Oct 20, 2016

இட்லி மாவுக் கடையும், Innovator Dilemma-வும்

க்ளேய்டன் கிறிஸ்டியன்சன் (Clayton Christensen) என்கிறப் பெயர் நவீன மேலாண்மை அறிவியலில் (Management Science) ஒரு முக்கியமான பெயர். ஹாலிவுட்டிற்கு அர்னால்டு எப்படியோ, அந்த மாதிரி ;) ஹார்வேர்டு பிசினஸ் ஸ்கூல் பல்கலைக்கழக பேராசிரியரான அவர் 1997ல் முன்வைத்த டிஸ்ரப்ஷன் (Disruption Theory) உலகப் பிரசித்தம். கிட்டத்திட்ட நவீன மேலாண்மையின் பைபிள் இந்த புத்தகம் தான்.

இது நாள் வரை உலகின் பல்வேறு தொழில் மாறுதல்களில் இந்த கோட்பாடு தான் முக்கியமானதாக இருக்கிறது. டிஸ்ரப்ஷனல் நிறுவனங்கள் அதுநாள் வரை கோலோச்சிய பெரு நிறுவனங்களை அவர்கள் அறியாமலே வீழ்த்தி பெரு நிறுவனங்களாக உயரும். அப்போது கோலோச்சிய பெரு நிறுவனங்களை விட இந்த டிஸ்ரப்ஷனல் நிறுவனங்கள் சிறப்பாக இருக்காது, இன்னும் சொல்லப் போனால் ஆரம்ப காலங்களில் இந்த டிஸ்ரப்ஷனல் நிறுவனங்களை பெரு நிறுவனங்கள் மதிக்கக் கூட மதிக்காது. ஏதோ விளையாட்டாக சின்ன அளவில் எதையோ செய்துக் கொண்டிருக்கிறார்கள் அது நம்மை பாதிக்காது என்று கண்டும் காணாமல் விடுவார்கள்.

உங்கள் ஊரில் ஒரு இட்லி மாவுக் கடை இருப்பதாகக் கொள்வோம். இந்த இட்லி மாவுக் கடை இந்த தியரியின் முக்கியமான அங்கமென்பது அதன் நிறுவனருக்குக் கூடத் தெரியாது. ஒரு இட்லி மாவுக் கடை என்ன செய்கிறது ? மாவினை அரைக்கிறது. கிலோக் கணக்கில் வாடிக்கையாளர்களுக்கு விற்கிறது. இதிலென்ன பெரிய டிஸ்ரப்ஷன் கோட்பாடு ஒளிந்துக் கொண்டிருக்கிறது என்று எள்ளி நகையாடலாம்.

டிஸ்ரப்ஷன் கோட்பாடு சொல்வது இது தான்: Jobs to be done. அதாவது ‘தேவையான வேலையை தேவையான சமயத்தில் சரியாக செய்வது’.  எது டிஸ்ரப்ஷன் என்பதை முதலில் படம் வரைந்து பாகம் குறிக்கலாம்.

இட்லியோ, தோசையோ போட அரைத்த இட்லி மாவு தேவை. இட்லி மாவுக் கடைகள் வருவதற்கு முன்னால் நாம் இந்த ‘வேலையை’ எப்படி செய்தோம் ? முதலில் அரிசியையும், உளுந்தையையும் தருவிக்க வேண்டும். சரியான விகிதத்தில் நீர் சேர்க்க வேண்டும். இதை அரைக்க ஆட்டுக்கல்லோ அல்லது கிரைண்டரோ வேண்டும். பதமாக மாவு சரியான குழைவில் அரைப்படுகிறதா என்றுப் பார்க்க வேண்டும். இவையெல்லாம் sequential-ஆக நடக்கும். The No. of Jobs to get the batter done, can be divided into these steps.அதாவது முதலில் தேவையான பொருட்களைத் தருவித்தல், நீர் சேர்த்தல், அரைத்தல், பதம் பார்த்தல். ஒரு முழுமையான இட்லி / தோசை போட இத்தனை படிகளில் வேலைகள் நிறைவாக நடந்தால் தான் இட்லியை அவிக்கவோ, தோசையை ஊற்றவோ முடியும்.

இங்கே தான் இட்லி மாவு கடைகள் கிறிஸ்டியன்சனின் கோட்பாட்டில் வந்து விழுகின்றன. இந்த வேலைகள் அத்தனையையும் அவை ஒருங்கே தனியாக செய்கின்றன. வாடிக்கையாளராகிய உங்களுடைய வேலையை ஒரே ஒரு பரிவர்த்தனையில் (எத்தனை கிலோ மாவு ?) இவை முடித்து வைக்கின்றன. இது ஒரு பயனராக உங்களுக்கு சுலபமானது. ஆனால் இது ஒரு bottom-up disruption. இவை காலி செய்பவை கிரைண்டர் நிறுவனங்களை, இட்லி அரிசி பேக்கேஜிங் நிறுவனங்களை, மின் பயன்பாட்டை.

இவை வருவதற்கு முன்பு வரை, கிரைண்டர் உருவாக்கிய நிறுவனங்கள் நினைத்தது தங்களுடையப் போட்டியாளராக தங்களை விட சிறப்பான, அதி தொழில்நுட்ப வசதியோடு கூடிய இன்னொரு கிரைண்டர் நிறுவனத்தை. ஆனால் தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் இந்த இட்லி மாவுக் கடைகள் தான் கிரைண்டர் உருவாக்கிய நிறுவனங்களை காலி செய்துக் கொண்டிருக்கின்றன.

இப்போது கிரைண்டர்கள் வீட்டில் வாங்கத் தேவையில்லை. இட்லி அரிசி தனியாக வாங்கத் தேவையில்லை, அதற்காக மளிகை லிஸ்டில் எக்ஸ்ட்ரா ஐட்டம் போட வேண்டியதில்லை. கிரைண்டர் இருந்து அரைக்கும் போது மின்சாரம் இருக்க வேண்டுமே என்கிற பதைபதைப்பு அனாவசியம். ஆக இவற்றினை உருவாக்கிய அத்தனை நிறுவனங்களுக்கும் தேவைகள் குறைந்துப் போனது. அவர்கள் ஒரு நாளும் ஒரு இட்லி மாவுக் கடை தங்களுடையப் போட்டியாளாராக வருவார் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆக உங்களுடைய தேவை aka "Jobs to be done" - ‘இட்லி மாவு’ என்பது தான். அது இதற்கு முன் நேரடியாக கிடைக்காததால் மற்ற எல்லா ‘வேலைகளையும்’ செய்ய வேண்டியதிருந்தது. ஒரு இட்லி மாவுக் கடை இதற்கு முன் தேவைப்பட்ட அத்தனை ‘பொருள் / சேவைகளை’ காலி செய்து விட்டது. ”இட்லி மாவு” என்கிற புது பொருளையும், அதற்கான சந்தையையும் இது உருவாக்கி விட்டது. Game Over.

கோட்பாட்டின் அடிப்படைகள்


ஒரு இட்லி மாவுக் கடை இவையத்தனை சாரம்சங்களையும் கொண்டிருப்பதால் தான் நாம் மிக எளிதில் மாறி விட்டோம். இது இட்லி மாவுக் கடைகளோடு மட்டும் முடிவதில்லை. ஷேர் ஆட்டோ வந்த பின், சாதா ஆட்டோக்களுக்கு இது தான் நிகழ்ந்தது. ஓலாவும், ஊபரும் வந்த பின் டாக்சிகளுக்கு இது தான் நடந்தது. டிஷ் ஆண்டென்னாக்கள் கேபிள் டிவி நிறுவனங்களை அப்படி தான் விழுங்கிக் கொண்டிருக்கின்றன. ஏர் பிஎன்பியும், ஓயோ ரூம்களும் சிறு / குறு / பெரு ஹோட்டல்களை இப்படி தான் சிதைக்க ஆரம்பித்திருக்கின்றன. செல்போன் டவர்கள் பரவலான காலக்கட்டத்தில் இப்படி தான் ஐபோனும், ஆண்ட்ராய்ட் போன்களும் நோக்கியாவையும், ப்ளாக்பெர்ரியையும் கொன்றன.  எல்லா விஷயங்களும் அடங்கியிருந்த வெகுஜன இதழ்களிடமிருந்து, ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் பார்க்கும் (ஜோசியம், பெண்கள், நிதி மேலாண்மை, வீடு, ஆன்மீகம், சினிமா) இதழ்கள் வெளி வர ஆரம்பித்தன. டிவிடியிலிருந்து ஸ்ட்ரீமிங்கிற்கென்று நெட்ப்ளிக்ஸ், ப்ளாக்பஸ்டரை அப்படி தான் கொன்றது. இப்போது சென்னையில் ஆன்-லைன் லாண்டரி நிறுவனங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. இவை கொஞ்ச நாளில் வாஷிங் மெஷின் / தண்ணீர் பயன்பாடு தேவைகளை காலி செய்யும்.

டிஸ்ரப்ஷன் கோட்பாடு என்பது வெறும் மேலாண்மை கோட்பாடல்ல. அது வாழ்வியல் கோட்பாடு. எதில் நீங்கள் உங்களுடைய நேரத்தையும், கற்றலையும், ஆற்றலையும் செலவிட்டால் அதிகபட்ச வெளிப்பாடு இருக்குமென்பதையும், ஒரு தேவையை எப்படி பகுதிகளாக பிரித்து அதில் எதில் நீங்கள் ஜொலிக்க முடியும் என்பதை சொல்வதும் ஆகும். இனி எதிர்காலங்களில் ஜெனரிக் தேவைகளை இயந்திரங்கள் பார்த்துக் கொள்ளும். அதில் மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய குறிப்பிட்ட Jobs to be done என்ன என்பதை கண்டு கொள்ளுதல் தான் சர்வைவலுக்கான வழி.

* Innovator Dilemma என்பது தான் கிறிஸ்டியன்சன் எழுதிய முதல் புத்தகம். இதில் அவர் எப்படி சின்ன ஸ்டீல் நிறுவனங்கள் அமெரிக்க ஸ்டீல் நிறுவனங்களை காலி செய்தன என்று எழுதியிருப்பார். டிஸ்ரப்ஷன் தியரி என்பது அங்கிருந்து உருவானது. அதற்கு பிறகு அவர் எழுதிய புத்தகங்கள் பெரு நிறுவனங்கள் டிஸ்ரப்ஷனல் நிறுவனங்களை எப்படி சமாளிப்பது, டிஸ்ரப்ஷனல் மனநிலையை நிறுவனங்கள் / மனிதர்களிடையே எப்படி உருவாக்குவது என நீண்டது. விவரங்களுக்கு கூகிளிடுங்கள்.

Disruption Theory | Clayton Christensen

Go disrupt the world!

Labels: , , ,


Comments:
ஆடைத்தொழில் குறித்து எழுதுங்க.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]