Nov 16, 2016

அலைகள் ஒய்வதில்லை - பகுதி 5

”Leave the robots alone. The robots will keep getting better, but focus on education, people knowing each other, caring for each other. Caring for the advancement of society.” - Manuela Veloso, Carnegie Mellon University

+++++

இதுநாள் வரை “வேலை இல்லை” என்பதற்கான காரணம் ஒரு குறிப்பிட்டத் துறையில் ஒரளவுக்கு மேல் உற்பத்தியோ, தேவையோ இருக்காது. உற்பத்தியும், தேவையும் குறைவாக இருந்தப் போது அதை உருவாக்க வேண்டிய ஆட்களும், இயந்திரங்களுமே கூட குறைவாக தேவைப்பட்டார்கள். 60/70/80களில் ‘எம்பாயிமெண்ட் அலுவலகத்தில்’ பதிவு செய்துக் கொண்டு ஒய்வு பெறும்போது வேலை இருக்கிறதென்று வந்த நேர்காணல் தபால் கார்டுகள் அதிகம். அரசு, தனியார், சுயதொழில், சிறு வேலைகள் என எல்லாவற்றுக்குமான தேவைகள் மிகக் குறைவாக இருந்தது, அதனால் இந்தியா ‘வேலையில்லாத திண்டாட்டத்தின்’ கீழ் சுழன்றது.

இதற்கான ஆதார காரணம் ஒரு காலத்தில் நாம் பற்றாக்குறை உலகில் வாழ்ந்துக் கொண்டிருந்தோம்; லைசன்ஸ் ராஜ்களின் கீழ் குறிப்பிட்ட அளவு தான் உற்பத்தியுமே செய்ய முடிந்தது. தேவைகள் குறைவான, உற்பத்தி குறைவான, பலவற்றுக்கும் ரேஷனை அணுகி வாழ்ந்த ஒரு நாடு, உலகமயமாக்கலுக்குப் பிறகான சூழலில் இவை எல்லாவற்றையும் உடைத்தது.

உரிமங்கள் இலகுவாக கிடைத்தன. உற்பத்தி பெருகியது. தேவைகள் அதிகரித்தது. நகரங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்காகவும், ஐ.டி துறையின் தலைநகரமாகவும் கொண்டாப்படும் பெங்களூரின் வளர்ச்சி என்பது கடந்த 30 வருடங்கள் மட்டுமே. இந்த மாற்றம் இங்கு மட்டுமில்லாமல் உலகமெங்கும் நிகழ்ந்தது. இந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், அதனூடாகவே உருவான நான்காம் பேரலையும் இதுநாள் வரை நாம் உருவாக்கி வைத்திருந்த கற்பிதங்களை உடைத்தது. உற்பத்தி பெருக்கெமென்பது வெறுமனே சில விழுக்காடுகளில் முன்னேறாமல், பல நூறு விழுக்காடுகளில் புலிப்பாய்ச்சலாய் எழுந்தது. விளைவு நாம் பற்றாக்குறையிலிருந்து (scarcity), மிகுதியான (surplus) உலகிற்குள் நுழைய ஆரம்பித்தோம்.

Scarcity to Surplus Economy

அரிசி உணவென்பது தீபாவளிக்கும், பொங்கலுக்கும் என்பது போய் எல்லார் வீட்டிலும் அரிசி உணவு வந்து விட்டது. இறைச்சி உண்பது என்பது விசேஷங்களில் மட்டுமே என்றில்லாமல், பிரியாணிக் கடைகளில் தினமும் கூட்டம் நிரம்பி வருகிறது. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மாதத்துக்கு ஒரு முறை கடிதம் எழுதியவர்கள், இப்போது எந்நேரமும் வாட்ஸாப்பிலோ, குறுஞ்செய்தியிலோ தொடர்ப்பில் இருக்கிறோம். ஊருக்கு போவது என்பதை பல மாதங்களுக்கும் முன்பே திட்டமிட்ட காலங்கள் போய், வாரக் கடைசியில் பெங்களூர் - சென்னை நெடுஞ்சாலை ட்ராப்பிக்கில் பிதுங்குகிறது. பண்டிகைகளுக்கு மட்டும் புதுத் துணியும், பலகாரங்களும் உண்ட நாம் இப்போது தள்ளுபடிப் போட்டால் துணி எடுக்கிறோம். அடையார் ஆனந்த பவனிலோ, கிருஷ்ண ஸ்வீட்டிலோ, அன்னபூர்ணாவிலோ உண்கிறோம்.

இவை அனைத்திற்குமான காரணம் - உற்பத்தி பெருக்கம். உற்பத்திப் பெருக்கத்தினால் Economies of Scale வந்தது. அதியுற்பத்தி வந்ததால் தனிப் பொருட்களுக்கான விலை குறைந்தது. விலை குறைந்து சல்லிசாக கிடைத்ததால் எல்லோரும் அவற்றினைப் புழங்க ஆரம்பித்தோம். இந்த புழக்கம் உற்பத்தியை மேலும் அதிகரித்து, விலையைக் குறைத்து, மேலும் புழக்கத்தினை அதிகரித்தது. இது ஒரு வட்டம். இந்த வட்டத்தின் முக்கியமான அடிநாதம் - பற்றாக்குறையிலிருந்து மிகுதிக்கு நாம் நகர்ந்தது.

தொடர்ச்சியான உற்பத்தி, அதன் இடுபொருட்கள், அதன் உபத் தொழில்கள், தேவைகள், பரிமாற்றங்கள், விநியோகிக்கும் முறைகள், கடைகள், நுகர்வோர்கள் என எல்லா தளங்களிலும் இது விரிவடைந்தது. 1990 - 2010 வரைக்குமான 20 வருடங்கள் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இந்தியாவின் பொற்காலம். சேவைக்கான பொருட்களும் (உ.தா செல்பேசியை உபயோகிக்க நெட்வொர்க் தேவை. நெட்வொர்க் என்பது சேவை. செல்பேசி என்பது பொருள்), பொருட்களுக்கான சேவைகளும் (இந்த செல்பேசியை விற்கும் கடைகள், மின் வணிகங்கள்) இணையாக உருவாயின. இதனால் இந்த வட்டத்திற்கு தேவையாக நிறைய நிறுவனங்கள், நிறைய ஆட்கள், நிறைய வர்த்தகம், நிறைய நுகர்வோர்கள், நிறைய சேவைகள், நிறைய பொருட்கள் என நாம் எதிர்பாராத அளவிற்கு அதிவேகமாக வளர ஆரம்பித்தது.

2008 உலகளாவிய பொருளாதார மந்தத்திற்கு பிறகு அரசுகள் தங்களுடைய வரி வருமானத்திலிருந்து தேசியப் பொருளாதாரத்தினைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. அதுவரைக்கும் ஏற்றத்தினை மட்டுமே கண்ட உலகம், முதல் முறையாக இறக்கத்தினைக் காண ஆரம்பித்தது. இது நடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘அறிவுசார் பொருளாதாரம்’ உள் இறங்கி விட்டிருந்தது. நாடுகளின் ஜி.டி.பி என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருட்கள் உற்பத்தி செய்வதிலிருந்து சேவைகளில் செலவிடுவதாக மாறி இருந்தது. சேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக மென்பொருளாகவும், ரோபோட்களாகவும், அறிவேந்திரங்களாகவும் உருப்பெற ஆரம்பித்தன. இதற்கு முந்தைய அத்தியாயங்களில் சொன்ன காரணிகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெருக்கெடுத்தன. மனிதர்கள் செய்த வேலைகள் இயந்திரங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்தது.

சுருக்கமாய் சொன்னால், மனிதர்களை வைத்து சேவைகளை விற்கும் டி.சி.எஸ் நிறுவனத்தில் உலகம் முழுக்க 335,000 ஆட்கள் பணிபுரிகிறார்கள். உலகம் முழுக்க மனிதர்களை ஒருங்கிணைக்க தொழில்நுட்பத்தையும், அறிவேந்திரங்களையும் பயன்படுத்தும் பேஸ்புக்கில் வெறும் 15,724 ஆட்கள் பணிபுரிகிறார்கள். டி.சி.எஸ்ஸின் மொத்த சந்தை மதிப்பு $76 பில்லியன்கள். டி.சி.எஸ்ஸை விட 1/20 பணியாளர்களை மட்டுமேக் கொண்ட பேஸ்புக்கின் மொத்த சந்தை மதிப்பு $350 பில்லியன்கள். அதாவது டி.சி.எஸ்ஸை விட 4.5 மடங்கு அதிகம்.

இது தான் நான்காம் பேரலையின் மாற்றம். வேறு விதமாக சொன்னால் குறைவான மனிதர்கள், உலக முழுமைக்குமான ஒரு சேவையினை அறிவேந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு வாயிலாக வழங்குகிறார்கள். வேலைகள், அதன் மூலமாக உருவாகும் பொருட்கள் / சேவைகள், அவை நுகர்வோர்களுக்கு அளிக்கப்படும் விதம் என எல்லாமோ ஒட்டு மொத்தமாக மாறி விட்டது. உலகம் முழுமைக்குமான சேவையை அளிக்க தேவை என்று இதுவரை நாம் நினைத்த மனித வேலையாட்கள் இனிமேல் ஒரு போதும் தேவையில்லை என்பது தான் இந்த பேரலையின் சூட்சுமம்.

Technological Unemploymentம், மனித வேலைகளின் Inefficiency-யும்

இது தான் இன்றைய “technological unemployment" என்று சொல்லப்படுகின்ற நான்காம் பேரலையின் “வேலை வாய்ப்பின்மையை” உருவாக்கி இருக்கிறது. இங்கே இயந்திரங்களும், மென்பொருளும், செயற்கை நுண்ணறிவும் ஏராளமான மனிதர்களின் வேலைகளை தேவையற்றதாக மாற்றி விட்டது. அதே சமயத்தில் ஏராளமான மனிதர்கள் செய்தால் வரும் efficiencyயை விட அதீத திறனில் பொருட்களையும், சேவைகளையும் இவைகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

மனிதர்களை வேலைக்கு வைத்தால் சம்பளம் தர வேண்டும். அவர்களின் ஈகோவையும், குணநலன்களையும் அனுசரித்துப் போக வேண்டும். ஒரு குழுவாக இயங்கினால் அந்த குழுவினை நிர்வகிக்க வேண்டும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடவேண்டும். பண்டிகை நாட்கள் விடுமுறை, உடல் நலக் குறைவு என்று வரமாட்டார்கள். புறம்பேசல், பொய் சொல்லல், கோவம், மகிழ்ச்சி, ஆத்திரம், பயம், பழிவாங்கல், குழிப்பறித்தல், நயவஞ்சகம், துரோகமென மனித உணர்வுகளை தொடர்ச்சியாக கண்டறிந்து அதை நிர்வகிக்க ஆட்கள் தேவை. தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என்று போனஸ் தர வேண்டும். கல்யாணமோ, எழவோ போய் நிற்க வேண்டும். காப்பீடு எடுக்க வேண்டும். மருத்துவ செலவுகளை கவனிக்க வேண்டும். அலுவலகத்திற்கும் வீட்டிற்குமான பயணச் செலவுகளை கவனிக்க வேண்டும். கூட்டமாய் சேர்ந்தால் கொடி பிடித்து இன்குலாப் ஜிந்தாபாத் என்று கத்துவார்கள். இதுநாள் வரை இது தான் நடந்தது.

அறிவேந்திரங்களும், நான்காம் பேரலையும் மேலே சொன்ன மொத்த பேராவையும் ஒரே ஒரு வீச்சில் காணாமல் போக செய்யும். மனிதர்களுக்கு செய்யும் எவையும் அறிவேந்திரங்களுக்கு தேவையில்லை. ரிப்பேர் ஆனாலோ, மென்பொருளில் குழப்பங்கள் வந்தாலோ தூக்கி எறிந்து விட்டு அடுத்த வெர்ஷனைப் போட்டு விட்டு வேலையைப் பார்க்கலாம். சம்பளமோ, போனஸோ, லீவோ கேட்காது. பொய் சொல்லாது. போட்டுக் கொடுக்காது. குழுவில் இருக்கும் ஒரே ஒரு பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்து அது கமிட்டி வரைக்கும் போகாது. எந்நேரமும் பேஸ்புக்கிற்கு லைக் போட்டு, வாட்ஸாப்பில் மொக்கை போடாது. இவை உருவாக்கப் போவது தான் மேலே சொன்ன “தொழில்நுட்ப வேலைநீக்கம்”.

இது தான் நடக்கப் போகிறது. துறைகளைப் பொறுத்து போன அத்தியாயத்தில் சொன்னதுப் போல கால தாமதங்கள் நடக்கலாம். ஆனால் இது தான் பாதை.

இப்போது அரசாங்கங்களுக்கு வேறு விதமான சிக்கல் உருவாகி இருக்கிறது. மிகுதியான உற்பத்தி, விலை குறைவான பொருள்/சேவை அளிப்பு, தொடர்ச்சியான/நிறைவான பங்களிப்பினை உருவாக்க அறிவேந்திரங்கள் வந்து விட்டன. ஆனால் இதன் பயனாளிகளான மனிதர்களுக்கு வேலை இல்லை. வேலை இல்லாததால் வருமானமில்லை. வருமானமில்லாதால் பொருட்களை / சேவைகளை அவை எவ்வளவு சல்லிசாக கிடைத்தாலும் புழங்க மாட்டார்கள். புழங்காமல் போனால் பொருட்களும், சேவைகளும் தேங்க ஆரம்பிக்கும். தேங்க ஆரம்பித்தால் பொருளாதார சுழற்சி நடக்காது.

அதை விட முக்கியம், எந்திரங்கள் வேலைகளை எடுத்துக் கொண்ட கடுப்பினாலும், வருமானமற்ற கோவத்தினாலும் மனிதர்கள் இயந்திரங்களை அடித்து நொறுக்கப் புறப்பட்ட கதையெல்லாம் முதலாம் பேரலையில் நடந்தது எந்த அரசுக்கும் மறக்கவில்லை.

ஒரு பக்கம் அறிவேந்திரங்களின் எழுச்சியை எந்த அரசாலும் தடுக்க முடியாது. இன்னொரு பக்கம் மனிதர்களுக்கு வேலை போவதையும் அரசால் நிறுத்த முடியாது. இந்த நிலையில் அமைதியான சூழலையும், ஆர்ப்பாட்டங்களில்லாத சமூகத்தையும் கைக்கொள்ள ஒரு அரசு என்ன செய்யும் ?அது தான் Universal Basic Income (UBI) எல்லோருக்குமான அடிப்படை வருமானம். இது ஒன்றும் புதிதில்லை. இன்றைக்கு ஒய்வூதியம் (Pension) என ஒரு துறையில் நீண்டகாலம் வேலை செய்தவர்களுக்கு, ஒய்வுக்கு பிறகு, அவர்கள் வாழ்வினை நடத்த, வாழ்நாள் முழுக்க ஒரு அடிப்படை வருவாயினை அரசு தருகிறது. அதை வேலை இருக்கிற/இல்லாத எல்லோருக்கும் விரிவுப்படுத்தினால் அது தான் UBI.

UBI ஏன் தேவை, எப்படி நடக்கும், ஒசியில் பணம் கொடுத்தால் மக்கள் சோம்பேறிகளாக சுற்ற மாட்டார்களா, இதற்கான பணம் எங்கிருந்து கிடைக்கும், இதை உண்மையிலேயே சாத்தியமா, உலகில் எங்காவது இதை செய்திருக்கிறார்களா, இது ஏன் அவசிய தேவை போன்ற கேள்விகளை அடுத்த பகுதியில் அலசுவோம்.

(அலைகள் தொடரும்.....)

இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை

அலைகள் ஒய்வதில்லை - 1
அலைகள் ஒய்வதில்லை - 2
அலைகள் ஒய்வதில்லை - 3
அலைகள் ஒய்வதில்லை - 4

Labels: , , ,


Nov 12, 2016

அலைகள் ஒய்வதில்லை - பகுதி 4

”Most people are like frogs, inside the slow boiling water. They neither acknowledge that their environment is changing nor make any efforts to understand it. When the water hits the boiling threshold, the frogs can't jump out, but submerge & die. So are the people, who are not seeing the "Change" coming" - From "The Boiling Frog Syndrome"

இதற்கு முன்பான பேரலைகளிலும் இதேப் போல வேலைகள் மொத்தமாக போகும் என்கிற பயமுறுத்தல்கள் எழுந்தது. ஆனால் நிகழ்ந்தது என்ன ? அதிகமான வேலைகள் உருவாகி இருக்கின்றன. அப்படி தான் நான்காவது பேரலையும் இருக்கும், இந்த பயங்காட்டல்கள் தேவையற்றது என்கிற வாதத்தினை வைக்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.

முதலில் ‘வேலைகள்’ என்றால் என்ன என்பதை உணர்ந்தாலேயொழிய எந்தெந்த வேலைகள் நிற்கும், எந்த வேலைகள் போகும் என்பதை சொல்ல முடியாது. மேலும், “வேலைகள்” என்பது வெறுமனே உழைப்பு, திறமை, மூளை என்பதால் வருவது மட்டுமல்ல. அது மனிதர்களின் வாழ்நாளில் முக்கியமான அங்கம். சராசரியாக 20 - 65 வயது வரை மனிதர்கள் தாங்கள் செய்யும் வேலையால் தான் அறியப்படுகிறார்கள். இந்த காலக்கட்டத்தில் விழித்திருக்கும் நேரத்தின் பெரும்பகுதி வேலையில் தான் கழியும்.

“வேலைகள்” என்பது மனிதர்களுக்கு பணமீட்டும் முறை மட்டுமல்ல, அதில் அவர்களின் உளவியல் ரீதியான பெருமிதமும், சுயகவுரவமும், தன்மானமும், மதிப்பும், சமூக அங்கீகாரமும் அடங்கியிருக்கிறது. ஆக “வேலையில்லை” என்பது வெறும் பணமிழப்பு மட்டுமே கிடையாது. அதை தாண்டி ஏராளமான கூறுகள் ஒருவரின் வேலையிழப்பின் போது விஸ்வரூபமெடுக்கும். இதனாலேயே நான்காவது பேரலையின் “வேலை மாற்றங்கள்” பற்றி ஏராளமான விவாதங்கள் உலகங்கெங்கிலும் எழுந்துக் கொண்டிருக்கின்றன.

+++++

மனித வாழ்வின் வேலைகள் என்பவை ஆரம்பத்தில் முழுமையான உடல் உழைப்பு, பின்பு உடல் + மூளை சார் உழைப்பு, 20-நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான முழு மூளை சார் உழைப்பு என பிரிய ஆரம்பித்தன. மூன்றுமே “வேலைகள்” தான் என்றாலும், இந்த வேலைகளுக்கான தேவைகள், திறன்கள், பயிற்சிகள், வாய்ப்புகள் வெவ்வேறாக இருந்தது. இன்றைக்கும் இந்த மூன்று விதமான “வேலைகளை” எல்லா இடங்களிலும் பார்க்க முடியும். இவை மூன்றின் பயன்பாடுகளும் மாறுப்பட்டவை.

ஒரு  உதாரணத்திற்கு முனுசாமி என்கிற கட்டிடத் தொழிலாளி, மோகன் என்கிற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மேனேஜர், விவேக் என்கிற தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் சீனியர் எண்டர்பிரைஸ் சிஸ்டம்ஸ் ஹெட் என்று மேலே சொன்ன மூன்று வேலைகளையும் செய்யும் முப்பிரிவாக இவற்றைப் பிரிப்போம்.

முனுசாமி இந்த வேலையை 20 வருடங்களுக்கு மேலாக செய்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கல் உடைத்து கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி இன்றைக்கு அவர் தான் கான்கீரிட் கலவை செய்வதை மேற்பார்வை செய்துக் கொண்டிருக்கிறார்.

மோகன் சேல்ஸ் ரெப்பாக வாழ்க்கையை ஆரம்பித்து, முட்டி மோதி, மேலே வந்து இன்றைக்கு ஒரு தனியார் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மேனேஜராக இருக்கிறார். என்ன சரக்கு, எங்கிருந்து வந்தது, எங்கேப் போக வேண்டும், அதற்கான பயணத் திட்டங்கள் என்ன, எது நிறுவனத்துக்கு பயனளிக்கும், எது வாடிக்கையாளரை திருப்திப் படுத்தும், யார் எதை எங்கே கொண்டுப் போய் கொடுப்பார்கள் என்கிற அனைத்தையும் கவனிப்பது தான் அவருடையப் பணி. தமிழ்நாடு முழுக்க சுற்ற வேண்டிய கூடுதல் பணிச்சுமையும் மோகனுக்கு உண்டு.

விவேக் இந்தியாவின் டாப் 10 பொறியியல் கல்லூரியிலிருந்து கேம்பஸில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து, ஐந்தாண்டுகளில் உயர்ந்து, இன்றைக்கு ஒரு பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி புரிகிறார். அந்த நிறுவனம் உலகமெங்கும் கடைப் பரப்பியிருக்கிறது. அதன் டேட்டா சென்டர்கள், அது கிளைப் பரப்பும் நிறுவனத்தின் கிடங்குகள், லாஜிஸ்டிக்குகள், டேட்டா சென்டர்களின் பின்னிருக்கும் எனர்ஜி (மின்சாரம், வெப்பம் அதிகமானால் குறைக்க தண்ணீர், அதை மறுசுழற்சி) தேவைகள், அதற்கான இடுபொருட்கள் என எல்லாவற்றையும் நிர்வகிக்கின்ற வேலை. அமர்ந்திருப்பது பெங்களூராய் இருந்தாலும் நிர்வகிப்பது இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூர்.

அறிவேந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த இந்த நான்காவது பேரலை இந்த மூவரின் “வேலைகளையும்” என்ன செய்யும் என்று பார்ப்போம் ?

முனுசாமியும், உடல் உழைப்பு சார் வேலைகளும்

முனுசாமியின் வேலைக்கு தேவை - தொழிலாளிகள், சின்ன சின்ன இயந்திரங்கள், நாள் முழுக்க வேலை. இதில் செங்கலை இடிக்க க்ரஷர்கள் ஏற்கனவே இருக்கின்றன. கான்கீரிட் கலப்பது, செண்ட்ரிக் வேலை செய்யும் போது போடுவது போன்றவை தான் முக்கியமான பணிகள். இதில் இதுநாள் வரை கான்கீரிட் கலப்பது என்பது மனிதர்கள் செய்த பணியாக இருந்தது. இப்போது டீசலில் இயங்கும் கான்கீரிட் மிக்ஸர்கள் வந்து விட்டன. கூடவே, கான்க்ரீட் மிக்ஸ்கள் என்று சொல்லப்படும் ப்ரீ மிக்ஸ்டு கான்க்ரீட் வந்து விட்டது.

Pre-fabrication என்கிறத் துறை வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டிடத்திற்கு தேவையான கட்டமைப்பினை தொழிற்கூடங்களில் உருவாக்கி, அவற்றை தேவைப்பட்ட இடங்களில் கொண்டு வந்து அடுக்கினால் கட்டிடம் எழும்ப ஆரம்பிக்கும். சென்னை மெட்ரோவின் பெரும்பகுதி இப்படி தான் உருவானது. ஆக ஒரு காலத்தில் முனுசாமியின் கீழ் நிறைய சித்தாள்கள், பெரியாட்கள், மேஸ்திரிகள் வேலைப் பார்த்திருக்கலாம். இன்றைக்கு அவர்கள் தேவையில்லை. இயந்திரங்களே எல்லா டிசைன்களையும் அதன் இயற்பியல், புவியியல், மண் சார்ந்த பிடிப்புகள், ஜாயிண்டுகளை விரிவாக அலச ஆரம்பித்து விட்டன. முனுசாமியின் வேலை என்பது இன்றைக்கு இயந்திரங்களையும், ஆபரேட்டர்களையும் வாடகைக்கு எடுப்பதோடு முடிகிறது.

முனுசாமியின் 20 வருட அனுபவம் என்பது மாறி வரும் கட்டுமானத் தொழிலில் பெரிய அளவுக்கு தேவை இருக்காது. அவருடைய அனுபவம் என்பது, இத்தனை வருட சர்வீஸ் அதனால் சரியாக மேற்பார்வைப் பார்ப்பார் என்பதோடு நிற்கிறது.

மோகனும், மூளை + உடல் உழைப்புசார் வேலைகளும்

மோகன் ஒரு காலத்தில் எல்லா பணிகளையும் ஆட்களைக் கொண்டு செய்ய வேண்டியதாக இருந்தது. ஆனால் இன்றைக்கு sortingங்கிற்கு ரோப்போக்கள் சல்லிசாக கிடைக்கின்றன. சென்சார்கள் எவை எந்த இடத்தில், எந்த சூழலில், எந்த தட்பவெப்ப நிலையில், எந்த வண்டியில் போய் கொண்டிருக்கின்றன என துல்லியமாக ரியல் டைமில் தகவல்கள் சொல்கின்றன. எந்த பாதையில் சென்றால் குறைவான செக் போஸ்ட்கள் இருக்கும் என்று கூகிள் மேப்பும், செறிவூட்டப்பட நுண்ணறிவும் சொல்கிறது. எந்த ட்ரைவர் எந்த வண்டியை எந்தெந்த சரக்குகளோடு தற்போது எங்கேப் போய்க் கொண்டிருக்கிறார் என்பது வரைக்கும் ஒரு தட்டு தட்டினால் வருகிறது. வாடிக்கையாளரின் அலுவலகத்துக்கு சரக்குகள் போய் சேர்ந்ததா இல்லையா என்பதை டெலிவரி பாய் சொல்வதற்கு முன்னால், வாடிக்கையாளர் கையெழுத்திட்ட கைப்பேசி சொல்லி விடுகிறது.

இன்றைக்கு மோகன் வெறுமனே சிஸ்டத்தின் முன் உட்கார்ந்து எங்கே சிக்கல் எழுகிறதோ, அதை தீர்க்க வேண்டியதை மட்டும் தான் செய்கிறார். பார்வையாளாராக மட்டுமே சுருக்கப்பட்டது தான் மோகனின் வேலை. From full-fledged operations, he is just an observer today. 

விவேக்கும், மூளைசார் வேலைகளும்

விவேக் மேலே சொன்ன இரண்டு வேலைகளை விட அதிகமான மூளைசார் வேலைகளை செய்து வந்தவர். ஆனால் மேலே சொன்ன இரண்டு பேரையும் விட அதிக ஆபத்தில் இருப்பது விவேக் தான். விவேக் மாதிரியான புத்திசாலியான, ஸ்மார்ட்டான இளைஞர்கள் தான் அறிவேந்திரங்களை உருவாக்கினார்கள். தங்களுடைய வேலைகளை சுலபமாக அறிவேந்திரங்களுக்கு பயிற்சி அளித்தார்கள். இன்றைக்கு விவேக் செய்யும் எல்லாவற்றையும் அறிவேந்தரங்களே செய்யுமளவிற்கு தொழில்நுட்பத் துறைக்கு தேவைப்படும் “தொழில்நுட்பங்களை” நிர்வகிக்கும் அறிவேந்திரங்கள் வந்து விட்டன.

கடைநிலை ஊழியனின் வேலையை காலி செய்வதை விட உயர்நிலையில் இருக்கும் ஆட்களின் வேலையை காலி செய்யும் அறிவேந்திரங்கள் தான் நான்காவது பேரலையின் ஆரம்பம். இந்த அறிவேந்திரங்களை உருவாக்கியவர்கள், விவேக் மாதிரியான அறிவுசார் வேலையாட்கள் தான்.

இன்றைக்கு அமெரிக்காவில் பங்குச்சந்தை, நிதி, முதலீட்டு துறைகளில் அறிவேந்திரங்கள் சொல்வதை மனிதர்கள் கேட்கிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பு இந்த துறைகளில் இயந்திரங்கள் தேவை என்று மனிதர்கள் அறிவேந்திரங்களை உருவாக்கினார்கள். இன்றைக்கு ரோல் ரிவர்ஸ் ஆகி இருக்கிறது.

விவேக் இனி பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையில்லை, ஏனெனில் எவையெல்லாம் கவனிக்கப் பட வேண்டுமோ, அவை அத்தனையையும் கவனிக்க நிரலிகளும், செயலிகளும், அறிவேந்திரங்களும் இருக்கின்றன.

எந்தெந்த வேலைகள் மனிதர்களிமிருந்து பறிக்கப்படும் சாத்தியங்கள் இருக்கிறது ?
Source Image: Business Insider

மனிதர்களின் திறன், நுட்பம், பயிற்சி, தொடர்ச்சி, சக மனிதர்களோடு இணக்கம், அனுபவம் என நாம் சொன்ன பலவற்றில் முக்கால்வாசி இப்போதே திறமையான அறிவேந்திரங்களில் இருக்கிறது. இன்னும் நிறைய நியுரல் மாடல்கள் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அவை இதுநாள் வரை நாம் செய்ததின் மொத்த அனுபவத்தையும் சாப்ட்வேர் ப்ரோக்ராம்களாக கூடிய சீக்கிரத்தில் உருவாக்கி, உள்வாங்க ஆரம்பித்து விடும். எவையெல்லாம் சாத்தியமில்லை என்று நாம் 20 - 25 வருடங்களுக்கு முன்பு சொன்னோமோ, அவற்றில் பல சாத்தியமாகும் எல்லைகளுக்குள் வர ஆரம்பித்து விட்டது.

மூன்று பேரலைகளிலும் மனிதர்கள் இயந்திரங்களை augment செய்தார்கள். இயந்திரங்கள் எப்படி, எங்கே, எப்போது இயங்க வேண்டுமென்பதை அவர்கள் முடிவெடுத்தார்கள். இந்த திறன்கள் இருந்த மனிதர்களுக்கு வேலையும், மதிப்புமிருந்தது.

நான்காவது பேரலையில் இந்த அடிப்படையே ஆட்டம் காண்கிறது. முடிவுகளை அறிவேந்திரங்கள் எடுக்கின்றன. அவற்றினை மனிதர்கள் சரியா/தவறா என்றளவில் மட்டுமே verify செய்ய பயன்படுத்தப் படுவார்கள்.

இனி அறிவேந்திரங்கள் மனிதர்களை augment செய்யும்.

++++

அறிவேந்திரங்களும், செயற்கை நுண்ணறிவும் உலகை தலைகீழாக மாற்றும், அது மனித குலத்துக்கே ஆபத்தாக முடியும் என்று ஈலான் மஸ்க் (டெஸ்லா), பில் கேட்ஸ் (மைக்ரோசாப்ட்), ஸ்டீபன் ஹாக்கிங் (விஞ்ஞானி) சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் மனிதர்களுக்கு ஈடான நுண்ணறிவினைப் பெறுதல் என்பது அறிவேந்தரங்களுக்கு பல தசாம்சங்களாகும், அதைப் பற்றி இப்போதே கவலைப்படுதல் அனாவசியம் என்று அறிவேந்தரங்களை ஆதரிக்கும் ஆட்கள் சொல்கிறார்கள்.

எது எப்படியாக இருந்தாலும் பெரும்பகுதி மனிதர்களின் “வேலைகள்” என்று சொல்லப்பட்டவை மடை மாற்றப் படுகின்ற, காணாமல் போகின்ற, வெகுவாக குறைக்கப்படுகின்ற சூழலிலிருந்து நாம் தப்ப முடியாது. ஒரு வேளை, நமக்கு வேலை இல்லையென்றால் நாம் என்ன செய்வோம் ? சமூகம் எப்படி இயங்கும் ? நாம் எப்படி இந்த சூழலில் சர்வைவ் ஆவோம் ?

வேலைகள் தான் போகுமேயொழிய, வருமானமில்லாமல் இருக்கக் கூடாது என்று உலகின் பொருளாதார நிபுணர்கள், சமூகவியல் அறிஞர்கள், அரசுகளின் நிதி ஆலோசகர்கள் இப்போதே பேச ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் முன்வைப்பது “Universal Basic Income" (UBI).

மக்களுக்கு அடிப்படையான ஒரு வருமானத்தை அவர்களுக்கு வேலை இருக்கிறதோ, இல்லையோ மாதாமாதம் தருவது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்ள இது உதவலாம், இதன் மூலம் அறிவேந்திரங்களின் ஆக்ரமிப்பிலிருந்து பெரும்பகுதி மக்களைக் காக்க முடியும். ஏனென்றால் அறிவேந்திரங்களின் பயன்பாட்டினை அரசாங்கத்தால் தடுக்க முடியாது.

இது சாத்தியமா, இதன் சாதக / பாதகங்கள் என்ன அடுத்த பகுதியில் பேசுவோம்.

(அலைகள் தொடரும்.....)

இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை

அலைகள் ஒய்வதில்லை - 1
அலைகள் ஒய்வதில்லை - 2
அலைகள் ஒய்வதில்லை - 3

Labels: , , ,


Nov 1, 2016

அலைகள் ஒய்வதில்லை - பகுதி 3

"The Next Big Thing always starts out being dismissed as a “toy.” - Chris Dixon /General Partner a26z (A Multi-billion dollar Investment firm) 

20 வருடங்களுக்கு முன்பு குடிநீரை விலைக்கு வாங்கிக் குடிப்போம் என்று சொன்னப் போது சிரித்தோம். நீரையாவது, விலைக்கு வாங்குவதாவது என்று நிராகரித்தோம். ஆனால் இன்றைக்கு அது தான் யதார்த்தம். பேரலைகளின் தாக்கமென்பதும் அப்படிதான். அது ஆரம்பிக்கும் போது விளையாட்டாக, புறக்கணிக்கக் கூடியதாக தான் இருக்கும். நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிறங்கி, வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக ஆக்ரமிக்கும்.

நான்காவது பேரலையை பெரும்பாலானோர் அறிவேந்திரங்களும், (Smart Machines) பரந்தபட்ட கண்ணுக்குத் தெரியாத செயற்கை நுண்ணறிவுமான களமாகவும் (Invisible Artificial General Intelligence) இருக்குமென்று ஆருடம் சொல்கிறார்கள். உலக பொருளாதார குழுமம் (World Economic Forum) இதுவரை வந்த பேரலைகளிலேயே நான்காவது பேரலை தான் அதிவேகமாகவும், துரிதமாகவும் பரவிக் கொண்டிருக்கும் பேரலை என்று வர்ணிக்கிறார்கள்.

அப்படி என்ன தான் இந்த நான்காவது பேரலையில் இருக்கிறது ?

இதுநாள் வரையிலான பேரலைகளின் மாற்றங்கள் நேர்கோட்டில் இருந்தன. நீராவி என்ஞின்கள் உருவான காலத்தில் தண்டவாளங்கள் தேவைப்பட்டது. அதை பதிக்க மனிதர்கள் தேவைப்பட்டார்கள். அதற்கான நிலம் தேவைப்பட்டது. இவை எதுவுமே உடனடியாக நடக்கவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக நடந்தது. மின்சாரமும், பெரு உற்பத்தியும் உருவான காலத்தில் மின்சார கம்பங்கள் பதிக்க இரும்பு தேவைப்பட்டது. மனிதர்கள்; அதற்கான நிலம். மூன்றாவது பேரலையில் கணினிகளையும், செர்வர்களையும் உருவாக்கும் தொழிற்சாலைகள் தேவைப்பட்டன. மெயின்ப்ரேம் கணினிகளையும், நிறுவனங்களையும் இணைக்க பிணையங்கள் (Networking) தேவைப்பட்டன. அதற்கான வன்/மென்பொருட்களை உருவாக்கும் நிறுவனங்கள் உருவாயின. மீண்டும், மனிதர்கள், இடம், பொருள்.

ஆக கடந்த 230 வருடங்களில் உருவான எல்லாவற்றுக்கும் ஆதார காரணங்கள் மூன்று;-


2000களுக்கு பிறகு பிணையங்கள் எல்லா இடங்களுக்கும் பரவியிருந்தன. தொலைபேசி தொடர்புகள் பெரும்பாலான மூலைகளை தங்களுடைய வலைப்பின்னலுக்குள் கொண்டு வந்து விட்டன. செல்பேசிகள் எல்லோர் பாக்கெட்டுகளில் தங்கி விட்டன. கணிமை (Computing) என்பது கணினியிலிருந்து வெளியேறி, எல்லா இடங்களிலும் கண்களுக்கு தெரியாமல் இயங்க ஆரம்பித்து விட்டது.

தகவல் தொழில்நுட்ப பேரலை என்பதே இண்டெல் என்கிற ஒரு நிறுவனத்தின் செமி கண்டக்டர் தொழிலில் தான் ஆரம்பித்தது. இண்டெல் உருவாக்கிய சிப் / ப்ராசசர்கள் என்கிற வன்பொருட்கள் தான் கணினியின் ஆதார மூளையாக இருந்தது. அங்கிருந்து தான் கணினிகள் பரவலாக பயன்பாட்டுக்கு வந்தன.  வன்பொருட்களை ரிப்பேர் செய்வதை விட விலை குறைந்த வன்பொருட்களை தூக்கிப் போட்டு விட்டு, புதியதான ஸ்பேர் பார்ட்ஸ்களை இணைப்பது பெருகியது இந்த காலத்தில் தான். ஏனென்றால் மூர்ஸ் விதி^ பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த சூழலில் இன்னொன்று சத்தமே போடாமல் நடக்க ஆரம்பித்தது. Power Requirement, Form Factor and Processing Power என மூன்று முக்கியமான காரணிகளிலும் நினைத்துப் பார்க்க முடியாத முன்னேற்றங்கள் நடந்தேற ஆரம்பித்தன. அதாவது குறைந்த எரிசக்தி / சிறிய வடிவமைப்பு / அதிக செயல்திறன் என சென்சார்கள் வர ஆரம்பித்தன. பேனா கேமிரா, விரலடக்க பென் ட்ரைவ்கள் என்றெல்லாம் நாம் சொல்லும் பொருட்களுக்கு பின்னாலிருக்கும் அடிப்படை இது தான்.

வன்பொருள் என்பது வெறுமனே முன்நிறுவப்பட்ட (pre-defined, pre-programmed) டப்பா என்கிற அடிப்படையே ஆட்டம் காண ஆரம்பித்தது. வன்பொருட்கள் என்பவை தொடர்ச்சியாக தங்களை தாங்களே அப்கிரேட் செய்துக் கொள்ளக் கூடிய வலிமையுடைய, சுயமாய் தங்களை கண்காணித்துக் கொள்ளும் அல்லது தங்களுடைய சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளும் டப்பாக்களாக உருமாறின. இவை வெறும் டப்பாக்கள் அல்ல. ”அறிவு செலுத்தப்பட்ட” டப்பாக்கள்.

சின்ன உதாரணம். ஐந்து வருடங்களுக்கு முன்பு வாங்கிய போன்களில் 2ஜிபி கொள்ளளவு இருக்கலாம். அப்போது 2ஜிபியை விட அதிகமான செயற்பாடு தேவைப்படும் நிரலியை உங்கள் போன் ஏற்றுக் கொள்ளாது. அதை நிறுவ வேண்டுமெனில் நீங்கள் போனை மாற்ற வேண்டும். ஆனால், ஒரு மென்பொருளின் மூலம் உங்களுடைய 2ஜிபி, 4ஜிபி/40ஜிபி/400ஜிபியாகவோ மாறிவிட்டால் என்ன செய்வீர்கள் ? இதை தான் இந்த அறிவு செலுத்தப்பட்ட சிப்கள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் எல்லா மின் உபகரணங்களிலும் இந்த மாதிரியான சிப்கள் ஏராளமாய் இருக்கின்றன.

இந்த “அறிவினை” செலுத்தியது மென்பொருட்கள். மெதுவாய் மென்பொருள், வன்பொருட்களை விழுங்க ஆரம்பித்தன. Software started eating Hardware and moved everything into "Software Defined Hardware" not hardware powered software. இந்த ரிவர்சல் தொழில்நுட்ப அபாரம். எளிமையாய் சொன்னால், உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் என்பது வெற்று எலக்ட்ரானிக்ஸ் டப்பா. விஷயம் டப்பாவில் உள்ளிருக்கும் ஆண்ட்ராய்ட் செயலியிலும் அதற்கு தோதாக வடிவமைக்கப்பட்ட அறிவூட்டப்பட்ட சிப்புகளிலும் இருக்கிறது.

அறிவூட்டப்பட்ட சிப்கள், அதை தொடர்ச்சியாய் மேம்படுத்தும் மென்பொருட்கள், இது ஒரு சுழற்சி. மென்பொருள் சிப்பினை அறிவூட்டும். அறிவூட்டப்பட்ட சிப்கள் மேலும் அபாரமாய் டப்பாவிற்குள் இருக்கும் மென்பொருட்களை இயக்கும். இது தான் நான்காவது பேரலையின் பிள்ளையார் சுழி.

இதுநாள் வரை மனிதகுலம் பார்க்காத சாத்தியங்களை இது உருவாக்கியிருக்கிறது. பிசிகல் கட்டமைப்புகள் தேவையில்லை. இருப்பதை வைத்துக் கொண்டே அதன் சாத்தியங்களை பல மடங்காகப் பெருக்கி, ஏகப்பட்ட விஷயங்களை சாதிக்க முடியும். இவையனைத்தும் டிஜிட்டலாக பயணிக்கும், ஆகவே இயற்கை வளங்களின் தேவையோ, பிசிகல் பொருட்களோ தேவையில்லை. அலைக்கற்றை மூச்சுக்காற்றைப் போல எல்லாவற்றையும் இயக்கும். இதற்கு முன் நடந்த பேரலைகளில் நீராவி என்ஞின், பெரு உற்பத்தி, கணினி என்று குறிப்பிட்டு சொல்வது போல நான்காவது பேரலையில் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தையோ, சாத்தியத்தையோ சொல்ல முடியாது.    3டி பிரிண்டிங், ட்ரோன்கள், பொருட்களின் இணையம் என்று சொல்லப்படும் எல்லா இயற்பியல் பொருட்களையும் இணையத்தோடு இணைக்கும் Internet of Things (IoT), மெய்நிகர் / மேல்நிகர் (Virtual / Augmented Reality) உலகங்கள், பெரும் டேட்டா, அதை துண்டு துண்டாக கூறுப் போட்டு எல்லாவற்றையும் கணிக்க சாத்தியமுள்ள அறிவேந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு என பலவாக இதை பிரிக்க முடியும். இதில் நான் கவனிப்பது 3டி ப்ரிண்டிங்.

நான் உங்களுக்கு மின்னஞ்சலில் ஒரு கோப்பினை அனுப்புகிறேன். அதை உங்களுடைய வீட்டில் இருந்தப்படியே ப்ரிண்டரில்  ப்ரிண்ட் அவுட் எடுக்கலாம்.  இது சாத்தியப்படும் வரை நாம் என்ன செய்தோம் ?

நான் உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும். இதில் எழுதுதல் என்கிற திறன் முக்கியம். பேப்பர் தேவை. இதை வாங்க வேண்டும். இதை ஒரு அஞ்சல் பெட்டியில் போட வேண்டும். அதற்கு நீங்கள் நடக்க வேண்டும். அஞ்சல் பெட்டி தான் கலெக்‌ஷன் சென்டர். அங்கிருந்து ஒரு தபால்காரர் அதை சேகரித்து அஞ்சலகத்துக்கு கொண்டு செல்வார். அங்கே எல்லாவற்றையும் கொட்டி பின்கோட் வாரியாக பிரிப்பார்கள். பின்பு அவை அந்தந்த பின்கோட் இருக்கும் பைக்குள் செல்லும். அங்கிருந்து வாகனத்தில் பின்கோட் இருக்கும் ஊரினை வந்தடையும். திரும்பவும் அதே பிரித்தெடுத்தல், சேகரித்தல், உங்கள் முகவரிப் பார்த்து தபால்காரர் கொண்டு வந்து வீட்டில் கொடுக்கும் வரை பணிகள். இருவருக்கு இடையேயான தொடர்பு என்பது மின்னஞ்சல் வரும் வரை இப்படியாக தான் இருந்தது. மின்னஞ்சல் வந்த நாளில் இது ஒரேயடியாக மாறிப் போனது.

Sent தட்டிய அடுத்த நிமிடத்தில் உலகில் எங்கு இருந்தாலும் உங்களுக்கு வந்தடையும். பேப்பர் தேவையில்லை, அஞ்சல் பெட்டி கிடையாது, நடக்கத் தேவையில்லை, பிரிக்கவோ, சேர்க்கவோ, பின்கோடுக்காக வாகனத்தில் பயணிக்கவோ, வீட்டு முகவரிக்கு வந்தடையவோ என எந்த செயல்களும் தேவையில்லை. பேப்பரில் படிக்க வேண்டுமென்றால் ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொள்வீர்கள். அதாவது பேப்பரை நான் வாங்கி உங்களுக்கு அனுப்பியதிலிருந்து, உங்களுக்கு தேவையென்றால் நீங்கள் பேப்பர் வாங்கி எடுத்துக் கொள்வீர்கள். இந்த எளிமையும், சுலபமாவும், பேப்பரின் கொள்முதல் மாற்றமும் தான் முக்கியம்.

இப்படி யோசிப்போம். மின்னஞ்சலில் கோப்பு அனுப்புகிறேன். அது ஒரு டபரா செட். ப்ரிண்டரின் செட்டிங்ஸ் பொறுத்து ப்ளாஸ்டிக்கிலோ, செராமிக்கிலோ, பீங்கானிலோ உங்களால் ப்ரிண்ட் அவுட் எடுக்க முடியுமென்றால்  என்ன செய்வீர்கள் ? இது தான் 3டி ப்ரிண்டிங். கேட்க காமெடியாக, சிரிப்பாக இருக்கிறது இல்லையா.....

இன்னும் கொஞ்ச காலம். இது நடக்கும். பரவலாக மாறும். விலைகள் தாறுமாறாக கீழிறங்கி நீக்கமற நிரம்பும். அடுத்த 10 - 20 வருடங்களில் அது நடக்கும். அது நடக்கும் பட்சத்தில், தொழிற்சாலைகள் என்பவை வெவ்வேறு 3டி ப்ரிண்டர்களின் தொகுப்பு மட்டுமே. இன்றைக்கு டேட்டா சென்டர்களில் (கோப்புகள், படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள், இணைப்பு பிணையங்கள்) எப்படி எல்லாவிதமான டேட்டா தொகுப்புகளும் இருக்கிறதோ அதேப் போல தொழிற்சாலைகளும் மாறலாம்.

தொழிற்சாலைகள் = அறிவேந்திரங்களின் கிடங்குகள்; இங்கே மனிதர்கள் தேவையில்லை. அறிவேந்திரங்களோ, அல்லது செயற்கை நுண்ணறிவும், பிணையங்களால் இணைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவோடு கூடிய அறிவேந்திரங்களின் சேர்க்கையோ இதைப் பார்த்துக் கொள்ளும். நாம் ‘திறன்’ ‘திறமை’ ‘அனுபவம்’ ‘வேலை வாய்ப்பு திறன் பயிற்சி’ என்றெல்லாம் இன்றைக்கு விவாதித்துக் கொண்டிருக்கும் எதுவுமே தேவையில்லை.
அறிவேந்திரம் 1 > கதவினை ப்ரிண்ட் செய்துக் கொண்டிருக்கிறது; அது 70% முடியும் போது,
அறிவேந்திரம் 2 > கைப்பிடியை ப்ரிண்ட் செய்ய ஆரம்பிக்கட்டும்; அது 80% முடியும் போது,
அவையிரண்டையும் இணைத்து கண்ணாடியைப் பொருத்தி, ரப்பரினை சுற்றிலும் பதிக்கும் அறிவேந்திரம் 3 தன்னுடைய வேலையை தயார் செய்துக் கொள்ளட்டும்.
அறிவேந்திரம் 4 இதற்கான அடுத்த வேலைக்கு தயாராக இருக்கட்டும். அல்லது இவையனைத்தும் தொடர்ச்சியாக கூட தங்களின் வேலைகளைப் பார்க்கலாம். 
இது அறிபுனை கதையோ, நம் வாழ்நாளில் நடக்க போகும் சாத்தியமில்லாத எதிர்கால புரூடாவோ கிடையாது. இது இப்போதே நடக்க ஆரம்பித்து விட்டது. ஆப்பிள் ஐபோன்களை மொத்தமாக தயாரிக்கும் சீன ஃபாக்ஸ்கான் நிறுவனம், சீனாவில் தன்னுடைய தொழிற்சாலையை அறிவேந்திரங்களின் கூடமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. 1,10,000 பேர் வேலைப் பார்த்த இடத்தில் இன்றைக்கு வெறும் 50,000 பேர்கள் தான் வேலைப் பார்க்கிறர்கள். (மே 25, 2016) எதிர்காலத்தில் இந்த 50,000 ஐந்தாயிரமாக கூட மாறலாம்.

ஒரு பொருளின் இடுபொருளிலிருந்து மனித உழைப்பினைக் கழித்து விட்டால் அது வெறுமனே இயற்கையில் கிடைக்கின்ற வெற்று இடுபொருள் என்று ‘பேராண்மை’யில் ஜனநாதன் கம்யூனிசம் பேசியிருப்பார். மனித உழைப்பேத் தேவையில்லை என்கிறப் பட்சத்தில் இடதுசாரி சிந்தாந்தங்களும், தொழிற்சங்கங்களும், சிகப்புக் கொடிகளும் என்னவாகும் ?

நான்காவது பேரா-வை மீண்டும் படியுங்கள். மூன்று பேரலைகளிலும் தேவைப்பட்ட இயற்கை இடுபொருள், மனித உழைப்பு, சூழல் நான்காவதில் இல்லை. இருந்த இடத்திலிருந்து, இருக்கும் சூழலிலிருந்து இவற்றால் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும். மாற்ற முடியும். கண்ணுக்கு தெரியாத, சாதாரண மனிதர்களுக்கு புரியவே புரியாத அல்காரிதம்களும், கணிதவியல் கோட்பாடுகளும், செயற்கை நுண்ணறிவும் பெரும்பாலான ‘வேலைகளை’ செய்யக் கூடிய ஜீபூம்பா பூதங்களாக விஸ்வரூபமெடுத்தால், நாம் அதற்கு முன் எப்படி நிற்போம் ? ஒரு மென்பொருள் மாற்றத்தில் அறிவேந்திரங்கள் தங்களை தாங்களே அப்கிரேட் செய்துக் கொள்ள முடியும். இந்த அறிவேந்திரங்களையும், நுண்ணறிவையும் உருவாக்கும் 10+ நிறுவனங்களின் காலடியில் உலகமே காலனியாய் மாறும் சாத்தியங்கள் இருக்கிறது.

திறன், திறமை, பயிற்சி என்பதெல்லாம் ஒரே ஒரு Over-The-Air update. ஒரே ஒரு ரீஸ்டார்ட்டில் இவையனைத்தும் நடந்தால்ல் நாமென்ன செய்வோம் ? இந்த வேலைகள் மனிதர்களுக்கு திரும்பும் என்று நினைப்பது பகல் கனவு. This is irreversible. இன்னும் நாம் நமக்கு அவுட்சோர்ஸிங்கில், தொழிற்சாலைகளில், பிபிஓ சேவைகளில் ஏராளமான வேலைகள் இருக்கிறது என்று மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் நாம் போண்டியாக வேண்டியது தான்.

உலகம் நாம் நம்பிக் கொண்டிருக்கும் வேகத்தினை விட அதிவேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது தான், இது நாள் வரை நாம் பார்த்தவைகளை விட மிக அதிகமான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய பேரலை. இதை எப்படி எதிர்க் கொண்டு சமாளிக்கப் போகிறோம் ?

இதன் ஆழமும், அகலமும் உலகளாவிய தமிழ் சமூகத்தின் அரசியல், ஊடக, கல்வி, பொருளாதார ஆளுமைகளுக்கு புரியவில்லை என்பது தான் பேரவலம். இவை எவற்றையெல்லாம் கொல்லும், எப்படி வேலைகள் பறி போகும், எப்படியெல்லாம் இது சமூக, பொருளாதார, வாழ்வியல், உளவியல், மனநல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை தான் நாம் தீவிரமாக பேசு வேண்டும். அடுத்தடுத்த பகுதிகளில் ஒவ்வொன்றாய் பேச ஆரம்பிப்போம்.

(அலைகள் தொடரும்.....)

இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை

அலைகள் ஒய்வதில்லை - 1
அலைகள் ஒய்வதில்லை - 2

படம்: ShutterStock-லிருந்து எடுத்து “திருத்தப்பட்டது”

^ மூர்ஸ் விதி (Moore's Law) - இண்டெலின் நிறுவனர்களில் ஒருவரான கார்டன் மூர் சொன்ன கணிப்பு. ஒரு சிப் சர்க்குயூட்டில் நிரப்பப்படும் ட்ரான்சிஸ்டர்கள், ஒவ்வொரு 18 - 24 மாதங்களில் இரட்டிப்பாகும். அதாவது குறைவான வடிவமைப்பிற்குள் அதிக சக்தி வாய்ந்த சாத்தியங்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களிலும் இரண்டு மடங்காக உயரும், விலை குறையும்.

Labels: , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]