Nov 16, 2016

அலைகள் ஒய்வதில்லை - பகுதி 5

”Leave the robots alone. The robots will keep getting better, but focus on education, people knowing each other, caring for each other. Caring for the advancement of society.” - Manuela Veloso, Carnegie Mellon University

+++++

இதுநாள் வரை “வேலை இல்லை” என்பதற்கான காரணம் ஒரு குறிப்பிட்டத் துறையில் ஒரளவுக்கு மேல் உற்பத்தியோ, தேவையோ இருக்காது. உற்பத்தியும், தேவையும் குறைவாக இருந்தப் போது அதை உருவாக்க வேண்டிய ஆட்களும், இயந்திரங்களுமே கூட குறைவாக தேவைப்பட்டார்கள். 60/70/80களில் ‘எம்பாயிமெண்ட் அலுவலகத்தில்’ பதிவு செய்துக் கொண்டு ஒய்வு பெறும்போது வேலை இருக்கிறதென்று வந்த நேர்காணல் தபால் கார்டுகள் அதிகம். அரசு, தனியார், சுயதொழில், சிறு வேலைகள் என எல்லாவற்றுக்குமான தேவைகள் மிகக் குறைவாக இருந்தது, அதனால் இந்தியா ‘வேலையில்லாத திண்டாட்டத்தின்’ கீழ் சுழன்றது.

இதற்கான ஆதார காரணம் ஒரு காலத்தில் நாம் பற்றாக்குறை உலகில் வாழ்ந்துக் கொண்டிருந்தோம்; லைசன்ஸ் ராஜ்களின் கீழ் குறிப்பிட்ட அளவு தான் உற்பத்தியுமே செய்ய முடிந்தது. தேவைகள் குறைவான, உற்பத்தி குறைவான, பலவற்றுக்கும் ரேஷனை அணுகி வாழ்ந்த ஒரு நாடு, உலகமயமாக்கலுக்குப் பிறகான சூழலில் இவை எல்லாவற்றையும் உடைத்தது.

உரிமங்கள் இலகுவாக கிடைத்தன. உற்பத்தி பெருகியது. தேவைகள் அதிகரித்தது. நகரங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்காகவும், ஐ.டி துறையின் தலைநகரமாகவும் கொண்டாப்படும் பெங்களூரின் வளர்ச்சி என்பது கடந்த 30 வருடங்கள் மட்டுமே. இந்த மாற்றம் இங்கு மட்டுமில்லாமல் உலகமெங்கும் நிகழ்ந்தது. இந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், அதனூடாகவே உருவான நான்காம் பேரலையும் இதுநாள் வரை நாம் உருவாக்கி வைத்திருந்த கற்பிதங்களை உடைத்தது. உற்பத்தி பெருக்கெமென்பது வெறுமனே சில விழுக்காடுகளில் முன்னேறாமல், பல நூறு விழுக்காடுகளில் புலிப்பாய்ச்சலாய் எழுந்தது. விளைவு நாம் பற்றாக்குறையிலிருந்து (scarcity), மிகுதியான (surplus) உலகிற்குள் நுழைய ஆரம்பித்தோம்.

Scarcity to Surplus Economy

அரிசி உணவென்பது தீபாவளிக்கும், பொங்கலுக்கும் என்பது போய் எல்லார் வீட்டிலும் அரிசி உணவு வந்து விட்டது. இறைச்சி உண்பது என்பது விசேஷங்களில் மட்டுமே என்றில்லாமல், பிரியாணிக் கடைகளில் தினமும் கூட்டம் நிரம்பி வருகிறது. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மாதத்துக்கு ஒரு முறை கடிதம் எழுதியவர்கள், இப்போது எந்நேரமும் வாட்ஸாப்பிலோ, குறுஞ்செய்தியிலோ தொடர்ப்பில் இருக்கிறோம். ஊருக்கு போவது என்பதை பல மாதங்களுக்கும் முன்பே திட்டமிட்ட காலங்கள் போய், வாரக் கடைசியில் பெங்களூர் - சென்னை நெடுஞ்சாலை ட்ராப்பிக்கில் பிதுங்குகிறது. பண்டிகைகளுக்கு மட்டும் புதுத் துணியும், பலகாரங்களும் உண்ட நாம் இப்போது தள்ளுபடிப் போட்டால் துணி எடுக்கிறோம். அடையார் ஆனந்த பவனிலோ, கிருஷ்ண ஸ்வீட்டிலோ, அன்னபூர்ணாவிலோ உண்கிறோம்.

இவை அனைத்திற்குமான காரணம் - உற்பத்தி பெருக்கம். உற்பத்திப் பெருக்கத்தினால் Economies of Scale வந்தது. அதியுற்பத்தி வந்ததால் தனிப் பொருட்களுக்கான விலை குறைந்தது. விலை குறைந்து சல்லிசாக கிடைத்ததால் எல்லோரும் அவற்றினைப் புழங்க ஆரம்பித்தோம். இந்த புழக்கம் உற்பத்தியை மேலும் அதிகரித்து, விலையைக் குறைத்து, மேலும் புழக்கத்தினை அதிகரித்தது. இது ஒரு வட்டம். இந்த வட்டத்தின் முக்கியமான அடிநாதம் - பற்றாக்குறையிலிருந்து மிகுதிக்கு நாம் நகர்ந்தது.

தொடர்ச்சியான உற்பத்தி, அதன் இடுபொருட்கள், அதன் உபத் தொழில்கள், தேவைகள், பரிமாற்றங்கள், விநியோகிக்கும் முறைகள், கடைகள், நுகர்வோர்கள் என எல்லா தளங்களிலும் இது விரிவடைந்தது. 1990 - 2010 வரைக்குமான 20 வருடங்கள் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இந்தியாவின் பொற்காலம். சேவைக்கான பொருட்களும் (உ.தா செல்பேசியை உபயோகிக்க நெட்வொர்க் தேவை. நெட்வொர்க் என்பது சேவை. செல்பேசி என்பது பொருள்), பொருட்களுக்கான சேவைகளும் (இந்த செல்பேசியை விற்கும் கடைகள், மின் வணிகங்கள்) இணையாக உருவாயின. இதனால் இந்த வட்டத்திற்கு தேவையாக நிறைய நிறுவனங்கள், நிறைய ஆட்கள், நிறைய வர்த்தகம், நிறைய நுகர்வோர்கள், நிறைய சேவைகள், நிறைய பொருட்கள் என நாம் எதிர்பாராத அளவிற்கு அதிவேகமாக வளர ஆரம்பித்தது.

2008 உலகளாவிய பொருளாதார மந்தத்திற்கு பிறகு அரசுகள் தங்களுடைய வரி வருமானத்திலிருந்து தேசியப் பொருளாதாரத்தினைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. அதுவரைக்கும் ஏற்றத்தினை மட்டுமே கண்ட உலகம், முதல் முறையாக இறக்கத்தினைக் காண ஆரம்பித்தது. இது நடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘அறிவுசார் பொருளாதாரம்’ உள் இறங்கி விட்டிருந்தது. நாடுகளின் ஜி.டி.பி என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருட்கள் உற்பத்தி செய்வதிலிருந்து சேவைகளில் செலவிடுவதாக மாறி இருந்தது. சேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக மென்பொருளாகவும், ரோபோட்களாகவும், அறிவேந்திரங்களாகவும் உருப்பெற ஆரம்பித்தன. இதற்கு முந்தைய அத்தியாயங்களில் சொன்ன காரணிகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெருக்கெடுத்தன. மனிதர்கள் செய்த வேலைகள் இயந்திரங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்தது.

சுருக்கமாய் சொன்னால், மனிதர்களை வைத்து சேவைகளை விற்கும் டி.சி.எஸ் நிறுவனத்தில் உலகம் முழுக்க 335,000 ஆட்கள் பணிபுரிகிறார்கள். உலகம் முழுக்க மனிதர்களை ஒருங்கிணைக்க தொழில்நுட்பத்தையும், அறிவேந்திரங்களையும் பயன்படுத்தும் பேஸ்புக்கில் வெறும் 15,724 ஆட்கள் பணிபுரிகிறார்கள். டி.சி.எஸ்ஸின் மொத்த சந்தை மதிப்பு $76 பில்லியன்கள். டி.சி.எஸ்ஸை விட 1/20 பணியாளர்களை மட்டுமேக் கொண்ட பேஸ்புக்கின் மொத்த சந்தை மதிப்பு $350 பில்லியன்கள். அதாவது டி.சி.எஸ்ஸை விட 4.5 மடங்கு அதிகம்.

இது தான் நான்காம் பேரலையின் மாற்றம். வேறு விதமாக சொன்னால் குறைவான மனிதர்கள், உலக முழுமைக்குமான ஒரு சேவையினை அறிவேந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு வாயிலாக வழங்குகிறார்கள். வேலைகள், அதன் மூலமாக உருவாகும் பொருட்கள் / சேவைகள், அவை நுகர்வோர்களுக்கு அளிக்கப்படும் விதம் என எல்லாமோ ஒட்டு மொத்தமாக மாறி விட்டது. உலகம் முழுமைக்குமான சேவையை அளிக்க தேவை என்று இதுவரை நாம் நினைத்த மனித வேலையாட்கள் இனிமேல் ஒரு போதும் தேவையில்லை என்பது தான் இந்த பேரலையின் சூட்சுமம்.

Technological Unemploymentம், மனித வேலைகளின் Inefficiency-யும்

இது தான் இன்றைய “technological unemployment" என்று சொல்லப்படுகின்ற நான்காம் பேரலையின் “வேலை வாய்ப்பின்மையை” உருவாக்கி இருக்கிறது. இங்கே இயந்திரங்களும், மென்பொருளும், செயற்கை நுண்ணறிவும் ஏராளமான மனிதர்களின் வேலைகளை தேவையற்றதாக மாற்றி விட்டது. அதே சமயத்தில் ஏராளமான மனிதர்கள் செய்தால் வரும் efficiencyயை விட அதீத திறனில் பொருட்களையும், சேவைகளையும் இவைகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

மனிதர்களை வேலைக்கு வைத்தால் சம்பளம் தர வேண்டும். அவர்களின் ஈகோவையும், குணநலன்களையும் அனுசரித்துப் போக வேண்டும். ஒரு குழுவாக இயங்கினால் அந்த குழுவினை நிர்வகிக்க வேண்டும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடவேண்டும். பண்டிகை நாட்கள் விடுமுறை, உடல் நலக் குறைவு என்று வரமாட்டார்கள். புறம்பேசல், பொய் சொல்லல், கோவம், மகிழ்ச்சி, ஆத்திரம், பயம், பழிவாங்கல், குழிப்பறித்தல், நயவஞ்சகம், துரோகமென மனித உணர்வுகளை தொடர்ச்சியாக கண்டறிந்து அதை நிர்வகிக்க ஆட்கள் தேவை. தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என்று போனஸ் தர வேண்டும். கல்யாணமோ, எழவோ போய் நிற்க வேண்டும். காப்பீடு எடுக்க வேண்டும். மருத்துவ செலவுகளை கவனிக்க வேண்டும். அலுவலகத்திற்கும் வீட்டிற்குமான பயணச் செலவுகளை கவனிக்க வேண்டும். கூட்டமாய் சேர்ந்தால் கொடி பிடித்து இன்குலாப் ஜிந்தாபாத் என்று கத்துவார்கள். இதுநாள் வரை இது தான் நடந்தது.

அறிவேந்திரங்களும், நான்காம் பேரலையும் மேலே சொன்ன மொத்த பேராவையும் ஒரே ஒரு வீச்சில் காணாமல் போக செய்யும். மனிதர்களுக்கு செய்யும் எவையும் அறிவேந்திரங்களுக்கு தேவையில்லை. ரிப்பேர் ஆனாலோ, மென்பொருளில் குழப்பங்கள் வந்தாலோ தூக்கி எறிந்து விட்டு அடுத்த வெர்ஷனைப் போட்டு விட்டு வேலையைப் பார்க்கலாம். சம்பளமோ, போனஸோ, லீவோ கேட்காது. பொய் சொல்லாது. போட்டுக் கொடுக்காது. குழுவில் இருக்கும் ஒரே ஒரு பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்து அது கமிட்டி வரைக்கும் போகாது. எந்நேரமும் பேஸ்புக்கிற்கு லைக் போட்டு, வாட்ஸாப்பில் மொக்கை போடாது. இவை உருவாக்கப் போவது தான் மேலே சொன்ன “தொழில்நுட்ப வேலைநீக்கம்”.

இது தான் நடக்கப் போகிறது. துறைகளைப் பொறுத்து போன அத்தியாயத்தில் சொன்னதுப் போல கால தாமதங்கள் நடக்கலாம். ஆனால் இது தான் பாதை.

இப்போது அரசாங்கங்களுக்கு வேறு விதமான சிக்கல் உருவாகி இருக்கிறது. மிகுதியான உற்பத்தி, விலை குறைவான பொருள்/சேவை அளிப்பு, தொடர்ச்சியான/நிறைவான பங்களிப்பினை உருவாக்க அறிவேந்திரங்கள் வந்து விட்டன. ஆனால் இதன் பயனாளிகளான மனிதர்களுக்கு வேலை இல்லை. வேலை இல்லாததால் வருமானமில்லை. வருமானமில்லாதால் பொருட்களை / சேவைகளை அவை எவ்வளவு சல்லிசாக கிடைத்தாலும் புழங்க மாட்டார்கள். புழங்காமல் போனால் பொருட்களும், சேவைகளும் தேங்க ஆரம்பிக்கும். தேங்க ஆரம்பித்தால் பொருளாதார சுழற்சி நடக்காது.

அதை விட முக்கியம், எந்திரங்கள் வேலைகளை எடுத்துக் கொண்ட கடுப்பினாலும், வருமானமற்ற கோவத்தினாலும் மனிதர்கள் இயந்திரங்களை அடித்து நொறுக்கப் புறப்பட்ட கதையெல்லாம் முதலாம் பேரலையில் நடந்தது எந்த அரசுக்கும் மறக்கவில்லை.

ஒரு பக்கம் அறிவேந்திரங்களின் எழுச்சியை எந்த அரசாலும் தடுக்க முடியாது. இன்னொரு பக்கம் மனிதர்களுக்கு வேலை போவதையும் அரசால் நிறுத்த முடியாது. இந்த நிலையில் அமைதியான சூழலையும், ஆர்ப்பாட்டங்களில்லாத சமூகத்தையும் கைக்கொள்ள ஒரு அரசு என்ன செய்யும் ?அது தான் Universal Basic Income (UBI) எல்லோருக்குமான அடிப்படை வருமானம். இது ஒன்றும் புதிதில்லை. இன்றைக்கு ஒய்வூதியம் (Pension) என ஒரு துறையில் நீண்டகாலம் வேலை செய்தவர்களுக்கு, ஒய்வுக்கு பிறகு, அவர்கள் வாழ்வினை நடத்த, வாழ்நாள் முழுக்க ஒரு அடிப்படை வருவாயினை அரசு தருகிறது. அதை வேலை இருக்கிற/இல்லாத எல்லோருக்கும் விரிவுப்படுத்தினால் அது தான் UBI.

UBI ஏன் தேவை, எப்படி நடக்கும், ஒசியில் பணம் கொடுத்தால் மக்கள் சோம்பேறிகளாக சுற்ற மாட்டார்களா, இதற்கான பணம் எங்கிருந்து கிடைக்கும், இதை உண்மையிலேயே சாத்தியமா, உலகில் எங்காவது இதை செய்திருக்கிறார்களா, இது ஏன் அவசிய தேவை போன்ற கேள்விகளை அடுத்த பகுதியில் அலசுவோம்.

(அலைகள் தொடரும்.....)

இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை

அலைகள் ஒய்வதில்லை - 1
அலைகள் ஒய்வதில்லை - 2
அலைகள் ஒய்வதில்லை - 3
அலைகள் ஒய்வதில்லை - 4

Labels: , , ,


Comments:
சரி, தேவைகளுக்குத்தான் நம் தேடுதல் அப்படியான தேடுதல்களை அவைகள் (AI) கொடுத்து விட்டால் நம் வேலை , வேலையை தேடுவதில்லை. ஏன் தேடுதல் என சிந்திக்கும் மனித மனம்.
அது தேடிக்கொடுக்கும் அதனிலும் மேலான தேடுதலை.
நம் உழைப்பின் ஆதாரம் அதில் கிடைக்கும் உழைப்பல்ல, அது ஒரு மாற்று நோக்கு
ஆனால் மனித மனம் இதை உருவாக்குவதோ அதனிலும் மேலானா ஒன்று.
அது மனித இன பரிணாமம்.
ஆம் நாம் தேடுவது இதை அல்ல, ஆனால் இயந்திர மனங்களை(AI) உருவாக்கும் மனித மனங்களுக்குள் உள்ளது அதை மீறிய மனப்போராட்டங்கள்
நாம் இதை உருவாக்கி அதை மீறிய செயல்பாட்டிற்கு செல்வதற்காகவே.
(கால்குலேட்டர் ஏன் கண்டுபிடித்தோம் என்றால் அதை தாண்டி கணக்கீடுகள் செய்வதற்கே) அந்த இயந்திரங்கள் நம்மை தாண்டி செல்வதற்கல்ல.

 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]