Nov 12, 2016

அலைகள் ஒய்வதில்லை - பகுதி 4

”Most people are like frogs, inside the slow boiling water. They neither acknowledge that their environment is changing nor make any efforts to understand it. When the water hits the boiling threshold, the frogs can't jump out, but submerge & die. So are the people, who are not seeing the "Change" coming" - From "The Boiling Frog Syndrome"

இதற்கு முன்பான பேரலைகளிலும் இதேப் போல வேலைகள் மொத்தமாக போகும் என்கிற பயமுறுத்தல்கள் எழுந்தது. ஆனால் நிகழ்ந்தது என்ன ? அதிகமான வேலைகள் உருவாகி இருக்கின்றன. அப்படி தான் நான்காவது பேரலையும் இருக்கும், இந்த பயங்காட்டல்கள் தேவையற்றது என்கிற வாதத்தினை வைக்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.

முதலில் ‘வேலைகள்’ என்றால் என்ன என்பதை உணர்ந்தாலேயொழிய எந்தெந்த வேலைகள் நிற்கும், எந்த வேலைகள் போகும் என்பதை சொல்ல முடியாது. மேலும், “வேலைகள்” என்பது வெறுமனே உழைப்பு, திறமை, மூளை என்பதால் வருவது மட்டுமல்ல. அது மனிதர்களின் வாழ்நாளில் முக்கியமான அங்கம். சராசரியாக 20 - 65 வயது வரை மனிதர்கள் தாங்கள் செய்யும் வேலையால் தான் அறியப்படுகிறார்கள். இந்த காலக்கட்டத்தில் விழித்திருக்கும் நேரத்தின் பெரும்பகுதி வேலையில் தான் கழியும்.

“வேலைகள்” என்பது மனிதர்களுக்கு பணமீட்டும் முறை மட்டுமல்ல, அதில் அவர்களின் உளவியல் ரீதியான பெருமிதமும், சுயகவுரவமும், தன்மானமும், மதிப்பும், சமூக அங்கீகாரமும் அடங்கியிருக்கிறது. ஆக “வேலையில்லை” என்பது வெறும் பணமிழப்பு மட்டுமே கிடையாது. அதை தாண்டி ஏராளமான கூறுகள் ஒருவரின் வேலையிழப்பின் போது விஸ்வரூபமெடுக்கும். இதனாலேயே நான்காவது பேரலையின் “வேலை மாற்றங்கள்” பற்றி ஏராளமான விவாதங்கள் உலகங்கெங்கிலும் எழுந்துக் கொண்டிருக்கின்றன.

+++++

மனித வாழ்வின் வேலைகள் என்பவை ஆரம்பத்தில் முழுமையான உடல் உழைப்பு, பின்பு உடல் + மூளை சார் உழைப்பு, 20-நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான முழு மூளை சார் உழைப்பு என பிரிய ஆரம்பித்தன. மூன்றுமே “வேலைகள்” தான் என்றாலும், இந்த வேலைகளுக்கான தேவைகள், திறன்கள், பயிற்சிகள், வாய்ப்புகள் வெவ்வேறாக இருந்தது. இன்றைக்கும் இந்த மூன்று விதமான “வேலைகளை” எல்லா இடங்களிலும் பார்க்க முடியும். இவை மூன்றின் பயன்பாடுகளும் மாறுப்பட்டவை.

ஒரு  உதாரணத்திற்கு முனுசாமி என்கிற கட்டிடத் தொழிலாளி, மோகன் என்கிற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மேனேஜர், விவேக் என்கிற தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் சீனியர் எண்டர்பிரைஸ் சிஸ்டம்ஸ் ஹெட் என்று மேலே சொன்ன மூன்று வேலைகளையும் செய்யும் முப்பிரிவாக இவற்றைப் பிரிப்போம்.

முனுசாமி இந்த வேலையை 20 வருடங்களுக்கு மேலாக செய்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கல் உடைத்து கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி இன்றைக்கு அவர் தான் கான்கீரிட் கலவை செய்வதை மேற்பார்வை செய்துக் கொண்டிருக்கிறார்.

மோகன் சேல்ஸ் ரெப்பாக வாழ்க்கையை ஆரம்பித்து, முட்டி மோதி, மேலே வந்து இன்றைக்கு ஒரு தனியார் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மேனேஜராக இருக்கிறார். என்ன சரக்கு, எங்கிருந்து வந்தது, எங்கேப் போக வேண்டும், அதற்கான பயணத் திட்டங்கள் என்ன, எது நிறுவனத்துக்கு பயனளிக்கும், எது வாடிக்கையாளரை திருப்திப் படுத்தும், யார் எதை எங்கே கொண்டுப் போய் கொடுப்பார்கள் என்கிற அனைத்தையும் கவனிப்பது தான் அவருடையப் பணி. தமிழ்நாடு முழுக்க சுற்ற வேண்டிய கூடுதல் பணிச்சுமையும் மோகனுக்கு உண்டு.

விவேக் இந்தியாவின் டாப் 10 பொறியியல் கல்லூரியிலிருந்து கேம்பஸில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து, ஐந்தாண்டுகளில் உயர்ந்து, இன்றைக்கு ஒரு பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி புரிகிறார். அந்த நிறுவனம் உலகமெங்கும் கடைப் பரப்பியிருக்கிறது. அதன் டேட்டா சென்டர்கள், அது கிளைப் பரப்பும் நிறுவனத்தின் கிடங்குகள், லாஜிஸ்டிக்குகள், டேட்டா சென்டர்களின் பின்னிருக்கும் எனர்ஜி (மின்சாரம், வெப்பம் அதிகமானால் குறைக்க தண்ணீர், அதை மறுசுழற்சி) தேவைகள், அதற்கான இடுபொருட்கள் என எல்லாவற்றையும் நிர்வகிக்கின்ற வேலை. அமர்ந்திருப்பது பெங்களூராய் இருந்தாலும் நிர்வகிப்பது இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூர்.

அறிவேந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த இந்த நான்காவது பேரலை இந்த மூவரின் “வேலைகளையும்” என்ன செய்யும் என்று பார்ப்போம் ?

முனுசாமியும், உடல் உழைப்பு சார் வேலைகளும்

முனுசாமியின் வேலைக்கு தேவை - தொழிலாளிகள், சின்ன சின்ன இயந்திரங்கள், நாள் முழுக்க வேலை. இதில் செங்கலை இடிக்க க்ரஷர்கள் ஏற்கனவே இருக்கின்றன. கான்கீரிட் கலப்பது, செண்ட்ரிக் வேலை செய்யும் போது போடுவது போன்றவை தான் முக்கியமான பணிகள். இதில் இதுநாள் வரை கான்கீரிட் கலப்பது என்பது மனிதர்கள் செய்த பணியாக இருந்தது. இப்போது டீசலில் இயங்கும் கான்கீரிட் மிக்ஸர்கள் வந்து விட்டன. கூடவே, கான்க்ரீட் மிக்ஸ்கள் என்று சொல்லப்படும் ப்ரீ மிக்ஸ்டு கான்க்ரீட் வந்து விட்டது.

Pre-fabrication என்கிறத் துறை வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டிடத்திற்கு தேவையான கட்டமைப்பினை தொழிற்கூடங்களில் உருவாக்கி, அவற்றை தேவைப்பட்ட இடங்களில் கொண்டு வந்து அடுக்கினால் கட்டிடம் எழும்ப ஆரம்பிக்கும். சென்னை மெட்ரோவின் பெரும்பகுதி இப்படி தான் உருவானது. ஆக ஒரு காலத்தில் முனுசாமியின் கீழ் நிறைய சித்தாள்கள், பெரியாட்கள், மேஸ்திரிகள் வேலைப் பார்த்திருக்கலாம். இன்றைக்கு அவர்கள் தேவையில்லை. இயந்திரங்களே எல்லா டிசைன்களையும் அதன் இயற்பியல், புவியியல், மண் சார்ந்த பிடிப்புகள், ஜாயிண்டுகளை விரிவாக அலச ஆரம்பித்து விட்டன. முனுசாமியின் வேலை என்பது இன்றைக்கு இயந்திரங்களையும், ஆபரேட்டர்களையும் வாடகைக்கு எடுப்பதோடு முடிகிறது.

முனுசாமியின் 20 வருட அனுபவம் என்பது மாறி வரும் கட்டுமானத் தொழிலில் பெரிய அளவுக்கு தேவை இருக்காது. அவருடைய அனுபவம் என்பது, இத்தனை வருட சர்வீஸ் அதனால் சரியாக மேற்பார்வைப் பார்ப்பார் என்பதோடு நிற்கிறது.

மோகனும், மூளை + உடல் உழைப்புசார் வேலைகளும்

மோகன் ஒரு காலத்தில் எல்லா பணிகளையும் ஆட்களைக் கொண்டு செய்ய வேண்டியதாக இருந்தது. ஆனால் இன்றைக்கு sortingங்கிற்கு ரோப்போக்கள் சல்லிசாக கிடைக்கின்றன. சென்சார்கள் எவை எந்த இடத்தில், எந்த சூழலில், எந்த தட்பவெப்ப நிலையில், எந்த வண்டியில் போய் கொண்டிருக்கின்றன என துல்லியமாக ரியல் டைமில் தகவல்கள் சொல்கின்றன. எந்த பாதையில் சென்றால் குறைவான செக் போஸ்ட்கள் இருக்கும் என்று கூகிள் மேப்பும், செறிவூட்டப்பட நுண்ணறிவும் சொல்கிறது. எந்த ட்ரைவர் எந்த வண்டியை எந்தெந்த சரக்குகளோடு தற்போது எங்கேப் போய்க் கொண்டிருக்கிறார் என்பது வரைக்கும் ஒரு தட்டு தட்டினால் வருகிறது. வாடிக்கையாளரின் அலுவலகத்துக்கு சரக்குகள் போய் சேர்ந்ததா இல்லையா என்பதை டெலிவரி பாய் சொல்வதற்கு முன்னால், வாடிக்கையாளர் கையெழுத்திட்ட கைப்பேசி சொல்லி விடுகிறது.

இன்றைக்கு மோகன் வெறுமனே சிஸ்டத்தின் முன் உட்கார்ந்து எங்கே சிக்கல் எழுகிறதோ, அதை தீர்க்க வேண்டியதை மட்டும் தான் செய்கிறார். பார்வையாளாராக மட்டுமே சுருக்கப்பட்டது தான் மோகனின் வேலை. From full-fledged operations, he is just an observer today. 

விவேக்கும், மூளைசார் வேலைகளும்

விவேக் மேலே சொன்ன இரண்டு வேலைகளை விட அதிகமான மூளைசார் வேலைகளை செய்து வந்தவர். ஆனால் மேலே சொன்ன இரண்டு பேரையும் விட அதிக ஆபத்தில் இருப்பது விவேக் தான். விவேக் மாதிரியான புத்திசாலியான, ஸ்மார்ட்டான இளைஞர்கள் தான் அறிவேந்திரங்களை உருவாக்கினார்கள். தங்களுடைய வேலைகளை சுலபமாக அறிவேந்திரங்களுக்கு பயிற்சி அளித்தார்கள். இன்றைக்கு விவேக் செய்யும் எல்லாவற்றையும் அறிவேந்தரங்களே செய்யுமளவிற்கு தொழில்நுட்பத் துறைக்கு தேவைப்படும் “தொழில்நுட்பங்களை” நிர்வகிக்கும் அறிவேந்திரங்கள் வந்து விட்டன.

கடைநிலை ஊழியனின் வேலையை காலி செய்வதை விட உயர்நிலையில் இருக்கும் ஆட்களின் வேலையை காலி செய்யும் அறிவேந்திரங்கள் தான் நான்காவது பேரலையின் ஆரம்பம். இந்த அறிவேந்திரங்களை உருவாக்கியவர்கள், விவேக் மாதிரியான அறிவுசார் வேலையாட்கள் தான்.

இன்றைக்கு அமெரிக்காவில் பங்குச்சந்தை, நிதி, முதலீட்டு துறைகளில் அறிவேந்திரங்கள் சொல்வதை மனிதர்கள் கேட்கிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பு இந்த துறைகளில் இயந்திரங்கள் தேவை என்று மனிதர்கள் அறிவேந்திரங்களை உருவாக்கினார்கள். இன்றைக்கு ரோல் ரிவர்ஸ் ஆகி இருக்கிறது.

விவேக் இனி பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையில்லை, ஏனெனில் எவையெல்லாம் கவனிக்கப் பட வேண்டுமோ, அவை அத்தனையையும் கவனிக்க நிரலிகளும், செயலிகளும், அறிவேந்திரங்களும் இருக்கின்றன.

எந்தெந்த வேலைகள் மனிதர்களிமிருந்து பறிக்கப்படும் சாத்தியங்கள் இருக்கிறது ?




Source Image: Business Insider

மனிதர்களின் திறன், நுட்பம், பயிற்சி, தொடர்ச்சி, சக மனிதர்களோடு இணக்கம், அனுபவம் என நாம் சொன்ன பலவற்றில் முக்கால்வாசி இப்போதே திறமையான அறிவேந்திரங்களில் இருக்கிறது. இன்னும் நிறைய நியுரல் மாடல்கள் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அவை இதுநாள் வரை நாம் செய்ததின் மொத்த அனுபவத்தையும் சாப்ட்வேர் ப்ரோக்ராம்களாக கூடிய சீக்கிரத்தில் உருவாக்கி, உள்வாங்க ஆரம்பித்து விடும். எவையெல்லாம் சாத்தியமில்லை என்று நாம் 20 - 25 வருடங்களுக்கு முன்பு சொன்னோமோ, அவற்றில் பல சாத்தியமாகும் எல்லைகளுக்குள் வர ஆரம்பித்து விட்டது.

மூன்று பேரலைகளிலும் மனிதர்கள் இயந்திரங்களை augment செய்தார்கள். இயந்திரங்கள் எப்படி, எங்கே, எப்போது இயங்க வேண்டுமென்பதை அவர்கள் முடிவெடுத்தார்கள். இந்த திறன்கள் இருந்த மனிதர்களுக்கு வேலையும், மதிப்புமிருந்தது.

நான்காவது பேரலையில் இந்த அடிப்படையே ஆட்டம் காண்கிறது. முடிவுகளை அறிவேந்திரங்கள் எடுக்கின்றன. அவற்றினை மனிதர்கள் சரியா/தவறா என்றளவில் மட்டுமே verify செய்ய பயன்படுத்தப் படுவார்கள்.

இனி அறிவேந்திரங்கள் மனிதர்களை augment செய்யும்.

++++

அறிவேந்திரங்களும், செயற்கை நுண்ணறிவும் உலகை தலைகீழாக மாற்றும், அது மனித குலத்துக்கே ஆபத்தாக முடியும் என்று ஈலான் மஸ்க் (டெஸ்லா), பில் கேட்ஸ் (மைக்ரோசாப்ட்), ஸ்டீபன் ஹாக்கிங் (விஞ்ஞானி) சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் மனிதர்களுக்கு ஈடான நுண்ணறிவினைப் பெறுதல் என்பது அறிவேந்தரங்களுக்கு பல தசாம்சங்களாகும், அதைப் பற்றி இப்போதே கவலைப்படுதல் அனாவசியம் என்று அறிவேந்தரங்களை ஆதரிக்கும் ஆட்கள் சொல்கிறார்கள்.

எது எப்படியாக இருந்தாலும் பெரும்பகுதி மனிதர்களின் “வேலைகள்” என்று சொல்லப்பட்டவை மடை மாற்றப் படுகின்ற, காணாமல் போகின்ற, வெகுவாக குறைக்கப்படுகின்ற சூழலிலிருந்து நாம் தப்ப முடியாது. ஒரு வேளை, நமக்கு வேலை இல்லையென்றால் நாம் என்ன செய்வோம் ? சமூகம் எப்படி இயங்கும் ? நாம் எப்படி இந்த சூழலில் சர்வைவ் ஆவோம் ?

வேலைகள் தான் போகுமேயொழிய, வருமானமில்லாமல் இருக்கக் கூடாது என்று உலகின் பொருளாதார நிபுணர்கள், சமூகவியல் அறிஞர்கள், அரசுகளின் நிதி ஆலோசகர்கள் இப்போதே பேச ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் முன்வைப்பது “Universal Basic Income" (UBI).

மக்களுக்கு அடிப்படையான ஒரு வருமானத்தை அவர்களுக்கு வேலை இருக்கிறதோ, இல்லையோ மாதாமாதம் தருவது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்ள இது உதவலாம், இதன் மூலம் அறிவேந்திரங்களின் ஆக்ரமிப்பிலிருந்து பெரும்பகுதி மக்களைக் காக்க முடியும். ஏனென்றால் அறிவேந்திரங்களின் பயன்பாட்டினை அரசாங்கத்தால் தடுக்க முடியாது.

இது சாத்தியமா, இதன் சாதக / பாதகங்கள் என்ன அடுத்த பகுதியில் பேசுவோம்.

(அலைகள் தொடரும்.....)

இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை

அலைகள் ஒய்வதில்லை - 1
அலைகள் ஒய்வதில்லை - 2
அலைகள் ஒய்வதில்லை - 3

Labels: , , ,


Comments:
மற்ற மாநிலங்களில் உள்ள நடைமுறை விசயங்களை குறிப்பாக சமூகம் சார்ந்த அடிப்படைச் சிந்தனைகள் குறித்து எனக்கு முழுமையான புரிதல் இல்லை. ஊடகங்கள் சொல்லியுள்ள பொதுப்புத்தி என்கிற ரீதியில் என் பார்வை உள்ளது. குறிப்பாக திருப்பூரில் வந்து பணிபுரிகின்ற மற்ற மாநில மக்களை வைத்து ஓரளவுக்கு யூகிக்க முடிகின்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த 25 வருடங்களில் நான் பார்த்தது பழகியது யோசித்தது என்கிற வகையில் சில கேள்விகள் எனக்குள் எப்போதும் எழுகின்றது.

ஒரு மாற்றத்திற்கு பயிற்சி முயற்சி தேவை. ஆனால் இங்கே பயிற்சி என்பதே இல்லை. அது எந்தத்தளத்தில் நடைபெறவே இல்லை.

முயற்சி என்பது அங்கங்கே நடைபெறுகின்றது. ஆனால் பல்வேறு காரணிகளால் கழுவேற்றப்பட்டு முயற்சி செய்பவர்களை சோர்வையடைச்செய்யும் தன்மை தான் இங்கே நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது,

விவசாயம் குறித்து சொல்லும் போதெல்லாம நடைமுறை விசயங்கள் விவசாயிகளின் வாழ்க்கை முறைகளைப் பார்க்கும் போது அவர்களால் மாறவே முடியாத பல்வேறு கலாச்சார, சாதி சார்ந்த சிக்கல்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து உள்ளது என்பதனை தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது. நிச்சயம் இன்னும் பத்து அல்லது இருபது வருடங்கள் ஆனால் இந்த மக்கள் புது முயற்சிகளுக்கு மாறவே முடியாத அளவிற்கு அவர்களின் சிந்தனைகளில் ஆழமான கலாச்சாரம் என்ற பெயரில் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். நாம் ஏமாற்றப்படுகின்றோம் என்று தெரிந்தும் அவர்களால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாத இக்கட்டில் தவிக்கின்றார்கள் என்பதனை கண்கூடாக பார்க்கின்றேன். எப்படி மாறுதல் உருவாகப் போகின்றது என்பதனை பலவிதமாக யோசித்த போதும் என்னால் யோசிக்கவே முடியவில்லை.

இது குறித்த எண்ணங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்க. தெளிவை உருவாக்கவும்.

மயக்கம், கவர்ச்சி, ஏமாற்றப்படுகின்றோம் என்று தெரிந்தே ஏமாறுதல், சுயபெருமை, தன்னை விட அடுத்தவனை அதிகம் கவனித்தல் போன்ற பல காரணிகள் தமிழ்நாட்டின் வளர்சசியை தள்ளிப் போட்டுக் கொண்டே போகின்றதோ என்று யோசிப்பதுண்டு.

இது தான் கடைசி வரைக்கும் (அரசியல்) வந்துள்ளது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]



Links to this post:

Create a Link



<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]