயக்கங்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்பு வர்க்கப் போராட்டமும், 40 ஆண்டுகளுக்கு முன்பு இடைநிலை சாதிகளின் இட ஒதுக்கீடு போராட்டங்களும், 25 ஆண்டுகளுக்கு முன்பு தலித்திய எழுச்சியும் தான் இங்கே அரசியல்.

ஆனால்,

உலகமயமாக்கலுக்கு பின்னான ஒரு சூழலில் எது அரசியல், எதற்கான அரசியல், எப்படியான அரசியல் என்பது முக்கியமான கேள்வி.

சந்தைப் பொருளாதாரத்தில் எல்லோரும், எல்லோர்க்கும், எல்லாமும் கிடைக்கும் என்பது தான் தியரி. அப்படி நடந்திருந்தால்,


எகனாமிட்ரிக் மாடல்கள், புள்ளி விவரங்கள், தலையணை சைஸ் புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் திரும்ப திரும்ப சொல்வது ஒன்று தான். Globalization is technically over. எல்லா நாடுகளும், அரசுகளும் தங்களுடைய மக்களையும் பொருளாதாரத்தையும் எப்படி காபாற்றிக் கொள்வது என்பதில் இறங்கிவிட்டார்கள். அதனால் தான் உலகெங்கிலும் nationalist right wing கூச்சல் சத்தமாகக் கேட்கிறது.


உண்மையில் 21-ஆம் நூற்றாண்டில் ஒன்றரை தசாம்சங்களை மட்டுமே நாம் கடந்திருக்கிறோம். ஆனால் அதற்குள் உருவாகி இருக்கக் கூடிய சிக்கல்கள் எவற்றையும் 20 நூற்றாண்டுகளாகவும், அதற்கும் முன்னதாகவும் நாம் படித்திருக்கும் வரலாறுகளாலும், கோட்பாடுகளாலும் தீர்க்க முடியாது என்பது தான் நிதர்சனம். இதுநாள் வரை அரசியல் என்பது ஒற்றை கோட்பாடுகளால் நிரம்பியவை - மதம், நில ஆளுமை, முடியாட்சி, சர்வாதிகாரம், இனக்குழுகளின் அதிகாரம், செல்வம் சேர்த்தல் இன்னபிற. ஆனால் 21-ஆம் நூற்றாண்டின் வாழ்வியல் இடியாப்ப சிக்கல்கள் வேறு.

இந்தியாவை ஆண்ட மன்னர்கள் யாரிடத்திலும் செல்போன் இருந்ததில்லை. ஒரு செய்தியை கடத்த ஏராளமான ஆயத்தங்களையும், வீரர்களையும், புறாக்களையும், தகவல் கோபுரங்களையும் வைக்க வேண்டியதிருந்தது. இன்றைக்கு ஒரு ஏழை குடிமகனின் கையில் இருக்கும் செல்பேசியிலிருந்து உலகமுழுமைக்கும் யாரோடு வேண்டுமானாலும் பேச முடியும். அதனால் அந்த ஏழை குடிமகன், மன்னரை விட செல்வாக்கு மிகுந்தவன் என்று சொல்லுவோமா ?

கார் வைத்திருப்பது என்பது ஒரு காலத்தில் சமூக படிநிலை உச்சத்தின் அடையாளம்.  ஆனால் வெகுவாக நகரமயமாகிக் கொண்டிருக்கிற சூழலில் ஒரு ஆஃப்பினை தட்டினால் வீட்டு வாசலில் கார் வந்து நிற்கிறது. கார் வைத்திருப்பதை விட, காரை பயன்படுத்துவது தான் அந்தஸ்த்தின் அடையாளம். இதை பத்து வருடங்களுக்கு முன்பாக கூட நாம் நினைத்து பார்த்ததில்லை.

ட்ராவல் ஏஜென்சிகள் என்றொரு தொழில் ஒரு காலத்தில் இருந்தது. பஸ்ஸோ, காரோ, ரயிலோ, விமானமோ பயனாளரே நேரடியாக ஆன்லைனிலோ, செல்பேசியிலோ டிக்கெட்டினை புக் செய்து கொள்ளலாம் என்ற நிலை பரவலாக வந்தவுடன் இந்த வேலைக்கான தேவை முடிந்துவிட்டது. இடைத்தரகர்களான ட்ராவல் ஏஜெண்டுகளை தொழில்நுட்பம் கொன்றுவிட்டது. ட்ராவல் ஏஜென்சிகள் என்றொரு தொழிலும், பணியாளர்களும் அருகி, கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தொழில் மட்டுமே 10 வருடங்களாக செய்து வந்தவர்களுக்கு இன்றைக்கு வேறு வேலை கிடைக்காது. இந்த இடைத்தரகர்கள் ஒழிப்பு என்பது வெறும் பயணத்தில் மட்டும் கிடையாது. வீடு தரகர்கள், வரி விளம்பரங்கள், கார் / டூவீலர் புரோக்கர்கள் என ஒவ்வொன்றாய் அழியும். பகிரங்கமாக சொன்னால், உங்களுடைய திறமை, அனுபவம் என்பவை இனிமேல் in a way, meaningless.

கடந்த இருவத்தைந்து வருடங்களில் நாம் 2000+ வருடங்களில் தீர்க்க முடியாத பல சிக்கல்களை தாண்டி விட்டோம். ஆக 2000 வருடங்களாக நாம் பேசி வந்த சிக்கல்களின் தீர்வுகள் எதுவுமே இப்போது பயன்படாது. இது வேறு உலகம். இங்கே வேறு தேவைகள், வேறு ஆர்வங்கள், வேறு அடிப்படைகள், வேறு கனவுகள், வேறு பேராசைகள். இது நாம் படித்த, விளையாடிய, வளர்ந்த உலகம் கிடையாது. இது முற்றிலும் மாறுபட்ட களம். இவற்றை நாம் இது நாள் வரை பேசி வந்த முதலாளித்துவம், கம்யுனிசம் என்கிற அளவீடுகளால் விளக்க முடியாது. இவற்றுக்கு நடுவே நானொரு லிபரடேரியன் என்று சொல்லும் கூச்சல்களையும் புறந்தள்ளுங்கள். நாம் 60/70களில் சந்தித்த ’Big Government' என்பது வேறு வகையில் திரும்ப வரும்.

கூகிளோ, ரிலையன்ஸோ, ப்ராக்டர் & கேம்பிளோ, ஃபைசரோ, லீவெஸோ வருடம் முழுதும் சம்பாதிக்கும் தொகை உலகின் பல நாடுகளின் ஜிடிபியை விட அதிகம். தொழில்நுட்பமும், அறிவியலும், தகவல் பரிமாற்றங்களும் இதுநாள் வரை போட்டு வைத்திருந்த ஏராளமான வேலிகளையும், எல்லைகளையும் தகர்த்தெறிந்துவிட்டன. வேலிகள் ஒரு காலத்தில் அரசியலுக்கான அச்சாரங்கள். வேலிகளே காணாமல் போகும் போது, அதன்பின்னான அரசியல் என்னாகும் ? அதுவும் மறைந்தொழியும்.

நிறுவனங்கள் அரசாங்கங்களை நிர்ப்பந்திக்கும். அறிவியல் நிறுவனங்களை வழிநடத்தும். தகவல் தொழில்நுட்பம் இப்போதிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்தி, புதிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். செயற்கை நுண்ணறிவும், இயந்திர பொது அறிவும் ஏராளமான வேலைகளை மனிதர்களிமிருந்து பிடுங்கும். அவையே ஏராளமான புதிய வேலைகளை உருவாக்கும். பணம் என்பதன் உருவமும், பரிமாற்றமும், தேவையும் மாறும். வேலை என்பதின் தேவையும், அதன் பொருளும் மாறும். அரசாங்கங்கள் எல்லைகளற்ற பரிவர்த்தனைகளையும், தொடர்புகளையும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறும். தனி மனிதர்களை வெறுமனே புள்ளிவிவரமாக, ஒரு பொருளை / சேவையை பயன்படுத்தும் நுகர்வோனாக மட்டுமே, கட்டுக்குள் கொண்டு வர, தொழில்நுட்பம் எல்லாவிதமான சாம தான பேத தண்ட முறைகளையும் கையாளும். அதிகாரமென்பது அரசாங்கங்களிடமிருந்து மனிதர்கள் பயன்படுத்தக் கூடியதை உருவாக்கக்கூடிய நிறுவனங்களின் கையில் நழுவும்.  க்ரோனி கேப்டலிசம் என்று நாம் ஒரு காலத்தில் சொன்னது, ப்ளோடோக்ரேசியாக (Plutocracy) உருமாறலாம்.

என்னளவில் இனி வரும் காலங்களில் இந்த அடையாள, வாழ்வியல், சமூக, பொருளாதார விஷயங்களை ஆராய்வதும், விவாதிப்பதும், அலசுவதும், சிந்திப்பதும் தான் அரசியல். இந்த அரசியல் சதுரங்கத்திற்குள் எவற்றை தேடி, எவற்றை விலக்கி நமக்கான வெளியையும், இருப்பையும் நாம் எப்படி தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் என்பது தான் உண்மையான அரசியல் விவாதம். இந்த வேறு உலகத்தின் அரசியல் வேறு.

இதை வெறுமனே மேம்போக்காக திமுக/அதிமுக, காங்கிரஸ்/பாஜக, மோடி/ராகுல் காந்தி, ஹிந்துத்துவா/இஸ்லாமிய அடிப்படைவாதம் என பேசுவதால் மாறப் போவதில்லை. இனி அவற்றை இங்கே பேசவும் போவதில்லை. நம்முடைய எதிர்காலமென்பது நாம் எதிர் வரப் போகும் இந்த அறிவியல் தொழில்நுட்ப சுனாமியை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தான். அது தான் நம்முடைய வாழ்வு, பார்வை, சமூகம், உறவுகள், நிதி, பொருளாதாரம், ப்ரைவசி, தொடர்புகள் என எல்லாவற்றையும் தீர்மானிக்கப் போகிறது.

இது தான் 21ஆம் நூற்றாண்டின் அரசியல்.

இனி மேல் நான் இந்த அரசியலை தான் பேசப் போகிறேன்.

Let's begin!!

Labels: , ,


Comments:
Good
 
This comment has been removed by the author.
 
அருமையான எழுத்து. இங்கே நன்றிகளுடனும், இணைப்புடனும், மீள்பதிவு செய்திருக்கின்றோம்.
http://www.4tamilmedia.com/special/republish/2476-2016-10-19-21-49-21
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]